வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

மே 01-15

 

கன்னம்

கன்னம் – -தட்டு, தட்டுப் போன்ற கன்ன உறுப்பு. கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றை ஒட்டி இடப்படும் கோட்டுக்கு நடுப்பகுதி தட்டுப் போல் அமைந்திருப்பதை நோக்குக. கன்னம் என்ற உறுப்பு தட்டுப்போல் அமைந்திருந்ததால் அவ்வுறுப்பை கன்னம் என்றனர் பண்டைத் தமிழர். கன்னம் தராசுத் தட்டுக்குப் பெயராகும். கன்னப்பொறி என்பது காதுக்கும் பெயர். அது கன்னத்தின் அருகே அமைந்திருப்பதால் அப் பெயர் பெற்றது.

கன்னம் என்பது கர்னம் என்ற வட சொல்லின் சிதைவென்று கூறுவோர் அறியாதாரும், திருடரும் ஆவார் என்க. காதை ஒட்டி இது (கன்னம்) அமைந்திருக்கும் காரணத்தால், காதையும் கன்னம் என்று கூறுவார். இவ்வாறு கூறுவதும் பிழை என்று காதின் பெயராக கன்னம் என்று கூறும் போதும், கன்னம் வட சொல் அன்று, அதாவது கர்னத்தின் சிதைவாகிய சொல்லன்று.

எனவே, கன்னம் என்ற தூய தமிழ்ச் சொல்லானது, கன்ன உறுப்பு குறிக்கும் போதும், கன்னம் இடுதலைக் குறிக்கும் போதும், தராசுத் தட்டை குறிக்கும் போதும், கன்னம் குறிக்கும் போதும், யானைச் செவியை குறிக்கும் போதும் வடசொற் சிதைவன்று, தூய தமிழ் காரணப் பெயரே என்று கடைபிடிக்க. கதுப்பு என்பதும் கன்னத்தின் பெயர் என்று அறிக. கன்னம் செந்தமிழ்ச் செல்லவமே!

பாது

பாதுகாத்தல் என்ற தொடரிலுள்ள, பாது என்பதை தமிழ் அல்லாது வேறு சொல் என்று, தமிழ் மாணவரிற் சிலர் எண்ணுவதாகத் தெரிகிறது. பகுத்தல், பகுதல், பாதல், பார்த்தல், பாத்திடு என்பவை நோக்குக. பாதல் என்றதில் தல் என்ற இருதினை நிலை இல்லை. முதநிலை மட்டும் நின்றது. பாது என்ற சொல்லின் பொருள் பங்கு பகுதி என்பன. அது நாளடைவில் அது தன்னை அடுத்து வரும் வினையை சிறப்புறுத்துவதோர் சொல்லாய் வழங்குகின்றது. பாதுகாத்தல் என்றால், நன்கு காத்தல் என்பது பொருள் என்க.

பாது தூய தமிழ்க் காரணப் பெயர். வந்தவர் மொழியன்று.

(குயில்: குரல்: 2, இசை: 39, 7-6-1960)

சக்கரம்

இது வடசொல் என்பார் உரை பொருந்துவதன்று. அவ்வாறு செப்புவோர் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் வடமொழியினின்றே வந்தவை என்று கூறும் முந்தா நாளைய விருந்தினர்.

செம்மை என்பதன் அடியாகப் பிறந்த செக்கு என்ற முதனிலையும், அரவு என்றதன் திரிபாகிய அரம் என்ற இறுதிநிலையும் சேர்ந்தது செக்கரம் என அறிக. செக்கரம் என்பது சக்கரம் ஆகியது எப்படி எனின், கூறுவோம்.

தமிழில் முதல் நாளில் மொழி முதலில் சகரம் வராது. பிற்காலத்தில்தான் சகரம் மொழிக்கு முதலில் வருவதாயிற்று அவ்வாறு வரத்தலைப்பட்டபோதுதான் செக்கரம் சக்கரம் ஆயிற்று.

செம்மையின் அடியாகச் செக்கு வருமா எனின், செம்மையின் அடியாக- – செவப்பு, சிவப்பு, சிவம், செவ்வானம், செக்கார், செம்பு முதலிய சொற்கள் வந்தது அறிக. எனவே செக்கு என்பதும் செம்மையின் அடியாகப் பிறந்த சொல்லே என்க.

இனி,

செம்மை என்ற சொற்பொருள் : செந்நிறம், நடுவுநிலை, வட்டம்.

சக்கரம் வட்டமாக இருத்தல் நோக்குக. எனவே, சக்கரம்- – வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்வமேயாகும்.

(குயில்: குரல்: 2, இசை: 33, 14-6-1960)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *