நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகள் நம் குழந்தைகள்

மே 01-15

 அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன்வரலாறு (177)

நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகள் நம் குழந்தைகள்

சேலம் மாவட்டம் இடைப்பாடியில் நடைபெற்ற சுயமரியாதை வீரர் திரு.கை.இ.கைலாசமுத்து ஜெயலட்சுமி இவர்களின் செல்வன் முகிலனுக்கும் இடைப்பாடி திருவாளர் மெய்வேல் செல்லம்மாள் இவர்களின் புதல்வி செல்வமணிக்கும் இடைப்பாடி பருவதராஜாகுல  திருமண மணிமண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஏற்பு விழா 07.09.1980 அன்று நடைபெற்றது. விழாவிற்கு நான் தலைமை தாங்கினேன். தோழர் கைலாசமுத்து அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகப் பொருளாளர்கள் தோழர்கள் குப்புசாமி, கு.சண்முகம், அ.சின்னப்பன் மற்றும் பலரும் கலந்து-கொண்டார்கள்.

மாலையில், நடைபெற்ற இடைப்பாடி கழக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். நெல்லை மாநாட்டிலிருந்து பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும் நம் இயக்கத்தின் மீது புழுதிவாரித் தூற்றுகின்றனர்.  பொதுவுடமை பேசுகின்ற பார்ப்பனர்கள் நாங்கள் பொருளாதாரத்தைப் பற்றி பேசுவதில்லை என்றாலும் நாங்கள் ஏழை, பணக்காரன் என்று இருக்கலாம் என்று விரும்புவது போலவும் பேசி நம் இளைஞர்கள் மத்தியில் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எங்கள் நோக்கம், பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதானே?

சாதியற்ற _ வகுப்பற்ற சமுதாய அமைப்பை உருவாக்குவதுதானே எங்களின் நோக்கம் அதுதான் அவசியமுங்கூட.

இந்த இரண்டிலே எது வலிமை மிகுந்ததோ _ எது மிகவும் இழிவானதோ அதை முதலில் களையெடுக்க வேண்டுமா, இல்லையா?’’ போன்ற கருத்துகளை ஆழமாக மக்கள் தெளிவாகும்படி எடுத்துக்கூறினேன்.

கூட்டத்திற்கு ஏராளமான கழக தோழியர்கள், தோழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்துகொண்டதோடு, ஏராளமான பொதுமக்களும் மாநாடு போல பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

08.09.1980 அன்று காலையில் கோட்டூரில் நடைபெற்ற திருமண விழாவில் பழம்பெரும் சுயமரியாதை வீரர் தோழர் க.நடேசன் அடுசு அவர்களின் புதல்வன் செல்வன் வெற்றி வீரனுக்கும் கோட்டூர் திருவாளர் ப.பிச்சை _ ராசம்மாள் அவர்களின் புதல்வி செல்வி சரோசாவிற்கும் நடந்த விழாவில், நான் கலந்துகொண்டேன்.

திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் அவர்களது அரவணைப்பில் வளர்ந்த செல்வி கீதாவிற்கும், கோவை மாவட்டம், உடுமலை வட்டம் வாளாவாடியைச் சேர்ந்த செல்வன் வடிவேலு சண்முக சுந்தரத்திற்கும் (சேரன் போக்குவரத்துக் கழகம்) வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் திருச்சியில் 11.09.1980 அன்று என்னுடைய தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் தாளாளர் புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் நான் தலைமையுரை ஆற்றும்-போது, அறிவு ஆசான் தந்தை பெயி££ர் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் தமக்குப் பின்பு இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே வரையறை செய்து பல நடக்க வேண்டிய திட்டங்களை வரையறுத்தார்கள்.

இந்தச் செல்விக்கென அம்மா அவர்கள் ஏற்பாடு செய்து வைத்த புடவை, நகைகள் உள்ள பையை எடுத்து, “திருச்சி மாவட்டத் தலைவர் மானமிகு வீரப்பா அவர்கள் வழங்கினார். அவரும் உணர்வுவயப்பட்டு மனநெகிழ்ச்சியோடு வழங்கினார். அதற்குப் பின் தி.க. பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் துணைவியார் அவர்கள் மணமகளுக்கு புதிய ஆடைகளை வழங்கினார்.

இந்த மணவிழா நடைபெறுவதற்குக் காரணமான அரசம்மை நடராசன் அவர்களுக்கும் நாம் மிகுந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டேன்.

விழாவில் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, தி.க. விவசாய தொழிலாளர் அணி பிரிவுச் செயலர் மானமிகு எம்.ஏ.ஜோசப் மற்றும் மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம் அவர்களும் கலந்து கொண்டனர். கழகப் பொருளாளர் திரு.கா.மா.குப்புசாமி அவர்கள் பேசுகையில், அய்யா, அம்மாவுக்குப் பிறகு பொதுச் செயலாளரின் திறமையான நிர்வாகத்தால் நடக்கும் பல சீரிய பணிகளில் இது மிகச் சிறந்ததாகும். இந்த மணமுடிக்கும் மணமகனுக்கு இதைவிட வேறு பெருமை இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டத் தலைவர் தேவசகாயம் அவர்கள் பேசுகையில், இந்த வகையிலான திருமணங்கள் சாதி, மத, சாத்திர மூடநம்பிக்கைகளை அகற்றப் பெரிதும் பயன்படும். நம் மத்தியில் அய்யாவும் _ அம்மாவும் இல்லையென்றாலும் இருவராகவும் இருக்கின்ற அய்யா பொதுச்செயலாளர் அவ்ர்களுக்குத் தோன்றாத் துணையாகின்ற இவர்கள் வாழ்விற்குப் பாடுபடுவோம் என்றும் இந்த மணமக்கள் நீடுழி வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் தலைமை ஆசிரியர், திரு.கவியரசு அவர்களும், பெரியார்_மணியம்மை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி வைதேகி நாகம்மை, ஆசிரியர் பயிற்சி முதல்வர் திருமதி ஜெஸ்ஸி _தியாகராசன், பெரியார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்தாய் _ சேதுபதி, சுயமரியாதை வீரர் ஆளவந்தார், தஞ்சை நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் திருமதி சுலோசனா, பகுத்தறிவுப் பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கழக மகளிர், தோழர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு எச்.வி.ஹண்டே அவர்கள் மருத்துவக்கல்லூரி சேர்க்கை சம்பந்தமாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்த பேட்டியில், தெரிவித்துள்ள ஒரு செய்தி பெரிதும் அதிர்ச்சியூட்டக்கூடியதாக மட்டுமல்ல; சூழ்ச்சி நிறைந்த பார்ப்பனத் தனமுமாகும். இதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் 12.09.1980 அன்று “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு’’ என்ற தலைப்பில் கண்டனத்தையும், வருமான வரம்பு ஆணையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையும் வெளியிட்டு விளக்கியிருந்தேன்.

12.09.1980 அன்று காலை 10 மணிக்கு, மதுரை ரயில்வே இன்ஸ்டிடியூட் மனமகிழ்மன்ற அண்ணா அரங்கில், மானமிகு பொ.பொம்மையா அவர்கள் முன்னிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மு.முத்தையா, நாகூரம்மா முத்தையா ஆகியவர்களின் செல்வி மனோரஞ்சிதம், மணலூர் சீனியம்மாள் _ முத்தையா அவர்களின் செல்வன் நடராசன் பி.ஏ. ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா நடைபெற்றது. ஒப்பந்த விழாவினை நான் நடத்தி வைத்தேன்.

14.09.1980 அன்று வடலூரில் பார்ப்பன ஆதிக்க, ஜாதி ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். அப்போது, கல்வி உத்தியோகத்தில் நாம் நமது உரிமைகளைப் போராடிப் பெற்று பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

15.08.1980 அன்று பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கை எளிமையாக துவக்கப்பட்டதன் தொடர்ச்சியாய் தலைமை நீதிபதி, அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பெருவிழாவாக பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் துவக்க விழா முறைப்படி எழுச்சியுடன் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் பெரியார் _ மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகத்தின் சார்பில் 21.09.1980 அன்று துவக்க விழா மாலையில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

விழாவினை ஒட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி வாயிலில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலவீதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில் கலந்துகொள்ள வந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு மு.மு.இஸ்மாயில் அவர்களை புத்தாடை போர்த்தி வரவேற்று புதிதாகக் கட்டிடம் கட்டப்பட இருக்கும் இடத்தினைச் சுற்றிக் காட்டினோம். விழா தொடங்கியதும், மாண்புமிகு அமைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரியைத் திறந்து வைத்தார்கள். அமைச்சர்கள் எஸ்.டி.சோம சுந்தரம், செ.அரங்கநாயகம், தலைமை நீதிபதி மு.மு. இஸ்மாயில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் முக்கிய விருந்தினர்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் பகுதிகளை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

முதலாவதாக அடிக்கல் நாட்டு விழா நடை-பெற்றது. பெரியார் நூற்றாண்டு துவக்க விழா கல்வெட்டினை நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் அவர்களும், மகளிர் பாலிடெக்னிக் கட்டிடத்திற்கான அடிக்கல் கல்வெட்டை கல்வி அமைச்சர் மாண்புமிகு செ.அரங்கநாயகம் அவர்களும், விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல் கல்வெட்டை வருவாய்த்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களும் திறந்துவைத்தார்கள்.

தந்தை பெரியார் உருவப்படத்தினை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களது உருவப் படத்தினை விஞ்ஞானி பி.குமாரசாமி அவர்களும், அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோர் உருவப் படங்களை திரு அன்பில் தர்மலிங்கம் அவர்களும் திறந்து வைத்தார்கள்

நான் எனது வரவேற்புரையில்

“இப்படியொரு அருமையான காட்சியைக் காண்பதற்கு நமது அருமைத் தந்தை அவர்கள் இல்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கத்திலே துக்கத்தை ஏற்படுத்துகின்றது. தந்தை இல்லாவிட்டாலும்கூட தமிழ்ச் சமுதாயத்துக்கு தாயாக இருந்து கொண்டு தமிழ் சமுதாயத்துக்கு வந்த சங்கடங்களை எல்லாம்கூட தானாக சமாளித்துக் கொண்டு உடல் நிலை அதைத் தாங்க கூடிய சக்தியோடு இல்லாவிட்டாலும் கூட உள்ளம் அதைத் தாங்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறது என்று காட்டிய அன்னை மணியம்மையார் அவர்களும் இல்லையே என்ற சங்கடமும் இந்த நேரத்திலே இருக்கிறது. 

அவர்கள் எல்லாம் இல்லாத இந்த நேரத்திலே அவர்களோடு இருந்த சாதாரணமானவன் என்ற முறையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இந்த மாவட்டத்திலே மகளிர் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே இதுபோன்ற காரியங்களைச் செய்தோம். அதற்குப் பேராதரவு அளித்தார்கள்; அளித்துக் கொண்டும் வருகிறார்கள், இனியும் அளிப்பார்கள் என்ற துணிவோடு நாங்கள் இருக்கிறோம்.

பெரியார் – மணியம்மை கல்வி அறப்பணி கழகத்தின் சொத்து என்பது தமிழ் சமுதாயத்தின் நல்லெண்ணம்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் இது மிகச் சாதாரணமானதாகக் கூட இருக்கலாம்.

எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற உணர்வோடு நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்.

தந்தை பெரியார் மகளிர் பாலிடெக்னிக் அருகேயுள்ள தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களை மகளிர் பாலிடெக்னிக் தத்தெடுக்கும் என்ற தகவலை நான் அறிவித்தேன்.

விழாவில் தலைமை நீதிபதி மாண்புமிகு மு.மு. இஸ்மாயில் அவர்கள் உறையாற்றும்போது, பெரியார் தனி வாழ்க்கையில் சிக்கனமாக வாழ்ந்தார், சமுதாயத்துக்கு அதை பயன்படுத்துவதில் சிக்கனம் காட்டவில்லை குருவி ஓடி ஓடி நெல் மணியைச் சேர்ப்பது போல் அவர் சேர்த்த செல்வம் இன்றைக்கு அறக்கட்டளையாகி, கல்வி நிறுவனங்களாக சமுதாயத்துக்குப் பயன்பட்டு வருகிறது.

எந்தப் பெரியாரின் பெயரிலே இந்த நிறுவனமும், நிர்வாகமும் இயக்கமும் நடக்கிறதோ அந்தப் பெரியார் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பெண்களுக்கு, வசதி வேண்டும், வாய்ப்பு வேண்டும், கல்வி வேண்டும்,  உரிமை வேண்டும் என்று போராடியவர்.

இந்த இடம் மேடும் பள்ளமுமாய், கரடு முரடாய், பயனற்றதாய் இருந்தது. அதை கடினப்பட்டு உழைத்துப் பயனுள்ள கல்வி நிறுவனமாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாற்றியுள்ளார்கள் என்று உரையாற்றினார்.

தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உறையாற்றிய போது,

அய்யா பெரியார், அன்று சிக்கனமாக சேர்த்த பணங்கள் தான் இன்றைக்கு அரசு நிலையங்களாக உருவாகின்றன. பல செய்திகளில் வீரமணி அவர்கள்  நூற்றுக்கு நூறு பெரியார் அவர்களுடைய பாதையில் செல்கிறார் என்று குறிப்பிட்டார்.

விழாவில், தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வெட்டினைத் திறந்து வைத்து டாக்டர் நாவலர் அவர்கள்,

அய்யா அவர்கள் சிறுவயதாக இருக்கும்-போது நடந்த ஒரு நிகழ்ச்சி _- ஈரோட்டில் காளிங்கராயன் வாய்க்கால் என்று ஒரு வாய்க்கால் அவர் வீட்டிற்கு அருகில் ஓடும். தினமும் அந்த வாய்க்காலுக்குச் சென்று பல் துலக்கி, குளித்து விட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அந்த வாய்க்காலுக்குச் சென்றபோது தம் வீட்டுக்குத் தெரிந்த புரோகிதர் ஒருவர் அங்கு வந்தார்.

அந்தப் புரோகிதர் தர்ப்பணம் பண்ணி விட்டு தண்ணீரை மேலே எறிந்தாராம். அவரிடம் சென்று அய்யா அவர்கள், ‘தண்ணீரை மேலே ஏன் எறிந்தீர்கள்’ என்றாராம். அதற்கு அந்தப் புரோகிதர் பிதிர்கள் மேலோகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுப்புகிறேன் என்றாராம்.  உடனே பெரியார் அங்கிருந்து பானை ஓடு ஒன்றை எடுத்துக் கொண்டு போய் ஆற்றுத் தண்ணீரை எடுத்து மேலே வீசிக் கொண்டே இருந்தாராம்.  உடனே புரோகிதர் அவரிடம் போய், “ஏன் தம்பி ஓட்டை எடுத்து தண்ணீரை மேலே வீசிக் கொண்டிருக்கிறாயே என்ன காரணம்? என்று கேட்டாராம்! நீங்கள் எறிந்த தண்ணீர் மேல் லோகத்துக்கே போகும் என்றால் நான் எறிந்த தண்ணீர் பக்கத்திலுள்ள சோலைக் காட்டிற்க்குப் போகாதா? என்றாராம்.  இந்த நிகழ்ச்சி அய்யா அவர்களுடைய 8 வயதில் நடந்தது. சிறுவயது முதற்கொண்டே, சிந்திக்கிற சக்தி அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று பல்வேறு சம்பவங்களை எடுத்துக் கூறினார்கள்.

விழாவில், கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் அவர்கள் கலந்துகொண்டு பேசும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சமுதாயத்தில் காண விரும்பிய மாற்றத்திற்கு ஏற்ப அவருடைய பெயராலே அமைக்கப்பட்டிருக்கின்ற அறக்கட்டளையினர் நல்ல காரியத்தைச் செய்து இருக்கிறார்கள். அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் பள்ளிப் பாடங்களில் மதக் கருத்துக்களைக் கட்டாயமாகப் புகுத்தக்கூடாது. அவர்கள் விருப்பப்பட்டு படித்தாலொழிய, வலுக் கட்டாயமாக நுழைக்கக்கூடாது என்றார்.  அதன்படி கல்வி நிறுவனங்களும் அரசும் செயல்பட வேண்டும் என்றார்.

வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் திரு. எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மகளிர் பாலிடெக்னிக் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், “பெரியார் கொள்கைகளில் என்றும் உறுதிக் காப்போம்’’ என்றும், தந்தை பெரியார் அவர்கள் கொள்கை என்று வரும்பொழுது விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்தப் பள்ளியில் பயின்ற காரணத்தால் நாங்களும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று குறிப்பிட்டார்.

திராவிடப் பாரம்பரியத்தில் இருந்தவர்கள் இன்றைக்கு அமைச்சரவை அமைத்த காரணத்தினால் பெரியாருடைய கொள்கை-களை முழுமையாக செயல்படுத்த முடிந்தது என்றார்.

அரசு நிலத்தை ரூ.19,000/–_- கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.  பொதுவாக கல்விப் பணிகளுக்கு எல்லாம் அரசு நிலங்களை இனாமாகக் கொடுப்பதுதான் வழக்கம்.  அந்த வகையிலே தான் சென்னை சென்று முதல்வர் அவர்களின் அனுமதி பெற்று இந்தப் பணத்தை திருப்பிதந்து விடுகிறேன் என்று சொல்லி அவரது உரையை நிறைவு செய்தார்.

விழாவில், தஞ்சை மாவட்ட உறுப்பினர் நடராசன், தமிழ் நாடு கல்வித் துறை இயக்குநர் டாக்டர் வெங்கடசுப்ரமணியம், திருச்சி வட்டார தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி. எஸ். மணி சுந்தரம், மின் தொழிற்சாலை பொது மேலாளர் வி. ஆர். தீனதயாளு, தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை – சுந்தரேசன் அய். ஏ. எஸ். திருச்சி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராசன், விஞ்ஞானி பி. குமாரசாமி, பாலிடெக்னிக் தனி அலுவலர். திருமதி சுலோசனா உள்ளிட்ட ஏராளமான பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் கழக நிர்வாகிகள், தோழிகள், தோழர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.

(நினைவுகள் நீளும்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *