– கி.தளபதிராஜ்
தந்தை பெரியார் அவர்கள் பிறப்பதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே 1863இல் கல்கத்தாவில் பிறந்து தனது நாற்பதாவது வயதிலேயே மறைந்தவர் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை தனது குருநாதராக ஏற்று இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பியவர். “கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை யென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்” “ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அனாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது” என சில நேரங்களில் அவர் பேசியது அவரை ஒரு முற்போக்காளரோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு ஒரு மயக்கத்தை உண்டாக்கும்.
பார்ப்பனர்களுக்கு எதிரான கருத்துக் களையும் அவ்வப்போது வெளிப்படுத்தியவர்.
அயோக்கியப் புரோகிதர்கள்!
“இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.”
“வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.”
“தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார்? அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக்காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக் கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மை-யாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினி-யின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்?”
என்று, தான் சார்ந்த இந்து மதத்தவர்களை நோக்கியே சாட்டையைச் சுழற்றினார். இந்துமதத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த பார்ப்பனர்களை அவர் கடுமையாகச் சாடினார். இதில் ஆதிசங்கரரும் தப்பவில்லை.
சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராமணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக் கிடமாகின்றன. இந்து மதத்தைப் பரப்புவதற்காக அமெரிக்கா சென்ற இடத்திலும் விவேகானந்தர் பார்ப்பனர்களை தோலுரிக்காமல் விடவில்லை. “கல்வியறிவு பரம்பரையாய் வரவேண்டும் என்றும் திடீரென்று ஒருவனுக்கு அதைப் புகட்டினால் அவன் விருத்தியடையான் என்றும் அவர்கள் (பார்ப்பனர்கள்)வாதம் செய்கிறார்கள். இஃது உண்மையல்ல என்பதற்கு என் கண்ணில் கண்ட நிதர்சனம் கூறுகிறேன். கேளுங்கள்! அமெரிக்காவில் நடந்த சர்வ மத சபைக்கு வந்திருந்த பலருள் ஒரு நீக்ரோ ஜாதி இளைஞனும் வந்திருந்தான். அவன் நாகரிகமற்ற ஆப்ரிக்கா கண்டத்தில் பிறந்த நீக்ரோவன். அவன் அந்தச் சபையில் அழகிய பிரசங்கமொன்று செய்தான். அது முதல் அவனிடத்தில் நான் குதூகலம் கொண்டு அடிக்கடி அவனிடம் பேசினேன். நீங்கள் சொல்லும் பரம்பரை வாசனை வாதத்தைப் பற்றி நான் என்ன நினைப்பது? ஓ பிராமணர்களே! பிராமணர்-களுக்குப் பரம்பரை வாசனையின் காரணமாகப் படிப்பில் பறையனுக் கிருப்பதைவிட அதிக தகுதி இருக்குமாயின், பிராமணன் படிப்புக்காக கொஞ்சம் கூடப் பணம் செலவிட வேண்டாம். அதையெல்லாம் பறையனுக்கே செலவிடுங்கள்!” என்று சொல்லி பார்ப்பனர்களின் நரித்தனத்தை நாடு கண்டுகொள்ளச் செய்தார்.
கோவணக்கயிறு பூனூலான கதை!
“குருவானவர் தன் சிஷ்யனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். அதுவே பூணூலாக பின்னாளில் ஆனது.”
மாட்டுக்குப் பிறந்தவர்கள்!
மத்தியப் பிரதேசத்தில் கடுமையான பஞ்சம் நிலவிய நேரத்தில், பசுப் பாதுகாப்பு என்ற போர்வையிலே நன்கொடை கேட்டு வந்தவர்களிடம் “ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத்தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?” எனக் கேட்டார்.
“தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு பிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை.
பிரசாரகர் சிறிது நாணி, “ஆம்! நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லுகின்றனவே?” என்றார். விவேகானந்தர் நகைத்துக் கொண்டே, “ஆம், பசு நம் அன்னை என்பதை நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்!” என்று நகைத்தார்.
கீதை கட்டுக்கதை!
“கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடலாம்” என்று சொன்னவர் விவேகானந்தர்.
கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?
கீதையில் கூறப்படும் குருக்ஷேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
யுத்தத்தில் கிருஷ்ணன், அர்ஜுனனுடன் நடத்திய நீண்ட விவாதம் பக்கத்தில் சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டு நடந்ததா?
என விவேகானந்தர் கீதையை நார்நாராகக் கிழித்ததை தனது “கீதையைப் பற்றிய கருத்துக்கள்” என்ற நூலில் சிறப்பாக பதிய வைத்துள்ளார் ஏ.எஸ்.கே அய்யங்கார்.
சமஸ்கிருதம்!
செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. “மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும், பல்குவதற்கு பெருங்கருவியாய் இருந்ததும்; இருப்பதும் சமஸ்கிருதமே! சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமேயானால், இப்போராட்டங் களும் தொலைந்து போகும்!’’ என்றார்.
இப்படியெல்லாம் பேசும் விவேகாநந்தர், இல்லாத இந்து மதத்தை, ஆரிய மதத்தை தூக்கி நிறுத்த முயன்றது முரண்பட்டது மட்டுமல்ல, தெளிவின்மையின் விளைவாகும்.
தோழர்களே!
இப்போது விவேகானந்தர் விழா என்று கொண்டாடுகிறார்கள். அவரிடம் என்ன அய்யா அதிசயமானக் கொள்கை இருந்தது? என்ன விசேஷக் கருத்தைப் போதித்தார்? அதனால் நாட்டுக்கு மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட நன்மை தான் என்ன? என்று சிந்திக்க வேண்டாமா? விவேகானந்தர் என்ன கூறினார், சாதித்தார்? ஜாதியை நிலை நிறுத்தும் வகையில் தானே பாடுபட்டு வந்து இருக்கின்றார்? இவர் தொண்டு என்ன? மங்கிக் கொண்டு வந்த இந்து மதத்தையும், அதன் வருணாசிரம கோட்பாட்டையும், மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்து நிலை நிறுத்துவது தானே!
எனவே விவேகானந்தர் செய்த தொண்டு நமது இழிவு நிலையை வளர்க்கவும், வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வரும் இந்து மதத்தை வலுப்படுத்தவும் பிரசாரம் செய்தது தானே?
இந்து மதம் ஜாதியை ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது எனும் விஷயம் அமெரிக்கா வரை போயிருந்தது. அந்த உண்மையை ஒப்புக்கொண்டு பேசவில்லை விவேகானந்தர். மாறாக முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தார். இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்? எதற்காக விழாக் கொண்டாட வேண்டும்? இந்து மதத்தை மேல் நாட்டுக்குப் போய் பரப்பினார் என்கிறார்கள். மேல்நாட்டுக்குப் போய் இங்க நாறுகிற இந்துமதத்தை “நாலு முட்டாள் பசங்கள் நம்பும்படி” செய்து விட்டு வந்ததற்காகவா விழா? இந்த ஆள் உருவம் போட்டு தபால் ஸ்டாம்பு வெளியிட்டு இருக்கின்றார்கள். இது நமக்கு அவமானம் அல்லவா?
நமது மடமைக்கும், இழிவுக்கும், இந்த இந்து மதம் தானே காரணம்?”இந்து மதம்” என்றே ஒரு மதம் உண்டா? சங்காராச்சாரியாரே “இந்து மதம்” என்று ஒன்று இல்லை. இதற்கு வேண்டுமானால் “ஆரிய மதம்” என்று கூறலாம், அல்லது- வைதிக மதம் என்று கூறலாம் என்று தானே கூறியுள்ளார். இந்த ஆள் விழாவிற்கு மத சார்பற்ற சர்க்கார் உதவி செய்யலாமா?” என்று கேட்டார் பெரியார்.
தோழர்களே!, விவேகாநந்தர் யார் என்பது பெரியார் தோலுரித்தபின் விளங்குகிறதல்லவா?