மானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 01-15

மானமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

மனிதம், பகுத்தறிவு, தன்மானம் நிலைக்க அயராது உழைக்கும் ஆருயிர் இளவல்!

“தமிழர் தலைவர்’’ எனத் தமிழ் உலகம் போற்றும் எனது ஆருயிர் இளவல், திரு.கி.வீரமணி அவர்களின் 84வது பிறந்த நாள் விழா 2-.12.2016 அன்று கொண்டாடப்படுவதை யொட்டி, “உண்மை’’ (டிசம்பர் 1-_15) இரு வாரஇதழ், சிறப்பு மலராக வெளிவருவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இளவல் திரு.கி.வீரமணி அவர்கள், தனது பத்தாவது வயதில் ஆற்றிய பண்பட்ட உரையினைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால், “திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர்’’ எனச் சிறப்பாகப் போற்றப்பட்டவர்.

தந்தை பெரியார் அவர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், நன்மதிப்புக்கும் ஆளாகி, அவருடைய அணுக்கத் தொண்டராக அருகிருந்து வளர்ந்து, பகுத்தறிவுச் சிந்தனைகளில் ஊறித் திளைத்துப் பழுத்திருப்பவர் இளவல் கி.வீரமணி. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பின், திராவிடர் கழகத்தின் தலைவராக உயர்ந்து, சுயமரியாதை _ பகுத்தறிவு _ இன, மொழிப் பாதுகாப்பு ஆகிய பதாகைகளை உயர்த்திப் பிடித்து, திராவிடர் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி வருபவர் இளவல் கி.வீரமணி என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தந்தை பெரியார் அவர்களின் மனித நேயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமதர்மம், தன்மானம் சார்ந்த அரிய சிந்தனைகளைப் பரப்பி, அவற்றை நிலைபெறச் செய்திட அரும்பாடுபட்டு வருகிறார்.

திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு, சுயமரியாதை உணர்வுக்கு எங்காவது இழுக்கு ஏற்படுமாயின், அதற்கடுத்த நாளிலேயே “விடுதலை’’ இதழில் இளவல் வீரமணியின் சங்கநாதம் வெளிவந்திருக்கும்.

தனக்கென தனியானதொரு பாணியை வடிவமைத்துக் கொண்டு, எந்தப் பிரச்சினையாயினும், எத்திசையிலிருந்து வரினும், அதற்குத் தக்க ஆதாரங்களோடு, அறிவியல் விளக்கம் கொடுத்து, உரையாக இருந்தாலும், அறிக்கையாக இருந்தாலும் திராவிடர் கழகத்தின் கொள்கைக்குத் தொடர்ந்து உரமூட்டி வருகிறார். அவரது நேர்த்திமிக்கச் செயல்பாட்டினைப் பாராட்டிட வாழ்த்துச் செய்தி போதாது; நீண்ட கட்டுரைதான் தீட்ட வேண்டும்.

அருமை, ஆருயிர் இளவல் திரு.கி.வீரமணி அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் நலமுடன்  வாழ்ந்து தந்தை பெரியார் அவர்களின் புகழ் பாடிப் பரப்பிடவும்,

“உண்மை’’ சிறப்பிதழ், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெருமை சான்ற பகுத்தறிவுத் தொண்டுகளைப் போற்றி வெளிவரவும்

எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தொரிவித்துக் கொள்கிறேன்.

அன்புள்ள,   
மு.கருணாநிதி

நாள்: 15.11.2016
இடம்: சென்னை

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *