சிந்தை அள்ளும் செந்தேன் குன்றம்! தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் திராவிடர் திருநாள்

பிப்ரவரி 01-15

 

 

– வை.கலையரசன்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 23ஆம் ஆண்டு விழாவுடன் தமிழ்ப் புத்தாண்டு, _ பொங்கல் விழா இவற்றை உள்ளடக்கிய திராவிடர் திருநாள் கொண்டாட்டம்  பண்பாட்டுத் திருவிழாவாக கடந்த ஜனவரி 15, 16 தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம், வேடிக்கை விளையாட்டுகள், தமிழர் பாரம்பரிய கலை, வீர விளையாட்டுகள், தமிழர் தொல்லியலை எடுத்துக்காட்டும் கண்காட்சி என்று பல நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

முதல் நாள் நிகழ்வுகள் 15.01.2017 அன்று காலை 10 மணிக்கு சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியுடன் தொடங்கின. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், முதியோருக்கான போட்டிகள் மற்றும் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் என்று மிகச் சிறப்பாக நடைபெற்றன.

மாலை 4 மணிக்கு திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலையருகில் தொடங்கின. தஞ்சை கலைமாமணி ஜான் பீட்டர்கலா அவர்களின் சலங்கை ஒலி கலைக்குழு தப்பாட்டத்துடன் பேரணியாக வந்து பெரியார் திடலில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் நடத்தியது. கழகத் தோழர்களும், தமிழ் பெருமக்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று மய்யத்தின் காலப்பயணம் அமைத்திருந்த தொல்தமிழர் சான்றுகள் ஒளிப்படக் கண்காட்சியை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். அங்கு பழைய கற்காலம், பெருங்கற்காலம், உலோக காலம், சங்ககாலம் என்று பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தொல்தமிழர் சான்றுகளை, ஆதிச்சநல்லூர் அழகன்குளம், கரூர், கீழடி, குடியம் உள்ளிட்ட இடங்களில் கண்டு-பிடிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு தொல்தமிழரின் வாழ்வியலைப் பறைசாற்றின.

சலங்கை ஒலி கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வீரக்கலை வாழ்க்கை கல்வி அறக்கட்டளை சிலம்பாட்டக் குழுவின் ‘நாகம் 16’, ‘போர்க்கலை சிலம்பம்’, ‘குத்துவரிசை’ போன்ற தமிழர் வீரக்கலை விளையாட்டுகள் சிறப்பாக நடைபெற்றன.

மாலை 6 மணியளவில் பெரியார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்விற்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் நிர்வாக உறுப்பினரும் வரியியல் ஆலோசகருமான ச.இராசரத்தினம் அவர்கள் தலைமை விகித்தார். கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை அமைப்பாளர் செல்வி வரவேற்புரை வழங்கினார். திராவிடர் மகளிர் பாசறையின் மாநில செயலாளர் செந்தமிழ் செல்வி அறிமுக உரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ் பெருமக்களின் படங்கள் திறக்கப்பட்டன. எழுச்சிமிக்க கவிதை வரிகளால் எழுச்சியூட்டிய மக்கள் கவிஞர் இன்குலாப், சமூக அவலங்களை தமது கம்பீரக் குரலால் ஒலித்த பாடகர் முனைவர் கே.ஏ.குணசேகரன், தமது ‘பயணம் நாவல்’ மூலம் மூன்று தலைமுறை திராவிடர் இயக்க வரலாற்றை பதிவு செய்த எழுத்தாளர் கோ.வேள்நம்பி ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்ட அறிஞர் பெருமக்களைப் பற்றி அரிய செய்திகளைக் கூறி அறிமுகப்படுத்தினார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி.

பல்வேறு சமூக அவலங்களை தமது ஆவணப் படங்கள் வழியே பதிவு செய்வதுடன் மதவெறிக்கு எதிரான முற்போக்கு குறும்பட திரையிடல்களை நடத்திவரும் ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன்,  பெரியார்- அம்பேத்கர் வழியில் கல்வி உரிமை மற்றும் மேம்பாட்டிற்கு பணியாற்றிவரும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமது எழுத்தையும் திரைக்கலையையும் சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்திவரும் திரைப்பட இயக்குநர் இராஜ்முருகன், சமூகப் பண்பாட்டு உலக அரசியல்  நிகழ்வுகளை மக்கள் நலநோக்கில் அணுகி, தமது கட்டுரைகள் மூலம் விளக்கி பெரியார் அம்பேத்கர் பார்வையில்  தமது எழுத்துப் பணிகளை செய்துவரும் எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அவர்களைப் பற்றிய 2 நிமிட காணொலி ஒலிபரப்பப்பட்டது.

