இதய அறுவை சிகிச்சை செய்த பிறகு, குழாய் வடிவத்திலான கரோனரி ஸ்டென்ட் (சிஷீக்ஷீஷீஸீணீக்ஷீஹ் ஷிtமீஸீt) பொருத்துவது வழக்கம். இந்த ஸ்டென்டின் விலை 23 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சத்துக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் பயன்பாட்டைக் கவனத்தில் கொண்டு, இதன் விலை தற்போது அதிரடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்டென்ட் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. சந்தையில் உள்ள ஸ்டென்ட் விலை பட்டியலை ஆராய்ந்து வந்த ஆணையம் தற்போது அதன் விலையை அதிரடியாகக் குறைத்து நிர்ணயித்துள்ளது.
இந்தப் புதிய விலையின்படி, உலோக ஸ்டென்ட் விலையின் உச்ச வரம்பு 7 ஆயிரத்து 260 ஆகவும், மருந்துடன் கூடிய ஸ்டென்ட் விலை 29 ஆயிரத்து 600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை பிப்ரவரி 14 முதலே அமலுக்கு வருவதாக மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், இதய சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள பல லட்சம் ஏழை மக்கள் பலன் அடைவார்கள்.
இதய நோயாளிகளுக்கு இதமான செய்தி இது!