சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

டிசம்பர் 01-15

 

 

நூல்: இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை

ஆசிரியர்: டாக்டர் ராதாகுமுத முகர்ஜி

தமிழாக்கம்: பெ.நா.அப்புஸ்வாமி

வெளியீடு: ஓரியன்ட் லாங்மன்ஸ் லிமிடெட், சென்னை-2.

விலை: ரூ.250 பக்கங்கள்: 135

சக்கரவர்த்திகளினுடைய ராஜ்யா-பிஷேகத்தின்-போது நடைபெறும் சடங்குகளை1 இவற்றுக்கு அடுத்தபடியாகக் கவனிப்போம். வாஜபேயம், ராஜசூயம் என்னும்  இரண்டு சடங்குகளுமே பெரும்பான்மையும் அச்சமயத்தில் நடத்தப்பட்டு வந்த சடங்குகள். இவற்றைப் பற்றிய வரலாறுகள் வேத இலக்கியங்களிலே கூறப்பட்டு, நமக்குக் கிடைக்கின்றன. ஏகராட், அதாவது ஒரே சக்கரவர்த்தி, என்னும் கொள்கையானது இந்தியர்களுடைய மனத்தை எவ்வளவு நன்றாகப் பற்றியிருந்தது என்பதை இவை காட்டுகின்றன. சதபத பிராம்மணமும் (V.. 1, 1, 13) காத்தியாயன சிரௌத சூத்திரமும் (XV. . 1, 1, 2)  வாஜபேயம் என்னும் யக்ஞமே (யாகமே) சிறந்தது என்று கூறுகின்றன. ஏனென்றால், ராஜசூய யாகம் ராஜ்யத்தை மட்டுமே, அதாவது அரச பதவியை மட்டுமே, அளிக்க வல்லது; ஆனால், வாஜபேய யாகமோ எனில், சாம்ராஜ்யத்தை, அதாவது அரசர்க்-கரசன் என்னும் பதவியை, அளிக்க வல்லது. மேலே கூறியுள்ள சதபத பிராம்மண வாக்கியத்திலே, ‘ஒருவன் அரசன் ஆகிறான்; வாஜபேயம் செய்வதால், அவன் அரசர்க்கரசன் (சம்ராஜ்) ஆகிறான். அரசனுடைய பதவி தாழ்த்தது; சக்கரவர்த்தியினுடைய பதவி உயர்ந்தது. அரசன் சக்கரவர்த்தியாகப் பதவி கொள்வதற்கு ஆசைப்படுவது இயல்புதான். ஏனெனில், அரச பதவி தாழ்ந்ததாயும் சக்கரவர்த்தியின் பதவி உயர்ந்ததாயும் உள்ளது.

சக்கரவர்த்திகள் தாங்கள் அரசர்களாக அமைய வேண்டும் என்று விரும்-பமாட்டார்கள்; ஏனென்றால், அரச பதவி கீழ்ப்பட்டது என்றும் சக்கரவர்த்தியின் பதவி உயர்ந்தது என்றும் பழைய நூல்களில் கூறப்படக் காண்கிறோம்.2 பல சிற்றரசர்கள் தங்களுக்கெல்லாம் தலைமை பெற்ற அரசனாகத் தேர்ந்தெடுத்த ஒரு பேரரசனால் முதன்முதலில் செய்யப்படும் சடங்கே வாஜபேயம் என்னும் யாகம் என்றும், இந்தச் சடங்கை நிகழ்த்திய பின்னர், காலக்கிரமத்தில் அவன் அரசனாகி, இராச்சியபாரம் தாங்கி, மகுடாபிஷேகம் செய்துகொள்ளும்போது நடத்தப்படும் சடங்கே ராஜசூயம் என்றும், வேறு சில நூல்களில் கூறப்படுகின்றன. உதாரணமாக, ஆசுவலாயன சுரௌத சூத்திரத்திலே (IX 9, 19)  ‘வாஜபேய யாகம் செய்த பின்னரே ஓர் அரசன் ராஜசூய யாகத்தைச் செய்யலாம்’ என்ற விதி காணப்படுகிறது. தைத்திரீய சம்ஹிதையிலும் (V. 6, 2, 1), தைத்திரீய பிராம்மணத்திலும் (II  7, 6, 1) இவ்விரண்டு சடங்குகளுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவை மேற்கூறிய விதியோடு ஒத்துக் காண்கின்றன. இவற்றிலே வாஜபேயம் என்பது சாம்ராட் _ஸவம், அதாவது சக்கரவர்த்திப் பதவியிலே அபிஷேகம் செய்விப்பது என்றும், இராஜசூயம் ‘வருண_ஸவம்’ என்றும் கூறப்படுகிறது. ஸாயனரின் மதப்படி இராஜசூயம் என்பது வருணனால் நடத்தப்பட்டுவந்த பிரபஞ்ச ஆட்சிப் பதவியிலே ஒருவனை அபிஷேகம் செய்விப்பது. (இதோடு சாங்கியாயன சிரௌத சூத்திரத்திலே, XV.13,4, ‘அவர்கள் வருணனையே அபிஷேகம் செய்விக்கிறார்கள்’ என்று கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும்.) வாஜபேய யாகத்தின் நோக்கத்தைப் பற்றி லாட்டியாயனர் (VIII. 11, 1) கூறியுள்ள விதியையும் இவ்வகையாகவே நாம் பொருள்கொள்ள வேண்டும். அவர் சொல்லுவது வருமாறு: ‘பிராம்மணர்களும், அரசர்களும் (பிரபுக்களும்), எவரைத் தங்களுடைய முன்னணியில் வைத்துப் பாராட்டுகிறார்களோ அவரே வாஜபேய யாகம் செய்யட்டும்.

3 வாஜபேய யாகத்தின் முக்கியமான சடங்குகளுள் மிகவும் ரசமாக உள்ளது தேரோட்டப் பந்தயமே. யாகம் செய்பவனே இதில் வெற்றி பெறும்படியாக விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது மற்றவர்களுடைய கடமை. இந்தத் தேரோட்டத்திலிருந்துதான் இந்த யாகத்துக்கு இப்பெயர் கிடைத்தது. தேரோட்டப் பந்தயத்துக்கு அடுத்தபடியாக, ரசமாக உள்ளது மற்றொரு சடங்கு. அது எது எனில்: யாகம் செய்பவனும் (அதாவது அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவனும்) அவனுடைய மனைவியும் யாக_ஸ்தம்பத்தின்மீது வீற்றிருந்து, அங்கிருந்தவாறே பூமி என்னும் தாயைத் தலைவணங்கிப் பணிவதும், அதன் பின்னர், சக்கரவர்த்திக்கு அறிகுறியான சிம்மாசனத்தில் ஏறி, யாவர்க்கும் மேலாக உயர்ந்த ஆசனத்தை அடைந்து, (சதபத பிராம்மணம் V. 2, 1, 24 ), அதன்மீது வீற்றிருப்பதும் ஆகும். சிம்மாசனம் ஏறுதல் அரச பதவிக்கு ஓர் அறிகுறியாக உள்ளது என்று அதர்வ வேதத்தில் (III. 1, 4, 2) கூறப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் சிம்மாசனமானது அரசாங்கத்தின் உன்னத சிகரமாக உள்ளது என்று அந்நூலில் அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. (‘அரசாங்கத்தின் உன்னத நிலையை அடைவாயாக’.) அதன் பின்னர் யாகம் செய்பவன் பறைசாற்று விக்கப்படுகிறான்.4 ‘அவன் யாவர்க்கும் அரசன்’, ‘அவன் யாவர்க்கும் அரசன்’ என்று யாவரும் உரக்கக் கூறுகிறார்கள். (சதபத பிராம்மணம் V. 2, 2, 15). மேலும், ‘இந்த அரசாங்கம் உன்னுடையது; அதை ஆள்பவன் நீ; அதை ஆளும் தலைவன் நீ. _ நிலைபெற்றவனாகவும் உறுதியுள்ளவனாகவும் நீ இருக்கிறாய். _ நீ பயிர் செய்யும் பொருட்டும், நி க்ஷேமமாய் இருக்கும் பொருட்டும், நீ செல்வங்களை அடையும் பொருட்டும், நீ சௌக்கியத்தைப் பெறும் பொருட்டும் (அதாவது, மக்கள் அனை-வருடைய நன்மையின் பொருட்டும்), இந்த அரசாங்கம் உனக்கு அளிக்கப்படுகிறது’ (சதபத பிராம்-மணம் V 2, 1, 25) என்னும் சொற்களும் அப்போது பகிரங்கமாகக் கூறப்படுகின்றன.

இராஜசூயம் எனப்படும் ராஜ _ பட்டா-பிஷேகம் ஒரு விசேஷமான சடங்குத் தொகுதியாகக் கருதப்பட்டது. அதையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் வரையில், பல யாகங்கள் வரிசையாகச் செய்யப்பட வேண்டியிருந்தன. அவற்றைப் பற்றி அதர்வ வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.  (IV. 8, 1; XI.7, 6). தைத்திரிய சம்ஹிதை V. 6, 2, 1), ஐதரேய பிராம்மணம் (V. 1, 1, 12)என்னும் பிற்கால இலக்கியங்களிலும் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அந்த யாகத்தைப் பற்றிப் பல சூத்திரங்கள் மிக விரிவாகக் கூறுகின்றன.

அதன் முக்கியமான அம்சங்களைப் பற்றிய மிகத் தெளிவான குறிப்புக்கள் பிராம்மணங்களிலே காணக்கிடக்கின்றன. உதாரணமாக, சதபத பிராம்மணத்திலும் மைத்திராயணீ சம்ஹிதையிலும் (IV. 3, 1), தைத்திரீய சம்ஹிதையிலும் (I.8, 1,1) முக்கியமாக அந்த விவரங்கள் கூறப்பட்டிருக்கக் காண்கிறோம். அந்த யாகத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் யஜுர்வேத சம்ஹிதைகளில் சொல்லப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, தைத்திரீய சம்ஹிதை  (I.8) காடக சம்ஹிதை(XV),   மைத்திராயணீ சம்ஹிதை  (II, 6),, வாஜஸனேயீ சம்ஹிதை(X), ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

(இரத்தினங்களை அவிர்ப் பலியாகக் கொடுப்பது இராஜசூய யாகத்தின் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று. இதற்கு ரத்ன_ஹவிசுகள் என்று பெயர்.) இவற்றைப் பலியாக ஏற்பவர்களுக்கு ரத்தினீனர்கள் என்று பெயர். இவர்கள் அரசாங்கத்தினுடைய முக்கிய அதிகாரிகளாகவும், அதன் முக்கிய இலாக்காக-களின் பிரதிநிதிகளாகவும், உள்ளவர்கள். இவர்கள் யாவரும் அரசாங்கத்தின் முடியாகிய கிரீடத்தின் மீது பதித்த இரத்தினங்களைப்-போல் விளங்குபவர்கள். சதபத பிராம்-மணத்திலே (V. 3, 1, 3 முதலிய இடங்களிலே) அவர்கள் கீழ்வரும் வரிசையில் கூறப்-படுகிறார்கள். (1) படைத் தலைவர் (ஸேனானீ), (2) அரசனுக்குச் சடங்கு செய்விக்கும் குரு (புரோகிதன்), (3) அரசி (மகிஷி), (4) அரசனுடைய பாணனும் கணக்கனும் (சூதன்), (5) கிராமத் தலைவன் (கிராமணி), (6) அந்தப்புர மணியக்காரன் (க்ஷத்திரு), (7) பொக்கிஷத் தலைவன் (ஸங்கிரஹீத்ரு) (இவனை ஸாயனர் தொகைகளை வசூலிக்கச் செய்யும் பொக்கிஷ அதிகாரி என்று வர்ணிக்கிறார்), (8) வரி முதலியவற்றைக் கறந்து வசூலிக்கும் அதிகாரி (பகுதி கறப்போன்), (9) சூதாட்டத் தலைவன் (அக்ஷாவாபன்), (10) வேட்டை முதலிய-வற்றுக்கும் காடுகளுக்கும் மேலதிகாரி (கோ_நிகர்த்தனன்; அரசன் வேட்டைக்குப் போகும் போதெல்லாம் அவன் கூடவே சென்றுவரும் துணைவனாக இவன் இருப்பான் என்று ஸாயனர் கூறுகிறார்), (11) செய்திகளை எடுத்துச் செல்லும் தூதன் (பாலாகலன்).  தைத்திரீய சம்ஹிதையிலும் (I, 8, 9, 1 முதலிய இடங்களில்), பிராம்மணத்திலும் (I. 7, 3, 1 முதலிய இடங்களில்), வேறோர் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே வேட்டை மேலதிகாரியும், தூதனும், காணப்படவில்லை; அவர்களுக்குப் பதிலாக, ராஜன்னியன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். அவ்வாறே மைத்திராயணீ சம்ஹிதையும் (II. 6, 5; IV 3, 8) ராஜன், வைசியக் கிராமணி, தக்ஷரதகாரர் இருவகையினர் (தச்சனும் தேர் செய்பவனும் _ இவர்கள் கைத்தொழிலுக்குப் பிரதிநிதிகளாக இருக்கலாம்) என்பவர்களைக் குறிப்பிடுகிறது.5 காடக சம்ஹிதையும் (XVI. 4) இதே அட்டவணையைத்தான் கூறுகிறது. ஆனால், இது தக்ஷரதகாரர்களின் இரண்டு வகையினரையும் விட்டுவிடுகிறது. இவர்-களுக்குப் பதிலாக, கோ_வியசன் என்பவனைக் கூறுகிறது.

இந்த அட்டவணைகளைப் பார்த்தால், இவை அதர்வ வேதத்திலே (III. 5, 7) கூறப்பட்ட ராஜகர்த்திருக்கள், அல்லது ராஜகிருத்துக்கள் ஆகியவர்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, பிற்காலத்திலே விரிவாகக் கூறப்பட்டவைகளே என்று தோன்றுகிறது. இவர்கள் அரசர்கள் அல்லர்; ஆயினும், ராஜ்யாபிஷேக உற்சவத்திலே துணை புரிந்தவர்கள். அதர்வ வேதத்திலே இவ்வாறு கூறப்பட்டவர்கள் யாவர் எனில், சூதன் என்னும் தேரோட்டியும், கிராமணி என்னும் கிராமத் தலைவனும், மக்களுமே, ஆவார்கள்.6 ஐதரேய பிராம்மணத்தில் (VIII. 17, 50) ராஜ_கர்த்ததா என்னும் சொல் காணப்படுகிறது. இச்சொல்லானது அரசனுடைய தகப்பன், சகோதரன் முதலியோரைக் குறிக்கும் என்று அந்நூலின் உரையாசிரியர் வியாக்கியானம் செய்கிறார். இராச்சியாபிஷேகத்தில் பங்கு எடுத்துக்-கொண்டு, உதவி செய்பவர்களாகக் கூறப்-படுவோர்களின் அட்டவணைகளைப் பார்த்தால், அதிகாரப் பதவியில் உள்ளவர்களும், அதிகாரப் பதவிகளில் இல்லாத சாமானிய மக்களின் பிரதிநிதிகளும், இநத்ச் சடங்கிலே பங்கு எடுத்துக்கொண்டு இதை நடத்தி வைத்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசனுடைய கிரீடத்துக்கும் அதிலுள்ள இரத்தினங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் போலவே, அரசனுக்கும் அரசாங்க அதிகாரி-களுக்கும் மற்ற மக்கட் பிரதிநிதிகளுக்கும் உள்ள உறவு இருந்திருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்கலாம். இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் மற்றது இன்றியமையாததாக உள்ளது.

அடுத்தபடியாக, இராஜசூய யாகத்தில் மிகவும் சுவையான பகுதியானது அபிஷேசனீயம் எனப்படும் பட்டாபிஷேகச் சடங்கு. அந்த யாகச் சடங்கைச் செய்யும்போது, முதலில் வரப்பிரசாதி-களான சில தெய்வங்களுக்குப் பலி இட்ட பின்பே அதைத் தொடங்குகிறார்கள். தர்மத்தை அடிப்படையாக உடைய சக்தியின் பொருட்டு ஸவிதா_சத்யப்பிரசவா என்னும் தேவனுக்கும்; கிரகஸ்தாசிரமத்தில் இருப்பவர்கள் செழித்து வாழும் பொருட்டு அக்கினி_கிருகபதிக்கும்; மரங்களும், தானியம் முதலியவைகளும், விவசாயமும், செழித்தோங்கும் பொருட்டு ஸோம_வனஸ்பதிக்கும்; பேச்சுத் திறமையின் பொருட்டு பிருகஸ்பதி_வாக்குத் தேவனுக்கும்; அதிகாரத்தின் பொருட்டும் ஆளும் திறமையின் பொருட்டும் இந்திரனுக்கும்; கால்நடைகளின் பொருட்டு உருத்திரனுக்கும்; சத்தியம் ஓங்கும் பொருட்டு மித்திரனுக்கும்; நீதிமுறையில் பாதுகாப்பு இருந்துவரும் பொருட்டு வருண தர்மபதிக்கும், பலிகள் இடப்பட்டன. எந்த ராஜ்யத்தில் ஒருவனுக்கு நீதித் துறையில் அதிகாரம் இருக்கிறதோ அந்த ராஜ்யமே சிறந்த ராஜ்யம், அல்லவா? அதன் பிறகு, ராஜ்யாபிஷேகத் தீர்த்தமானது தயார் செய்யப்பட்டது. இதிலே பதினேழு வகையான தீர்த்தங்கள் கலக்கப்பட்டன. பனியின் நீரும், குளத்து நீரும், கடலின் நீரும், இவற்றுள் ஒரு சில. இதன் பின்னர், அபிஷேகம் செய்விக்கப்-படும் மன்னனின்மீது அந்தப் புனிதமான தீர்த்தத்தை பிராமணன் ஒருவனும், அபிஷேக மன்னனின் நெருங்கிய உறவினன் ஒருவனும், க்ஷத்திரிய குலப் பிரபுவான ராஜன்னியன் ஒருவனும், வைசியன் ஒருவனும், தெளித்தார்கள். அதன் பிறகு, பட்டாபிஷேக உடைகளையும், வில்லையும், மூன்று அம்புகளையும், ராஜ சின்னங்களாக (அரசின் அறிகுறிகளாக) அவனுக்கு அளித்தார்கள். அவன்மீது எத்திசை-யினின்றும் அம்புகள் பாய்ந்து தாக்காவண்ணம் பாதுகாக்கும் பொருட்டே இந்த அம்புகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர்,அவன் அரசனாக அபிஷேகம் செய்விக்கப்-பட்டான். இச்செய்தி பிராமணர்-களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும், அதாவது புரோகிதர்கள் புரபுக்கள் ஆகிய இரண்டு வர்க்கங்களுக்கும், மற்றெல்லா வகையான மக்களுக்கும் _ உயிருள்ளவற்றுக்கும் உயிரில்லாத-வற்றுக்கும் கூட _ தெரிவிக்கப்-பட்டது. அதன் பின்னர், அவன் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, ஆகாயம் (மேலுலகம்), என்னும் திக்குக்களில் எல்லாம் ஏறிச் செல்வதாகப் பாவித்து, அங்கெல்லாம் உள்ள யாவற்றுக்கும் மேலானவனாக அவன் இருக்கும்படியும், அவன் ஒய்யாரமாக வீற்றிருக்கிறான் என்று கூறப்பட்டது. அதற்குப்பின், கீழ்க்கூறிய மந்திரத்தை உச்சரித்து, அவனுக்கு ராஜ்யா-பிஷேகம் செய்யப்பட்டது.

‘ஓ தேவர்களே, ஈடு இணையற்ற பேரரசனாகவும், பேரதிகாரம் பெற்றவனாகவும், தன்னுடைய மக்களான குடிகளை நன்கு பரிபாலித்து ஆளுபவனாகவும், விளங்கும்படி, அவனுக்கு நீங்கள் வரமளியுங்கள். ஓ மனிதர்களே (தைத்திரீய சம்ஹிதையில் இது பரதர்களே என்று காணப்படுகிறது), இவனே உங்கள் அரசன்! என்பதுதான் அந்த மந்திரம்.7 

—————–

1 ‘இந்து அரசர்களுடைய ராஜ்யாபிஷேகத்தின் நியமங்களும், அதன் அரசியல் சம்பந்தங்களும்’ என்னும் விஷயத்தைப் பற்றி நன்கு எழுதப்பட்ட கட்டுரை ஒன்று காசி பிரஸாத் ஜயஸ்வால், பி.ஏ.ஆக்ஸன்., பாரிஸ்டர், அவர்களால் 1912ஆம் வருஷம் ஜனவரி மாதத்து மாடர்ன் ரிவியூ பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

2 ராஜசூய யாகம் செய்வதால் ஒருவன் ராஜா (அரசன்) ஆகிறான். வாஜபேய யாகம் செய்வதால் ஸம்ராட் ஆகிறான். ராஜ்யம் எனப்படுவது கீழ்ப்பட்டது; ஸாம்ராஜ்யம் என்பது மேலானது. அரசன் அரசர்க்கரசன் ஆக விரும்புவது இயல்பு. ஏனென்றால், ராஜ்யம் (ராஜா) என்பது கீழானது; ஸாம்ராஜ்யம் (ஸம்ராட்) என்பது அதனினும் உயர்ந்தது.

3 எவனைப் பிராமணர்களும் அரசர்களும் முன்னணியில் வைத்துப் பாராட்டுகிறார்களோ அவனே வாஜபேய யாகம் செய்யத் தகுதி உள்ளவன்.

4 ‘இவனே ஸாம்ராட்’, ‘இவன்தான் ஸாம்ராட்’ என்னும் இச்செய்தி பலருக்கும் நன்றாகத் தெரிவிக்கப்படுகிறது.

5 ரதகாரன் எனப்படும் தேர் செய்பவன் அதர்வ வேதத்தில்  (III. 5.6) கூறப்படுகிறான். அவ்விடத்திலே அவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய குடிகளில் ஒருவனாக வர்ணிக்கப்படுகிறான். பொதுவாக, தொழிலாளிகளின் பிரதிநிதியாக அவன் பாவிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. யஜுர்வேத சம்ஹிதைகளிலும், உதாரணமாக, காடக (XVII, 13) மைத்திராயணீ (II. 9, 5) வாஜஸனேயீ(XVI. 17; XXX. 6), என்னும் இடங்களில், அவனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பிராம்மணங்களிலும் (உதாரணமாக, தைத்திரீயம் I. I, 4, 8; III. 4, 2, 1 சதபதம்XIII. 4, 2, 17) அவனைப் பற்றிய விருத்தாந்தங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் எல்லாம் அவன் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு கற்பிதமான சாதியைச் சேர்ந்தவனாகக் காணப்படுகிறான்.

6 அதர்வ வேதம் (III. 1, 4, 2 என்னும் இடத்தில்) கிழ்வருமாறு காணப்படுவதை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்:–_‘தங்களை ஆளும் தலைவனாக மக்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தைத்திரீய சம்ஹிதையில் (II. 3, 1, 3) ‘விஸ்’ என்று கூறப்படுபவர்கள் பொதுமக்கள்தாம் என்பது தெளிவு.

7 சதபத பிராம்மணம் (V. 4, 2, 3.)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *