சீரான சிவில் சட்டம் கேட்போரே! இந்து மதத்தில் சீர்மை உண்டா? திருப்பதியைத் திரும்பிப் பார்!

நவம்பர் 16-30

மஞ்சை வசந்தன்

இந்தியா முழுக்க ஒரே சிவில் சட்டம் வேண்டுமாம். இந்துத்வா சங்பரிவார் ஆட்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.  பொதுச் சிவில் சட்டம் இல்லாததால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களாம்! திடீரென்று பெண்கள் மீதான அக்கறை இவர்களுக்கு பீறிட்டுக் கொட்டுகிறது.

கணவனை இழந்த பெண்ணை கணவன் பிணத்தோடு சேர்த்து உயிரோடு எரித்தவர்கள்; அதை இன்றளவும் தர்மம் என்று நியாயப்படுத்துகின்றவர்கள்; பெண்கள் பாவ யோனியில் பிறந்த இழிபிறவிகள். அவர்களுக்கென்று சொந்த அறிவோ, சொந்த சொத்தோ கூடாது என்பவர்கள்;

அவள் கணவனைச் சார்ந்தே வாழவேண்டும் என்பவர்கள்; பெண்கள் வீட்டுவேலைகளை மட்டுமே செய்ய வேண்டும். கல்வி உத்தியோகம் அவர்களுக்குக் கூடாது; கோயிலுக்குச் செல்லக்கூட அவர்களுக்கு உரிமையில்லை என்பவர்கள்; பெண்ணை ஒரு பொருளாகக் கருதி “கன்னிகாதானம்’’ செய்பவர்கள் பெண்களின் நலன்பற்றி பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை! சாத்தான் வேதம் ஓதுகிறது என்பது இதுதான்!

நாடு முழுக்கப் பொதுச்சட்டம் கேட்கின்ற நீங்கள், முதலில் உங்களுக்குள் பொதுத் தன்மையை, சீர்மையைக் கொண்டுவந்து விட்டல்லவா மற்றவர்கள் நடைமுறையில் தலையிட வேண்டும்?

இந்துக்கள் அனைவரும் ஒரே உரிமை பெற்றிருக்கிறார்களா? இந்துக்களின் தாய்மொழியெல்லாம் சம உரிமை பெற்றிருக்கிறதா?

இந்துக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப்-படுகிறார்களா? நடத்தப்படுகிறார்களா?

இந்துக்களிலே ஒரு சிறு கூட்டம் மட்டும் பூணூலை மாட்டிக்கொண்டு நாங்கள் மட்டுமே கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்கிறீர்களே இது சீர்மையா?

நாங்கள் மட்டுமே கடவுளின் முகத்தில் பிறந்தோம், மற்ற இந்துக்கள் எல்லாம் எங்களுக்குக் கீழ் என்கிறீர்களே இது சீர்மையா?

எங்கள் மொழி சமஸ்கிருதந்தான் கடவுள் முன் ஒலிக்க வேண்டும். மற்ற மொழியெல்லாம் நீசப் பாஷைகள்; அவை கடவுளைத் தீட்டடையச் செய்துவிடும் என்பது சீர்மையா?

நாங்கள் மட்டும்தான் கடவுள் கருவறையுள் செல்வோம்; மற்ற இந்துக்கள் செல்லக் கூடாது என்பதும்; நாங்கள் மட்டும்தான் கலசத்தில் நீர் ஊற்ற முடியும்; வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள்கூட ஊற்றத் தகுதியில்லை என்பதும் சீர்மையா?

பசு மாடு மட்டும்தான் புனிதம், பால் தரும் மற்ற மாடுகளெல்லாம் புனிதமல்ல என்பது சீர்மையா?

சிவ சத்தம் காதில் விழக்கூடாது என்று வைணவரும், ஹரி சத்தம் காதில் விழக் கூடாது என்று சைவரும் காதைப் பொத்திக் கொண்டு மோதியது இந்து மதத்தின் சீர்மையா?

கறிச் சோறும் கருவாடும், பட்டைச் சாராயமும் படைத்தால்தான் ஏற்பேன் என்ற பாவாடைராயன், முனியாண்டியும்; சைவம் மட்டுமே எனக்குப் படைக்கப்பட வேண்டும் என்கிற சிவனும், நாராயணனும் இந்து மதக் கடவுள்கள் என்பதுதான் இந்து மதத்தின் சீர்மையா?

எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலை வணங்கும் வைணவர்க்குள்ளோ ஆயிரம் ஆயிரம் வேற்றுமைகள், முரண்பாடுகள், எதிர்ப்புகள், வழக்குகள் என்று இன்றளவும் சிக்கலாகி, சிரிப்பாய்ச் சிரிக்கிறதே இதுதான் இந்து மதத்தின் சீர்மையா? அக்கதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

வடகலை நாமம், தென்கலை நாமம்

2011ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலின் கருவறை வெள்ளிக் கதவில், வடகலை நாமம் பொறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில், அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியின்றி வடகலை, தென்கலை தொடர்பாக எதையும் சேர்க்கக் கூடாது என்ற அரசின் உத்தரவு உள்ளது.

கதவிலே நாமப் பிரச்சினை

சங்கு சக்கரம் சின்னங்களுடன் உள்ள கதவில், வெள்ளியிலான வடகலை நாமம் திடீரென பொறிக்கப்பட்டது. அதற்கு, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள யதீந்த்ர ப்ரவண சபை எதிர்ப்பு தெரிவித்தது. கோவிலின் அறிவிப்புப் பலகையில் இதுகுறித்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல், மாலையில் ரகசியமாக வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டது. எவ்வளவு கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது. யார் இந்த வெள்ளிப் பொருள்களை நன்கொடையாகக் கொடுத்தது என்ற அறிவிப்பின்றி இந்தக் கதவு பொருத்தப்பட்டது. புதிதாகப் பொருத்தப்பட்ட வெள்ளிக் கதவில் உள்ள வடகலை நாமத்தை அகற்ற முற்பட்டபோது, அங்கிருந்த அர்ச்சகர்கள் அதைத் தடுத்துவிட்டனர். அறநிலையத்துறை ஆணையர் போனில் உத்தரவிட்ட பின்னும், அந்த நாமத்தை அகற்ற அர்ச்சகர்கள் மறுத்தனர். இதற்கு முறையான விளக்கம் அளிக்கும்படி, யதீந்த்ர ப்ரவண சபைத் தலைவர் கே.எஸ்.சம்பத்குமார் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாமத்திற்கு அவமானமா?

பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, ‘வடகலை’ நாமத்திற்கு அவமானம் நடந்து வருவதாக இப்பிரிவைச் சேர்ந்த அர்ச்சகர்கள், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறியதன் பேரில் வடகலை, தென்கலை திருநாமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அகோபில மடம் செயலர் சேஷாத்ரி 18.09.2010 அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக மாநில ஆளுநர் நரசிம்மன் சரியான தீர்வு காண வேண்டுமென அர்ச்சகர்கள் எதிர் பார்க்கின்றனர். மார்ச் 2001இல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பின் ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டது புதிய பிரச்சினையைக் கிளப்பியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அந்த மாதம் 15ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் உலகிலேயே உயர்ந்த 237 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டது. இது வடகலை குழுவினரை புண்படுத்துவதாக ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் 45ஆவது பீடாதிபதியான ஜீயர் சுவாமிகள் கூறினார். இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு சுமூகமான தீர்வு காணுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து ஜீயர் சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ராஜகோபுரம் எனக்கு முன்பு இருந்த ஜீயர் சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர் வடகலை நாமம் போடுபவராக இருந்தாலும் அவர் எந்த விதமான பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக எந்த விதமான நாமமும் போடாமல் விட்டுவிட்டார். ஆனால், இப்போதுள்ள கோவில் அதிகாரிகள் கும்பாபிஷேக புனரமைப்புப் பணி எனக் கூறி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராஜகோபுரத்தின் ஆறாவது வாயிலில் தென்கலை நாமத்தை வைத்து அதற்கு நியான் விளக்கும் போட்டுள்ளார்கள். இது வடகலை நாமம் போடுபவர்களை புண்படுத்தும் செயலாகும். இதேபோல் கோவிலின் தேசிகர் சுவாமி சன்னதியிலும் தென்கலை நாமம் போடப்-பட்டுள்ளது. இந்தக் கோவில் வடகலை நாமம் போடுபவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு தென்கலை நாமம் போடப்-பட்டுள்ளது.

லட்சுமியைக் காணோம்

ஸ்ரீரங்கம் கோவில் கலாச்சார பாதுகாப்புக் குழு செயலாளர் கிருஷ்ணமாச்சாரி என்பவர் மூலஸ்தானத்தில் இருக்கும் ரங்கநாதர் மார்பில் இருந்த வஸ்தாலட்சுமியின் திருவுருவம் நீக்கப்பட்டு அங்கு முக்கோண வடிவிலான எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது என புகார் கூறினார். இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் தந்தி அனுப்பினார். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மீண்டும் வஸ்தாலட்சுமியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ய வைத்த கதையெல்லாம் தெரியுமா?

யானைக்கு எந்த நாமம்?

ஸ்ரீரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918_19இல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவர்-களுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதிமன்றங்களைக் கடந்து, பிரிவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படியே ஸ்ரீரங்கத்திலிருக்கிற வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள், பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள். மூன்று மாதங்கள் நடந்த இந்தச் சண்டையால் யானை சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது.

மறுநாள் பத்திரிகைகளில் ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடித்து சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்று செய்தி வந்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதே பத்திரிகைகளில் வேறு செய்தி கூறியதாவது, ஸ்ரீரங்கத்து யானைக்கு மதம் பிடிக்க-வில்லை. அப்படி தவறுதலாகப் பிரசுரிக்கப்-பட்டது. உண்மையில் யானைக்கு மதம் பிடிக்காமல்தான் சங்கிலியை அறுத்துக்-கொண்டு ஓடியது என்று விளக்கம் கொடுக்கப்பட்டதே தெரியுமா?

வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பானைக் கண்களால் பார்த்து விட்டாலே சுவரில் போய் முட்டிக்கொள்வான் _ இதற்குப் பெயர் கண்டு முட்டு!

ஒருவனைப் பற்றி இன்னொருவன் காதால் கேட்டு விட்டாலே, உடனே சுவரில் போய் முட்டிக் கொள்வான் _ இதற்குப் பெயர் கேட்டு முட்டு!

இப்படிப்பட்ட யோக்கியதையில் இந்து மதம் இருக்கும்போது எங்கே ஒன்று சேர்வது?

அப்போது மட்டுமா? இப்போதும் இந்த கேடுகெட்ட கூத்து, மோசடியின் உச்சத்திற்குப் போய் திருப்பதியில் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! இதோ 05.11.2016 தினத்தந்தியில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்!

“வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் திருப்பதி மூலவரின் திருநாமத்தில் மாற்றமா? கோவில் முதன்மை அர்ச்சகர் மறுப்பு.

திருப்பதி ஏழுமலையான் மூலவருக்கு வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் நடத்தப்பட்டு திருநாமம் போடப்படும். மற்ற நாட்களில் அலங்காரம் மட்டுமே செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

திருப்பதி பெருமாளுக்கு பழங்காலத்தில் ‘யூ’ (ஹி) வடிவிலும், ‘ஒய்’ (சீ) வடிவிலும் வடகலை மற்றும் தென்கலை என 2 விதமாக போடப்பட்ட நாமத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஆங்கிலேயர் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட திருநாமம்தான் தற்போது போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று பெருமாளுக்கு வழக்கமாக போடப்படும் நாமத்தை கோவில் முதன்மை அர்ச்சகரான ரமண தீட்சிதர் மாற்றி விட்டதாக, அவர் மீது சின்ன ஜீயர் சுவாமிகள் தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகார் குறித்து முதன்மை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறுகையில், “கோவிலில் நடக்கும் சில அநீதிகளை நான் தட்டிக் கேட்கிறேன். இதனால் என் மீது சிலருக்கு வெறுப்புணர்வு ஏற்படுகிறது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். பெருமாளுக்கு வழக்கமாக போடப்படும் நாமத்தில் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை. வழக்கமாக போடப்படும் நாமத்தைத்தான் போடுகிறேன். என் உயிர் இருக்கும் வரை எப்போதும் போடப்படும் திருநாமத்தை மாற்றமாட்டேன்’’ என்றார்.

திருப்பதி சாமிக்கு எந்த நாமம் போடுவது என்பதிலே சீர்மையில்லை; திருப்பதி யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதிலும் சீர்மையில்லை!

இந்நிலையில் இவர்கள் பொது சிவில் சட்டம் பற்றி பேசுகிறார்கள்! அதுமட்டுமல்ல. திருப்பதி சாமியே மோசடி சாமி என்ற கருத்து நீண்ட நெடுங்கால சர்ச்சை.

அது புத்தர் சிலை என்று சிலரும், அது காளி சிலை என்று சிலரும், அது முருகன் சிலை என்று பலரும் கூறுவர். குன்றுதோறும் குமரன் என்ற வகையில் முருகன் சிலையையே முகம் மறைத்து நாமம் போட்டு வெங்கிடாசலபதி ஆக்கியுள்ளனர் என்ற கருத்தும் வலுவாக உள்ளது.

இப்படி இங்கே சிரிப்பாய்ச் சிரிக்க பொது சிவில் சட்டம் என்று பேச வெட்கப்பட வேண்டாமா?

முதலில் இந்து மதத்திற்குள் ஒரு சீர்மையை _ பொதுமையைக் கொண்டுவந்துவிட்டு அதன்பின் இந்தியா முழுக்க பொதுச் சிவில் சட்டம் பற்றிப் பேசினால் நன்றாகவும் இருக்கும் நாணயமாகவும் இருக்கும்! செய்வீர்களா? 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *