உங்களைப் பற்றி நீங்களே ஒரு வரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன்” என்ற வினாவுக்கு, “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்றாரே – அவர்தான் கலைஞர்.
அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலும் அவர் சிந்தனையில் பூக்கும் மலர்கள் எல்லாம் தன்மான இயக்கம் சார்ந்தவை. தந்தை பெரியார்தம் கொள்கை சார்ந்தவையாகும். தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது கூட நான் மிக மிக எத்தனை ‘மிக’ வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கம்பீரமாகச் சொல்லிக் கொள்பவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர். ‘இது மூன்றாம் தர அரசு’ என்று சொன்னபோது, முதல்வர் கலைஞர் அவர்கள் வில்லிலிருந்த கணை விடுப்பட்டதென வெடுக்கென்று பதில் அளித்தார்.
“தமிழ்நாடு அரசு நாலாஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி, உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன். இவ்வரசு “நாலாந்தர அரசுதான்”, பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திரன் என்ற முறையில் நாலந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறேன் என இறுமாப்புடனும், பெருமையுடனும் கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன்” (28.7.1971) என்று சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் பிரகடனப்படுத்தியது. சாதாரணமானதா? சட்டமன்ற நடவடிக்கைகளில் வைர மணியாக ஒளி வீசுமே.
1997ஆம் ஆண்டில் “பெரியார் நினைவு சமத்துவபுரங்” களைக் கண்டாரே, அதன் தத்துவம் என்ன? ஜாதி ஒழிப்புதானே அதன் உள்ளடக்கம்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் இயற்றி இன்று நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளாரே, இந்த அருஞ்செயலை திராவிடர் இயக்கத்தின் வழிவந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் கூர்முனை மழுங்கா உணர்வு அவரை ஆட்டிப் படைப்பதால்தானே செயல்படுத்த முடிந்தது.
பெண்கள் சொத்துரிமைச் சட்டம் இந்தியத்துணைக் கண்டத்திலேயே முதன்-முதலாக நிறைவேற்றியவர், கலைஞர் அவர்கள்தானே?
உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவரும் அவர்தானே?
சமூக சீர்திருத்தத் துறை ஒன்றை உருவாக்கி அதனை முதல் அமைச்சரின் துறையில் சேர்த்தது எந்த உணர்வின் அடிப்படையில்?
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ். ஆகிய பயிற்சி மய்யங்களைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?
கலப்பு மணத் தம்பதியர்களுக்கு ஊக்க உதவித் திட்டம் என்பது தன்மான இயக்கத்தின் சிந்தனைதானே?
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியிப்னர், சிறுபான்மையினருக்குத் தனித்தனித் துறைகளை உருவாக்கி, அவர்களின் வளர்ச்சியில் ஒரு புதுப் பாய்ச்சலை உண்டாக்கியவர் அவரல்லால் வேறு யார்?
தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்தவர் யார்?
சமூக நீதிக்குச் சாவு மணி அடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒற்றைக் காலில் நிற்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளும் அவர் விடுக்கும் “சங்க நாதம்” டெல்லிக் கோட்டை வரை எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.
.நூறு கோடி மக்களின் உரிமையை மூன்று பேர் முடிவு செய்வதா என்று சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் எழுப்பிய வினா சாதாரணமானதா? “நீதிமன்ற நீதிக்கும் நீதி சொன்ன” தந்தை பெரியாரின் சீடர் என்பதற்கு, இதுதான் சரியான எடுத்துக்காட்டு ஆகும்.
“நாடு முழுவதும் இருக்கின்ற ஒடுக்கப்பட்டோர், நாடு முழுவதும் இருக்கின்ற நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று தள்ளப்பட்டோர் எழுகின்ற காலம் எரிமலை பொங்குகின்ற காலமாக ஆகிவிடும்” என்று எச்சரித்தாரே, அதனுடைய வீச்சை மறுநாளே காணமுடிந்ததே!
நெருக்கடி நிலைக் காலக்கட்டத்தில் வெளியிலும் கட்சிக்குள்ளும் சலசலப்புகள் தோன்றியதுண்டு. நெருக்கடி எந்த வடிவத்தில் எந்தச் சூழ்நிலையில் வீறு கொண்டு அரட்டினாலும் அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து, வீறுகொண்டு எழுவது என்பது கலைஞர் அவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் மறப்பண்பாகும்.
“நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமைதொட்டு, தென்னையின் வீழாத மட்டைகள் தரும் பயன்களையும், வீழ்ந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டு உள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன், ‘மானமிகு’ இல்லையேல் ‘மாண்புமிகு’ வுக்கு மதிப்பு இல்லை என்று அறிந்தவன்” (முரசொலி, 15.9.2005)
கலைஞர் நமக்குக் காலம் தந்த கருவூலம், பவள விழா, முத்து விழாவென்று பல விழாக்களைத் தாண்டி, விழாத வேர் கொண்டு நிற்கும் வீரத்தின், விவேகத்தின் விளைநிலம், அந்த விளைச்சல் அந்த நிலத்திற்காக அல்ல, பரந்து வாழும் தமிழ்ப் புலத்திற்காக, பண்பாட்டு அடிமைத்தளத்தில் ஊறியவர்களை மாற்றும் காலத்திற்காக.
குளித்தலையில் தொடங்கி, தஞ்சையில் நிலைத்து, சென்னைத் தலைநகரில் மக்களாட்சியின் மாண்பினைக் காக்க, சட்டமன்றமிருக்கும் கோட்டையை அவர் தொடர்ந்து குடியேற்றமாகக் கொள்வதற்கு அவர் வகுத்த வீயூகங்கள் என்றும் மறக்கவொண்ணா, மறுக்கவொண்ணா மாபெரும் பாடங்கள்.
ஈரோட்டுக் குருவின் பாராட்டைப் பெற்றதோடு, சட்டமன்றம் புகுந்து அய்ந்தாம் முறை ஆட்சித் தேரோட்டும்போது, அக்குருவின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட அந்தப் பொன்விழா பயன்பட்டதால் அது பொலிவு பெற்றது. நலிந்த, மெலிந்த இனம் புதுவாழ்வு பெற்றது.
சட்டமன்றச் சரித்திரத்தில் அவர் தன்னந்தனியராய் ஆக்கப்பட்ட நேரத்திலும், சளைத்தாரில்லை, களைத்தாரில்லை.
அச்சம் என்பது அவர் அறியாதது!
அஞ்சாமை அவரின் குருதியில் கலந்தது!
ஆளுமை அவரின் தனி உடைமை!
இமயமாய் உயர்ந்த இணையற்ற உழைப்பின் சிகரம் அவர்!
அவரது படைக்குத் தோல்வி ஏற்பட்ட பல கட்டங்களில் கூட
அவர் தனித்த படைத் தளபதியாய் நின்ற நேரத்திலும் வென்ற உறுதியோடுதான் களப்பணி ஆற்றிய கடமை வீரர் அவர்!
ஆட்சி என்பது அவரைப் பொறுத்தவரையில் வெறும் காட்சி அல்ல; எம் இனத்தின் மீட்சியே என்ற எண்ணத்தோடு அன்றும், இன்றும், என்றும் இயங்குபவர்!
மறைந்த தலைவர்களுக்குக் கூட வரலாற்றுப் பெருமைமிக்க அரசு மரியாதை தந்து, மறைந்த தலைவர்களை மக்கள் நெஞ்சில் நிறைந்த தலைவர்களாக்கிய சாதனையும் உள்ளடங்கும்!
செத்தவர்களையும், சாகாதவர்களாக்கி மகிழ்ந்த அவரின் சரித்திரச் சாதனை தலையாய ஒன்று.
தடை பல கடந்து, ஏச்சுகளை, இழிவுகளைப் பற்றி லட்சியம் செய்யாமல், மானம் பாராத மகத்தான தொண்டறத்துக்குச் சொந்தக்காரர் அவர்.
அந்தத் தூய தொண்டறத்தால், திராவிடர் இனம் வலிவு பெறுகிறது. வரலாறு பெருமை பெறுகிறது!
இந்தக் கலைஞரை யார்தான் வெல்ல முடியும்? வெல்லுவதற்கு இவற்றைவிட வேறு படைக்கலன்கள்தான் யாவை?
– கி.வீரமணி