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் “பெரியார் பெயரில் கிடைக்கும் விருது தமிழ்நாட்டில் சமுகப் பணியாற்றும் ஒருவனுக்கு கிடைக்கும் ஒரு அரிய அங்கீகாரமாகும். இதைவிட வேறு அடையாளம் தேவையில்லை.

தொடர்ந்து எத்தகைய தடங்கல் வந்தாலும் அதைத் தாங்கி தந்தை பெரியார் அம்பேத்கர் பணிகளை முன்னெடுப்பேன்’’ என்று கூறினார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமது ஏற்புரையில், “நான் இந்த பெரியார் விருதுக்கு என்னை தகுதி படுத்துவதற்காகவே எனக்கு விருது வழங்கப்-படுவதாக கருதுகிறேன். அதற்காகவே ஆசிரியர் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். காரணம் பெரியார் அம்பேத்கர் பெயர்களை உச்சரிக்க எனக்கு தகுதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

மத்தியிலே ஒரு மோசடி அரசு ஆண்டு கொண்டு இருக்கிறது. அதன் செயல்பாட்டை பார்க்கும்போது எதிரி நேருக்கு நேராக இல்லை. கல்விக் கொள்கை ஒன்று அறிவிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பாக, அதனுடைய ஆட்சிக் குழுவில் ஒரு முடிவெடுத்து அதை மாநிலங்கள் மீது திணிக்கிறது.

 கருகுகிற பயிரைக் கண்டு இருநூறுக்கு மேற்பட்ட விவசாயிகள் செத்துப்போனார்கள், பொங்கலுக்கு கரும்பு வாங்கக் கூட பணமில்லாமல் பலர் இருக்கின்றனர். பண மதிப்பிழப்பால் பொதுமக்கள் தத்தளிக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் இதைப் பற்றி பேசாமல் மத்திய அரசு பக்கம் விமர்சனம் திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதுதான் பார்ப்பனிய சூழ்ச்சி. எனவே, நம்மை சூழ்ந்திருப்பது என்பது ஒரு இனத்தை அழிப்பதற்கான சூழ்ச்சி என்பதை நாம் புரிந்துகொண்டு பணியாற்றிடவே இந்த விருது வழங்கப்பட்டதாக கருதுகிறேன்’’ என்று கூறினார்.

இயக்குநர் இராஜ்முருகன் தமது ஏற்புரையில், “வேறு எந்த விருதும் தரமுடியாத நெகிழ்ச்சியை பெருமித உணர்ச்சியை ஆசிரியர் மூலம் நான் பெற்றுள்ள பெரியார் விருது தருகிறது. ஜோக்கர் படம் எடுத்தபோது ஏற்பட்ட நெருக்கடியும் வலியும் இந்த மாதிரியான படங்களை எடுக்கும் ஒருவனுக்கு எப்படி இருக்கும் என்பது திரைப்படத் துறையினருக்கு நன்றாகத் தெரியும்.  இந்தக் கதையை எடுப்பதற்கான தயாரிப்பாளர்களைப் பிடித்து, படத்தினை எடுத்து தணிக்கைக் குழுவினரிடம் சென்று திரும்பி வந்து திரையிடுவதில், மக்களிடம் கொண்டு செல்லும் வரைக்குமான நான் பெற்ற துயரத்தை இந்த ஒரு விருது ஒரு கணத்தில் விரட்டிவிட்டது.

ஜோக்கர் படத்தை பார்த்த பலரும் என்னிடம் இந்தத் துணிவு உனக்கு எப்படி வந்தது என்று கேட்டனர். இது துணிவல்ல அக்கறை. துணிவானாலும், அக்கறையானாலும் இது பெரியாரிடம் இருந்துதான் எனக்கு வந்தது. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்னும் இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற சுயமரியாதை முழக்கத்தை எங்கள் தலைமுறைக்கு எடுத்துக் காட்டிவரும் வீரமணி அய்யாவிடம் இருந்து வந்தது.

எம்.ஆர்.இராதா முதல், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மணிவண்ணன், சத்தியராஜ் என்று திரைத்துறையில் ஒலித்த எல்லா அரசியல் குரல்களும் தந்தை பெரியாருடையது-தான். அதுவும் இந்த விருது பெறக்கூடிய சூழல் முக்கியமானதாக கருதுகிறேன்.

கடந்த ஆறுமாதமாக அரசிற்கு தரவேண்டிய ஒரு வேளாண்மை குறித்த விவரண படத்தினை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசுக்கு அளித்து மற்ற பகுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளேன். இரண்டு முக்கிய அறைகூவல்களை நாடு சந்தித்து வருகிறது. ஒன்று இயற்கை வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. அடுத்து இன அழிப்பு, இன அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. வீரமணி அய்யா போன்றவர்கள் இல்லையென்றால் இருக்கும் அனைத்து அடையாளங்களையும் நாம் இழக்க வேண்டியிருக்கும்.

கலைத்துறையில் எனது படைப்புகளில் தொடர்ந்து தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, பொதுவுடைமைக் கருத்துகளை இடம்பெறச் செய்வதையே கடமையாகக் கொள்வேன்’’ என்று கூறினார்.

 எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் தமது  ஏற்புரையில் “1993ஆம் ஆண்டுவரை தமிழ் மொழி தெரியாத நிலையில் இருந்த நான் இந்த சமூகத்தில் நிலவிய ஜாதிய கட்டுமானங்களை தகர்க்க உதவிடும் நூல்களைப் படிக்க தமிழ்மொழியைக் கற்றேன்.

1998ஆம் ஆண்டு இனி வேலைக்குச் செல்வதில்லை என்று முடிவெடுத்தேன். பொருள் ஈட்டல் சார்ந்து இனி சிந்திப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அந்த முடிவை எடுத்த அன்றிலிருந்து எனது சமூகப் பயணம் தொடங்கியது. இன்று நான் எடுத்த முடிவுகள் சரி என்றே படுகின்றது. நிச்சயமாக நாம் அனைவரும் அந்த மாதிரியான பல முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தேசம் அவ்வளவு பெரிய சிக்கலில் உள்ளது.

இந்தச் சமூகத்தில் எங்கும் ஜாதி எதிலும் ஜாதி என்ற நிலை உள்ளது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து சுடுகாடு செல்லும் வரை ஜாதி உள்ளது. இந்தச் சமூகத்திற்கு ஒரு மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோரை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கு ஊக்கம் தரும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது’’ என்றார்.

இனமுரசு சத்தியராஜ் அவர்கள் பாராட்டுரை வழங்கினார். அவரது உரையில் சிறந்த பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்ததுடன் தமது வாழ்வின் வெற்றிக்கு தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் துணை நிற்பதைத் தெளிவாக விளக்கினார். மேலும் “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன். சமூக அவலங்களால் ஏற்படும் வருத்தங்களைத் தவிர மற்றபடி சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். இதற்குக் காரணம் சுயமரியாதைச் சிந்தனைகள்தான். ஒரு மனிதன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அவன் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். தந்தை பெரியாரின் சுயமரியாதையைக் கொள்கையாகக் கொண்டவனுக்கு அந்தக் குழப்பத்திற்கு வேலையே இல்லை. எனவே, நான் மகிழ்ச்சியானவனாக வாழ்கிறேன்.

கீழடி அகழ்வாராய்ச்சியைப் பார்த்தேன். நமக்கு நடந்த துரோகத்திற்கு  சரியான பதிலடியைத் தந்திருக்கிறார்கள் தோழர்கள். அதன் அமைப்பை மிக அற்புதமாக செய்திருக்கிறார்கள்.

இங்கே வந்து உட்கார்ந்த பிறகு, தப்பாட்ட நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். நான் ஒரு சினிமா நடிகன் என்பதால் இவ்வளவு நேரம் தொடர்ந்து ஆடுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நல்லாவே தெரியும்’’ என்று கூறி கலை நிகழ்ச்சியாளர்களையும் விருதுபெற்ற பெருமக்களையும் பாராட்டி உரையாற்றினார். இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் நிகழ்வு 16.01.2017 மாலை 4 மணிக்கு சிவகங்கை கங்கை கருங்குயில்கள் கலைக்குழுவின் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பொன்னேரி சுப்ரமணிய ஆசான் சிலம்பாட்டக் குழு மற்றும் பெரியார் வீரவிளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய சிலம்பாட்டம் மற்றும் வீரசாகச நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. காண்போரை சிலிர்க்க வைத்த இந்நிகழ்வுகளை கூடியிருந்த தமிழர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

புதுகை பூபாளம் கலைக்குழுவின் ‘செல்லா காசுகள்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வியாபார மயமாகிவரும் கல்வி, மூடநம்பிக்கைகள், மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கைகள், பண மதிப்பிழப்பு அறிவிப்பால் மக்கள் அடையும் துயரங்கள் ஆகியவற்றை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சிகள் தொடங்கின. வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன் வரவேற்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை வகித்தார். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் அறிமுகவுரை வழங்கினார். திராவிடர் இனத்தில் சிறந்து விளங்கி அண்மையில் மறைந்த முத்துக்கள் தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி, திரைக்கலைஞர் குமரிமுத்து, கவிஞர் நா.முத்துக்குமார் ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.

மக்களுக்கான பொருளாதார சிந்தனைகளை விதைத்து வரும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் ஜெயராணி , பார்வை மாற்று சிறப்புத் திறனாளியாக இருந்தும், தமது முயற்சியால் தேர்ந்த தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவாளராக வலம் வரும்-இன்ஸ்பைரிங் இளங்கோ,  திரையிசையிலும், மெல்லிசையிலும் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்  ஏற்புரையில், “எனது எழுத்து முழுவதிலும் தந்தை பெரியாரின் தாக்கம் இருக்கும். எனது சிந்தனையை பெரியார்தான் வழிநடத்துகிறார்.

தந்தை பெரியாரின், “நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது’’ என்ற வரிகளே என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகும்.

சமீபகாலமாக நான் தஞ்சை மாவட்டத்தில் நடந்த சமூக மாற்றங்கள், விவசாய மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறேன். பொதுவாக தஞ்சை மாவட்ட விவசாய _ சமூக மாற்றங்கள் முழுவதும் இடதுசாரிகளால் மட்டுமே வென்றெடுக்கப்பட்டதாகக் காட்டப்படுகிறது. ஆனால், இடது சாரிகளுக்கு எவ்வளவு பங்குள்ளதோ அதேபோல் திராவிடர் கழகம் மற்றும் சுயமரியாதை இயக்கத்திற்கும் உண்டு. இதனை ஆவணப்படுத்துவதற்கு தஞ்சையில் ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டு, அது எப்படி பார்ப்பனக் கிராமமாக இருந்தது. பின்னர் அதனை மீட்க தந்தை பெரியாரின் போராட்டங்கள் என்ன, திராவிடர் விவசாயத் தொழிலாளர் கழகம் எப்போது தொடங்கப்-பட்டது?

இடதுசாரிகள் எப்போது வந்தனர்? அவர்களுடன் இணைந்து தந்தை பெரியாரின் நடவடிக்கைகள் என்ன? தி.மு.க. ஆட்சியில் இதுகுறித்து வந்த சட்டங்கள் அவற்றின் விளைவுகள், அதன் பிறகு எப்படி நிலவுடைமை சமுதாயம் மாறியது. இப்பொழுது அதன் நிலை என்ன என்று பல்வேறு காலகட்ட நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு ஆய்வுக் கட்டுரையாக்கி சமர்ப்பித்திருக்கிறேன். இவ்வாறு எனது பயணத்தை சுயமரியாதை தத்துவத்தின் அடிப்படையில் அமைத்து பயணிக்கிறேன். அதற்கு ஆசான் தந்தை பெரியார்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

எழுத்தாளர் ஜெயராணி தமது ஏற்புரையில், “விருதுகளை திருப்பி அளிக்கும் காலம், அநீதிகளுக்கு எதிராக கலைஞர்களும் அறிவுஜீவிகளும் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பி அளித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தோம். அநீதிகளுக்கு எதிராக விருதுகளை திருப்பி அனுப்புவதே எதிர்ப்பை பதிவு செய்யும் புரட்சியாக உள்ளது.

தந்தை பெரியார் அவர்களின் பெயரில் இந்த மேடையில் இப்படியான ஆளுமைகளும் தோழர்களும் நிறைந்த நிலையில் இவ்விருது பெருவது விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி ததும்பலுக்கு என்னை ஆளாக்குகிறது.

நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம். நாம் செய்யும் வேலை சரியாகத்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தருணமாக இது உள்ளது.

இந்த நாடு சுதந்திரம் பெற்ற பின் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு. இன்று பலம் பொருந்திய ஆளும் வர்க்கமாக உள்ளது. ஆட்சி செய்கிறது. நம்மை மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது. நம் பிள்ளைகளை மூளை சலவை செய்து சாதி வெறிக்கும் மதவெறிக்கும் அடிமைகளாக்க தொடர்ச்சியாக இந்து அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கோவை கலவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட தலித் இளைஞர்களை ஒரு களப் பணிக்காக சந்திக்கச் சென்றேன். பொதுவாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களை தான் சந்திக்கச் செல்வது வழக்கம். ஆனால், நான் இதில் ஈடுபடுத்தப்பட்ட தலித்துகளை சந்திக்கச் சென்றேன். பொதுவாக குஜராத் கலவர-மானாலும், கோவைக் கலவரமானாலும், வேறு எங்கு என்றாலும் கலவரத்தில் பயிற்சியளிக்கப்-பட்டு இஸ்லாமியருக்கு எதிராக ஈடுபடுத்தப்படுவது தலித் இளைஞர்கள்தான். கலவரத்திற்கு பின் வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை இழப்பதும் அவர்கள்தான்.  தலித்துகளையும் இஸ்லாமியர்களையும் ஒரு சேர அழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அஜண்டா நிறைவேறுகிறது என்றார்.

பார்வை மாற்று சிறப்புத் திறனாளியாக இருந்தும், தமது முயற்சியால் தேர்ந்த தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவாளராக வலம் வரும் இன்ஸ்பைரிங் இளங்கோ,

“பெரியார் விருது என்னும் மிகப் பெரிய சாலச் சிறந்த அங்கீகாரம் எனக்கு கிடைத்தமைக்கு காரணமாக இருந்த ஆசிரியர் உள்ளிட்ட தேர்வு குழுவினருக்கு நன்றி. இந்த விருது என்னுடைய தன்னம்பிக்கையை மேலும் கூட்டியிருக்கிறது. வலு சேர்த்திருக்கிறது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பணிக்கிறது. இதைத்தான் நான் உணர்கிறேன். பொறுப்பு, ஊக்கம், உற்சாகம் இவற்றைத்தான் இந்த விருது எனக்குக் கொடுக்கிறது.

அண்மையில் ரோட்டரி சங்கம் சார்பில் ஒரு விருது கொடுத்தார்கள். அந்த நிகழ்வின் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வி என்னவென்றால், “நீங்கள் இளைஞர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்பதுதான். நான் அதற்கு கொடுத்த பதில், “என் வாழ்க்கையையே செய்தியாகத் தருகிறேன்’’ என்பதாகும். சிலர் வாழ்க்கையில் செய்தி சொல்கிறார்கள். சிலர் வாழ்க்கையையே செய்தியாகச் சொல்கிறார்கள். நான் அப்படி ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்று விரும்புகிறேன். அதன்மூலம் மக்கள் இன்ஸ்பையர் என்னும் எழுச்சியை பெறவேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றேன். அந்த தைரியமும், தன்னம்பிக்கையும், தெளிவும் எனக்கு எப்படி வந்தது என்றால் என்னுடைய பகுத்தறிவு மூலமாகத்தான்’’ என்றார். அவரது உரைக்கிடையே பாடிய பாடல் அனைவரையும் ஈர்த்தது.

இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் தமது ஏற்புரையில், “தந்தை பெரியார் பெயரில் நான் பெற்ற விருது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாளை என்னை என் தாய் பெற்ற நாள்போல எண்ணி மகிழ்கிறேன்.

பல விருதுகளை நான் வாங்கியிருக்கிறேன். பல பாடல்களை படைத்து வெற்றி பெற்றிருக்கிறேன்.

இந்த அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றலாக இருந்து இன்னமும் வெற்றிகரமாக தமிழ்க் குமூக பண்பாட்டுப் புரட்சி இயக்கத்தை திராவிடர் கழகம் என்ற பெயரில் நடத்திவரும் அய்யா கையால் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

பகுத்தறிவு என்பது மனிதனின் சொத்து. அவனை விலங்குகளில் இருந்து வேறு-படுத்துவது பகுத்தறிவு. சிந்தனை என்பது மனிதனை உருவாக்கியது. அந்த சிந்தனையை நீண்டகாலமாக தூங்கிய தமிழர்களிடம் தூண்டியவர் பெரியார்’’ என்று கூறினார்.

இறுதியாக, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பண்பாட்டு மீட்புக்காக உரையாற்றினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *