நவீன இந்துத்துவம்

ஜூன் 01-15

 

நூல்: நவீன இந்துத்துவம்
ஆசிரியர்: டபிள்யூ. ஜே. வில்கின்ஸ்
தமிழில்: ச.சரவணன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
57-53ஆவது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை-83.
தொலைபேசி: 24896979, 65855704
பக்கங்கள்: 360      விலை: ரூ.200/-

விதவைகளைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதைவிட, துன்பம் தரக்கூடியது வேறு ஒன்று இருக்க முடியாது. இந்துக்களுக்காகச் சட்டமியற்றியவர்கள் விதவைகளின் துயரங்களை அதிகப்படுத்துவதற்கு முயன்றிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

“ஒரு விதவை மற்றொரு ஆணின் பெயரைக் குறிப்பிடுவதே சட்ட விரோதமானது என்றும், அவள் மறுமணம் செய்துகொள்வதன் மூலம் தனக்கும் தன் கணவனுக்கும் நீங்காத அவமானத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும்” மனு குறிப்பிடுகிறார்.

இந்த வார்த்தைகளே விதவைகளின் மறுமணத்தைத் தடை செய்வதாக உள்ளன. விதவைகளுக்குக் கணவனின் இழப்பினால் ஏற்படும் துயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர் இந்துக்களுக்கு நேரிடையாகத் தெரிவிக்கா விட்டாலும், அவ்வாறு செய்து கொள்வது அவளது கடமை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கீழ்க்கண்டவை ஒரு விதவைக்கான கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கிறது. அவை கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அவள் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவருந்த வேண்டும். மாதத்தில் இருமுறை அதனையும் தவிர்த்து உணவும் தண்ணீரும் அருந்தாமல் 48 மணி நேரம் இருக்க வேண்டும்.

சமய ஒழுக்கங்களைக் கண்காணிப்பதில் வங்காளத்தில் உயர்ந்த ஒரு அமைப்பாகச் செயல்பட்டுவரும் ‘சனாதனதர்ம ரட்சினி சபா’ மருத்துவ காரணங்களுக்காக, முற்றிலும் உண்ணாமல் இருப்பது உகந்தது அல்ல என்றால் தண்ணீரை மட்டும் அருந்தலாம் என்று விதித்திருக்கிறது.

முற்றிலும் வெண்மையான சேலையையே அவள் அணிந்துகொள்ள வேண்டும். அணிகலன்கள் எதுவும் அணிந்துகொள்ளக் கூடாது. கையில் போட்டு இருக்கும் இரும்புக் காப்பினை அகற்றிவிட வேண்டும். அவள் திருமணமானவள் என்பதைக் காட்ட நெற்றியில் அணிந்திருக்கும் சிவப்பு பொட்டினை அழித்துவிட வேண்டும்.

குடும்பத்தில் நிகழும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது. பொதுவாக அவள் வாழ்க்கையில் வசதிகளைத் துறக்க வேண்டும். இந்துக்களிடையே நான்கு முக்கிய சாதிகள் உள்ளன. இதில் மூன்றாவது சாதியான நான் சார்ந்துள்ள வைசிய சாதியில் விதவைகளின் துயரம் மிகவும் அதிக அளவில் உள்ளது.

விதவைகள் எல்லோரும் மோசமாக நடத்தப்பட்டாலும் எங்களுடைய வழக்கங்கள் மற்றவர்களுடையதைவிட மிகவும் மோசமான-தாகவே இருக்கிறது. பஞ்சாபில் இந்த வழக்கங்களை விதவைகளிடம் கடுமையாகத் திணிப்பதில்லை.

நாங்கள் பஞ்சாபில் வசித்தபோதிலும், வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த செல்வந்தர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்-கள் என்பதால் இந்த வழக்கங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.
“ஒரு கணவன் இறந்தவுடன் அவனது மனைவியும் இறப்பிற்கு உட்படுத்தப்பட்டவள் போல் துன்பப்பட நேரிடுகிறது.

அவளுடைய உறவினர்கள் யாரும் அவளை அணுக முடியாது. மூன்றிலிருந்து ஆறு பெண்கள் (நாவிதர்களின் மனைவிகள், இதற்காகவே ஒதுக்கி வைக்கப்-பட்டிருக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள்) மட்டுமே இவர்களுடன் இருக்கிறார்கள்.

கணவன் உயிர் நீங்கியதும் இவர்கள் உடனடியாகச் சென்று அவளது அணிகலன்-களைக் களைகிறார்கள். காதிலும் மூக்கிலும் அணிந்திருக்கும் அணிகலன்கள் அகற்றப்-படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இவர்களது இந்தச் செயல் காயத்தை ஏற்படுத்து-வதாக உள்ளது. தலையில் அணிந்திருப்பவை கிழித்து எடுக்கப்படுகின்றன.

கைகளில் அணிந்திருக்கும் வெள்ளி மற்றும் பவுன் வளையல்கள், காப்புகள் ஒன்றொன்றாகக் கழற்றப்படாமல், கைகள் தரையில் வைக்கப்பட்டு ஒரு கல்லினால் அடித்து உடைக்கப்படுகின்றன. அவர்கள் இவ்வாறு செய்யும்போது காயங்களை ஏற்படுத்துவது குறித்துக் கவலை கொள்வ-தில்லை. விதவையானவள் ஆறு அல்லது ஏழு வயதுக் குழந்தையாக இருந்தால்கூட இரக்கப்பட மாட்டார்கள்.

விதவைகளுக்கு இரண்டு வகையான துன்பங்கள் நேருகின்றன. ஒன்று, இறைவனால் ஏற்படுவது; மற்றது, அவளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய அவளது உறவினர்களால் ஏற்படுவது. கணவன் தொலைவில் இறந்து போயிருந்தால், அவனது இறப்புச் செய்தி வந்தவுடன் இத்தகைய செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இறுதிச் சடங்கிற்காக உறவினர்களில், ஆண்களும் பெண்களும் சுடுகாடு வரை தொடர்ந்து செல்ல வேண்டும். செல்வந்தர்களாயிருந்து வாகனங்-களை வைத்திருந்தால்கூட அவைகளில் செல்லாமல் நடந்தே செல்ல வேண்டும்.

இறந்தவனின் சடலத்தைத் தொடர்ந்து ஆண்கள் செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் முக்காடிட்டுக் கொண்டு மற்ற பெண்கள் செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நாவிதர்களின் மனைவிகள் விதவையானவளை அழைத்து வருகிறார்கள்.

இவளை மற்ற பெண்களிலிருந்து 200அடி தூரம் தள்ளியிருக்கும் வகையில் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த விதவையின் நிழல் மற்ற பெண்களின் மீது பட்டால் அவர்களும் விதவையாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் இவ்வாறு செய்யப்படுகிறது.

எனவே எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அந்த விதவையின் முகத்தைப் பார்க்க மாட்டார்கள். யாராவது அவளருகில் சென்றால், அவளை அழைத்துச் செல்லும் நாவிதர்களின் மனைவி-களில் முரட்டு சுபாவமுடையவளாக இருப்பவள் பெருங்கூச்சல் எழுப்பி அவர்களை அப்பால் செல்லும்படி செய்வாள். பரிதாபத்திற்குரிய அந்த விதவை ஒரு கொடிய விலங்கினைப் போல் இழுத்துச் செல்லப்படுவாள்.

அவளது கணவனின் உடல் எரியூட்டப்பட இருக்கும் ஆறு, குளம் அல்லது கிணற்றின் கரையை அடைந்தவுடன் அவள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் நீரில் தள்ளப்-படுகிறாள். சடலம் எரியூட்டப்பட்டுச் சடங்குகள் முடிந்து மற்றவர்கள் நீராடித் தூய்மைப்படுத்திக் கொண்டு கிளம்பும் வரை அவள் நீரிலேயே நின்றுகொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

பிறகு அவள் நீரிலிருந்து வெளியேறி ஈரஉடையுடன் வீட்டிற்கு நடந்தே செல்ல வேண்டும். பருவ நிலையைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இமயமலையிலிருந்து வீசும் குளிர் காற்றாக இருந்தாலும், சுட்டெரிக்கும் வெயிலாக இருந்தாலும் அவள் இவ்வாறே அழைத்துச் செல்லப்படுவாள். இதனைக் காணும் போது ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் எவ்வளவோ மேலானது என்று தோன்றுகிறது.

இவ்வாறான துன்பங்களை அனுபவிப்பதை-விட இறப்பதே மேலானது என்று பலர் எண்ணுகிறார்கள். இந்த விதவைகள் எந்த அளவு நோயுற்றிருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதும் இல்லை, அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படு வதுமில்லை.

ஒரு தடவை ஒரு இறுதிச் சடங்கிற்காக நகரிலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில் உள்ள ஒரு சுடுகாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது கடுமையான கோடைக்காலம். நாங்கள் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பு வீட்டை விட்டு அங்கு சென்றபோதும் சடங்குகள் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வரும்-போது மதியம் மூன்று மணி.

சுட்டெரிக்கும் வெய்யிலிலும், வெப்பம் மிகுந்த காற்றிலும் பெண்கள் அனுபவித்த துன்பத்தை என்னால் மறக்க இயலாது. நாங்கள் வெப்பத்தாலும், தாகத்தினாலும் மிகவும் துயருற்றோம். பரிதாபத்திற்குரிய அந்த விதவை தண்ணீர் கூடக் கேட்கவில்லை.

அவ்வாறு கேட்டிருந்தால் அவளது செய்கை விமர்சனத்திற்குரியதாக இருந்திருக்கும். அங்கிருந்த பெண்களும், அவர்கள் விரும்பியிருந்தால் அவளுக்குத் தண்ணீர் கொடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை.

இறுதியாக, அவள் கீழே மயங்கி விழுந்து-விட்டாள். அவளை விடாப்பிடியாகத் தூக்கி இழுத்து வந்தார்கள். அவள் அழுதபோது நீ மட்டும் இவ்வாறு விதவையாகவில்லை என்று கூறியதுடன், உனக்குக் கணவன் தேவையா-யிருக்கிறதா? என்று அவளைக் கேலியும் செய்தார்கள். அவளால் நடக்க இயலாத நிலையிலும், ஒரு மூட்டைத் துணியுடன் அவளை இழுத்துச் சென்றார்கள்.

வீட்டிற்கு வந்தவுடன், ஒரு சிறிய அறையில் அவளைக் கிடத்தினார்கள். அவள் மிகுந்த தாகத்துடன் இருக்கிறாள் என்பது தெரிந்த-போதிலும் அவளுக்குத் தண்ணீர்கூட யாரும் கொடுக்கவில்லை. அவளும் துணிவுடன் தண்ணீர் வேண்டுமென்று கேட்கவில்லை. அவள் எனக்கு உறவு என்ற போதிலும், அவளுக்கு அருகில் நெருங்கிச் சென்றால், தீங்கு விளையும் என்று அஞ்சியதால், யாரும் அவளருகே செல்லவில்லை.

இறுதியாக ஒரு இளம் பெண் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வரவே அந்த விதவை, அவளை நோக்கி ஒரு விலங்கினைப் போல் ஓடினாள். அவள் நடந்துகொண்ட விதத்தை என்னால் விவரிக்க இயலாது. தனக்குத் தண்ணீர் கொடுப்-பவள் யாரென்றே அறிந்து கொள்ளாமல், அவளது உணர்வுகள் திரும்பும் வரை ஒருவித வெறியுடன் அந்தத் தண்ணீரை அருந்துவதி-லேயே கனவமாக இருந்தாள்.

பிறகு தண்ணீர் கொடுத்தவளின் கால்களில் விழுந்து அந்த விதவை இவ்வாறு கூறினாள். “என் தங்கையே! நீ எனக்காகச் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

நீதான் எனக்கு உயிரளித்த கடவுள். ஆனால்இந்த இடத்தை விட்டு உடனே சென்று விடு! நீ எனக்குத் தண்ணீர் அளித்தது மற்றவர்களுக்குத் தெரிய வந்தால், நாம் இருவருமே துன்பப்பட நேரிடும். உன்னைப் பற்றி நான் யாரிடமும் சொல்லமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.’’

இறுதிச் சடங்கிற்குப் பிறகு பதினைந்து நாட்கள் வரை நெருங்கிய உறவினர்களாயிருப்-பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை (24 மணிக்கு ஒரு தடவை) மட்டுமே நீரும் உணவும் அருந்தலாம். ஆனால் விதவையானவள் ஒரு ஆண்டிற்கு இவ்வாறு இருக்க வேண்டும்.

இறுதிச் சடங்கு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் விதவையானவள், வீட்டின் ஒரு மூலையில், கணவன் உயிருடன் இருந்தபோது அணிந்திருந்த துணிகள் உலர்ந்து இருந்தாலும் ஈரமாக இருந்தாலும் அவற்றின் மீதே அமர்ந்திருக்க வேண்டும்.

பதினோராம் நாள் ஒரு பிராமணன், குற்றவாளியைத் தேடி வரும் காவலனைப் போல் அந்த வீட்டிற்கு வந்து, பணம், எண்ணெய், மற்றும் பிற பொருள்களையும் தனக்குத் தர வேண்டுமென்று கேட்கிறான். அந்த விதவை ஏழையாக இருந்தாலும், பணத்தைத் தர வேண்டும் அல்லது பின்பு கொடுப்பதாக வாக்குறுதியாவது தர வேண்டும்.

மிகவும் ஏழையாயிருப்பவர்கள் பதின்மூன்று ரூபாய் பணமாவது கொடுக்க வேண்டும். இறந்தவனின் குடும்பம் பணக்காரக் குடும்பமாக இருந்தால் பிராமணர்கள் கேட்கும் பணமும் பொருள்களும் அதிகமாகவேயிருக்கும். ஏழையாயிருக்கும் விதவை, மாவு அரைத்தும் கடுமையான வேலைகளைச் செய்தும் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

“ஓ! கடவுளே! ஏன் எங்களை இவ்வாறு துயரப்பட படைத்தாய்! பிறப்பிலிருந்து இறக்கும் வரை துயரம்தான் எங்களுக்குத் துணையா? எங்களுடைய கணவர்கள் உயிருடன் இருந்தவரை நாங்கள் அவர்களுக்கு அடிமையா-யிருந்தோம்.

அவர்கள் இறந்த பிறகு எங்களுடைய நிலை இன்னும் மோசமானதாக உள்ளது. ஆனால் அவர்கள் இவ்வுலகிலும் விரும்பியவற்றைப் பெறுகின்றனர். மறு உலகிலும் நன்மைகள் விளையும் என்ற உறுதிமொழியைப் பெறுகிறார்கள்.’’

பதின்மூன்றாம் நாள் அந்த விதவை, கணவன் இறந்தபோது தான் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிவிட்டு, நீராட அனுமதிக்கப்படுகிறாள். உறவினர்கள் கூடி அவள் முன்பு பணத்தை வீசுகிறார்கள். இது அவளுக்குரிய வாழ்க்கைப் பெருளுதவியாகக் கருதப்படுகிறது. இப்பொழுதும் மற்றவர்கள் அவளை வசைபாடுவதை நிறுத்துவதில்லை.

இவ்வாறு அவளுக்கு அளிக்கப்படும் பணம் அதிக அளவில் இருந்தால் அவளது பணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. சில சமயங்களில் இதை அவர்கள் சுருட்டிக்கொள்வதும் உண்டு.

தற்பொழுது மறுபடியும் பிராமணர்கள் பணம் கேட்டு வருகிறார்கள். விதவையின் தலை மழிக்கப்படுகிறது. இதற்கும் பிராமணர்கள் பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

பெற்றோர் யாரும் இல்லாத விதவைகளின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இவர்கள் தங்களுடைய சகோதரர்கள் அல்லது மகன்களின் மனைவிகளுக்கு அடிமையாய் பணி செய்ய வேண்டியிருக்கிறது. விதவைகள் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்காரர்கள் யாரும் தேவையில்லை. கணவனின் சகோதரி விதவையின் மீது அதிகாரம் செலுத்துபவளாய், இரவும் பகலும் ஓயாது அவளுடன் சண்டையிடுபவளாய் இருக்கிறாள்.

ஒரு விதவை தன் கணவனின் வீட்டில் இருந்தாலும் இதே நிலைதான். அவள் மாமியாராலும் கணவனின் சகோதரிகளாலும் வெறுத்து ஒதுக்கப்படுகிறாள்.
உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படும் நூல்களின் பகுதிகளாக இருப்பவை:

“தன் கணவனின் உடலுடன் தன்னை எரியூட்டிக் கொள்பவள் அருந்ததிக்கு நிகரானவளாகச் சுவர்க்கத்தை அடைவாள்.’’

இவ்வாறு செய்பவள், பாம்பு பிடிப்பவன் பாம்பினை அதன் வளையிலிருந்து வெளியே இழுப்பதைப் போலத் தன் கணவனை நரகத்திலிருந்து இழுத்து அவனுடன் சுவர்க்க போகத்தை அனுபவிப்பாள்.’’

“கணவனுடன் இறப்பவள், அவளுடைய தாய் வழியிலும் தந்தை வழியிலும் உள்ள முன்னோர்களையும், கணவனின் முன்னோர்களையும் புனிதப்படுத்துகிறாள்.’’

“இவ்வாறு செய்பவள் தன் கணவனுடன் பதினான்கு இந்திரர்களின் ஆட்சிக்காலம் வரை விண்ணுலகில் இன்பங்களை அனுபவிப்பாள்.’’

“இவ்வாறு கணவனுடன் இறப்பவள், தன் கணவன் பிராமணனைக் கொன்றவனாக இருந்தாலும், செய்நன்றி கொன்றவனாக இருந்தாலும், நண்பனைக் கொலை செய்தவனாக இருந்தாலும் தன் செயலின் மூலம் அவனது பாவங்களைப் போக்குகிறாள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *