– வை.கலையரசன்
திராவிட சமுதாயத்து மக்களின் அறிவுக்கு விடுதலையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அளிப்பதை கொள்கையாக கொண்ட தந்தை பெரியாருக்கு அறிவாயுதங்களாக விளங்கியவை அவரால் நடத்த பட்ட இதழ்கள்.
1925 இல் குடிஅரசு, 1928இல் ரிவோல்ட், 1929இல் திராவிடன், 1933இல் புரட்சி, 1934இல் பகுத்தறிவு, 1937இல் விடுதலை, 1944இல் ஜஸ்டிசைட் என்று அவர் நடத்திய ஏடுகள் கடுமையான எதிர் நீச்சலில் வலம் வந்தன. அந்த வரிசையில் 1970ஆம் ஆண்டு விடுதலைக்கு துணையாக வந்ததுதான் ‘உண்மை’ மாத இதழ். தற்போது உங்கள் கைகளில் மாதமிரு முறையாக வலம் வருக்கிறது.
உள்ளதை உள்ளபடி உலகிற்கு உரைப்பதையே தமது இலட்சியமாகக் கொண்ட நாத்திக இதழ் தமிழர்களின் ஆதரவோடு தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் உழைப்பால் 47 ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது 48 ஆம் ஆண்டில் அடிவைக்கிறது.
14-01-1970 அன்று தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று திருச்சியில் தந்தை பெரியார் முன்னிலையில், சே.மு.அ. பலாசுரமணியம் அவர்களின் தலைமையில் இதன் முதல் இதழை அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் இன்றைய கழகத் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.
திருச்சி அறிவுக் கடல் அச்சகத்தில் அச்சிடப் பட்டது, இதன் ஆசிரியர் கோ.இமயவரம்பன்.
முதல் இதழின் முகப்பு அட்டையில் பேரறிவாளர் புத்தர் படம் பொறிக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து தந்தை பெரியார், பெட்ரண்ட் ரசல், சாக்ரடிஸ் ,மாமேதை இங்கர்சால், ம.சிங்காரவேலர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ், தளபதி பட்டுக்கோட்டை அழகிரி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளே அவர்கள் பொன் மொழிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
உண்மை ஏட்டின் நோக்கம் குறித்து தந்தை பெரியார் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.
“உண்மை என்னும் பெயரால் ஒரு மாத பத்திரிக்கையை 1970 ஆம் ஆண்டு முதல் துவங்குகிறேன். அதற்கு கொள்கை மக்களை பகுத்தறிவாதிகளாக ஆக்க வேண்டும் என்பதாகும். பகுத்தறிவு தொண்டுக்காக சமுதாய இழிவு மடமை நீக்கும் தொண்டுக்காக என்றே பாடுபட இந்த ‘உண்மை’ பிறந்திருக்கிறது.
மக்களை அறிவாளியாக்கும் துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுப்பட்டாலும், அவர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படவும், நாத்திகர் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆளாக்கப்படவும், கொல்லப் படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம்நாட்டில் நம்மக்கள் இருக்கும் யோக்கிதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? ஆதலால் அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இக்காரியத்தில் பிரவேசித்து தொண்டாற்றி வருகிறேன்.
‘உண்மை’ நாத்திகப் பத்திரிகைதான் முக்காலும் நாத்திகப் பத்திரிகைதான் அதற்காக யாரும் அஞ்சாதீர்கள். உண்மையை வரவழைத்துப் படியுங்கள்” என்றார்.
உண்மை தொடங்கப்பட்ட ஓராண்டுக்கு வந்த அனைத்துத் தலையங்களும் தந்தை பெரியாராலேயே எழுதப்பட்டன.
அவை, ‘உண்மை இதழ்’, ‘ஜாதி’, ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்’(மூன்று இதழ்களில் தொடர்ந்தது), ‘மதம் என்பது மூடநம்பிக்கைகளின் தொகுப்பு’, ‘கடவுளை நம்பும் முட்டாள்களே’, ‘நாங்கள் யார் தெரியுமா?’, ‘ஜாதி ஒழிய வேண்டுமானால்’, ‘ஆஸ்திகம் – நாஸ்திகம்’, ‘நமது லட்சியமும் எதிர்கால வாழ்வும்’, ‘தமிழர் நிலை’ என்று தலைப்பிடப்பட்டிருந்தன.
இவைத் தவிர ஏராளமான சிறப்புக் கட்டுரைகளையும், துணுக்குகளையும் எழுதினார்.
மேலும், மேல்நாட்டு அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
குறிப்பாக, ஜான் பெஞ்சமின் எழுதிய ‘நாஸ்திகம்’, சார்லஸ் பிராட்லாவின் “ஆஸ்திகமும் நாஸ்திகமும்’’, ‘அறிவுலக மாமேதை ஆர்.ஜி.இங்கர்சால் ‘நன்றி கூறும் நட்பு’, ஜே.ரீவிலின் ‘மதம் விஞ்ஞானத்துக்கு முட்டுகட்டை’, ‘மதபோதனை ஒழியுமா?’, ஜீன் மெஸ்லியரின் ‘நன்மைகளுக்குக் கடவுள் பொறுப்பென்றால் தீமைகளுக்கு யார்?’, ஜோசப் மெக்காபியின் ‘இவ்வுலகை படைத்தது யார்?’, எம்.கே.காலினின் ‘மெய்யாக கடவுள் உண்டா?’, ‘சாக்ரடீசின் பொன்மொழிகள்’ போன்றவை இடம் பெற்றிருந்தன.
மேலும், ஆசிரியர் கி.வீரமணி, புரட்சிக்கவிஞர், அண்ணா, கைவல்யம், ஜெயங்கொண்டம் கலையரசன், பாலன், செல்வமகன், உடுமலை சித்தன், வி.சி.வேலாயுதம், உள்ளிட்டோரின் பகுத்தறிவு படைப்புகள் வெளியாயின. நாத்திகக் கருத்துகளுடன் தொடர்ந்தது.