நூல்: புராணம்
ஆசிரியர்: தந்தை பெரியார்
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600 007.
விலை: ரூ.50/- பக்கங்கள்: 120
வாமனாவதாரம்
இந்த வாமனாவதாரக் கதையை உபதேச காண்டத்தில் சொல்லியிருக்கிறபடி எடுத்துக் கொண்டு ஆராய்வோம். சோழநாட்டில் திருமறைக்காடு என்னும் ஸ்தலத்தில் வசிக்கும் சிவன், ஞானம் பழுத்த நாயகியார் என்னும் திருநாமம் படைத்த உமாதேவியாரோடு ஒரு நாள் இராத்திரி படுத்துக்கொண்டிருந்தாராம்! ஒரு நாளைக்கு மூன்று வேளை பிரசாதம் சாப்பிடுகிற சுவாமிக்கு படுக்கையும் தூக்கமும் அவசியமில்லாமலிருக்குமா? பிரசாதம் உண்ட இளைப்புத் தீர சிவன் தன் மனைவியோடு சயனித்துக் கொண்டிருக்கும்போது அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கு ஒளி குன்றி எரிந்தததாம்! அப்போது சிவன் “இந்த விளக்கின் திரியைத் தூண்டி தீபத்தை நன்றாக எரியச் செய்பவர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு மூன்று லோகங்களையும் கொடுத்து அரசாளச் செய்வேன்’’ என்று சொன்னாராம்! அதைக்கேட்ட உமாதேவியார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து “விளக்கின் திரியைத் தூண்டுவோர் இங்கு யாரேனும் உளரோ?’’ என்று கேட்டாராம். அந்த சமயத்தில் ஒரு எலி ஓடிவந்து விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டுத் திரும்பும்போது அந்த எலியின் வால் திரியில்பட்டுத் தூண்டிவிட, விளக்கு பிரகாசமாய் எரிந்ததாம். அப்போது சிவன் சந்தோஷப்பட்டு அந்த எலியைப் பார்த்து “நீ மூவுலகங்களையும் அரசாட்சி செய்வாயாக’’ என்று சொல்ல, அந்த எலி அசுர குலத்தில் மாவலி என்னும் பெயருள்ள அரசனாகப் பிறந்ததாம்! இதுவரையிலும் இதிலுள்ள ஆபாசத்தைக் கவனிப்போம்.
சூரியனையும், சந்திரனையும் கண்களாக உடைய சிவனுக்கு வெளிச்சம் கொடுக்க விளக்கு வேறு வேண்டுமா? விளக்கு அவியும் சமயத்தில் இருந்தால் இவராவது இவர் மனைவியாவது திரியைத் தூண்டி விட்டிருக்கலாம். அப்படித் தூண்டுவது தமது கடவுள் தன்மைக்குப் பொருந்தாதென்றால் தன் பூத கணங்களில் ஒன்றை அல்லது தாதிப்பெண்களில் ஒருத்தியைக் கூப்பிட்டு விளக்கைச் சரியாக எரியச் செய்திருக்கலாம். நினைத்ததை நினைத்தபடி செய்யக்கூடிய சிவபெருமான் ஒரு எலெக்டிரிக் விளக்கை உண்டாக்கிக் கொள்ளாதது அவருடைய சக்தியின்மையை விளக்குகிறது. அன்றியும் கடவுளாகிய சிவபெருமான் குடியிருக்கும் இடத்தில் எலிகளும் குடியிருக்கின்றன? எலியுள்ள இடத்தில் குடியிருந்தால் பிளேக் உண்டாகும் என்பது இந்த சிவனுக்குத் தெரியாது போலும்! இருக்கட்டும் இக்கதையைத் தொடர்வோம்.
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அந்த எலி பெரியவனாக வளர்ந்ததும் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் என்னும் மூன்று உலகங்களையும் அரசாண்டானாம். இவன் விண்ணுலகமாகிய தேவ லோகத்தையும் அரசு செய்தபடியால் தேவேந்திரன் முதலிய தேவர்களும் இந்த அரசனுக்கு அடங்கி இவன் சொற்படி நடந்துகொண்டார்கள். ஆனால், இவன் தேவர்கள், மனிதர்கள் முதலிய எல்லோருக்கும் அவரவர்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாராளமாகக் கொடுத்து, ஒரு குறையும் வராமல் காப்பாற்றிவந்தான். தானதருமங்களைச் செய்து நீதியோடு அரசாண்டு வந்தான். இந்த மாவலி அரசனைக் கொடியவன் என்று சொல்வதற்கு ஒரு குற்றமும் இவனிடத்தில் காணப்படவில்லை. புராணங்-களும் இவன் மேல் ஒரு குற்றத்தையும் கற்பிக்கவில்லை. இப்படியிருக்கும்போது, இந்திரனுடைய தகப்பனாராகிய காசிப முனிவர் விஷ்ணுவை நோக்கித் தவமிருந்து, “இந்திர-லோகத்தை மாவலி அரசாட்சி செய்கிறான்; அவனைக் கொல்வதற்காக நீர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்து அவனை ஒழிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்கிறார். திருமால் அதற்குச் சமம்தித்து காசிப முனிவருக்குப் பிள்ளையாகப் பிறக்கிறார். இந்தப் பிள்ளைதான் வாமனாவதாரம்.
இங்கு இதனை ஆராய்வோம். காசிப முனிவர் ஒரு பார்ப்பனன். இந்திரன் அவருடைய பிள்ளை என்றால், தேவர்களென்று சொல்லப்-படுவோர் பார்ப்பனர்கள் என்று ஏற்படுகிறது. தேவர்களாகிய சுரர்களுக்கு நேர் விரோதிகள் அசுரர்கள். இவர்கள் பார்ப்பனர் அல்லாதாரா-யிருக்க வேண்டும். எப்படியென்றால், சுரர்கள் அல்லது தேவர்கள் பார்ப்பனகளாயிருந்தால், அசுரர்கள் அல்லது தேவர்கள் அல்லாதவர்கள் பார்ப்பனர் அல்லாதவராயிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. விஷ்ணு இந்திரனுக்குத் தம்பியாகப் பிறக்கிறார். அதாவது காசிபருக்குப் பிள்ளையாகப் பிறக்கிறார். அதுவும் தந்திரமுள்ள குள்ளப் பார்ப்பானாகப் பிறக்கிறார். இதனால் விஷ்ணு எப்படிப்-பட்டவர் என்பது விளங்கும். யாருக்கும் ஒரு துன்பமும் செய்யாமல் நன்மையையே செய்து கொண்டிருக்கும் மாவலியைக் கொல்வதற்காக விஷ்ணு அவதாரம் செய்தாரென்றால் “துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலகர்’’ என்று அவரை எவ்விதம் சொல்லக்கூடும்? அதற்கு மாறாக “சிஷ்ட நிக்கிரக துஷ்ட பரிபாலகர்’’ என்றுதான் இக்கதையைப் படிக்கும் அறிவாளிகள் சொல்லுவார்கள். அன்றியும் மும்மூர்த்திகளில் ஒருவர் கொடுத்த வரத்தை மற்றொருவர் அழிப்பது பொருத்தமாகுமா? இப்படிச் செய்வது அவர்களுக்குள் ஒற்றுமையின்மையைக் காட்டுகிறது அல்லவா?
உதாரணமாக நமது அரசாங்கத்தில் மூன்று மந்திரிகள் இருக்கிறார்கள்; முதல் மந்திரி ஒரு சட்டத்தை ஏற்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அச்சட்டத்தை உடைப்பதற்காக மற்றொரு மந்திரி முயற்சிக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது அந்த அரசாங்கத்தின் நிலை என்னவாகும்? அந்த மந்திரியைப் பற்றி ஜனங்கள்தான் என்ன நினைக்க மாட்டார்கள்? மனிதர்களுக்கே இந்த நியாயம் தெரிந்திருக்க தேவர்களுக்குத் தலைவராகிய மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே, தருமப் பிரபுவும், கொடை வள்ளலும் செங்கோலனுமாகிய மாவலியை, அதுவும் சிவனுடைய வரத்தால் மூன்று லோகங்களையும் அரசாள்வதற்கென்று பிறந்த அரசனைக் கொல்வதற்காகப் பிறந்தார் என்றால் அவருடைய அயோக்கியத்தனத்தை, அநியாயத்தை, பொறுப்பற்ற தன்மையை என்னென்று சொல்வது? இவரும் ஒரு கடவுளா? நல்லவரைக் கொல்வதுதான் கடவுள் லட்சணமா? இப்படிப்பட்ட அயோக்கியர்-களைக் கடவுள் என்று கோயில் கட்டி பூசிப்பதும், கும்பிடுவதும் அறிவுடைமை-யாகுமா? அந்தோ அநியாயம்! அநியாயம்! காசிபர் என்னும் பார்ப்பனனுக்குப் பிள்ளையாய் பிறந்த விஷ்ணு எல்லா சாஸ்திரங்களையும் தாமாகவே தெரிந்துகொள்ளுகிறாரா? நிற்க, அவர் இவ்விதம் பெரியவனாக வளர்கிறார். ஆனால், வாமனனாக குள்ளப் பார்ப்பானாகத்-தான் இருக்கிறார். அக்காலத்தில் மாவலிச்சக்கிர-வர்த்தி ஒரு யாகம் செய்துவிட்டு எல்லோருக்கும் தான தருமங்களைக் குறை-வில்லாமல் கொடுக்கிறார். இதையறிந்த குள்ளப் பார்ப்பனனாகிய விஷ்ணு, தன் ஜாதி வழக்கப்படி பிச்சை பெறுவதற்காக மாவலிச்சக்கிரவர்த்தியிடம் செல்கிறார். மாவலி அவரை வரவேற்று உமக்கு என்ன வேண்டு-மென்று கேட்கிறார். குள்ளப் பார்ப்பனன் “நான் இருந்து தவம் செய்வதற்காக மூன்று அடி மண் வேண்டும்’’ என்று கேட்கிறார். மாவலியும் கொடுக்க உடன்படுகிறார். அசுரகுருவாகிய சுக்கிராச்சாரியார், இந்தப் பார்ப்பனன் விஷ்ணு அவதாரம். அவனுக்குத் தானம் செய்யாதே என்று சொல்லித் தடுக்கிறார். அதையும் கேளாமல் மாவலி மூன்றடி மண் தானம் செய்கிறான். உடனே விஷ்ணு ஆகாயம் அளவு உயர்ந்து தமது நீண்ட கால்களில் ஒன்றினால் பூமியை அளக்கிறார். மற்றொரு காலினால் தேவலோகத்தை அளக்கிறார். மூன்றாவது அடி வைத்தளப்பதற்கு இடம் இல்லையாம். ஆகையால், அவர் தமது காலை மாவலியின் தலைமேல் வைத்து அழுத்தினாராம்! அம்மட்டும் நில்லாமல் விஷ்ணு மிகவும் கோபமடைந்தாராம். கோபங்கொண்டு, மாவலிச்சக்கரவர்த்தியை சிறைப்படுத்தி விட்டு உலகங்களை யெல்லாம் பிளந்து விடுவதாகச் சொல்லி தமக்குச் சமாமானவர் யாருமில்லை-யென்று சொல்லிக் கர்வப்பட்டாராம்.
பிச்சை வாங்கச் சென்ற குள்ளப் பார்ப்பானுக்கு மாவலி அன்புடன் தானம் செய்கிறான். ஆனால், உபகாரம் செய்வதற்கு அபகாரம் செய்கிறவனாகிய விஷ்ணு நன்றி கெட்டவனாய் மாவலியை அழிக்கப் பெரிய உருவம் எடுக்கிறான். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பாவி யாரேனும் உண்டா? மிருகங்-களில் கேவலமாகிய நாய்கூட நன்றி செய்தவரை நேசிக்கிறதே? செய்த நன்றியறிதல் என்னும் சிறந்த குணம் விஷ்ணுவுக்கு இல்லை போலும்! அன்றியும் மாவலி எத்தனையோ ஏழைகளுக்குத் தானம் செய்கிறவன். நீதியோடு அரசாட்சி செய்கிறவன். அவன் மேல் ஒரு சிறு குற்றமும் இல்லை. இத்தகைய மாசற்ற அரசனை விஷ்ணு ஒழிக்க எண்ணியது விஷ்ணுவின் இழித் தன்மையை விளக்குகிறது. அன்றியும் விஷ்ணு ஒரு அடியால் மண்ணுலகத்தையும், இன்னொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்துவிட்டு இன்னொரு அடி அளப்பதற்கு இடமில்லை-யென்று சொல்லி தன் காலை அவன் தலையில் வைத்து அழுத்தியது விஷ்ணுவின் அயோக்கி-யத்தனத்தை தெளிவாகத் தெரிவிக்கிறது. எப்படியென்றால், மாவலி மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள லோகம் என்னும் மூன்று அண்டங்களை ஆட்சி செய்கிறவன். மூன்று உலகங்களை ஆளும்படி யாகத்தான் சிவனும் அவனுக்கு வரங் கொடுத்திருக்கிறார். அவனும் அவ்விதமே மூன்று உலகங்களையும் ஆண்டு வருகிறான். அப்படியிருக்க விஸ்வ ரூபங்கொண்ட விஷ்ணு மண்ணையும் விண்ணையும் மாத்திரம் அளந்துவிட்டு பாதாளத்தையும் அளக்காமல் இடமில்லை-யென்று சொல்லியது பொருத்தமாகத் தோன்றவில்லை. இரண்டு உலகங்களை அளக்கத் தெரிந்த விஷ்ணுவுக்குப் பாதாள உலகத்தை அளக்கத் தெரியாமற்போன காரணம் யாதாயிருக்கக் கூடும்? தன் காலை மாவலியின் தலையில் வைத்து அவனை அவமானப் படுத்த வேண்டுமென்னும் எண்ணத்தோடுதான் அவர் அளக்க இடமில்லையென்று வஞ்சமாகப் பொய் சொல்லியிருக்க வேண்டும். இவ்வளவும் செய்தது போதாது என்று அவனைச் சிறையில் வைக்கிறார். மேலும், காரணம் இல்லாமல் அனாவசியமாகக் கோபித்துக் கொள்கிறார். தன்னைவிடப் பெரியவர் இல்லை என்றும் கர்வப்படுகிறார். இவர் உண்மையில் கடவுளாயிருந்தால் கோபம், கர்வம் முதலிய தீய குணங்கள் இவருக்கு உண்டாகாது.
மாவலிச் சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்த-பிறகு விஷ்ணு விண்ணுலகத்தை இந்திரனுக்குக் கொடுக்கிறார். இவர் இப்படிச் செய்தது அநியாயமல்லவா? உலகத்தில் பலசாலியான அரசன் மற்ற அரசர்களை அடக்கி ஆள்வது வழக்கம். அந்த முறைப்படி மாவலி இந்திரனை வென்று விண்ணுலகத்தை ஆள்கிறான். அதுவும் செங்கோல் செலுத்திக் குடிகளுக்குத் துன்பம் இல்லாமலும், தானதருமங்கள் செய்து-கொண்டும் அரசாள்கிறான். இவ்விதம் அரசாளும் சக்தியைச் சிவபெருமானே கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க இந்த செங்கோல் அரசனைக் கடவுள் எனப்படும் விஷ்ணு சிறையில் வைத்தது அநியாயம். இத்தகைய அநியாய செய்கையுடைய விஷ்ணுவைத் திரிவிக்கிரமன் என்றும், உலகளந்த பெருமாள் என்றும்; நிலங்கடந்த நெடுமுடியண்ணல் என்றும் புகழ்ந்து அவருக்காகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து திருவிழா நடத்துவது பொருத்தமானதா என்று கேட்கிறோம்.
தேவர்களுக்காகப் பரிந்துவந்து மாவலிச் சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்த விஷ்ணு, அகங்காரம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் ஒருவரும் இல்லையென்று எண்ணி கர்வப்பட்டு எல்லா அண்டங்களையும் பிளந்துவிடுவேன் என்று சொல்லி ஆரவாரித்தாராம். அப்போது தேவர்கள் எல்லோரும் பயந்து கயிலை மலைக்குச் சென்று விஷ்ணுவின் அட்ட-காசத்தைப் பற்றி சிவனிடம் முறையிட்டுக் கொண்டார்களாம். அப்போது சிவன், வயிரவக் கடவுளை அனுப்ப அவர் போய் தண்டா-யுதத்தைச் சுழற்றி வாமனனாகிய விஷ்ணுவின் மார்பில் ஓங்கி அடித்தாராம். விஷ்ணு மார்பு பிளவுபட்டுக் கீழே விழுந்துவிட வயிரவர் விஷ்ணுவின் கருமையான தோலை உரித்-தெடுத்துக் கொண்டதோடு முதுகின் தண்டெலும்பையும் தமது கையில் பிடித்துக் கொண்டு கயிலாயஞ் சென்றார். அதன் பிறகு விஷ்ணு சிவனைத் துதித்து ஆணவச் செருக்கு நீங்கினாராம்.
இந்த ஆபாசத்தை என்னென்று சொல்வது? பார்ப்பனனாகப் பிறந்த விஷ்ணுவுக்கு ஏன் அகங்காரம் வந்தது? அண்டங்களை அழித்து விடுகிறேன் என்று பயப்படுத்துகிறார். இப்படிச் செய்வது அவருக்கு ஒழுங்கா? அவர்களுக்கும் கடவுள் அல்லவா? காரணமின்றிக் குடிவெறி கொண்டவன் போலப் பேசுவதன் காரண-மென்ன? பார்ப்பனப் பிள்ளையாகப் பிறந்த இவருக்கு ரஜோகுணம் எப்படி உண்டாயிற்று? மது மாமிசம் சாப்பிட்டாரா? அப்படித்தான் இருக்க வேண்டும். அக்காலத்தில் யாகத்தில் பார்ப்பனர்கள் ஆட்டு மாமிசம், மாட்டு மாமிசங்களைச் சாப்பிட்டு, சோம பானம் என்னும் சாராயத்தையும் குடிப்பது வழக்கம். அப்படிச் சாப்பிட்டிருந்தாலும் கடவுளாகிய இவருக்குப் போதை ஏற்பட்டது விந்தையாகத் தானிருக்கிறது. நிற்க. இவர் யாருக்காகப் பரிந்து கொண்டு அவதாரம் செய்தாரோ! அந்த ஜனங்களே, அதாவது தேவர்களே, நன்றி கெட்டவர்களாய் இவரைக் கொல்ல வேண்டுமென்று சிவனிடம் முறையிடுகிறார்கள். இந்தத் தேவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? பிறகு சிவன் வயிரவரை அனுப்ப அவர் இவரைக் கொல்கிறார். என்னே கடவுள்களின் மகிமை! பிறகு விஷ்ணு சுய உருவோடு சிவனைக் கும்பிட்டு தமது ஆணவத்தை நீக்கிக் கொள்கிறார். ஆனால், மூன்று லோகங்களையும் அரசாள வேண்டு-மென்ற மாவலிச் சக்கிரவர்த்திக்குச் சிவன் அளித்த வரத்தை விஷ்ணு நிராகரித்து விட்டதற்காக சிவன் யாதொரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளாதது வியப்பினும் வியப்பே! பாவம் அந்த எலி மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறக்காமலிருந்தால் சுகமாகத் தன் பெண்டாட்டி பிள்ளைகளோடு தன் வளையில் வசித்துக் கொண்டிருக்கும். ஆனால், சிவன் கிருபை-யினாலும், விஷ்ணுவின் கருணை-யினாலும் பாவம் அந்த எலி அரசனாகப் பிறந்து சிறைச்சாலையில் கஷ்டப்பட நேர்ந்தது. ஒரு சிறு எலி விஷயத்தில் சிவன், விஷ்ணு, தேவர்கள் ஆகிய இவர்களெல்லாம் இவ்வளவு தூரம் திருவிளையாடல் செய்ததும் இந்த எலியின் கதையை இவ்வளவு தூரம் அக்கரை எடுத்துக் கொண்டு புராணங்களில் பிரமாதமாகப் பாடி வைத்ததும், இந்த அண்டப் புளுகு, ஆகாயப் புளுகு கதைகளை உண்மையென்று நம்பி உலகளந்த பெருமானுக்குக் கோயில் கட்டிவைத்துப் பூஜை செய்து புண்ணியம் பெறுவதும் வெகு விந்தையாகத்தான் இருக்கிறது. ஆனால் நல்ல தங்காள் கதை, டம்பாச்சாரி கதை, சதாரம் கதைகளைவிட இந்த வாமனா-வதாரக் கதை ஒரு விதத்திலும் சிறந்ததாக மாட்டாது. ஏனென்றால், அக்கதைகளில் எல்லாம் ஏதாகிலும் ஒரு நல்ல நீதி அடங்கியிருப்பதைக் காணலாம். ஆனால், ரிஷிகள் எழுதி வைத்த இந்தக் கட்டுக் கதையாகிய வாமனாவதாரக் கதையில் மனிதர் கொள்ள வேண்டிய ஒரு நீதியும் இல்லை என்பதே நமது துணிவு.
இந்த ஆபாசமான அநியாயக் கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்குவதைப் பார்க்கிலும் சயன்ஸ் போன்ற புத்தகங்களைப் படித்து முன்னேற்றமடைவதே அறிவுடைமை-யாகும். நமது பெரியோர்கள் புராணங்களையே நம்பி மூடநம்பிக்கையுடையவர்களாய்த் தங்களையும் தங்கள் நாட்டையும் அடிமைத்-தனத்-திற்கு ஆளாக்கிக் கொண்டார்கள். நாமாவது இனி வரப்போகிற நமது எதிர்காலச் சந்ததியாருக்குச் சுதந்திரத்தையும், சுயமரியாதை-யையும் நிலைநாட்டிக் கொடுக்க வேண்டியது நமது கடமையல்லவா? சுதந்தரமும், சுயமரி-யாதையும் பெற வேண்டுமானால் கட்டுக்கதை-களாகிய புராணங்களையும் மூடப் பழக்கங்-களையும் பயங்கொள்ளித் தனமில்லாமல் தைரியமாக ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழிக்காத வரையில் நம் இனத்திற்கு நன்மை இல்லை. அதற்கு அறியாமை அழிய வேண்டும்! பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்! புராணங்கள் புதையுண்டு போக வேண்டும்! அறிவு வளர வேண்டும். சுயமரியாதை எண்ணங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்ற வேண்டும்!