05.12.1980 அன்று இரவு மலேசிய துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ பத்மனாபன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் உரையாற்றினேன். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிற _ முறைப்படுத்தி வருகிற நமது சகோதர இயக்கமான மலேசிய திராவிடர் கழகத்தினர் ஒரு கட்டிடத்தை கழகத்திற்காக வாங்குவது என முடிவெடுத்தார்கள்.
அந்த நேரத்திலே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தக் கட்டிடத்தை வாங்குவதற்கென ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்; உதவியிருக்கிறார்கள். தந்தை பெரியாருடைய நூற்றாண்டு விழாவினை மலேசியாவிலே கொண்டாடப் பட்டபோது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொறுப்புகள், நிகழ்ச்சிகள் இருந்தாலும்கூட அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நம்மோடு பல நிகழ்ச்சிகளிலே கலந்துகொண்டார்கள் என்று எடுத்துக் கூறினேன்.
25.12.1980 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது சீரிய தலைமையில் நடைபெற்ற தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டில் நான் கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினேன். திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் வழிபாட்டு மாநாடு மக்கள் கடல்போல் காட்சியளித்தது.
இந்த மாநாடு புதுமையாகவும் புரட்சியாகவும் இருக்கிறது. இந்த மேடையிலே உருவத்திலே பலர் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்.
கடவுள் மறுப்பாளர்களாகிய திராவிடர் கழகத்தினர் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டை நடத்தலாமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். திராவிடர் கழகம் ஒரு மனிதாபிமான இயக்கம். அந்த அடிப்படையிலே தந்தை பெரியார் அவர்கள் இதே மேடையிலே நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் 06.12.1962லே அவர்களே எழுதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். தமிழர்களை முன்னிட்டு கருவறைக்குள் செல்லும் உரிமையும் பூசாரிகளாகும் உரிமையும் தமிழ், அர்ச்சனை உரிமையும் வேண்டும் என்று வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதற்கான கிளர்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தினார்கள்.
தென்காசியிலே உள்ள சிவன்கோயிலிலே, தேவார வழிபாட்டை முடித்த பிறகுதான் விபூதி பிரசாதம் வழங்க வேண்டும் என்று அப்போது அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்த பார்ப்பனர்கள் கிளர்ச்சிச் செய்தி 21.11.1926 ‘குடிஅரசு’லே வெளியிடப்பட்டுள்ளது. அதே இதழிலே ‘இதுகூட வகுப்பு துவேஷமா?’ என்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு துணைத் தலையங்கம் எழுதியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுற்றுப் பயணமும் மேற்கொண்டார்கள்.
1926ஆம் ஆண்டிலே கோயிலுக்குள் தமிழை எதிர்த்தவர்கள் இந்த 1980லும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே தமிழர், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வந்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தின் சார்பில் மனமாற வரவேற்கிறோம் என்று கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.
வழிபாட்டு உரிமை மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் பேசுகையில் தமிழர் சமுதாயம் இன்னும் சொரனையற்று இருப்பதால்தான் உரிமைகளை இழக்க நேரிட்டது என்றார். ஏற்கனவே கோயில்களில் நடைமுறைக்கு வந்துவிட்ட, தமிழ் வழிபாட்டு உரிமையை தமிழர்கள் காப்பாற்றிக் கொள்ளாததால் இப்போது
“வேதாளம் மீண்டும் முருங்கை மரம்’’ ஏறிவிட்டது என்று குறிப்பிட்டார். அவர் மனித உரிமைகள் மதிக்கப்படுகிற நிலைக்கு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழன் கோயிலிலே தமிழ் மறுக்கப்படுவது கேவலமான நிலையாகும் என்றார்.
வழிபாடு என்பது கடவுளுக்காக அல்ல; மனிதன் தன்னையே உயர்த்திக் கொள்வதற்காக செழுமைப்படுத்திக் கொள்வதற்காக என்று குறிப்பிட்டார். அவர் தனக்காக மனிதன் செய்யும் வழிபாட்டை தனது மொழியிலே செய்வதுதான் சரியாகும் என்றார்.
மாநாட்டில் பங்கேற்ற முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பேசுகையில், தமிழில் வழிபாடு இல்லாத கோயிலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன உணர்ச்சிப் பிழம்பாக முத்தமிழ்க் காவலர் ஆற்றிய உரை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
இனிப் பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என்றும் செயல்திட்டத்தில் இறங்கியாக வேண்டும் என்றும் தாய்மொழி உரிமைக்காக தனது உயிரையே அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாகவும் கி.ஆ.பெ. கூறினார்.
பெரியார் இல்லை என்ற துணிவில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்த வந்திருப்பது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று மிரட்டுவதும் பார்ப்பன சமுதாயத்துக்குத்தான் கேட்டை உண்டாக்கும் என அவர் எச்சரித்தார்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றால் படுத்திருக்கும் பாம்பு படமெடுத்-தாடினால் என்னவாகும் என்பதைத் சிந்திக்க வேண்டாமா என்று அவர் கேட்டார்.
தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு தமிழ் தெரியவில்லை என்றால், தமினுக்கும் அந்த சாமிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று கேட்டார். தமிழ்நாட்டிலே 13,200 கோயில்கள் இருந்தும், இங்குள்ள தமிழன் இந்தச் சாமிக்குச் சக்தி இல்லை என்று திருப்பதிக்கும், கேரளாவிற்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேட்டார்.
பெரியார் தொண்டர்கள் வன்முறையில் நம்பிக்கை இல்லாத அகிம்சைவாதிகள். இதில் காந்தியின் தொண்டர்களைவிட பெரியார் தொண்டர்கள் சிறந்தவர்கள் என்று குறிப்பிட்டு அத்தகைய தொண்டர்களை வன்முறைக்கு அழைக்கிறார்களா என்று கேட்டார்.
தமிழில் வழிபாடு இல்லாத கோயில்களைப் புறக்கணியுங்கள். வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நீங்களே நேராகச் சென்று தமிழ் பக்திப் பாடல்களைப் பாடிவிட்டுத் திரும்புங்கள். கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று கேட்டுக்கொண்டார்.
மேலவைத் துணைத் தலைவர் புலமைப்பித்தன் பேசுகையில், தந்தை பெரியார் இல்லையே என்ற கவலையைவிட நன்றியுணர்வும் சிந்தனையும் இல்லாத இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தில் வந்து பிறந்தாரே என்பதுதான் என் கவலை.
‘இந்து’ப் பத்திரிகையில் எவனோ ஒரு ‘மாட்டுக்குப் பிறந்த மகன்’, ‘தமிழ், வழிபாட்டு மொழியானால் கோவில் தீட்டுப்பட்டுவிடும்’ என்று எழுதியிருக்கிறான்.
‘பார்ப்பான்’ என்று சொல்லக் கூடாது என்கிறான். இவன் பாட்டன் பாரதிகூட பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று ‘பார்ப்பான்’ என்றுதானே பாடியுள்ளான்.
‘பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே
பார்ப்பான் தின்னப் பார்ப்பான்’
என்று எச்சரித்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
“திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் என்ற ஊரில்’’ ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நாத்திகர்கள் கோருவது எவ்வாறு பொருந்தும் என்று முதல்வர் கேட்டார்’’ (‘தினமணி’ _ 26.12.1980, பக்கம் 3இல்) என்று ‘தினமணி’ச் செய்தி கூறுகிறது.
“கோயில் வேண்டாம் என்பது கொள்கை’’ கோயில்கள் இருக்கும்வரை, அதில் கருவறைவரை சென்று பூசை செய்திடும் உரிமை ஒரு ஜாதிக்கு மட்டும் இருக்கக் கூடாது. “அனைத்து ஜாதியினருக்கும் ஜாதி வேறுபாடு இன்றி, கிடைக்க வேண்டிய உரிமை’’ என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினோம்.
இதனைத் தொடர்ந்து பகுத்தறிவாளர்கள் கழகத்தின் மாநில மாநாடு, டிசம்பர் 31, ஜனவரி முதல் தேதிகளில் தலைநகரில் சென்னை பெரியார் திடலில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
உலக நாடுகளில் பகுத்தறிவு, நாத்திக சிந்தனைகள் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு எல்லைக்குள்தான் முடக்கப்பட்டிருக்கிறது! மாநாட்டிற்கு மலேசியா திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் தலைமையில் 40 தோழர்கள் வருகை தந்தார்கள். கழகத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நான் அவர்களுக்கு புத்தாடை போர்த்தி கவுரவித்தேன். வரவேற்றுப் பாராட்டி உரையாற்றினேன்.
கடல்கடந்து வாழ்ந்தாலும் நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருப்பது தந்தை பெரியார் அவர்கள் கொள்கைகள்-தான் என்று குறிப்பிட்டேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களும் அவரை அடுத்து ‘தமிழ்நேசன்’ பத்திரிகையின் துணை ஆசிரியர் வி.விவேகானந்தன் ஏ.என் அவர்களும் பாராட்டு-களும் வரவேற்புரைகளும் ஆற்றினார்கள்.
மாநாட்டில் முதல் நாள் கலந்துகொண்ட நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ஜி.லெட்சுமணன் அவர்கள் தலைமை ஏற்று இன உரிமை முழக்கமிட்டார்.
மாநாட்டைத் திறந்து வைத்து தமிழ்நாடு கல்வி அமைச்சர் அரங்கநாயகம், “பாடநூல்களில் உள்ள மூடநம்பிக்கைகளை களையும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும், “என்னை அழைத்தன் மூலம் நீங்கள் சரியான காரியத்தைச் செய்கிறீர்கள்.
அரங்கநாயகம் என்பதற்காகச் சொல்லவில்லை, கல்வியமைச்சர் என்பதால் சொல்கிறேன். இனிமேல் இதுபோன்ற மாநாடுகளுக்கு கல்வி அமைச்சரை அழையுங்கள்’’ என்று குறிப்பிட்டார்.
“உங்கள் கோரிக்கை மனுவைப் பரிசீலிப்போம். பாடநூல்களில் பகுத்தறிவுக் கருத்துகள் இடம்பெறும் என்ற நம்பிக்கையை நீங்கள் பெறலாம்’’ என்று கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் வேணுகோபால் உருக்கமான உரையாற்றினார். இந்தச் சமுதாயத்தின் இழிநிலையை தந்தை பெரியார் எப்படி மாற்றியமைத்தார் என்று அவர்கள் விளக்கியபோது, கூட்டம் உள்ளம் நெகிழ்ந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் தாழ்த்தப்பட்டவர் ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று அரசு விரும்பி, 18 மாதகாலம் எல்லா மாநிலங்களிலும் தேடினார்கள். இறுதியாக அதற்குத் தகுதியான திறமைபெற்ற நீதிபதி தமிழகத்திலிருந்து கிடைத்தார். அத்தகைய சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கியவர் பெரியார் என்று நீதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று நான் தலைமையுரையை ஆற்றினேன். அப்பொழுது இந்த மாநாட்டை கலைஞர் அவர்கள் துவக்கி வைப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவர் முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரி ஒருவர் பகுத்தறிவாளர் கழக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு வந்தபோது கலைஞர் அந்தக் கோப்பில் தமது கைப்பட ஒரு குறிப்பை எழுதினார்.
அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் மற்றவர்களும் கோயிலுக்குப் போவதற்கு எப்படி உரிமை உண்டோ, அதுபோல அவற்றில் நம்பிக்கையில்லாத அதிகாரிகள் பகுத்தறிவாளர் கழகத்தில் இடம்பெற உரிமை உண்டு என்று எழுதினார். அரசாங்கக் கோப்பில் அப்படி எழுதி கையெழுத்திட்ட அதே கரம்தான் இன்றைக்கு பகுத்தறிவாளர் கழக மாநாட்டையும் துவக்கி வைக்கும் கரம் என்பதிலே பெருமை அடைகிறோம்.
ஸ்ரீராம் அய்யங்கார் என்பவர், “பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி நடத்துகிறார். அவர் அந்த இயக்கம் பார்ப்பனியத்துக்கு, பார்ப்பன நாயகத்துக்கு (Brohmino Cracy) எதிரானது என்று கூறினார்’’ என்று எழுதிவிட்டு, அதே வரியிலே அடைப்புக்குள்ளே ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதுதான் மிகவும் முக்கியம். அடைப்புக் குறிக்குள்ளே என்ன எழுதியிருக்கிறார்? “இதே கருத்தை தி-.மு.க. தலைவர் கருணாநிதியும் ஆதரிக்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட இன உணர்வுள்ள கலைஞர் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார் என்று குறிப்பிட்டேன்.
மாநாட்டில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகக் குடும்பத்தினர் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை, உண்மையிலேயே உள்ளத்தில் கொண்டிருக்-கின்ற வீரமணி போன்றவர்களை எந்தச் சக்தியும் அழித்துவிடாது என்பதைக் கூறிக்கொண்டு; என்றைக்கும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்! இடுக்கண் களைவோம் என்கிற அந்த நெஞ்சுறுதியையும் உங்களுக்குத் தந்து உங்களுக்குப் பக்கபலமாக இருந்து -_ நீங்கள் எப்படி எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்களோ அதுபோல திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று கூறினார்.
பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கல்வியாளர் அரங்கத்துக்கு முன்னாள் துணை வேந்தர் நெ.து.சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். கீறனூர் ஆரோக்கியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், பேராசிரியர் கோ.கலியராசலு, கே.மீனாட்சிசுந்தரம் எம்.எல்.சி., அ.கந்தசாமி, அறிவரசு மற்றும் வெளிநாட்டு அறிஞர்களின் உரை நிகழ்ச்சி தொடர்ந்தது.
மிஸ்.கேட் தாம்ப்சன் உரையை சோமசுந்தரம் அவர்களும், இங்கிலாந்து நாட்டுப் பேராசிரியரும் ஹுமனிஸ்ட் அசோசியேஷன் (மனிதாபிமான சங்கம்) தலைவருமான பேராசிரியர் ஹேரிஸ் டோப்ஸ் உரையை ஏ.எஸ்.வேணு அவர்களும், டாக்டர் விஜயம் (ஆந்திர மாநிலம் கோராவின் மகன்) உரையை பேராசிரியர் வீரபாண்டியன் அவர்களும் தமிழில் மொழிபெயர்த்தனர்.
மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டுகிறேன். அதில், நடுவன் அரசில் வேலைகளுக்கு, தொழில்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு பற்றி அரசியலைப்புச் சட்டத்தின் 9ஆவது உட்பிரிவில் சட்டமியற்ற இந்தியப் பிரதமரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது என்ற முதல் தீர்மானம் மாநாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் 85 விழுக்காடு உள்ள இந்துக்களை ‘இந்து சட்டம்’ கட்டுப் படுத்துவதால், இந்தியாவில் ஜாதி முறை அமுலில் இருக்க சட்ட அனுமதி உள்ளது.
ஜாதி ஒழிப்புக்குரல் எங்கும் கேட்கிறது. ஜாதி ஒழிப்பை வெகு முன்னரே செய்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 372ஆவது விதியில் திருத்தம் செய்யாமலும், அதுமூலம் வழக்குமன்ற சட்டங்களில் திருத்தம் செய்யாமலும் ஜாதி ஒழிப்பு என்பது முடியாத ஒன்று.
எனவே, இந்திய அரசையும், மாநில அரசையும் ஜாதி ஒழிப்பிற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் அனைத்தையும் செய்யும்படி இம்மாநாட்டில் தீர்மானம் மூலமாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, “பார்ப்பனர்களுக்கு நெருக்கடி’’ (Brohmins Under pressure) என்ற தலைப்பில், “இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஏடு தென்மாநிலங்களில் பார்ப்பனர்கள் நிலைபற்றி முதல் பக்கச் செய்திக் கட்டுரை ஒன்றை கடந்த 01.01.1981 அன்று வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்திக்குக் கண்டனத்தை, விளக்கத்தை தெரிவித்து ‘விடுதலை’யில் தலையங்கமாக 05.01.1981லும், 06.01.1981லும் இரண்டு நாட்கள் விளக்கி எழுதியிருந்தேன்.
சமுதாயத்தின் பிடியையே தங்கள் ஆதிக்கத்தினுள் வைத்துக்கொண்டிருந்த கூட்டம் பார்ப்பனர்கள் கூட்டம்! எனவேதான் ஆதிக்கம் அசையத் துவங்கியிருக்கிறது என்றவுடனேயே இவ்வளவுக் கூக்குரல்கள் எழுகின்றன.
ஜனதா அரசால் நியமிக்கப்பட்ட அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன் _ திரு.பி.பி.மண்டல் தலைமையிலான கமிஷன் (அரசியல் சட்டத்தின் 340ஆவது விதியின்படி நியமிக்கப்பட்டது) தனது அறிக்கையை 1980 டிசம்பர் 31ஆம் தேதி அன்று சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் விவரம் _ நாடாளுமன்றத்தில் இவ்வறிக்கை மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் வரை ரகசியம் ஆகும் என்று அதன் தலைவர் திரு.பி.பி.மண்டல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைய ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’வான ‘இந்து ஏடு’ அதற்குள் அக்கமிஷன் அறிக்கை பற்றி 09.01.1981 தலையங்கத்தில் பொரிந்து தள்ளி தனது முழு ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்தது.
இதனை நான் கண்டித்து 09.07.1980 அன்றே ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில் “பார்ப்பனர் போர்க்களத்திற்கு தயாராகின்றனர்!’’ என்று தலைப்பிட்டு அதில் விளக்கி எழுதியிருந்தேன்.
13.01.1989 அன்று மதுரை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன்.
வழிநெடுக பயணப் பாதையில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இன்று நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது.
14.01.1989 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஏட்டில் “தமிழ்நாட்டில் ஒரு சிறுபான்மை யினரின் நிலை’’ என்ற தலைப்பில், பார்ப்பனர் மிகவும் பரிதாப நிலையில் உள்ளதைப் போல் உலகத்தாரின் அனுதாபத்தைப் பெறுவதற் காகவே அக்கட்டுரை ஆசிரியரான பார்ப்பனர் பெரிதும் புலம்பலாகவே அக்கட்டுரையை அமைத்துள்ளார்.
இதனை நான் கண்டித்து, 16.01.1981 அன்று ‘விடுதலை’யின் இரண்டாம் பக்கத்தில், “பார்ப்பனரின் பதட்டம் _ புரிகிறதா?’’ என்ற தலைப்பிட்டு முக்கிய அறிக்கையை எழுதியிருந்தேன்.
16.01.1981 அன்று தமிழ்மொழி விற்பன்னர் தேவநேயப் பாவாணர் மறைவையடுத்து நான் இரங்கல் அறிக்கையை ‘விடுதலை’யில் 17.01.1981 அன்று இரண்டாம் பக்கத்தில் வெளியிட் டிருந்தேன். அதில், “மொழி அறிஞர் தனித் தமிழ்க் காவலர் திரு.தேவநேயப் பாவாணர் அவர்கள், உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற நிலையில் மதுரையில் உடல்நலக் குறையுற்று காலமானார் என்ற செய்தி, தமிழ் நல்லுலகத்திற்கு பேரிடி போன்றதொரு செய்தியாகும்.
தமிழ் ஆர்வலரான அவர்தம் ஆழ்ந்த புலமைக் கடலிலிருந்து தமிழர்கட்கு, கிடைத்த முத்துக்கள் பற்பல, நெஞ்சுறுதியுடன் அயல்மொழி வழக்கை இறுதிவரை எதிர்த்து நின்ற பாவாணர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களால் மிகவும் மதிக்கப்பட்ட புலவர் பெருமக்களில் ஒருவராவார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
18.01.1981 அன்று வேலூர் நகர பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த தோழர் இளங்கோவனுக்கும் நாகை கல்யாணசுந்தரம் அவர்களின் மகள் சகுந்தலாவுக்கும் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் நான் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
மணமக்களை வாழ்த்தி விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம், அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை, சென்னை ப.க.பொருளாளர் வழக்கறிஞர் சமரசம், வ.ஆ.மாவட்டம் திருப்பத்தூர் தி.க. செயலாளர் அருணாசலம், வ.ஆ.மாவட்டச் செயலாளர் ஏ.பி.கோபால், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.பார்வதி, திருஞானசம்பந்தம், ஆர்.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், மணமக்களை வாழ்த்திப் பேசும்பொழுது,
“தலைசிறந்த பகுத்தறிவுவாதிகள் _ தலைசிறந்த மனிதாபிமானிகள்’’ என்று அய்யா அவர்கள் கூறிய அறிவுரைப்படி மணமக்கள் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று எடுத்துக் கூறினேன். விழாவில் கழக முன்னோடிகள் பலரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
18.01.1980 அன்று காலையில், பேராசிரியர் நன்னன் அவர்கள் இல்லத் திருமணம் சென்னை தியாகராய நகர் கோபதி நாராயணசாமி சாலையில் விளங்கும் ஆனந்தவல்லி திருமண மண்டபத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எம்.ஏ., டி.லிட், கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, பெரியகுளம் தமிழாசிரியர் பி.சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். டில்லி பிரதிநிதி மாண்புமிகு முத்துசாமி, பகுத்தறிவாளர் தலைவர் பகீரதன், விடுதலை மேளாளர் என்.எஸ்.சம்பந்தம், அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு தலைமை தாங்கி முன்னுரை ஆற்றியபோது, டாக்டர் நன்னன் அவர்கள் இந்தத் திருமணத்தையும் சுயமரியாதைக் கொள்கை அடிப்படையிலேயே நடத்துவதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தச் சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சிக்கு அறிவு முன்னேற்ற அடிப்படையிலும், நாகரிக உணர்ச்சி அடிப்படையிலும் தன்மான உணர்வு அடிப்படையிலும் எஜமானன் _ அடிமைத்-தன்மை இல்லாமல் ஒருவருக்கொருவர் சமஉரிமை கொண்டாடும் அடிப்படையிலும் அமைந்திருக்கிறது என்றும் கூறி திருமண நிகழ்ச்சிகள் பெரிதும் நகைநட்டு ஆசையில் நடைபெறக்கூடாது என்றார்.
முன்னாள் நீதிபதி திரு.மகராசன் அவர்கள் தனது உரையில், நான் 46 ஆண்டுகளுக்கு முன் செய்துகொண்ட ஆத்திக திருமண முறையில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாத மொழியில் திருமணச் சடங்குகள் நடந்து வந்ததையும் வெறும் புகைச்சலுக்கிடையே துன்பப்பட்டு பொறுமையாக பலமணி நேரம் மனம் புழுங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த அவலநிலையையும் விவரித்துக் கூறி, வெறும் அர்த்தமற்றச் சடங்குகளை நீக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துப் பேசினார்.
இறுதியாக மணமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்று, விருந்து படைக்கப்பட்டது. விழாவில் கழகத் தொண்டர்கள், தோழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.
(நினைவுகள் நீளும்)