இந்தியாவின் 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 58 சதவீதம் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கருவுற்றுள்ள தாய்மார்களில் 50% பேர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தேசியக் குடும்பநல இலாகாவின் கணக்கெடுப்பில் தெரியவரும் புள்ளிவிவரங்கள் இவை. கருவுற்ற தாய்மார்கள் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இந்நோயால் தாக்கப்படும குழந்தைகளின் இரத்தத்தில் ஹிமோகுளோபின் மிகவும் குறைவாக உள்ளமையால் அவர்கள் மிகச் சீக்கிரம் களைப்படைவதோடு எளிதாக தொற்றுநோய்-களுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் மூளை வளர்ச்சியும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 2011இல் எடுத்த மக்கள் தொகைக் கணக்-கெடுப்பின் அடிப்படையில் 2015இல் 12.4 கோடி குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 7.2 கோடி குழந்தைகள் வயதுக்குக் குறைவான எடை உள்ளவர்-களாகவும், 2.6 கோடி குழந்தைகள் உயரத்திற்குக் குறைந்த எடையுள்ளவர்களாகவும், 4.4 கோடி குழந்தைகள் வயதுக்குக் குறைந்த எடையும், உயரமும் உள்ளவர்களாகவும் உள்ளனர்.
2005_06ஆம் ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அளவில் குழந்தைகள் நலன் பேணும் முறைகள் வேகமாக வளர்ச்சி கண்டுள்ள நிலையிலும் இந்தியாவில் உள்ள வறுமை நிலையே முன்னேற்றத்திற்குத் தடையாகவும் சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாக உள்ளது.
இன்றைய நிலையில் இந்திய அளவில் 15 முதல் 49 வயதுடையோரில் 53 சதவீதம் பெண்களும் 23 சதவித ஆண்களும் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 51% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகக் குறைந்த அளவாக கேரளாவில் 33 சதவீதக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால சந்ததியை உடல்நலமுடன் வளர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் தேவையை இந்தப் புள்ளி விவரங்கள் வற்புறுத்துகின்றன; அரசுகள் கவனம் பெறுமா?
– கெ.நா.சாமி