யாழின் வழித்தோன்றலே வீணை!
நூல்: வீணை அதன் பேர் தனம்
ஆசிரியர்: ப.சோழநாடன்
வெளியீடு: ரிஷபம் பதிப்பகம்,
இரண்டாம் தளம்,
எண்: 31/45, இராணி அண்ணாநகர்,
பி.டி.ராஜன் சாலை,
கே.கே.நகர், சென்னை_78.
வீணையின் முன்னோடி: சங்க கால இலக்கியம் என்பது கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.2 வரை என்று எல்லா இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அய்நூறாண்டுகளில் வெளிவந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் எங்கு தேடியும் ஒரு இடத்தில் கூட வீணை என்ற கருவியின் பெயரைக் காண முடியவில்லை. இதேபோல கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட, குடையப்பட்ட கோயில்களில் எங்குமே ‘இன்றைய வீணை’யின் வடிவத்தைக் காண முடியவில்லை. சங்க மருவிய இலக்கியமான திருக்குறளில் கூட இச்சொல் இல்லை. அப்படி என்றால் தமிழனின் முதல் நரம்புக் கருவி எது என்ற கேள்வி எழும். அதற்கான விடையை சங்க இலக்கியமும் தெளிவாகத் தந்திருக்கின்றது, அது ‘யாழ்’ என்ற இசைக் கருவிதான்!
யாழின் தோற்றமும் வகைகளும்: மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த வேடர்கள் தங்கள் தொழிலுக்காக உருவாக்கி பயன்படுத்தி வந்த ‘வில்’லே முதல் யாழாகும். அஃது ‘குறிஞ்சி யாழ்’ என்றும் ‘வில்யாழ்’ என்றும் அழைக்கப்பட்டதற்குக் காரணம்; வில்லில் உள்ள ஒரு நாணுக்குப் பதிலாக பல நரம்புகள் கட்டப்பட்டு இசைக்கப்பட்டது. இதுவே முதல் யாழாகவும், தாய் யாழாகவும் தோற்றம் கண்டது.
யாழை இசைத்தவர்கள் ‘பாணர்’ என அழைக்கப்பட்டனர். பாணரின் இசைக்கு விறலி ஆடல் செய்தாள். யாழ் கருவியின் வடிவைக் கொண்டே அதனை இசைத்தவர்களை ‘பெரும்பாணர்’ என்றும், ‘சிறுபாணர்’ என்றும் பிரித்தனர்.
‘யாழ்’ கருவி தமிழன் கண்ட கருவிகளுள் முதன்மையானது. தமிழிசையின் தோற்றம் _ பெருக்கம் முதலியவைகளை யாழைக் கொண்டே செய்தனர். இக்கருவி வெளிநாட்டி-லிருந்தோ வேற்று மொழியினரிடமிருந்தோ கடன் பெற்றதல்ல; யாழ் _ குழல் _ முழவு என்ற கருவிகளை தமிழன் கண்-டெடுத்ததற்கான ஆதாரம் (றிணீttமீக்ஷீஸீ ஸிவீரீலீt) போல தமிழின் சிறப்பு ‘ழ’கரம் வீற்றிருப்-பதைக் கொண்டு அறியலாம். ‘யா’ என்ற ஓரெழுத்து ஒரு சொல் கூறும் பொருள்: ‘கட்டுவது’ என்பது, சீர், தளையால் செய்யுள் கட்டப்படுவதால் ‘யாப்பு’ என்று அழைக்கப்-படுகிறது; நரம்பு, தசை, எலும்பில் உடல் கட்டப்படுவதால் உடலை ‘யாக்கை’ என்று அழைக்கிறோம். அதுபோலவே நரம்பால் கட்டப்படுவதால் ‘யாழ்’ என்றாயிற்று.
தமிழன் கண்ட அய்ந்து நிலங்களின் பெயரால் குறிஞ்சி யாழ், மருத யாழ், முல்லை யாழ், நெய்தல் யாழ், பாலை யாழ் என்று அழைக்கப்பட்டாலும், வடிவத்தைக் கொண்டு நால்வகை யாழ்கள் இருந்தன. பழந்தமிழ் இசை இலக்கண நூலான ‘பஞ்சமர’பின்படி இருபத்தொரு நரம்புகளையுடையது பேரியாழ்; பத்தொன்பது நரம்புகள் கொண்டது மகர யாழ்; பதினான்கு நரம்புகளையுடையது சகோடயாழ்; ஏழு நரம்புகளால் அமைந்தது செங்கோட்டு யாழ்; சங்க இலக்கியத்தில் ‘சகோடயாழ்’, ‘செங்கோட்டு யாழ்’ பற்றி எங்கேயும் குறிப்பிடப்-படவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் சிறப்பாகவே கூறப்படுகிறது. அதனால் கி.பி.இரண்டாம் நுற்றாண்டளவில் செங்-கோட்டு யாழ் தோன்றி இருக்கலாம். யாழின் வளைந்த கோடு நிமிர்த்தப்பட்ட வடிவமே ‘செங்கோட்டு யாழ்’ அமைப்பாகும்.
“செங்கோட்டு யாழ் என்பது… ஏழு தந்திகளுடன் அதாவது இசை நரம்புகள் நான்கும் பக்க நரம்புகள் மூன்றும் உடையதாய்த் தற்காலத்தில் நாம் வழங்கிவரும் வீணை என்பதாகத் தெரிகிறது’’ என்கிறார் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் (கர்ணாமிருதசாகரம் பக்.580.)
கோடு நிமிர்க்கப்பட்டதேயொழிய இன்றைய வீணையின் குடமோ, விரல் பலகையோ (திவீஸீரீமீக்ஷீ ஙிஷீணீக்ஷீபீ) அமைக்கப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
யாழின் பகுதிகள்: 18 அவையாவன:
1. பந்தல், 2. போர்வை, 3. யாப்பு, 4. வறுவாய், 5.நுண்துளை ஆணி, 6. கவைக்கடை, 7. உந்தி, 8. ஒற்றுறுப்பு, 9. ஆணி, 10 வணர், 11. மாடகம், 12. பண்மொழி நரம்பு, 13. கோடு, 14. திவவு, 15. புரிநரப்புக்கோல், 16. தந்திரிகரம், 17. தகைப்பு, 18. அய்ம்பத்தோருறுப்பு.
யாழின் ஒலிச் சிறப்பு: “தேவசாதி வாச்சியமாயும், சீவ வாச்சியமாயும் மிடற்றால் பாடிக்கொண்டே கருவியையும் இசைக்கவல்ல உடன் நிகழ்ச்சி வாச்சியமாயும், பண், பற்று (சுதி), பாணி என்ற மூன்றையும் ஒருங்கே இசைக்கவல்ல வாச்சியமாயும், பன்னிரு கேள்விப் பாலைகளையும் (12 சுரஸ்தானங்களையும்) எல்லாத் தானநிலை (ஸ்தாய்)களிலும் ஒருங்கே சுத்தமாய் நிலையாக அமையப்பெற்ற வாச்சியமாகவும், ஒவ்வொரு கேள்விக்கும் (சுரத்திற்கும்) உரிய பாலைகளின் (ஸ்தானங்களின்) அக நிலையையும், அவற்றின் புற நிலையையும் எளிதில் பயிலுவதற்கு ஏற்ற வசதியான ‘கருவி அமைப்பை’ யுடைய வாச்சியமாயும் உள்ள கருவி, யாழ் ஒன்றேயாகும். மேலும் யாழ் ஒன்றில் மாத்திரமே மூன்றரை இயக்கு (3 1/2 ஸ்தாய்)கள் வரை சுருதி சுத்தமாக இசைக்கக் கூடும்’’ என்கிறார் _ ஆ.அ.வரணகுண-பாண்டியன் (பாணர் கைவழி எனப்படும் யாழ் பக்.43)
யாழிசைத்தல்: எட்டு வகையாக வழியாக யாழ் இசைக்கப்பட்டது. அவையாவன: வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்கிற தொழில்முறை இருந்தது என்பதை சிலப்பதிகார கானல்வரியால் அறிகிறோம்.
பாடலுடன் யாழிசைத்தல்: குரல் ஒலியை (மிடற்றொலி) அதன் எதிரொலியாகக் கொண்டு வரக்கூடிய கருவிகள் நாகசுரமும், யாழும் மட்டுமே. அதனால்தானோ என்னவோ, பாணன் பாடிக்கொண்டே அதன் தன்மைகளை யாழால் இசைக்கவும் செய்தான். இதற்கான எ.கா. இலக்கியங்கள் வழியே காண்போம். சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் ஓரிடம், பாண்டியன் போருக்குச் சென்று விடுகிறான். அவன் நினைவில் வருத்தமுற்ற அரசியின் நிலையைப் போக்க ஆடல் மகளிர் பாடிக்-கொண்டே சீறியாழை வாசித்துக் கொண்டும் இருந்தனர் என்பதை,
“ஆடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
……….
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப’’
என்று வருகிறது.
“அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினாள் மயங்கி’’
என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. பண்ணை குரலால் பாடி மயங்கி, யாழிலும் இசைத்தாள் மாதவி. வாயில் எழும் சொல்லுக்கும் ஓசைக்கும் இணங்க யாழ்க் கருவியில் பாடல் இசைக்கப்பட்டன என்பதை அறிகிறோம். இதுபோலவே குரலால் பாடக்கூடிய வல்லின, மெல்லின, இடையின மற்றும் குறில், நெடில், ஒற்று எழுத்துக்களைக்-கூட யாழில் வாசிக்கப்பட்டதை சேக்கிழார் ‘பாடும் யாழ்’ எனச் சிறப்பித்துப் பாராட்டுகிறார். ‘தமிழ்க்கு உரித்து யாழ் எனக் கொள்க’ எனப் பஞ்சமரபும் கூறுகிறது. இதை எல்லாம் ஏன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால், பாடலை பாடிக்-கொண்டே நரம்புக் கருவியை இசைக்கும் வழக்கம் தனம்மா காலம்வரை இருந்த மரபைக் காட்டுவதற்காகத்தான்.
யாழ் எப்படி மறைந்தது? யாழ் மறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவைகளை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். இசை வரலாற்றில் எந்தக் கருவியும் உடனடியாக தோன்றியதில்லை; அழிந்தது-மில்லை. அதற்கான காலத்தை எடுத்துக்-கொண்டே வளர்ந்தும் மறைந்தும் இருக்கிறது. பரிணாம வளர்ச்சி பெற்று வேறு வடிவையும் எடுத்திருக்கிறது.
1. வில்யாழ் முதலில் தோன்றி பல்வேறு யாழ்களைத் தோற்றுவித்தது போலவே, யாழும் தன் உருவை மாற்றி பல்வேறு உருவங்களை அடைந்தது. ஆனால், அதன் தன்மை மாறவில்லை. தம்புரா, சுரமண்டலி, செங்கோட்டு-யாழ், கோட்டு வாத்யமாக, தன் வளைந்த உருவை மாற்றி நிமிர்ந்து வெவ்வேறு பெயர்களைத் தாங்கத் தொடங்கியது. யாழின் பரிணாம வளர்ச்சி அறிவியல்பூர்வமாக உருவானது.
2. யாழின் நரம்புகள் ஒவ்வொரு சுரத்திற்கும் ஒன்று என்ற அமைப்பில் ஏழு சுரங்களும் ஏழு தனி நரம்பாகக் கட்டப்பட்டது. அதனால் விட்டு விட்டு இசைக்கும் கருவியாக இருந்தது. தொடர்ந்திசைக்க முடியாதிருந்தது.
3. திருத்தருமபுரம் என்ற ஊருக்கு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருஞானசம்-பந்தரும் வருகின்றனர். அப்போது ஞானசம்-பந்தர் ‘மாதர் மடப்பிடியும்’ என்ற மேகராகக் குறிஞ்சிப் பண்ணை கமகத்துடன் பாடினார். அதனை யாழில் வாசிக்க முயன்று முடியாமல் போனதால், யாழை முறிக்கப் போகிறார் நீலகண்ட யாழ்ப்பாணர். அவரைத் தடுத்த ஞானசம்பந்தர், ‘வந்தவாறு வாசிப்பீர்’ என்றார். இந்நிகழ்ச்சி மூலம் தெரியவரும் கருத்து: யாழில் கமகங்களை வாசிக்க முடியாமல் போனதை தெளிவுபடுத்தியது. அது ஏனென்றால், யாழில் விரல் பலகையோ, மெட்டுக்களோ இல்லாததால்-தான், என்ற அறிவியல்பூர்வமான கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
4. “யாழின் நரம்புகள் ஒரு குறிப்பிட்ட பண்ணுக்குச் சுருதி சேர்க்கப்பட்டவை. எனவே அப்பண்ணும் அதன் திறங்களும் மட்டுமே ஒரு நேரத்தில் இசைக்க முடியும். வேறு பண் அல்லது திறம் இசைக்க வேண்டுமாயின், கிரக பேதம் செய்யவோ அல்லது யாழில் நரம்புகளை திரும்பவும் வாசிக்க விரும்பும் பண்ணின் சுரங்களுக்கேற்ப சுருதி மாற்றம் செய்யவோ வேண்டும். ஒவ்வொரு இசைக்கும் (சுரத்திற்கு) ஒவ்வொரு நரம்பு என்கிற யாழின் இவ்வமைப்பே இதற்குக் காரணம்’’ என்கிறார் இ.அங்கயற்கண்ணி. (இசையும் இலக்கியமும், பக்: 60)
மேலே கண்ட காரணங்கள் எல்லாம் கருவியின் தொழிற்நுட்பம் சார்ந்தவை. சமுதாயக் காரணிகளும் சில இருந்தன. அரசியற் காரணமும் இருந்தன அவைகளைக் காண்போம்.
5. சங்க கால இலக்கியங்கள் யாழைப் புகழ்ந்தேத்துவது போலவே பௌத்தர்களும் யாழுக்கு முதலிடம் கொடுத்து இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக இருப்பவை அமராவதி, சாஞ்சி, அஜந்தா, பர்கூத் முதலிய பௌத்த மதம் சார்ந்த இடங்களிலும், புத்த ஜாதகக் கதைகளிலும் யாழைப் பற்றிய வடிவங்கள் இருக்கின்றன. பௌத்தம் கி.பி.ஆறாம் நூற்றாண்டோடு இந்தியாவில் மறைந்தது. அதுபோலவே யாழுக்குரிய முதன்மையான இடம் பறிபோனது. பௌத்த மதம் அரசுகளின் ஆதரவினை இழந்தது. வேத மதத்தை அரசர்கள் பின்பற்றலானார்கள்.
6. யாழை வாசித்தவர்கள் பாணர்கள்; இவர்களே யாழின் முழு திறத்தையும் உணர்ந்து வாசித்து அதன் உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவியவர்கள். இவர்கள் மூலமே படித்தவர் முதல் பாமரர் வரை யாழிசையைத் துய்த்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் வடநாடு வரை தமிழிசை பரவியது. ‘செவ்வழி’ என்கிற பண்ணை யாழில் வாசித்து வடநாட்டில் பரப்பினர். அதற்கு வடமொழியில் ‘மார்க்க இசை’ என்றும் அதை உருவாக்கியவர்கள் ‘கந்தர்வர்கள்’ என்றும் அவர்கள் சொல்-கிறார்கள். அந்தக் கந்தர்வர்கள் _ பாணர்களே!
கந்தர்வர்களை தமிழர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்கிற கேள்வி எழலாம். அதற்கான பதில்: ‘யாழோர்’ என்ற சொல்லின் நேர்பொருளே ‘கந்தர்வர்கள்’. இவர்கள் வடநாட்டில் வாழ்ந்த இடம் காந்தாரம் ஆயிற்று. அவர்கள் மணம் முடிக்கும் வழக்கம் ‘கந்தர்வமணம்’. இது பழந்தமிழரின் களவொழுக்கமே ஆகும்.
பாணர் வடநாடு சென்று இசை பரப்பும் முன்பு அங்கிருந்த இசைக்கு ‘தேசி’ என்று பெயர். தேசி இசைக்க சரியான சுரங்களோ, இசை இலக்கணமோ இல்லை. மார்க்க இசையான பாணர் மரபிசை தேசி இசையுடன் கலந்த பின்பே முறையாக இலக்கண அமைப்பை வடநாட்டு இசை பெற்றது.
குப்தர்கள் காலத்தில் ‘இந்து சமய மறுமலர்ச்சி’ ஏற்பட்டது. அதன் பயனாக மனுதர்மமே அரசியல் சட்டமானது. அதன்படி சாதிபடிநிலை முறை கொண்டு வரப்பட்டது. பாணர்கள் இழிந்த சாதியாக்கப்பட்டனர். பாணரின் கருவியான யாழும், இழிசாதிக்குரிய அடையாளமானது. சமூகத்தின் உச்சியில் இருந்த யாழுக்கான மதிப்பும் குறைக்கப்பட்டது. உயர்குலத்தின் இசைக் கருவியாக ‘வீணை’ உருவானது.
7. யாழ் வடிவம் மறைந்ததேயொழிய, யாழ் மறையவில்லை. சீறியாழ் _ செங்கோட்டு யாழாகி _ கோட்டு வாத்தியமாக மலர்ந்து _ இன்றைய ‘வீணை’யாக தோற்றம் கொண்டிருக்கிறது.
8. யாழை ஏன் தமிழ்நாட்டு மேட்டுக் குடியினரும், வடநாட்டாரும் சேர்ந்து ஒழித்தார்கள் என்பதற்கான காரணங்களை மேலே கண்டோம். யாழ் இருந்தது. அதன் வழியாகத்தான் வீணை உருவானது என்ற அறிவியல்பூர்வமான கருத்தினை ஏன் இவர்கள் ஒப்புவதில்லை என்பதற்கான காரணம் முக்கியமானது. யாழைப் பற்றிய குறிப்பு-களையோ இலக்கணங்களையோ வடமொழி நூலில் காணமுடியாது. வீணையைப் பற்றி மட்டும்தான் இருக்கும். யாழ் இருந்தது என்று ஒப்புக்கொண்டால் அதன் மூலம் தமிழிசை வடநாடு வந்த வரலாற்றை ஒப்புக் கொள்ள வேண்டும்; இசை இலக்கணத்தை தமிழன் கண்டுபிடித்தான் என்பதை ஒப்புக் கொள்ள நேரும்; வடமொழியில் உள்ள அறிவியலுக்குப் புறம்பான பல ஆயிரம் பக்கங்கள் வீணடிக்கப்-பட்டிருப்பதை உலகம் புரிந்துகொள்ளும், என்பதால் இவை பற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை. எதிர்காலத்தில் உண்மையை அறிய விரும்பும் இளைஞர் சமுதாயம் உருவாகும் காலத்தில் இவையெல்லாம் மெய்ப்பிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
தமிழிசை மறுமலர்ச்சி: தமிழிசையில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இவருடைய ‘கர்ணாமிருத சாகரம்’ என்ற இசைப் பெருநூலே யாழாராய்ச்சியை தொடங்கி வைத்தது. யாழ் எப்படி இருந்தது என்கிற ஆர்வம் படித்த பெருமக்களைத் தொற்றிக் கொண்டது. பல அறிஞர் பெருமக்கள் யாழ்பற்றி ஆராய்ச்சியில் விருப்பமுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கலாயோகி ஆனந்த குமாரசாமி, அமராவதி சிற்பங்களைக் கண்டுவந்தபோது யாழைப் பார்த்துள்ளார். இவரே உலகுக்கு முதன் முதலில் ‘யாழ்’ உருவைக் கொண்டுவந்து காண்பித்தவர். (ஜிலீமீ ளிறீபீ மிஸீபீவீணீஸீ க்ஷிமீமீஸீணீ – 1931 யி.ளி.ஷி.லி.) இதன் பிறகு 1947ஆம் ஆண்டு அருட்திரு விபுலானந்தர் ‘யாழ்நூலை’ எழுதி தமிழிசைக்கு உயிரூட்டினார்.
தமிழகத்தில் யாழ் சிற்பம் இருக்கும் இடங்கள் கண்டு உலகுக்குத் தெரிவிக்கப்-பட்டது: திருமெய்யம், தாராசரம், திருஎருக்கத்தம்புலியூர் முதலிய ஊர்களில் யாழின் ஓர் வடிவமான ‘சகோடயாழ்’ வடிவைக் காணலாம். தமிழகத்தின் வில்யாழ், சிந்து-வெளி முத்திரையில் தீட்டப் பெற்றுள்ளது. சீறியாழையொத்த வடிவங்கள் சாஞ்சியிலும், சமுத்திரகுப்தன் பொறித்த காசிலும் காணப்படுகிறது.
சோழர் காலத்தில் மலர்ந்த சீவகசிந்தாமணி, பெரியபுராணம் முதலியவற்றில் யாழைப் பற்றிய விவரமான செய்திகள் எண்ணமுடியாத இடங்களில் கூறப்பட்டுள்ளன. கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் யாழைப் பற்றிய குறிப்புகளைக் காணோம். அந்த இடத்தை வீணை பற்றிக் கொண்டதுதான் அதற்குக் காரணம்.
வீணை வந்துவிட்டது. பழைய கருவியான யாழ் வேண்டாம் என்று தமிழன்-தான் ஒதுக்கினானே தவிர மேலை-நாட்டார் ஒதுக்கவில்லை. 1983ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டில் மாஸ்ட்ரிக்ட் என்ற நகரில் முதலாவது அனைத்துலக யாழ் மாநாடு நடந்துள்ளது. அதில் ஹாலந்து, ஜப்பான், தென்னமெரிக்கா, ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா, இஸ்ரேல், பிரேஸில், ஸ்பெயின், ருமேனியா, கனடா, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளிலிருந்து யாழ்ப்பாணரும், பாடினிகளும் கலந்து கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழன் யாழ் கருவியை இழந்தது பெரும் சோகம்.
கலைமகளும் வீணையும்: இந்தியாவில் ஒவ்வொரு கடவுளுடன் ஒவ்வொரு இசைக் கருவியும் இணைத்துப் பார்க்கப்பட்டு, செய்யப்பட்டு வருகிறது. சிவன்_டமருகம்; கண்ணன்_புல்லாங்குழல்; சரஸ்வதி_வீணை; இன்று நாம் பார்க்கும் வீணைக் கருவியின் வடிவம் கி.பி.15ஆம் நுற்றாண்டு சிற்பத்தில்தான் காணப்படுகிறது. அதற்கு முன்புவரை வடிக்கப்பட்ட சிற்பங்களில் வீணையில் சுரைக்காய்ப் பகுதி, மெட்டு, முறுக்காணி போன்றவை இருக்காது. கலைமகளுக்கு மற்றோர் பெயர் சிற்பஸ்ரீ. இச்சிற்பத்தில் மட்டுமே பண்டைய யாழைக் காணலாம். வரலாறு தெரியாத சிற்பிகள், இனி கலைமகளை உருவாக்கும்போது யாழுடன் படைக்க வேண்டும். சிற்பஸ்ரீ கையிலுள்ள இந்த ‘பரிவாதினி’ யாழ் செங்கோட்டு யாழுக்கும் முன்னுள்ள வடிவம்.
வீணையின் தோற்றமும் வளர்ச்சியும்: வீணை, செங்கோட்டு யாழிலிருந்து உருவானதை மேலே கண்ட கட்டுரையால் அறிந்து கொள்ளலாம்.
“கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்திய சங்கீதத்திலிருந்து யாழ்கள் மறையத் தொடங்கி ருத்ர வீணை, கின்னரி, சக்சபி, பின்னர் ஸிதார், ஸரோத், ஸரஸ்வதி வீணை ஆகிய வாத்தியங்கள் பிரபலமாயின என்பதை நாம் கவனிக்க வேண்டும்’’ என்கிறார் ‘இசைக் கருவிகள்’ என்ற நூலை எழுதிய பி.சைதன்ய தேவ். இதன் மூலம் 10ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை வீணை இல்லை என்பது தெளிவாகிறது.
யாழின் கோடு நிமிர்த்தப்பட்டு, ‘செங்-கோட்டு’ யாழானது. அந்த யாழில், வீணையின் உறுப்புக்களான விரல் பலகை, மெட்டுக்கள், சுரைக்காய், தந்திக்குப் பதில் நரம்பு போன்றவையே இருந்தன. பின்னர் ஒவ்வொரு உறுப்பும் வந்து சேர்ந்து இன்றைய வீணை உருவானது.
வீணை என்ற சொல்லின் பொருள்: ‘வீழ்’ என்ற வேர்ச்சொல் அடியாகப் பிறந்தது ‘வீணை’ என்னும் சொல் என்பார் தமிழிசை அறிஞர் வீ.ப.கா.சுந்தரம், கலை, மீன், வீணை போன்ற பல சொற்கள் தமிழிலிருந்து வடமொழி எடுத்துக்கொண்டு, கலா, மீனா, வீணா போன்ற சொற்களை உருவாக்கிக் கொண்டது. வடமொழியில் நரம்புக் கருவி-கள் அனைத்தையும் குறிக்க ‘வீணா’ என்ற சொல்லே வடமொழி நூல்களில் காணப்படுகிறது.
நாட்டுக்கூத்தில் ஒரு சாண் அளவுள்ள நாகசுரத்தின் சிறிய வடிவம் போன்ற இசைக்கருவி வாசிக்கப்படும். இதற்குப் பெயர் என்ன தெரியுமா? ‘முகவீணை’ முகத்தின் அளவே உள்ள இவ்வாத்தியத்தை முகவீணை என்றனர். இதற்கும் வீணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோலவே பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் வீணை என்பதற்கு பல பொருள்கள் உள்ளன.
‘வீணை’ என்ற சொல் சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் இல்லை. முதன்முதலாக ‘வீணை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் இளங்கோ-வடிகளே யாகும்.
“நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவளெனச் சாபம் பெற்ற’’
இந்த இடத்தில் வீணை என்பதற்கு வீணைக்கருவி என்பது பொருளல்ல; வீணை என்பதற்கு _ உடல் என்றே அடியார்க்கு நல்லார் பொருள் கூறி இருக்கிறார். மற்றோர் இடத்தில் ‘நாரதன் வீணை’ என்று யாழைக் குறிப்பிடுகிறார். யாழ் கருவியை, வீணை என்ற பொருளில் மணிமேகலை, பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்கள் சுட்டுகின்றன.
சீவக சிந்தாமணியில் பல இடங்களில் வீணை என்பதற்கு சாரீர வீணை என்று குரல் மூலம் இசைக்கப்படும் மிடற்றொலி என பொருள் தோன்ற பல இடங்களில் வருகிறது.
எடுத்துக்காட்டாக,
“விருந்தாக யாழ் பண்ணி வீணைதான் தோற்பான்’’ (சிந்.730)
இதற்கு உரையாசிரியர் “முதலில் இனிமை பெற யாழை இசைப்பித்துப் பின்பு தன் மிடற்றாலும் யாழாலும் பாடினான்’’ என்று பொருள் கூறியுள்ளார். மேலும் நச்சினார்க்கினியர், வீணை என்ற சொல்லுக்கு தாளத்தோடு கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு என்று 411ஆவது சீவக சிந்தாமணி செய்யுளுக்கு உரை செய்துள்ளார் மற்றோரிடத்தில்.
“வெள்ளிலை வேற்கணானைச் சீவகன் வீணை வென்றான்’’ (சிந்.741)
பாடலுக்கு, ‘சீவகன் தத்தையை யாழும், பாட்டும் வென்றான்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆதலால் சீவக சிந்தாமணி எனும் காப்பியம் எழுந்த காலமாகிய எட்டாம் நூற்றாண்டில் வீணை என்பதற்கு தாளந் தவறாத கண்டத்தாலும் (குரல்) யாழாலும் பிறக்கும் பாட்டு என்றே பொருள் கொள்ளப்பட்டது.
கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை வீணை என்ற சொல் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதற்கென தனிப்பட்ட ஓர் கருவி இருந்ததில்லை என்பதை உணர்கிறோம்.
தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தக் காலம் கி.பி.550 முதல் கி.பி.750 வரையே ஆழ்வார்களும், தேவார நால்வரும் பாடிய காலம். இவர்களின் பல பாடல்களில் வீணை என்ற சொல் பயிலப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக,
‘பண்ணோடு யாழ்வீணை பயின்றாய் போற்றி’ அப்பர்
‘மாசில் வீணையும்’ ’’
‘மிக நல்ல வீணை தடவி’ ’’
‘எம் இறை நல் வீணை தடவி’ ’’
‘அறை கலந்த குழல் மொந்தை வீணையாழும்’ ’’
‘அரன் கையது வீணையே’ ஞானசம்பந்தர்
‘தகைமலி தண்டு… வீணை முரல’ ’’
‘வீணை விடங்காக வீதிவிடை ஏறுவீர்’
சுந்தரர்
‘இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்’ மாணிக்கவாசகர் யாழும் வீணையும் ஒரே காலத்தில் இருந்ததில்லை, தேவார காலத்திலும் வீணை என்பதற்கு யாழ் என்றே பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது.
யாழ்வீணை என்று சேர்ந்து வருகிறபோது, யாழ் வாசித்துக் கொண்டு பாடப்படும் பாடலையே குறிக்கிறது. இன்னிசை வீணையர் என்று மணிவாசகரால் குறிப்பிடப்படுபவர்கள் ‘தேவார கோஷ்டியைத்தான்’. வீணை வாசிப்பவர்களை அல்ல. சிவபெருமானுக்கு, யாழப்பர். யாழினும் மென்மொழிநாதர், யாய்முறிநாதர் முதலிய நல்ல பெயர்கள் தேவார காலத்தில் இருந்திருக்கிறது. சோழர் காலத்திற்கு பின்னர் தமிழகத்தில் நடந்த (ஷிணீஸீsநீக்ஷீவீtவீsணீtவீஷீஸீ) வடமொழிமயமாக்கக் காலத்தில் யாழப்பரும் _ வீணாதர தட்சிணாமூர்த்தியானார். இந்தக் காலத்தில் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. ஊர்ப் பெயரையே மாற்றினார்கள். எ.கா.
வேட்டி _ வேஷ்டியானது (உடை)
யாழ் _ வீணையானது (இசைக்கருவி)
முருகன் _ சுப்பிரமணியன் ஆனான் (பெயர்)
மயிலாடுதுறை _ மாயூரமானது (ஊர்)
தமிழரசர்கள் இல்லாத காலத்தில்தான் இந்த வடமொழி மயமாக்கம் நடந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு இளிச்சவாயான் ஆண்ட காலமாக இருந்திருக்கலாம்.
Leave a Reply