சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி நாயகம்

அக்டோபர் 01-15

 

 

 

அய்யா அவர்களது அடிநாள் தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லை மாவட்டக் குலசேகரன் பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரி-லேயே கல்வி கற்றவர்.

சென்னைக்கு வந்து பிட்.டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்திவந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பற்றுமேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சிப் படைக்கப் பாடுபடும் சுயமரி-யாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.

தம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்வி பெற்று, கூட்டுறவுத்துறை உதவிப் பதிவாளர்ப் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்குப் பயன்படுத்தி, நம் இன மக்களுக்கு என்னென்னவெல்லாம், எப்படி-யெப்படியெல்லாம் செய்யலாமோ அவற்றைச் செய்து காட்டினார். அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநொடியே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துக்-கொண்டார். அய்யா கருத்துக்களைச் சொல்லி-விட்டால், நாயகம் அதை விளக்கிச் சொல்வார்; அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேர்த்து-விடுவார்.

சுயமரியாதை மணங்கள் அவரால் நிறைய நடத்தப்பெற்றன. பல நிகழ்ச்சிகளில் கலந்து-கொண்டு இயக்கக் கொள்கைகட்கு அருமை-யான விளக்கங்கள் கொடுத்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் ‘சர்வாதிகாரி’-யாகப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்றுக் கீர்த்தியை அடைந்தார். இப்போரில் கைதாகி 18 மாதச் சிறை வாழ்க்கைப்பட்டு, தம் உடல் நலம் பெரும் கேடுற்றும் இயக்கப் பிணைப்பைத் தளர்த்திக்கொள்ள நாயகம் முனைந்தது கிடையாது.

மூடநம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமைப் பேணுவது, பின்தங்கி-விட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக் கூடங்களை அமைத்து நம் இன மக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.
அய்யா-_ மணியம்மையார் திருமணம் என்ற எதிர்காலம் பற்றிய தொலைநோக்குள்ள ஏற்பாடு திட்டமிடப்பட்டபோது, அந்தத் திருமணப் பதிவு நடத்தப்படத் தேர்ந்தெடுக்கப்-பட்ட இடம் நாயகம் அவர்களின் இல்லம்தான்.

தம் வாழ்நாள் முழுதும் பிற்படுத்தப்பட்ட _ ஒடுக்கப்பட்ட மக்கட்காகவே உழைத்து வந்த நாயகம் 13.12.1944இல் இயற்கை எய்தினார். அவரது உருவச்சிலையொன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள ‘தியாகராயர் உயர்நிலைப்பள்ளி’யின் முன்னால் நிறுவப்-பட்டுள்ளது.

அவர் மறைந்தபோது ‘குடிஅரசு’ ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய துணைத் தலையங்கம்.

“நம் அன்பர் ஆருயிர்த் தோழர் சி.டி.நாயகம் முடிவெய்திவிட்டார். இனி அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இல்லை என்கின்ற நிலையில், உண்மையாய் உழைத்து வந்த உத்தமர் மறைந்தார்.எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர், பேசுவதுபோல் நடப்பவர்.
உண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பெரியார் முடிவெய்தினது நமக்கு மாபெரும் நட்டமென்றே சொல்லுவோம். அதுவும் பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லு-வோம்.

அவரது குடும்பத்தார் பகுத்தறிவுவாதிகள், அவர்களுக்கு எவருடைய ஆறுதலும் தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.

தமிழ் மக்கள் ஆங்காங்கு கூட்டம்கூட்டி அவர்களது அனுதாபத்தை அக்குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நாயகம் அய்யா அவர்களைப் போலவே இருந்து உழைத்துவந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் தோழர் சிதம்பரம் அவர்கள் அய்யா அவர்கள் விட்டுப்போன காரியங்களை பின்தொடர்வார்கள் என்று உறுதி நமக்கு உண்டு.

’’ ‘குடிஅரசு’ _ 16.12.1944  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *