சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
முஸ்லிம், கிறித்துவம், சீக்கியம், பௌத்தம், சமணம், பார்சி போன்ற சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்புக் காலம் முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதனைப் பெற விரும்பும் சிறுபான்மை இன மாணவ, மாணவியர் பிளஸ் டூ தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆயுதப்படை வீரர் வாரிசுகளுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை
மத்திய ஆயுதப்படை அசாம் ரைபிள் போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் டூ படித்துவிட்டு மருத்துவம், கால்நடை மருத்துவம், பிபிஏ, பிசிஏ., பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், விவசாயம் படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் எம்பிஏ, எம்சிஏ படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. படைகளில் பணியாற்றும்போது பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் பிளஸ் டூ, இளநிலைப் பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பழங்குடியின மாணவர்களுக்கான நேஷனல் ஸ்பெல்லோஷிப்
பொருளாதாரச் சூழல் காரணமாக கல்வியில் பின்தங்கியுள்ள பழங்குடி மாணவர்களின் எம்பில், பிஎச்டி போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு மத்திய பழங்குடியினர் துறை நேஷனல்ஃபெல்லோஷிப் வழங்குகிறது. இது, ராஜீவ்காந்தி நேஷனல் பெல்லோஷிப் என முன்பு அழைக்கப்பட்டது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், முதுநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் முழுநேர எம்பில், பிஎச்டி படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை
பொருளாதார நிலையில் பின்தங்கிய மிகக் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை (சென்ட்ரல் செக்டார் ஸ்கீம்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். தொழில் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு 4 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
மாநில அரசு கல்வி உதவித்தொகை
வெளிநாடு சென்று உயர்கல்வி பயில உதவித்தொகை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் வருமானம் 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் இந்தியாவில் இல்லாத ஆராய்ச்சி படிப்பைப் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை ஊக்குவிக்க இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரின் வருமானம் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.7,500, முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.8,000 வீதம் வழங்கப்படுகிறது.
சிறப்புப் பரிசுத்தொகை திட்டம்
பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, தொழில்நுட்பப் படிப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெறும் 550 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவியருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மற்றும் கல்வி நிலையத் தலைவர்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
டாக்டர் அம்பேத்கர் தேசியத் தகுதி கல்வி உதவித்தொகை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் ‘அறிவியல், கலை மற்றும் வணிகவியல்’ முதல் பரிசு ரூ.60,000, இரண்டாம் பரிசு _ ரூ.50,000, மூன்றாம் பரிசு _ ரூ.40,000 வழங்கப்படும். இயக்குநர், புதுடில்லி அம்பேத்கர் பவுண்டேஷன், தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணச் சலுகைகள்
தாழ்த்தப்பட்ட, கிறித்துவ மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி நிலைய முதல்வர்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு கட்டணச் சலுகை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இலவசக் கல்வி உதவித்தொகைத் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர். சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது. கல்லூரி முதல்வர்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான உதவித்தொகை
பட்டதாரி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவமும் உறுதிமொழிப் படிவமும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் விளக்கக் குறிப்பேட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழை துணை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும். உறுதிமொழி படிவத்தில் மாணவரும் பெற்றோரும் கையெழுத்திட வேண்டும்.
பாலிடெக்னிக் இலவசக் கல்வி உதவித்தொகை
மூன்றாண்டு பாலிடெக்னிக் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் வடாது. கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும். மாணவர்கள் படிக்கும் பாலிடெக்னிக் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான உதவித்தொகை
பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழில் கல்லூரிகள் மற்றும் சுயநதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவர்-களுக்கு கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும், தேர்வுக் கட்டணம் முழுமை-யாகவும் வழங்கப்படும். கல்லூரி முதல்வர்கள் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டிலுள்ள தொழில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியருக்கு பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை
மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 சதவீதம் உடல் ஊனமுற்றவராக இருக்க வேண்டும். இரட்டையர் தவிர ஒரே குடும்பத்தில் இருவருக்கு இநத் உதவித்தொகை கிடையாது. ஓர் ஆண்டு மட்டும் நிதியுதவி அளிக்கப்படும். மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை பெற விரும்புவோர், பிளஸ் டூ படித்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வேறு படிப்பில் சேரும் மாணவர்களும் விண்ணப்-பிக்கலாம். பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவத்தில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், அவர்கள் மருத்துவராக பணி செய்யாதவராக இருக்க வேண்டும்.
தொழிலாளர் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப்
பீடித் தொழிலாளர்கள், இரும்புத்தாது, மாங்கனீஸ் தாது, குரோம் தாது சுரங்கத் தொழிலாளர்கள், சுண்ணாம்பு, டாலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தொழிலாளர் நல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை (போஸ்ட் மெட்ரிக் ஸ்கீம் ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் இளநிலைப் பட்டம் வரையில் இந்த உதவித்தொகை வழங்கப்-படுகிறது.
தாயோ தந்தையோ மேற்கண்ட தொழில்-துறையில் குறைந்தது 6 மாதமாக பணியாற்றி வருபவர்களாக இருக்க வேண்டும். பீடித் தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்-களின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். சினிமா தொழிலாளர்களுக்கு மாத வருமானம் 8 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், முந்தைய தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
பழங்குடி இன மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்
பழங்குடி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்காக அம்ப்ரெல்லா ஸ்கீம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இக்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளநிலைப் பட்டம் முதல் ஆய்வுப் படிப்பு வரை படிக்கும் பழங்குடி இன மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விவரங்களுக்கு:
மத்திய அரசு தொடர்பான கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிய:
www.scholarships.gov.in
www.ugc.ac.in
மாநில அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி அறிய:
www.tn.gov.in n
Leave a Reply