எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகம்

ஏப்ரல் 16-30

நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பீனிக்ஸ் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜோதி பிரகாஷ் தாஸ் தெரிவித்ததாவது:

நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் மட்டு-மல்லாது, தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக இத்தகைய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை இயக்குவது தொடர்பாக, மாநில அரசிடம் ஒப்புதல் கோர உள்ளோம்.

இந்த மாதத்துக்குள் சாண எரிவாயு மூலம் இயங்கும். மேலும் 4 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 10 பேருந்துகள் தயாராகிவிடும்.

இந்தப் பேருந்துகளில் எவ்வளவு தொலைவு பயணம் செய்தாலும், ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

தற்போது, கொல்கத்தா பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சாண எரிவாயு மூலம் இயங்கும் முதலாவது பேருந்து சேவை கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதிகளான உல்தாடாங்கா – காரியா இடையிலான 17 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும். எங்களது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியத்தின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு கிலோ சாண எரிவாயு மூலம், சுமார் 6 கி.மீ. தொலைவு வரை பேருந்து பயணிக்கும். ஏற்கெனவே, தில்லியில் கடந்த 3 மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

சுத்தமானதும், விலை மலிவானதுமான இந்த எரிவாயுவின் மூலம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஓடி முடித்த பேருந்துகளுக்கும் மறுபிறவி அளிக்க முடியும் என்றார் ஜோதி பிரகாஷ் தாஸ்.

இதுகுறித்து மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவிக்கையில், “இது வரவேற்கத்தக்க முயற்சி தான். விதிமுறைகளின்படி செயல்படும் பட்சத்தில் இப்பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *