உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அய்சக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.25 கோடி) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்தது.
புவிஈர்ப்பு விசை, பருப்பொருள்களின் இயக்க விதிகள் உள்ளிட்டவை அய்சக் நியூட்டனின் மகத்தான கண்டுபிடிப்புகள். அவரது அறிவியல் கண்டுபிடிப்புகளை விவரித்து எழுதிய ‘பிரின்சிபியா மேத்தமேட்டிகா’ என்ற புத்தகத்தை 1687-ஆம் ஆண்டு வெளியிட்டார். லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி ஏலத்தில் விற்பனைக்கு வந்தது.
நியூயார்க்கில் உள்ள பிரபல கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் அதனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அந்தப் புத்தகம் 15 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.10 கோடி) விற்பனையாகும் என்று கிறிஸ்டீஸ் நிறுவனம் கருதியது. இந்த நிலையில், அந்த அரிய புத்தகம் 37.19 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.25 கோடி) ஏலத்தில் விள்பனையாகியது. அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது யார் என்பது தெரிவிக்கப் படவில்லை. விஞ்ஞான நூலொன்று இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல்முறை. இதற்கு முன் அதிக விலைக்கு விற்பனையான புத்தகமும் அய்சக் நியூட்டனின் ‘பிரின்சிபியா மேத்த மேட்டிகா’தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அரசர் ஜேம்ஸுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முதல் பதிப்புப் பிரதி இதே கிறிஸ்டீஸ் நியூயார்க் ஏல விற்பனை நிலையத்தில் 25 லட்சம் டாலருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு விற்பனையானது.