மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். -இனத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், கருத்தாலும். ஒருதாய் மக்கள் என்றாலும் ஒட்டிப் பிறந்தவர்கள் என்றாலும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனி உடல், மூளை, சிந்தனை. எனவே, ஒருவருடைய கருத்திற்கும் மற்றவருடைய எண்ணத்திற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.
உண்மையில் முரண்பாடு என்பது இயல்பானதும், ஆரோக்கியமான உறவு முறைகளைக் கடைபிடிக்க வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுமாகும். ஆனால், முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும். அதை மரியாதைக்குரிய முறையிலும் நேர்மறையாகவும் கையாளும்போது வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருக்கும். மேலும், இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முரண்பாடுகளைக் கையாண்டு முடிவுக்குக் கொண்டுவரும் திறன்களைத் தெரிந்துகொண்டால் எந்தவொரு மாற்றுக் கருத்துகளையும் தைரியமாக எதிர்கொண்டு தனி வாழ்க்கையிலும், தொழில் சூழலிலும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சி காணலாம்.
உறவுகளில் ஏற்படும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்
மாறுபாட்டிலிருந்து முரண்பாடு தோன்றுகிறது. ஒருவருடைய மதிப்பீடுகளை, நோக்கங்களை, பார்வையை, யோசனைகளை, விருப்பங்களை, மற்றவர் மறுக்கும்போது முரண்பாடு தோன்றுகிறது. சிலநேரம் இது பெரிதாகத் தோன்றுவதில்லை. ஆனால், முரண்பாடுகள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போது தன்னுடைய பாதுகாப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் தனித்தன்மைக்கும் ஆபத்து என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் பிறரால்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மதிப்பளிக்கப்பட வேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனி வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இணக்கமான உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொள்வது சவாலாக இருக்கிறது.
சாதாரணமாக நம் வீட்டில் தத்தித் தவழ்ந்து நடைபோடும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே நடைபெறும் போராட்டம் போன்றதுதான் இது. குழந்தை தெருவிற்கு வந்து ஓடி விளையாட விரும்புகிறது. ஆனால், பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பைக் கருதி அதைத் தடை செய்கிறார்கள். குழந்தை அடம் பிடிக்கிறது. தடையும், தடை மீறலும் பூசலுக்குக் காரணமாகிறது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களையும் கருத்துகளையும் மதித்து ஏற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதலில் ஏற்படும் பின்னடைவு இருவருக்கிடையே இடைவெளியை ஏற்படுத்துவதோடு வீண் விவாதங்களில் ஈடுபட்டு பிரிவை உண்டாக்குகிறது. வேலை செய்யுமிடங்களில் ஏற்படும் முரண்பாடு தொழில் தகராறுகளை (நீதிமன்ற வழக்கு) ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் மற்றவரின் கருத்துகளை நடுநிலைமையோடு ஆய்ந்து புரிந்துகொண்டால் பிரச்சினைகளைத் தீர்த்து கூட்டு முயற்சியோடு உறவுகளைப் பலப்படுத்தும் வழி திறக்கும்.
- முரண்பாடு என்பது மறுதலித்தல் என்பதன் முற்றிய வடிவமாகும். அதாவது, மாற்றுக் கருத்துள்ள இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அச்சுறுத்தும் நிலையாகும்.
- முரண்பாட்டை முளையிலேயே கிள்ளாவிட்டால் புரையோடிய புண்ணாகிவிடும்.
- முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு தீர்வு காணாவிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்கும்.
- அதே நேரத்தில் முரண்பாட்டைத் திறமையாகக் கையாண்டு நம்பிக்கையையும் உறவையும் பலப்படுத்தினால் அதுவே வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும்.
முரண்பாட்டைக் கையாள குறைபாடான வழியும், சிறந்த வழியும்:
குறைபாடான வழிமுறை
1. மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்கவும் தகுந்த திறன் பெறாதிருத்தல்.
2. சீற்றம், கோபம், புண்படுத்தல், வெறுப்பான வெளிப்பாடுகள்.
3. நேசித்தவரை வெறுத்தல், விலக்குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், கைவிடுதல்.
4. சமாதானப்படுத்தவோ அவரின் நிலையிலிருந்து சிந்திக்கவோ திறனற்ற நிலை.
5. விரும்பத்தகாத விளைவுகளுக்கு அஞ்சி முரண்பாட்டைச் சந்திக்க மறுத்தல்.
சிறந்த வழிமுறை
1. மற்றவரின் கருத்துகளை மதிக்கவும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் பெறுதல்
2.அமைதியாயிருத்தல், மறுக்காதிருத்தல், மரியாதை கொடுத்தல்
3. மன்னிக்கவும் மறக்கவும் தயாராயிருத்தல் மற்றும் சீற்றத்தைக் கைவிடுதல்
4. சமாதானத்தை எதிர்பார்த்து தண்டனையைத் தவிர்க்கும் குணம்.
5. முரண்பாட்டை நேர்கொள்வது இருவருக்கும் நன்மையே என்ற நம்பிக்கை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனும் முரண்பாட்டுத் தீர்வும்:
முரண்பாடுகள் வலிமையான உணர்வுகளைத் தூண்டிவிடுவதோடு மனக்காயத்தையும், ஏமாற்றத்தையும், உடல் – மன நலக்கேட்டையும் விளைவிக்கும். முரண்பாடுகளை ஆரோக்கியமற்ற வழிகளில் கையாளும்போது கோபத்தையும், உறவு முறிவையும் சரிசெய்ய முடியாத விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால், சரியான வழியில் கையாளும்போது மற்றவர்களைப் புரிந்துகொள்வதோடு நம்பிக்கை மற்றும் உறவுகளை வலுப்படுத்தலாம்.
கணவன் மனைவியருக்கிடையே ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் விவாதம் ஏற்படுவதும் பிரிவதும் முரண்பாடுகளைக் கையாளும் திறன் இல்லாததே. வீட்டை ஒழுங்குபடுத்துவது உடையணிவதில் ரசனையில்லாமலிருப்பது போன்ற சிறு பிரச்சினைகளுக்குக்கூட சண்டை ஏற்படுகிறது.
- அமைதியாக இருப்பதன் மூலம் மற்றவர்களின் வார்த்தைகளையும் நடத்தைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு உறவாடலாம்.
- உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உங்களுடைய தேவைகளை பயமுறுத்தாமலும் கோபப்படாமலும் தெரிவிக்கலாம்.
- மற்றவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கும் பேசுவதற்கும் இடம்கொடுத்து கவனியுங்கள்.
- மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் நடத்தைகளையும் தவிருங்கள்.
முரண்பாடுகள் அழுத்தும் சூழ்நிலைகள்: நீங்கள் சந்திக்கும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் சம நிலையிலும், ஒருமுகப்பட்டும், கட்டுப்பாடாகவும் இருப்பது முக்கியம். இல்லையென்றால் முரண்பாடுகளை முறையற்ற வழிகளில் கையாண்டு பிரச்சினை தீவிரமடையக்கூடும்.
மக்கள் பொதுவாக முரண்பாடுகளைக் கையாளத் தெரியாமல் கீழ்க்காணும் வழிகளில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கிறார்கள்.
நெருப்பின் மேல் நிற்பது : ‘சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொண்டதைப் போல’ என்று சொல்வார்களே அதுபோல் உணர்ச்சிகள் சூடேறியும் முடுக்கி விடப்பட்டும் அதிக உணச்சிவயப்பட்டு ஓரிடத்தில் உட்காராமல் இருப்பது.
அதீத அமைதி :
எந்த உணர்ச்சியையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தாமல் விலகியிருத்தல், மவுனம் காத்தல்.
மவுனப் போராட்டம்: இது இருவேறு உணர்ச்சிகளின் கலவையான வெளிப்பாடு. செயலற்ற வெளித்தோற்றமும் உள்ளுக்குள் புகைமூட்டமுமாக இருப்பது.
மன அழுத்தம் முரண்பாட்டைக் கையாளும் திறனைக் குறைக்கிறது. அதாவது,
- அடுத்தவர்களின் உடல் மொழியைப் (body language) புரிந்துகொள்ள இயலாது.
- ஒருவர் சொல்வதைக் கேட்கும் மனநிலை இருக்காது.
- உங்கள் உணர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
- உள்மனத் தேவைகளோடு தொடர்பு இல்லாமை.
- உங்கள் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்த இயலாமை.
நீங்கள் மன அழுத்தத்தோடு இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
- உங்கள் உடலின் ஏதேனும் ஒரு பகுதி அழுத்தமாகவோ இறுக்கமாகவோ உணரலாம்.
- மூச்சு விடும்போது வயிறு மற்றும் மார்புப் பகுதி இயல்பாக அசையாமல் இருக்கலாம்.
- முரண்பாடு உங்கள் நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சிக் கொள்ளலாம்.
உணர்ச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும்
- மற்றவர்களைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- உங்களை நீங்களே புரிந்து கொள்வதோடு உங்களைப் பாதிக்கும் காரணிகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- முரண்பாடு தீரும் வரை அந்த நோக்கத்திலிருந்து விலக வேண்டாம்.
- தெளிவாகவும் திறமையாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.
- மற்றவர்களை ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
அய்ம்புலன்களையும் ஒருங்கிணைத்து முரண்பாட்டுச் சிக்கலைத் தீர்க்கப் பழக வேண்டும்.
உங்கள் உணர்ச்சிகளோடு உங்களுக்கு உள்ள உறவு ?
ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சிகள் மாறி மாறி அலைமோதுகின்றனவா? அதை உணர முடிகிறதா?
உணர்ச்சிகள், உடல் ரீதியான உணர்வுகளைத் தூண்டி விடுவதாக, -அதாவது வயிறு மார்புப் பகுதிகள் அழுத்தப்பட்டதாக உள்ளதா?
கோபம், கவலை, பயம் , மகிழ்ச்சி போன்ற மெய்ப்பாடுகளைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான முகபாவனையோடு வெளிப்படுத்த முடிகிறதா?
கடுமையான உணர்ச்சிகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் உங்களுக்கே தெரியும் வகையிலும் இருக்கிறதா?
முரண்பாடுகளைப் பற்றிய முடிவெடுக்க வேண்டியவரின் உணர்ச்சிகளுக்குக் கவனம் செலுத்த முடிகிறதா?
இவற்றில் ஏதேனும் அறியமுடியாத அளவுக்கு அனுபவமற்றதாக இருந்தால் உங்கள் மனவெழுச்சி குறைபாடுள்ளதாக இருக்கிறது என்று பொருள்.
முரண்பாட்டைத் தீர்ப்பதில் சொற்களற்ற தகவல் தொடர்பின் பங்கு:
முரண்படும்போதும் விவாதத்தின்போதும் முக்கியத் தகவல்கள் வார்த்தைகளில்லாமல் (nonverbal communication) பரிமாறப்படுகின்றன. அதாவது, முகபாவனைகள், தோரணைகள் சைகைகள், அசைவு, குரலின் கடுமை.
மனிதர்கள் மனக் குழப்பத்திலிருக்கும்போது பிரச்சினைகளைச் சொல்வதற்கு வார்த்தைகளை மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஒன்றைக் கேட்டு அதை உணரும்போது அதை நம்முடைய தேவைகள் உணர்ச்சிகளோடு தொடர்புப்படுத்திக் கொள்கிறோம்.
நீங்கள் முரண்பாட்டின் மய்யத்திலிருக்கும்போது அடுத்தவர்களின் சொற்களற்ற குறியீடுகள் அவர்கள் உண்மையில் சொல்ல வருவது என்ன? எப்படி மறுமொழிகிறார்கள்? என்று தெரிவிப்பதை உணர்வீர்கள். அது பிரச்சினையின் ஆணி வேரைக் காட்டுவதோடு புதிய நம்பிக்கையைக் கொண்டு வரும். சின்ன ஒலி, நம்பிக்கையூட்டும் தொடுதல், ஆர்வமான முகபாவனை போன்றவை இறுக்கம் தளரும் வழியில் நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்.
உங்கள் மனவெழுச்சி பற்றிய அறிவுதான் மற்றவர்களின் மெய்ப்பாடுகளைப் (emotions) புரிந்துகொள்வதற்கு உதவும் – வார்த்தைகளற்ற குறியீடுகளைப் புரிந்துகொண்டு முரண்பாடு களைத் தீர்க்கும்.
முரண்பாட்டைத் தீர்க்க என்ன செய்யலாம்?