புதைத்த மண்ணில் மறைந்திருக்கும் உண்மைகள்!

ஜனவரி 16-31

கோவி.லெனின்

வரலாற்றிலிருந்து உண்மைகளை அறிய முடியும் என்றாலும், அதற்கு முன்பாக உண்மை வரலாறு எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழர்களின் தொன்மைமிக்க வரலாற்றையும் திராவிட இனத்தின் மொழி-நாகரிக-பண்பாட்டுக் கூறுகளையும் மறைக்கும் வகையிலான வரலாறுகளே தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தன. உண்மை வரலாற்றைத் தோண்டி எடுக்க வேண்டிய நிலையில்தான் அண்மைக்காலமாக வெளிப்படும் அகழ்வராய்ச்சிகள் பல செய்திகளை வெளிப்படுத்தி வருகின்றன.

மதுரை அருகே உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் தமிழர்களின் நாகரிக வாழ்வுக்கானப் பழங்காலக் கட்டமைப்பு-கள் கண்டறியப்பட்டுள்ளன. மொகஞ்சாதாரோ_-ஹரப்பா போன்ற இடங்களிலும், ஆதிச்ச-நல்லூரிலும் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வு-களில் கிடைத்துள்ள செய்திகளை வலுப்-படுத்துவதுடன், தமிழர் நாகரிகத்தின் தொன்மை, இதுவரை அறியப்பட்டதைவிட தொன்மையானது என்பதைக் காட்டுகிறது கீழடி அகழ்வாய்வு.

இதுபோலவே சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூர் என்ற இடத்தில் கிடைத்துள்ள பழங்கால மண்பாண்டங்கள் சென்னை கடற்கரை உள்பட தமிழகத்தின் பல கடற்கரைப் பகுதிகளும் கிரேக்கம் போன்ற வெளிநாடு-களுடன் தமிழகம் கொண்டிருந்த கடல்வாணி-பத்திற்கான சான்றுகளாக உள்ளன. கப்பலில் ஏற்றப்படுவதற்கு முன்பாக, அந்தப் பொருட்-களைப் பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்களாக (இன்றைய கண்டெய்னர்கள் போல) அந்த மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மாத்தூர் அம்பலத் திடலில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் உள்ள எழுத்துக் குறியீடுகள் வாயிலாக தமிழ் மொழியும் அதற்கான எழுத்து வடிவமும் 3ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்பதைக் காட்டுகின்றன என்கிறார் ஆய்வாளர் மணிகண்டன். அதே புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் உள்ள கற்பாறைகளில் உள்ள குழிகள், பழங்கால இரும்பு உருக்கும் ஆலைகளாக செயல்பட்டன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரிய கல்வராயன் மலைப் பகுதியில்  நடந்த கள ஆய்வில் 21 கல்திட்டைகளும் கல் ஆயுதங்களும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களை புதைத்த இடங்களுக்கு அருகே பிரமிடு போல தோற்றமளிக்கும் கற்குவைகளும் அமைந்துள்ளன. இவை 2ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் திராவிட நாகரிகத்தின் அடையாளங்கள் தென்படுகின்றன என்றும் தமிழின் வேர்ச் சொற்களை அங்குள்ள பல ஊர்களின் பெயர்களில் காண முடிகிறது என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு போன்றவர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளனர். திராவிடப் பண்பாட்டை விளக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என அடையாளப்படுத்தும் முயற்சிகளை மத்தியில் ஆட்சியில் இருக்கும் மதவாத சக்திகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேற்கொள்கின்றன. அதை முறியடிக்கும் வகையில், அகழ்வாராய்ச்சி முடிவுகள் அமைகின்றன.

உண்மை வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளனர். ஆனால், கீழடி தொடங்கி பல இடங்களிலும் கிடைத்துள்ள ஆய்வுகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதையும், அவை சிதைவதற்கு வழிவகுப்பதையும் தமிழறிஞர்-களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி, போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

வரலாற்று ஆதாரங்களை மறைப்பது போலவே, பண்பாட்டு அடையாளங்களையும் புராண-இதிகாசங்களால் மறைக்கும் செயல்-பாடுகள் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இராமாயணத்தின் பெயரால் திராவிட இனத்திற்கு எதிரான கருத்துகள் மக்களின் மனங்களில் பதியப்படுகின்றன. மற்ற புராணங்களின் தன்மையும் இத்தகையதுதான். ராமலீலா என்ற பெயரில் தசரா விழாவின்போது இத்தகைய பண்பாட்டுப் படையெடுப்புகள் இந்தியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கும் திராவிட பண்பாட்டு அடையாளங்களை தொல்குடிகள் வெளிப்-படுத்தி வருகின்றனர்.

“ஜெய் கோண்ட்வானா.. ஜெய் ராஜா ராவணா.. ஜெய் ராஜா ராவண சேவா”  என மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பரஸ்வாடி என்ற சின்ன கிராமத்தில் ஒவ்வொரு தசரா விழாக் காலத்திலும் முழக்கங்கள் ஒலிப்பது வழக்கம். மத்தியபிரதேசத்தின் மாண்ட்சவுர், விதிஷா ஆகிய ஊர்களில் ராவணனை வழிபடுவது ஆண்டு தோறும் நடக்கிறது.   

பரஸ்வாடி கிராமத்தில் மரத்தால் செய்யப்பட்ட 10 அடி உயர யானை பொம்மை யின் மீது ராவணன் உருவத்தை வைத்து ஊர்வல மாகக் கொண்டு செல்கிறார்கள் அங்கு வாழும் கோண்டு இனத்தவர்கள். “ராவணன் எங்கள் கோண்டு வம்சத்து அரசன். எங்கள் மண்ணுக்குள் ஊடுருவிய ஆரியர்கள்தான் வஞ்சகமாக ராவணனைக் கொன்று விட்டார்கள். அதனால் ராவணனை சாமியாகக் கும்பிடுகிறோம். நாங்கள் இந்துக்கள் அல்ல. கோண்டு மக்களை இந்துக்கள் என்ற பட்டியலில் கட்டாயமாகச் சேர்த்திருக்கிறார்கள் அவ்வளவுதான்” என்கிறார்கள்.

ராமாயணத்தில் குறிப்பிடப்படும் காடு, மத்திய இந்தியாவின் கோண்டுவன் வனப்பகுதி என்று இவர்கள் சொல்வதுடன், ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர் மாண்ட்சவுர் என்கிறார்கள். அதனால் தசராவின் போது தங்கள் மருமகன் ராவணனைக் கொண்டாடுகிறார்கள்.

மகாராஷ்ட்ரா_-மத்தியப் பிரதேச மாநிலங்களின் எல்லை, ஜார்கண்ட்-_சட்டீஸ்கர் மாநிலங்களின் பெரும்பகுதி, ஒரிசா-ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் இவையெல்லாம் திராவிட இனத்தின் பழங்குடிகள் வாழும் பகுதியாகவும் கனிமவளம் நிறைந்த மலைகளும் காடுகளும் கொண்டதாகவும் உள்ளன. தமிழர்கள் உணவில் முக்கிய இடம்பெற்றுள்ள அரிசியும் மஞ்சளும் ராவண விழாவில் படைக்கப்படுகின்றன.

வட இந்திய பழங்குடி மக்களின் இத்தகைய  திருவிழாக்கள் அண்மைக்காலமாகத்தான் காட்சி ஊடகங்கள் மூலம் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த ஊடக வலிமை எதுவும் இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பே, “”ராவணன் எங்கள் பாட்டன். ஆரியத்தை எதிர்த்த திராவிடன்” என்ற குரல் தமிழகத்தில் ஒலித்தது. ஆரிய பண்பாட்டை வலியுறுத்தும் இராமாயணத்திற்கு மாற்றாக இராவண காவியத்தை புலவர் குழந்தை எழுதினார். இராமாயணக் கதாபாத்திரங்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும், நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தை அறிஞர் அண்ணா எழுதினார். பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க திராவிட இயக்கம் நடத்திய சமரசமற்ற போராட்டமே தமிழகத்தை இத்தகைய படையெடுப்புகளிலிருந்து பாதுகாத்துள்ளது. உண்மை வரலாற்றையும் பண்பாட்டையும் நோக்கிய போராட்டப் பயணம் கூர்மைப்படுத்தப்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *