பார்ப்பனர் – ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை முறியடியுங்கள்!
பண்டைய தமிழரின் நாகரிகம், கலை, பண்பாடு, கட்டமைப்பு ஆகிய பலவற்றுக்குச் சான்று பகரும், மிகவும் வியக்கத்தக்க அகழ்வாய்வினைத் தொடரவேண்டுமென தமிழ்நாட்டின் வரலாற்று, தொல்லியல் அறிஞர் பெருமக்கள் பலரும் வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்ததினால்தான், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்ட புதை பொருள் ஆய்வில் முதலில் காட்டிய மெத்தனப் போக்குக்குக் எதிரான குரல் கிளம்பியதால், அதன் பணி தொடர்ந்தன.
ஆனால், தற்போது வந்துள்ள செய்தி – அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது!
ஆய்வை நிறுத்துவதா?
இந்த அகழ்வாராய்ச்சியை நிறுத்துவது என்று அதன் மத்திய ஆலோசனைக் குழு முடிவெடுத்துள்ளதாம்! மத்திய ஆட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொண்ட அந்த மாதிரி அமைப்புகளின் திட்டமிட்ட காவிக் கொள்கையின் அடிப்படையிலேயே இதுபோன்ற பண்டையப் பெருமை, திராவிடர் நாகரிகம், சங்க காலத்தில் தமிழர்களின் தனித்ததோர் உயர்பண்பாடு – இவை எல்லாம் வெளியாகி விட்டால், ஆரிய சமஸ்கிருத கலாச்சாரம் மீண்டும் எழுவதற்குத் தடையாக இருக்கும் என்ற உள்நோக்கம்தான் மூலகாரணம்! தற்போதுள்ள ஆட்சிக்கு மக்களின் வரிப் பணத்தைக் கொட்டிச் செலவழித்தால், தமது நோக்கம் பயனற்றுப் போய் விடுமோ என்ற அச்சம்தான் இதன் பின்னணியில் உள்ளது.
இப்போது இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டால், உலக ஆய்வுத் தரத்திற்குச் சென்று, உலகத்தார் கண்களுக்கு சிந்துவெளி திராவிடர் நாகரிகத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை பெரிதாக, தமிழுக்கும், தமிழர்களுக்கும், திராவிடரின் மேன்மைக்கும் உலகளவில் சிறப்பு ஏற்பட்டு விடுவதா என்ற வயிற்றெரிச்சல்தான் இதற்குள் இருக்கும் கரவும் – காழ்ப்பும்!
இதை முளையிலேயே கிள்ளி எறிய, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஓர் குரலில் கண்டிக்க முன்வந்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான விளக்கத்தோடு மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் – கீழடி அகழ்வாராய்ச்சி தொடரவேண்டும் என்று.
இடதுசாரிகளின் கருத்துகளும்…
அதுபோல இடதுசாரிகள் உள்பட பல கட்சிகளும் கீழடி அகழ்வாராய்ச்சி திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. தலைமையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க உடனடியாக, தமிழக அரசு சார்பில் தாமதியாமல் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு கீழடி ஆய்வு தொடர வற்புறுத்திட அனைத்து நடவடிக்கைகளிலும் முழுவீச்சில் இறங்க வேண்டுகிறோம்.
ஒத்த கருத்துள்ள அனைவரும், தோழமையினரும், அமைப்புகளும் ஓங்கிக் குரல் எழுப்ப உடனடியாக முன்வர வேண்டுமென அவர்களை நாம் வேண்டிக் கொள்கிறோம்!
கி.வீரமணி,
ஆசிரியர்