இந்திய வரலாற்றில் இராஜாராம் மோகன்ராய்க்கு என்று ஒருசிறப்பான இடம், அழிவில்லா இடம் உண்டு. அதிலும் குறிப்பாக பெண்ணிய வரலாற்றில் அவருக்கு ஓர் உயரிய இடம் உண்டு.
சிறுவயது முதற்கொண்டே பகுத்தறிவோடு சிந்தித்தார். ஒவ்வாதவற்றை உதறினார். நீண்டகாலமாகப் பின்பற்றப்படுகின்ற காரணத்தால் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அறியாமை என்று கூறினார். அவரது குடும்பம் பழுத்த வைதீகக் குடும்பம். தந்தை பெரியாரைப் போலவே, பெற்றோருடன் முரண்பட்டார். விவாதம் செய்தார். வெறுப்புக்குள்ளானார். பெரியாரைப் போலவே வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே சென்றார். வங்காளப்பகுதி என்றாலே பல நூற்றாண்டுகளாகப் பெருமை பெற்ற பகுதியாகும். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஒப்பற்ற தலைவர்களை அளித்த மண் அது. அத்தகு வங்காளத்தில் பர்த்துவான் மாவட்டத்தில், ராதா நகரம் என்னும் ஊரில் 1777ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள், இராமகாந்தர் என்பவருக்கும், தாரிணி என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் இராஜாராம் மோகன்ராய் அவர்கள்.
இராஜாராம் மோகன்ராய் சிறுவனாக இருந்தபோது தன்னுடைய அறையில் அடிக்கடி எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார்.
அப்படி என்னதான் எழுதுகிறான்? இன்றைக்குப் பார்த்துவிட வேண்டும்! என்றார் தந்தை.
அவன்தான் வெளியில் போயிருக்கிறானே, போய் எடுத்துப் படித்துப் பாருங்கள்! என்றார் தாய்.
இருவரும் இராஜாராம் மோகன் அறைக்குச் சென்று, மேசையுள் தேடினர். ஒரு மூலையில் கற்றையாக எழுதி வைக்கபட்டிருந்த தாள்களை எடுத்துப்படித்தனர்.
இருவர் முகத்திலும் கடுகடுப்பு.
அவன் வரட்டும்! என்று வேகப்பட்டார் தந்தை.
இப்போதே கண்டித்து வையுங்கள்! என்றாள் தாய்.
இராஜாராம் மோகன்ராய்க்கு இது தெரியாது. வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர் வழக்கம்போல் அறைக்குச் சென்றார். உடனே அவரைப் பார்த்த தந்தை, இராஜாராம் மோகன் எழுதிய தாள்களைக் காட்டி, என்னடா இது? என்று கோபத்துடன் கேட்டார்.
நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அதற்காக எழுதியவை தான் இவை என்றார் இராஜாராம் மோகன்.
பெரிய மேதை. அதற்குள் புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாயா? முளைச்சு மூன்று இலை வரவில்லை. அதற்குள் ஊருக்கு உபதேசமா?
சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும்! என் அறிவுக்கு எட்டியதை எழுதியுள்ளேன்..
என்னதான் எழுதியுள்ளாய் சொல்!
கடவுள் ஒருவரே; பல கடவுள் இல்லை; அவருக்கு உருவம் கொடுத்து வழிபட வேண்டியதில்லை என்பதை இந்நூலில் விளக்கப் போகிறேன்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் முன்னோர்கள் பெரியவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர். அவர்களை விட நீ பெரிய அறிஞனா?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் முன்னோர் பெரியோர் நம்பியதால் அது உண்மையாகி விடாது; செய்ததால் அது சரியாகிவிடாது. உருவ வழிபாடு பகுத்தறிவிற்கு ஏற்புடையதாய் இல்லை! என்றார்.
சிறுவனாக இருந்தபோதிலும், தந்தையுடன் தெளிவாக, உறுதியாகத் தன் கருத்தைச் சொன்னார் இராஜாராம் மோகன்ராய்.
குடும்ப வழக்கத்திற்கு மாறாக உன் விருப்பப்படியெல்லாம், நீ நடக்க இயலாது. நாங்கள் சொல்கிறபடிதான் நீ கேட்க வேண்டும்! என்றார் தந்தை.
நீங்கள் சொல்வது உண்மையானால் அதை ஏற்று நடப்பேன். இல்லையென்றால் அதன்படி நடக்க மாட்டேன்! என்று நறுக்கென்று பதில் சொன்னார் இவர்.
அவ்வளவு பெரிய மனிதனாகிவிட்டாயா நீ? இனி உனக்கு இந்த வீட்டில் வேலையில்லை. நீ வெளியே போகலாம்! தந்தை கண்டிப்பாகக் கூறினார்.
வீட்டைவிட்டு விரட்டினால் பயந்து நம் வழிக்கு வந்துவிடுவான் என்று பெற்றோர் எண்ணினர். ஆனால், பிள்ளையின் முடிவு பிடிவாதமாய் இருந்தது.
வீட்டைவிட்டு வெளியே சென்ற இராஜாராம் மோகன்ராய் இரவு வீடு திரும்பவில்லை. தாய் பதறித் துடித்தாள். தந்தையும் தவித்தார். எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்று தந்தை நம்பினார். ஆனால் எதிர்பார்த்தப்படி வராமல் போகவே, அவனது மேசையுள் தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே கடிதம் இருந்தது.
தங்கள் கட்டளைப்படி நான் வெளியேறுகிறேன். வீணாக என்னைத் தேடாதீர்கள்! என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
வீட்டைவிட்டு வெளியேறிய இராஜாராம் மோகன் விரும்பும் இடமெல்லாம் நடந்தார். காரணம், எங்கு செல்வது? யாருடன் தங்குவது? என்ன செய்வது என்றே தெரியாமல் நடந்து கொண்டிருந்தார். வீட்டைவிட்டுப் புறப்பட்ட போது அவருக்கு 12 வயதுதான். சிந்தனைத் தெளிவு பெற்ற சிறுவன் என்பதால், தீரத்துடன் நடந்தார். எங்கு கோயில்கள் உள்ளனவோ அங்கு சென்றார். அங்குள்ள பண்டிதர்களுடன் வாதிட்டார். சிறுவன்தானே என்று எண்ணி அவரிடம் பேசத்தொடங்கி வாதிட்ட பண்டிதர்கள், அவரது அறிவுக் கூர்மையையும், வாதத் திறமையையும் கண்டு திகைத்தனர். வியந்தனர். தன் வாதத்திற்கு சாத்திரங்களி லிருந்தெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசியதைக் கண்ட பண்டிதர்கள், அவரோடு வாதிட முடியாமல், தங்கள் இயலாமையை மறைக்க, அதிகப்பிரசங்கி! உனக்கென்ன தெரியும், போய் விடு இங்கிருந்து! என்று விரட்டினார்கள். மழுப்பல்வாதமும், குழப்பல்வாதமும்தானே வைதீகர்களின் வழக்கம். எனவே கருத்துக்குக் கருத்தை வைக்க இயலாமல் வெறுத்து விரட்டினர்.
இவ்வாறு அவர் செல்லும் இடமெல்லாம் விவாதங்களும் விரட்டல்களுமே தொடர்ந்தன. கால்நடையாகவே தொடர்ந்து நடந்து திபெத்தை அடைந்தார்.
இராஜாராம் மோகன் வேதாந்த சாரம் என்னும் நூலை எழுதினார்.
இவற்றைக் கண்ட ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மறைபொருளாகக் காத்து மதிப்பாக வைத்திருந்த வேதம், உபநிடதம் போன்றவற்றை விமர்சித்து அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டாரே என்றும் இவற்றிலுள்ள மூடத்தனங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டாரே, இதனால் தங்களின் ஆதிக்கமும், மதிப்பும், செல்வாக்கும் சிதறிப்போகுமே என்றும் கோபம் கொண்டனர்.
வேதங்களையும் உபநிடதங்களையும் மற்றவர்கள் தீண்டுவதே குற்றம் என்று, கோலோச்சி வாழ்கின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்கள். அதில் கைவைத்து, அலசி எடுத்து அச்சிட்டு, அதிலுள்ள சீர்கேடுகளை இவர் அம்பலப்படுத்தியதால், அதற்கு எதிர்நடவடிக்கை மேற்கொள்ள ஆரியர்கள் முடிவு செய்தனர்.
சமஸ்கிருதம் வேதமொழி. அம்மொழியில் உள்ளவற்றை நீசமொழியான ஆங்கிலத்தில் எழுதினால், வேதங்களின் புனிதம் போய் விடும் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, இராஜாராம் மோகன்ராய் மீது மக்கள் எதிர்ப்புக் கொள்ளும்படிச் செய்தனர்.
ஆரியர்களின் எதிர்ப்பு வலுக்க வலுக்க, இவருக்குக் கொள்கை மீதும் சீர்திருத்தச் செயல்பாடுகளிலும் பிடிப்பு அதிகமாயிற்று. தன் சீர்த்திருத்தப் பணிகளை இன்னும் தீவிரமாகச் செய்தார். யார் எதிர்த்தாலும் உண்மையைச் சொல்வதிலிருந்து ஒதுங்கமாட்டேன் என்று உறுதி கொண்டார்.
ஆரியர்கள் இவருக்கு எதிராக நூல்கள் வெளியிட்டு எதிர்த்தனர். இவர் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதில் கூறினார். இந்துக்களின் உண்மையான எதிரிகள் ஆரியர்களே. அவர்கள்தான் சுயநலத்திற்காக எல்லாவற்றையும் சீரழித்தவர்கள் என்று சாடினார்.
இராஜாராம்மோகன் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் தரம் தாழ்ந்திருந்தது. ஆணாதிக்கம் அளவுக்கு மீறி நின்றது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம், வேண்டாதவளை எப்போது வேண்டுமானாலும் விலக்கலாம் என்ற கொடிய நிலை அதிகம் காணப்பட்டது. ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
உயிருள்ள பெண்ணை தீயில் தள்ளி எரியவிட்டால் அவள் எரிந்து சாகும் வரை என்ன பாடுபடுவாள். எப்படியெல்லாம் துடிப்பாள், அவள் அடையும் வேதனையை வார்த்தையாலும் எழுத்தாலும் வெளிக்காட்ட முடியுமா? அதைவிட ஒரு கொடுமை இந்த உலகில் வேறு இருக்க முடியுமா?
எரித்து முடித்த காட்டுமிராண்டிகள் அந்தப் பெண் கற்புக்கரசி, சதிமாதா என்று புகழ்ந்து பெருமை கொள்வார்கள். இப்படிப்பட்ட கொடுமையைக் காலஞ்சென்ற சங்கராச்சாரி, சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் மிகவும் சிறப்பித்து எழுதியுள்ளார். பேசியுள்ளார். அவர்தான் நடமாடிய தெய்வம் என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். மனித நேயமே அற்றவர்களெல்லாம் மகான்கள் தெய்வங்கள். இவர்களெல்லாம் தாயைப் போற்றுகின்றவர்கள். எல்லாப் பெண்களுமே யாரோ ஒருவருக்குத் தாய்தானே! தாயை மதிக்கின்றவன் இப்படியா செய்வான்?
இப்படிப்பட்ட கொடுமைகளை இராஜாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்த்தார். ‘சதி’ என்ற உடன்கட்டை ஏற்றப்படும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
உடன்கட்டை ஏற்றப்படும் செய்தி கிடைத்தால், உடனே அங்கு செல்வார். அதன் கொடுமையை, அவ்வாறு செய்கின்றவர்களின் அறியாமையை தெள்ளத் தெளிவாக அம்மக்களுக்கு விளக்குவார்.
இவரது வார்த்தைகளைக் கேட்டு இக்கொடிய வழக்கத்தைக் கைவிட்டவர்கள் சிலர், ஏற்க மறுத்தவர்கள்பலர்.
சதி வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்படி ஆட்சியாளர்களிடம் வற்புறுத்தினார். 1829-இல் அரசுப் பிரதிநிதிகளாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங்க் இவரது கருத்தை ஏற்றுக் கொண்டார். உடன்கட்டை ஏறுவதைச் சட்ட விரோதம் என்று அறிவித்தார். பெண்களுக்கு எதிரான இக்கொடிய வழக்கம் இராஜாராம் மோகன்ராய் அவர்களின் அரிய முயற்சியால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டது.
இராஜாராம் மோகன்ராய் செய்த தொண்டில் இது முதன்மையானது. என்றென்றும் நிலைத்துநிற்கும் வரலாற்றுச் சாதனை. பெண்ணிய வரலாற்றில் பெரிய இடத்தை இவர் பிடித்தார். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மாபெரும் கொடுமையை இவர் ஒழித்துக் கட்டியதன் மூலம், பெண்ணினமே பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தது.
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். விதவைகள் மறுமணம் செய்து-கொள்ள துணிவுடன் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வங்காளத்தில் விதவைப் பெண்களை இவர் ஏராளமாகப் பார்த்திருக்-கிறார். அவர்களின் வேதனைகளை இவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, விதவைப் பெண்கள் திருமணத்தைப் பெரியவர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மனைவியை இழந்தவன் வயதான காலத்தில் கூட உடனடியாக மறுமணம் செய்துகொள்ளும் போது இளம் விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது என்பது எவ்வகையில் சரி? என்று வினா எழுப்பினர்.
ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று கோரினார். பெண்களுக்குச் சொத்துரிமையில்லாத காரணத்தால்தான், ஆண்களுக்கு அடிமையாக வாழ வேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஆணை நம்பியே பெண் வாழ வேண்டிய கட்டாயத்தையும் இது உருவாக்குகிறது. எனவே பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்றார்.