பெட்டி
இது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று ஒரு பன்மொழிப் புலி, சொல்லித் திரிவதாக, மற்றொரு பன்மொழிப் புலி நம்மிடம் கூறக்கேட்டு நகைத்தோம். அந்தப் பன்மொழிப் புலி, இந்தப் பன்மொழிப் புலியிடம் ஏன் சொல்லும்? இந்தப் புலி ஏன் கேட்டுக் கொண்டிருக்கும்? இல்லாததைச் சொன்னால் முகத்தில் உமிழ்வானே என்று நினைத்தால் அப்புலி இப்புலியிடம் சொல்லத் துணியுமா?
பெட்டு, பெட்டல் இரண்டுக்கும் ஒன்றே பொருள் பேணுதலும் விரும்புதலும்.
பெட்டலின் அடியாகிய பெட்டு என்பது ‘இ’ பெயர்-இறுதிநிலைப் பெற்று பெட்டியை உணர்த்திற்று. எனவே பெட்டி-விருப்பத்தைப் பெற்றிருப்பது.
பெட்டி என்பது தூய தமிழ்க் காரணப் பெயரன்றோ. இதனைப்,
பிளையும் பேணும் பெட்பின் பொருள்
என்ற தொல்காப்பிய நூற்பாவாலும்,
பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
என்ற கற்பியல், அடியாலும், நம் தமிழ்ப் புலவர்கள் உணர்ந்து வைத்தும், வடநாட்டானிடம் ஓடி, பெட்டி என்றதற்கு ஒத்த ஒலி வடமொழியில் ஏதாவது உண்டா, தமிழைத் தாழ்த்திக் கூறவேண்டும் என்று கேட்டு அங்கிருந்து ஓடிவந்து தமிழரை நோக்கிப் பெட்டி என்பது பேட் என்ற வடசொல்லின் சிதைவென்று மானமற்ற வகையில் சொல்லித் திரிவது ஏன்? காட்டிக் கொடுத்து வயிற்றை வளர்க்கத்தானே!
(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)
புத்தகம்
புஸ்தகம் வடமொழி என்று அதன் சிதைவே புத்தகம் என்றும், ஆதலால் புத்தகம் வடசொல்லே என்றும் கூறி மகிழ்வர் வடசொல்காரர். அவரடிநத்தும் தமிழர்களும் அப்படியே?
புத்தகம், புதுமை அகம் எனும் இரு சொற்கள் சேர்ந்த ஒருசொல். புதுமையின்மை இறுதி நிலை கெடப் புது என நின்று, அதுவும் தன்ணாற்றிரட்டல் என்ற சட்டத்தால் புத்து என ஆகி அகம் சேர – உயிர்வரின் – உக்குறள் மெய் விட்டோடும் என்பதால் புத்தகம் ஆயிற்று. புத்தகம்-புதுமைக்கு இடமானது, புதுமையான உள்ளிடம்.
அந்நாளில் ஒலி வடிவை வடிவிற் கொணர்ந்தார் எனில் அது புதுமை அன்றோ. எனவே புத்தகம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
புத்தகத்தை புஸ்தகம் என்றது வடவர் செயல். வேட்டியை வேஷ்டி என்றும், முட்டியை முஷ்டி என்றும் அவர்கள் கூறவில்லையா?
(குயில்: குரல்: 2, இசை: 22, 8-1-59)
மேகம்
இது வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். மேகு-மேல் அம்சாரியை. “மேக்கு மேற்றிசை மேலும் பேர்’’ என்ற கண்ட காண்க. மேலே தவழும் முகிலுக்கு பெயர். மேல் என்பதே மேற்கு, மேக்கு, மேகு எனத் திரியும்.
இதை வடவர் வடசொல் என்று கூறி மகிழ்வார். அது கடைபட்ட முடிச்சுமாறித்தனம் என்க.
சொத்து
இது வடமொழியா என்று ஒரு தோழர் கேட்கின்றார். கேட்க வேண்டிய கேள்வி! ஏனெனில் சிறந்த பொருள் மறைந்துள்ள ஒரு சொல்.
இது தூய தமிழ்க் காரணப்பெயர். என்னை? சொல்+து = சொற்று, து ஒன்றன் பால் குறிப்பு வினை முற்று இறுதிநிலை. சொல்-புகழ். புகழுடையது என்ற காரணத்தால் சொற்று என்றனர். முன்னைத் தமிழர்கள், சொற்று என்பது சொத்து என மருவியது.
ஒருவனுக்குள்ள செல்வம் முழுவதையும் சொத்து என்பார்கள். எனவே அது புகழுக்குரியது. ஆதலால் சொத்து எனப்பட்டது ஆகுபெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 23, 15-12-1959)
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்