பெண்ணால் முடியும் : மதுவுக்கு எதிராய் மனம் தளராது போராடும் பெண்

பிப்ரவரி 01-15


இன்றைய பெண்களுக்கு எழுச்சியூட்டும் சமூகப் போராளி நந்தினி. இவர் குடும்பமே மதுவுக்கு எதிராய் போராடி வருகிறது. இவர் 63 முறையும், இவரது தந்தை 67 முறையும், தங்கை 3 முறையும் மதுவுக்கு எதிராய் போராடி சிறை சென்றுள்ளனர்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே மேடையேறிப் பேசிய நந்தினி தன் தந்தையையும் புரட்சியாளர் பகத்சிங்கையும் முன்மாதிரியாகக் கொண்டு போராடும் இவர் தன் போராட்டம் பற்றிக் கூறியபோது,

“என் போராட்ட குணம் என் அப்பாவிடம் இருந்து வந்தது. கறுப்பு பணம், ஊழல் என தொடர்ந்து பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் செய்வதும், ஜெயிலுக்குப் போவதுமாக, அவங்க வாழ்க்கையைப் பார்த்துப் பார்த்து வளர்ந்திருக்கேன். சிறு வயதிலிருந்தே அப்பா என்னைக் கூட்டங்களுக்கு கூட்டிட்டு போவாங்க. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே சென்னைக்கு வந்து போராட்டம் பண்ணி-யிருக்கேன். சமூகத்தில் நடக்குற பிரச்சினைகள் என்னைப் பாதிக்கும்போது அதை சும்மா என்னால கடந்துபோக முடியாது.

நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்ததுக்கு அப்புறம்தான் இந்த மாதிரி டாஸ்மாக் கடை நடத்துறது சட்டப்படி குற்றம்னே தெரிய வந்துச்சு. சட்டப் படிப்புல முதல் ஆண்டில் அய்.பி.சி இருக்கு. அய்.பி.சி. 328ஆவது பிரிவில் ஒரு நபர் இன்னொரு நபருக்கு போதை தரக்கூடிய, மதி மயக்கம் தரக்கூடிய, உடல்நலம் கெடுக்கக்கூடிய பொருளை கொடுத்தால், அவருக்கு 10 வருஷம் சிறைத் தண்டனைனு சட்டத்தில் எழுதி வைச்சிருக்காங்க.

டாஸ்மாக்லயும் ‘மதுபோதை தரக்கூடியது, மதிமயக்கம் செய்யக்கூடியது, உடல்நலத்தைக் கெடுக்கக் கூடியது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ன்னு எழுதி வெச்சுதான் விற்கிறாங்க. இப்படி ஒரு சட்டம் இருக்கும்-போது இந்த குற்றத்தை அரசாங்கம் எப்படி செய்ய முடியும்? அப்படினா அரசாங்கம் சட்டத்திற்கு அப்பாற்பட்டதா? இந்தக் கேள்வியைத்தான் நாங்க முதன்முதலா எழுப்பினோம்.

2011ஆம் ஆண்டு மதுரையில் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து, வைகை ஆத்துல டாஸ்மாக் மூலமா தமிழகத்தை நாசப்படுத்துனவங்க நாசமா போகட்டும்னு பொங்கல் விழா அன்னைக்கு பொங்கல் வைச்சோம். இதுதான் என்னோட முதல் போராட்டம்.

அதுக்கு அப்புறம் கல்லூரி நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மனு எழுதினோம். அதுல ‘அய்.பி.சி.320இன் பிரிவின்படி டாஸ்மார்க் மூலமாக போதை தரும் பொருள் விற்பது குற்றம். இந்த மாதிரியான குற்றத்தை எப்படி செய்வீர்கள்’ன்னு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், உயர்நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டுக்கும் 277 பேர் சேர்ந்து கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தோம். அடுத்து தமிழ்நாட்டுல இருக்குற அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள், அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாருக்கும் ஒரு மனு கொடுத்தோம். அதில், இந்த மாதிரி குற்றம் நடந்துகொண்டிருக்கிறது; எப்படித் தடுக்காமல் இருக்கிறீர்கள்? தடுக்காமல் இருப்பதும் ஒரு குற்றம்தானே. இதை எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தோம்.

அதுக்கு அரசு தரப்புல இருந்து, ‘இது அரசாங்கத்தோட கொள்கை முடிவு’னு பதில் வந்தது.

2013ஆம் ஆண்டுல சட்டக் கல்லூரி முன்னால சட்டக் கல்லூரி மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து அஞ்சுநாள் போராட்டம் நடத்துனோம். அப்போ ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தாங்க. அதனால் போயஸ் கார்டனுக்கு முன்னால நின்னு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். இதுதவிர பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு இருக்கோம். ‘குடிக்கிறதுனால உயிரணுக்கள் இல்லாமல் போயிடும்’னு பள்ளிக்கூடங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பண்ணிக்கிட்டு வர்றோம்.

நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தபோது அவருடைய வீட்டுக்கு முன்னால நின்னு போராட்டம் நடத்துனோம். சென்னையில் தலைமைச் செயலகம், டி.ஜி.பி. அலுவலகம், டாஸ்மாக் எம்.டி. அலுவலகம்னு எல்லா இடங்களிலும் போராட்டம் பண்ணியிருக்கிறோம். அதனால, அடிக்கடி போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க.

பல நேரங்கள்ல கைது பண்ணிட்டு விட்டுடுவாங்க. சில நேரங்கள்ல கைது செஞ்சு சிறையில அடைச்சிருக்காங்க. சென்னை, திருச்சி, மதுரைன்னு மூன்று ஊர்கள்லயும் கைது பண்ணிருக்காங்க. ஒருமுறை ஏழுநாள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போ கைது செஞ்சு திருச்சியில் பெண்கள் சிறைக்குக் கூட்டிட்டு போனாங்க.

ஒரு அக்கா, ‘என்னோட வீட்டுக்காரரு குடிச்சிட்டு வந்து பிள்ளைங்களை ரொம்பக் கொடுமைப்படுத்திட்டே இருந்தார். அதனால, அவர் தலையில அம்மிக் கல்லைத் தூக்கி போட்டுட்டேன்’னு சொன்னாங்க. இப்ப அவங்களுடைய குழந்தைங்க அவங்க பாட்டி வீட்டுல வளருது’ என்றார்.

திருச்சி சிறையில் பதினொரு நாட்கள் வைச்சிருந்தாங்க. என்னை வெளிய எடுக்கவே வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டாங்க. என்னைப் பார்க்க வந்தாலும் யாரையும் பார்க்க விடமாட்டாங்க. ரொம்ப அலையவிட்டாங்க. பெயில் கிடைக்காத மாதிரி போலீஸ் எங்க மேல கேஸ் போட்டிருந்தாங்க. அப்புறம் கண்டிசன் பெயில்ல வெளிய வந்தோம். அந்த கேஸ் இன்னும் கோர்ட்டுல நடந்துட்டிருக்கு.

சென்னை மெரினாவுல துண்டு பிரசுரம் கொடுத்தோம். அதுக்காகவே எங்களைப் புழல் ஜெயில்ல அடைச்சிட்டாங்க. புழல் சிறையில் பன்னிரெண்டு நாள் இருந்தேன். திடீர்னு கைது பண்ணதால என்கிட்ட மாற்றுத் துணியே இல்லை. சிறையில மூணு நாள் கஷ்டப்-பட்டேன். அப்புறம் தகவல் சொல்லி துணிக்கு ஏற்பாடு பண்ணேன். போராட்டத்துல ஈடுபடும்-போது ஒரு பெண்ணா உடல் ரீதியா பல சிரமங்களை சந்திச்சிட்டுதான் இருந்தேன். ஆனா அதை சகிச்சுக்கிற பக்குவத்த வளர்த்துக்கிட்டேன்.

இப்ப சட்டப் படிப்பு முடிச்சிட்டேன். ஆனா, என்னால நீதிமன்றத்துல பதிவு பண்ண முடியல. நிறைய வழக்குகள் என் மேல இருக்கு. அதுலயும் திருப்பத்தூர், சென்னை, மதுரையில மூணு முக்கியமான வழக்குகள் நடந்துக்கிட்டு இருக்கு. பெரும்பாலும் போலீஸ் சொன்னதை நாங்க கேக்கலை. பொதுமக்களுக்கு நாங்க இடையூறா இருந்தோம். உண்ணாவிரதம் இருந்து தற்கொலைக்கு முயற்சி பண்ணோம்னு மூணு வழக்குகள். அதாவது மதுரையில நான், அப்பா, தங்கச்சி மூணு பேரும் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செஞ்சுகிட்டு எங்க ஆதரவாளர் மூலமா பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த திட்டம் போட்டதா வழக்கு. சென்னையில சட்ட ஒழுங்குக்கு பாதிப்பு; அதோட அவங்க அனுமதி இல்லாம நோட்டீஸ் கொடுத்தோம்னு கேஸ் போட்டிருக்காங்க. திருப்பத்தூர்ல போலீசைத் தாக்குனதா கேஸ் போட்டிருக்காங்க.

இந்த மாதிரி பிரச்சினை வரும்னு தெரியும். அப்பாவுடைய பென்ஷன் வருது. வீட்டுக்குப் பாதி, நாட்டுக்குப் பாதின்னு செலவு செய்யுறோம்.

எங்க தலைமுறைக்கு டாஸ்மாக் மட்டுமல்ல, எல்லாமே பிரச்சினைதான். படிச்சா வேலை கிடையாது, சரியான கல்வி கிடையாது, சுற்றுச்சூழல் மோசமா இருக்கு, குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது… என பிரச்சினைகளின் பட்டியல் பெரியது. இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து, ஒரு நல்ல சமுதாயத்தில வாழணும். அதுவரைக்கும் போராடிட்டே இருப்பேன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *