என்றும் தேவைப்படும் பெரியார்

பிப்ரவரி 01-15

– கருப்பரசன்

 

திராவிட இயக்கம் தோன்றிய நூறாவது ஆண்டு, திராவிடக் கட்சிகளின் ஆட்சி பொன்விழாவைக் கொண்டாடும் ஆண்டும் இது. நூறாண்டு கால திராவிட இயக்க வரலாற்றில், வானுயர்ந்த அடையாளமாக நிற்பது பெரியாரின் நினைவு நாள்.

1973இல் பெரியார் மறைந்து, 43 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தந்தை பெரியார் மறைந்தபிறகு பிறந்த ஒரு தலைமுறை, அவரைப் பார்த்தேயிராத ஒரு தலைமுறை இன்று தமிழ்நாட்டில் பெரியாரை நினைவுகூர்கிறது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய பலரது புகழும் நினைவும் கால வெள்ளத்தில் மங்கிவிட்டன. மக்களின் நினைவுகளிலிருந்து அகன்றுவிட்டன. ஆனால் பெரியார் என்ற சூரியனின் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமன்றி, நாடு முழுவதும் உள்ள ஆய்வாளர்களால், சமூகநீதி உரிமைப் போராளிகளால் பெரியார் புதிது புதிதாக ஆராயப்படுகிறார்.

வாழ்நாளெல்லாம் போராளியாக வாழ்ந்து மறைந்த பெரியார், இன்று புதிதாய் பிறந்த தலைமுறைக்கு, புதிதாய் முளைக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பொங்கும் உணர்வை தந்து கொண்டிருக்கிறார்.

பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்ட மக்களின் ஏற்றத்துக்காக பாடுபட்டவர், ஆட்சி அதிகாரத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர், பெண்களின் உரிமைக்காக சலிக்காது எழுதியும் பேசியும் வந்தவர், வடவர் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் கடைசி மூச்சுவரை எதிர்த்தவர், மொழி உரிமைக்கும் சமத்துவத்துக்கும் போராடி சிறைசெல்லத் தயங்காதவர், புனிதங்கள் என்று கற்பிதம் செய்யப்பட்டவற்றை தனது ஓயாத கேள்விகளால் பொசுக்கித் தள்ளியவர், மதம், சம்பிரதாயம், தேசப்பற்று, மூட வழக்கங்களுக்கு எதிராக, பகுத்தறிவு தீபம் ஏந்தியவர் என பல்வேறு சிறப்புகளும், எவரோடும் ஒப்பிடமுடியாத கீர்த்தியும் கொண்டவராகத் திகழ்ந்தாலும், பெரியாரின் பெரும்சிறப்பு என்பது அவர் கொண்டிருந்த மாபெரும் மனிதநேயம்தான்.

மனித சமூகத்தின்மீது அவர் கொண்டிருந்த மாறாத காதல், மனிதனின் சுயமரியாதை, கண்ணியம், சமத்துவம் என்பதில் அவர் கொண்டிருந்த பேரார்வம், ஒரு மனிதன் பிறப்பாலும் வேறு காரணங்களாலும் இழிவாக நடத்தப் படுவதற்கு எதிரான, அவரிடம் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆகியவைதான் பெரியார் என்ற மனிதப் பற்றாளனின் ஆகச்சிறந்த தனித்துவம்.

அவர் பேசிய காத்திரமான கருத்துகளை இன்று, சுதந்திரமாகப் பேசுவது சாத்தியமா என்பதே கேள்விக்குறியாகிவரும் கால கட்டத்தில் பெரியார் முன்னெப்போதையும் விட தீவிரமாக வாசிக்கப்படுகிறார். அவர் முன்வைத்த தர்க்கங்கள் சிலாகிக்கப் படுகின்றன.

வாழ்ந்த காலத்தில் அவரைப் புறக்கணித்த அறிவுலகம் இப்போது, நவீன இந்தியாவை நிர்மாணித்த சிற்பிகளில் ஒருவர்  (makers of modern India) என்றும், இந்தியாவின் திசைவழியைத் தீர்மானித்த 50 பேரில் ஒருவர் என்றும்; Sunil Khilnani Incarnations; India through 50 lives, Sniper of sacred cows… வியக்கிறது. அவர் யாருக்காக உழைத்-தாரோ, அந்த சமூகத்தின் ஒரு பகுதியினராலேயே அவர் விமர்சனத் துக்கும் ஆளாகிறார். மானுட நலன், பொது-நலனைப் போற்றிய அப்பழுக்கற்ற மானுடன் மீது காலம்தோறும் சேறு வீசப்படுகிறது. ஆனால் அந்த அவதூறுகள், அவரது ஆளுமையில் கீறலை ஏற்படுத்த முடியவில்லை. அவதூறை கிளப்பியவர்கள் கால வெள்ளத்தில் காணாமல் போகிறார்கள். பெரியார், அடுத்த தலை-முறைக்கும் ஆதர்சமாக உயர்ந்து நிற்கிறார்.

நான் கட்சிக்காரன் அல்ல; கொள்கைக்காரன் என்று முழங்கிய பெரியார், ஆதரித்த தலைவர்களையும் கட்சிகளையும் எதிர்த்திருக்-கிறார். காந்தியாரே அதற்கு விலக்கு அல்ல. சனாதனத்தையும் சாதியையும் எதிர்ப்பதில் தொடங்கி, மனித சமத்துவத்துக்காக அவர் தேடிய பாதையும் எழுப்பிய கேள்விகளும் அவரை, பழுத்த நாத்திகராக உருமாற்றின.

ஒரு சமூகத்தின் சிந்தனைப்போக்கையே மாற்றிய திசைகாட்டி பெரியார். எளிதில், எவரும் சாதித்துவிடமுடியாத பெரும்பணி அது. பேச்சும் எழுத்தும் நொடிப்பொழுதில் கோடிக்கணக்கானவர்களை சென்றடையச் செய்யும் ஊடகங்களின் பெருக்கமோ, பிரமாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லாத காலகட்டத்தில், தனது பேச்சாலும் செயலாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தலைமுறை தலைமுறையாக, பல நூற்றாண்டு-களாகப் பின்பற்றப்பட்டு வந்த நம்பிக்கைகளைச் சாடினார். அவற்றை எதிர்த்துப் போரிட்டார். பேரலையாக எழுந்துவரும் கருத்துகளுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்ட தலைவர், 20ஆம் நூற்றாண்டில் பெரியார் மட்டுமே. ஒரு சமூகத்தின் சிந்தனைப்போக்கோடு உரையாடி, வாதிட்டு, அதன் நீரோட்டத்தையே மாற்றிக்காட்டிய பெரும் புரட்சி, பெரியார் என்ற மானிடனின் மகத்தான அடையாளம்.

பெரியாரின் காலத்திலும் ஊடகங்கள் இருந்தன. அரசியல் இயக்கங்கள் நடந்தன. ஊடகங்களின் உதவி பெரியாருக்குக் கிடைக்க-வில்லை. அரசியல் இயக்கங்கள், சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் விடுதலையை நோக்கிப் பயணித்த காலத்தில், மனித சமத்துவம் என்ற சமூக விடுதலையை நோக்கிப் பயணித்தார் பெரியார். அவர் பெற்ற வெற்றி என்பது, ஆற்றின் நீரோட்டத்தில் பயணித்து, அதிகாரத்தின் துணைகொண்டு பெற்றதல்ல. மாறாக, ஆதிக்கபுரியினரின் எதிர்ப்பையும் ஏளனத்தையும் கடந்து பெற்ற வெற்றி. நூற்றாண்டில் அரிதாக ஒரு தனிமனிதனுக்குக் கிடைக்கும் வெற்றி.

மனிதவளக் குறியீட்டில் தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருக்கிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் எனும் பல அளவுகோலில் இந்தியாவின் சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் வீதம் மெச்சத்தக்க அளவில் அதிகம். ஏழை,எளியோரை கைதூக்கிவிடும் மக்கள் நலத் திட்டங்கள் ஆகட்டும், விளிம்பில் இருக்கும் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டங்கள் ஆகட்டும், தமிழ்நாடு பல வகைகளில் முன்னோடி.. ஊழல், அதிகார முறைகேடுகள் என்ற பல புகார்களுக்கு ஆளானாலும், 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு சமச்சீரான வளர்ச்சி கிடைக்கவும் தீட்டிய சமூக நலத் திட்டங்கள் காரணம். ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ என்று அழைக்கப்படும் மக்கள் நல அரசு எனும் கோட்பாடு அடிநாதமாக மாறியதற்கும், அந்த மரபின் நீட்சி பல்வேறு பரிமாணங்களாக வடிவம்பெற மூலவேரும், ஊற்றுக்கண்ணும் பெரியார் என்ற மானுடன்தான். சீர்திருத்தச் சட்டமோ, மக்கள் நலத் திட்டமோ, அவற்றுக்கான மூலவித்து பெரியார் போற்றிய மனித சமத்துவம், மனித கண்ணியம் என்ற மகத்தான நீதிக் கோட்-பாட்டிலிருந்துதான் உரம் பெறுகின்றன.

தேசிய நீரோட்டத்தில் கலந்து, தனது தனித்தன்மையை தமிழ்ச் சமூகம் இழந்து விடவில்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களும்கூட மொழி, கலாசார அடையாளங்களில் தேசிய நீரோட்டத்தில் கலந்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாடு ஒரு தனித் தீவுதான். அதனால் தமிழர்களுக்கு இழப்பில்லை. தட்சணப்பிரதேச திட்டத்துக்கு எதிரான அவரது போர்க்குரல், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் தனித்தன்மையை உறுதி செய்தது. இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான அவரது கிளர்ச்சிகள், தமிழர்களின் மொழி அடை-யாளத்தை மீட்டுத் தந்தன. குலக் கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டம், தமிழர்களுக்கு கல்வி உரிமையை பெற்றுத் தந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அந்த அநீதிக்கு எதிராகப் பொங்கியெழுந்து அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யவைத்த கிளர்ச்சி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை சார்ந்த வாழ்க்கைக்கு வித்தாக நிற்கிறது. தமிழ்ச் சமூகம் அறிவுச் சமூகமாக, கல்வியில் முன்னேறிய சமூகமாக மேம்பட்டு நிற்பதற்கு பெரியாரும், அவரைப் பின்பற்றிய ஆயிரக்-கணக்கான ஏழைத் தொண்டர்களின் வியர்வையும், தியாகமும்தான் அடிப்படையான காரணம்! தமிழர்கள் பெற்ற உயர்வு, தாமாக வந்தது அல்ல. தன்னலமில்லாத அவரது தொண்டர்களின் இடையறாத போராட்டத்தால் கிடைத்த ஒன்று.

ஆதிக்க எதிர்ப்புணர்வு, நீதிக்கான வேட்கை, மானுட சமத்துவம் என்று பெரியார் போற்றிய விழுமியங்களை நெஞ்சில் ஏந்தாவிடில் பொருளாதார, கல்வி, சமூகத் தளங்களில் பெற்ற ஏற்றம் யாவும் கண்ணெதிரே பறிபோய்விடும். தங்கள் செல்வம், வளம், பெருமை, உடைமைகள், உயரம் குறித்து பெருமிதத்தோடு பேசும் தமிழர்கள் பலருக்கும் தெரியாது, அவர்கள் பெரியார் என்ற இமயத்தின் தோள்களில் மேலேறி நிற்கிறார்கள் என்பது!

வெறுப்பு அரசியல் மேலெழுந்துவரும் காலகட்டம் இது. தமிழ்நாட்டில், சாதிசார்ந்த வெறுப்பும் வன்மமும் ஆணவக் கொலைகளின்-வழியே அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. கடந்த கால்நூற்றாண்டு காலமாக, தாராளம் என்ற பெயரில் திறக்கப்பட்ட பொருளா-தாரக் கதவுகள், சமூகத்தின் அடித்தட்டு மக்களை மேலும் நசுக்கி, அவர்களது வளங்களையும் உழைப்பையும் உறிஞ்சி, மேட்டுக் குடியினர் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்-கான கருவியாக மாறிவிட்டன. வாழ்வா-தாரத் துக்கான போராட்டம், சுயமரியாதை வாழ்வுக்கான போராட்டம் என, இரு முனைகளில் போராடவேண்டிய நெருக்கடி எளிய மக்கள்மீது திணிக்கப் பட்டிருக்கிறது. அந்த இரு முனைகளிலும் ஒடுக்கப்-பட்டோர் போராடுவதற்குத் தேவையான வீரத்தையும் உரத்தையும் தரும் ஒரு சக்தியாக பெரியார் இன்று தேவைப்படுகிறார்.

சுயநலம் பெரிதாகிவிட்ட போட்டி உலகில், அதிகாரத்துக்கு அடிபணிந்து, அடையாளம் இழக்கத் தயாராகிவிட்ட ஒரு பெருங்கூட்டம் அச்சுறுத்துகிறது. அதிகாரத்தின் நிழல்களை அண்டாமல், மானுடத் தொண்டு என்ற கேடயம் ஏந்தி, தங்கள் சுயமரியாதையை தக்கவைக்கப் போராடும் வீரியத்தைத் தரும் ஏந்தலாக, எந்தலைவர் பெரியார் என்றும் தேவைப்படுவார்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *