சரவணன் குடும்பம் ஒரு சிற்றுண்டி விடுதியை ஆரம்பித்து நல்ல நிலைமைக்கு வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஜான்சியின் தாய்வழியில் எல்லோரும் பாரம்பர்யமான பணக்காரர்கள். எனினும் ஜான்சி குடும்பம் நடுத்தரவர்க்கமாகத்தான் இருந்தது. அவர்களை-விட வசதியாக இருந்தாலும் பின்புலப் பெருமைகள் எதுவுமில்லாத சரவணனுக்கு ஜான்சியை மணம் முடிப்பதை ஜான்சியின் உறவினர்கள் ஒப்புக்கொள்ள வில்லை. இதற்கு ஜான்சியின் பெற்றோரும் உடன்பட வேண்டியதாயிற்று.
ஜான்சியைப் பிரித்து வேறு ஓர் ஊரில் அடைத்துவைத்தனர். அவள் கல்லூரிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டது. அது செல்போன்-கள் இல்லாத காலம். எனினும், அவர்களுக்குள் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் ஜான்சியை மீட்டு சரவணனுக்கு மணம் முடித்துவைக்க முன்வந்தார்.
அதற்கான சூழலுக்காகக் காத்திருந்தோம். ஜான்சியின் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வுகளை எழுத அவளுக்கு அனுமதி கிடைத்தது.
உறவினர்கள் காரில் ஜான்சியை அழைத்து-வந்து கல்லூரியில் விட்டுவிட்டு தேர்வு முடியும்வரை இருந்து அழைத்துச் சென்றனர். கடிதம் மூலமாகவே திருமணம் குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி இறுதித் தேர்வு எழுத வரும் ஜான்சி, தேர்வு எழுதும் அறைக்குள் செல்லாமல் கல்லூரியின் பின்புற வாசல் வழியாக வெளியே வர வேண்டும். அங்கு ஒரு காரில் அவளை அழைத்துச் சென்று ஒரு கோயிலில் திருமணத்தை நடத்திவிடுவது என்பது திட்டம்.
இதற்கு ஜான்சி விதித்த ஒரே நிபந்தனை… ‘என் கல்யாணத்துல நூறு பேராவது இருக்கணும். உரிய முறைப்படி கல்யாணம் நடக்கணும்.’
அளவு ஜாக்கெட் ரகசியமாகப் பெறப்-பட்டது. பட்டுப்புடவை, தாலி எல்லாம் வாங்கப்பட்டன. கல்லூரித் தேர்வின் கடைசி நாள். சமையல்காரர்கள் வரவழைக்கப் பட்டார்கள். உணவு தயாரானது. அந்த மலைக்கோயிலில் நூற்றுக்கும் மேல் நண்பர்கள். தவில், நாதஸ்வரம் என எல்லாமே ஜான்சியின் வரவுக்காகப் படி நோக்கிப் பார்த்திருந்தோம்.
கல்லூரியில் பின்வாசலில் கல்யாண வாகனம் காத்திருந்தது. ஆனால், ஜான்சி மட்டும் வரவே இல்லை.
ஆண்டுகள் பல கடந்த பின்பு, அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் அவளை மீண்டும் பார்த்தேன். அது ஜான்சிதான் என்று முதலில் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. என் பேரைச் சொல்லி “நீங்கள்தானே?’’ என்றாள்.
“ஆமாம்’’ என்றேன்.
“மழைக்கால சந்திப்பொன்று நமக்கிடையே நிகழாதா என்ற ஏக்கம் உனக்கில்லையா ஜான்சி…’ இந்தக் கவிதை நீங்க எழுதினதுதானே?’’ என்று கேட்டாள்.
எனக்குப் பதற்றமாகிவிட்டது.
“நீங்கள் ஜான்சியா?’’ என்றேன். அவள் தலையாட்டினாள்.
“நீங்க அந்தக் கவிதையை இன்னும் ஞாபகத்தில் வெச்சிருக்கீங்க. உங்க சரவணன் செத்துப் போயிட்டான் தெரியுமா?’’ என்று கேட்டேன். அவள் முகம் மாறத் தொடங்கியது.
அவள் இதழோரத்தில் கசந்த புன்னகை ஒன்று கண்ணீர்துளிபோல் துளிர்த்தது. “ஏன் அதோட நிறுத்திட்டீங்க. நீங்களும் சொல்லுங்களேன்… ‘நீதான் கொன்னுட்டே’னு. அந்தக் கணத்துக்கான பதில் என்னிடம் இல்லை.
“அவனைக் கொன்றது நீங்க எல்லாரும்தான்…’’ என்று ஜான்சி குரயலுயர்த்தினாள். நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
“அவன் கல்யாணம் பண்ணிக்காம கடைசி வரைக்கும் என்னையே நெனைச்சு உருகி உருகியே செத்துப்போனான். அதானே…’’ நான் சொற்களை இழந்து நின்றேன். அவள் தொடர்ந்தாள்.
“காதலிக்கும்போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப் படுத்தினீங்க. அதுக்குப் பிறகு வாழ்க்கையைத் தேடிப்போகும்போது அவனைக் கையைப் பிடிச்சுக் கூட்டிப் போகலையே. தோற்றுப் போன மைதானத்துல அப்படியே விட்டுட்டுப் போயிட்டீங்களே…’’
ஜான்சியின் சொற்கள் மனதை கிழிக்கத் தொடங்கியிருந்தன. கண்ணீர் உகுத்து கலங்கிநின்ற ஜான்சியின் கண்களில் சொற்களற்ற துயரம். தழுதழுத்த குரலில் உடைந்த ஒரு குடுவையைப் போல மாறிப்போயிருந்த ஜான்சியை நான் இன்று சந்தித்திருக்க வேண்டுமா? காலம் மழையின் அடர்த்தியோடு இறங்கிவிட்டதைப் போலிருந்தது.
ஜான்சி மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“கடைசிப் பரீட்சைக்காக எப்பவும்போல கார்ல ஏறினேன். கார் காலேஜுக்குப் போகலை. ஒரு கோயிலுக்குப் போச்சு. பொண்டாட்டி செத்துப்போன சொந்தக்காரர் ஒருத்தருக்கு என்னை ரெண்டாம் தாரமா கட்டி வெச்சுட்டாங்க. அவருக்கு ஒரு குழந்தை. நாலு வயசு. முதல் நாளே என்னை ‘அம்மா’னு சொன்னா. அப்போதிலிருந்து நான் அம்மாவாயிட்டேன்.
நான் நல்லவளா.. கெட்டவளானு எல்லாம் தெரியாது. ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரியும். இன்னும் எத்தனை வருஷமானாலும் பொம்பளைங்களோடு பிரசவ வலியும், அவ மனசோட வலியும் உங்களுக்கு எல்லாம் புரியாது’’ _ ஜான்சி போய்விட்டாள். அந்த வார்த்தைகள் இன்னும் என்னோடு இருக்கின்றன.
காதல் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பரந்த ஒரு விளையாட்டு மைதானம். ஆட்டத்தின் முடிவை விளையாட்டு வீரனுக்கு உரிய பக்குவத்-தோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திச் சென்றாள் ஜான்சி. தோல்வியுற்றக் காதலுக்கு பெண்ணைத் தூற்றுவதும், விலகிப் போகிற பெண்ணைக் கொல்வதும், அமிலம் வீசுவதும் சமூகத்தின் பொதுப் புத்தி. பெண்ணின் பிரசவ வலியும் மனதின் வலியும் உணருகிற ஆணுக்காக இங்கே ஒவ்வொரு பெண்ணும் கண்ணீர் உகுத்துக் காத்திருக்கிறாள். அந்த வலிகளை உணர்ந்த ஒரு காதலன் எந்நாளும் மரணத்தின், கொலையின் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவன் விளையாட்டு வீரனின் லாகவத்தோடு வெற்றி _ தோல்விகளைக் கடந்து செல்கிறான். எல்லா காதலன்களுக்கும் விளையாட்டு வீரனின் மனோபாவம் வாய்க்கட்டும்.
– கவிபாரதி
நன்றி: ஆனந்தவிகடன் (05.04.2017)