மக்கள் தலைவர்! எஸ்.ஆர்.நாதன்

செப்டம்பர் 16-30

தொண்டறம்

1974ஆம் ஆண்டில் நடந்த ஓர் சம்பவம்…

சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் இருந்த எண்ணெய் கிடங்கு மீது ஜப்பான் ரெட் ஆர்மி, பாலஸ்தீன விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தினர். எண்ணெய் கிடங்கில் இருந்த பணியாளர்கள் பிணைக் கைதிகளாகச் சிக்கினர். பிணைக் கைதிகளுடன் தீவிரவாதிகள் மத்திய தரைக்கடல் நோக்கிப் புறப்பட, சிங்கப்பூர் கடற்படை மடக்கியது. ஆனால், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் தாங்கள் குவைத்துக்குப் பாதுகாப்பாகச்

செல்ல வேண்டும் என்பது தீவிரவாதிகளின் நிபந்தனை. அப்போது, சிங்கப்பூர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறை தலைவராக எஸ்.ஆர்.நாதன் இருந்தார்.

‘தீவிரவாதிகளின் நிபந்தனைப்படி நான் பிணைக் கைதியாக வருகிறேன்’ என்றார் எஸ்.ஆர்.நாதன். இதன்படி தீவிரவாதிகளுடன் 13 நாட்கள் பிணைக் கைதியாக குவைத் வரை  சென்று, பின்னர் நாடு திரும்பினார். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்காக சேவை செய்தவர் எஸ்.ஆர்.நாதன்.

சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள். சிங்கப்பூரில் 1924 ஜூலை மாதம் 3ஆம் தேதி செல்லப்பன் _ அபிராமி தம்பதிக்கு மகனாக பிறந்தார் ராமநாதன். இவரது அப்பா மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகச் செயல்பட்டு வந்த சட்ட அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணி-யாற்றினார். ரப்பர் தோட்ட தொழிலில் சரிவு ஏற்பட்டதால், அந்த அலுவலகம் மூடப்பட்டது. அவரது குடும்பம் வறுமையால் வாடியது. இதனால் மனமுடைந்த செல்லப்பன் தற்கொலை செய்துகொண்டார். அப்போது ராமநாதனுக்கு எட்டு வயது. ராமநாதன் தன் 16 வயதில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். சீனர்களும் மலாய்க்காரர்களும் அவரது பெயரை உச்சரிப்பதற்குச் சிரமப்பட்டுள்ளனர். அதனால், தன் பெயரை எஸ்.ஆர்.நாதன் என சுருக்கிக்-கொண்டார்.

பின்னர், மலேசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சேர்ந்து, தலைசிறந்த மாணவனாக விளங்கினார். 1954இல் பட்டம் பெற்று, தொழிலாளர் அமைச்சகத்தின் மருத்துவ சமூகப் பணியாளராகப் பணிபுரிந்தார். 1962இல் தொழிலாளர் ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குனராகப் பணிபுரிந்தார். இவருடைய சீரிய செயல்பாடு பல்வேறு படிநிலைகளில் இவரை உயர்த்தியது. சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம், இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் என பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து முக்கியப் பங்காற்றினார்.

‘சிங்கப்பூரின் தந்தை’ என்று போற்றப்படும் லீ குவான் யூவின் நெருங்கிய நண்பராக எஸ்.ஆர்.நாதன் விளங்கினார். அதிபர் ஆவதற்குமுன், 1988_90களில் மலேசியத் தூதுவராகவும், 1990_96 காலக்கட்டத்தில் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதுவராகவும் அவர் பணியாற்றினார். தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் 1999ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அதிபராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்-பட்டார். இரண்டாவது முறையும் அதிபராக தேர்வு செய்யப்பட்ட நாதன், 2011 வரைஅதிபராக இருந்தார். பின்னர், மூன்றாவது முறை அதிகபராக விரும்பவில்லை என்று கூறி பதவி விலகினார். சிங்கப்பூர் வரலாற்றிலேயே 12 ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்தவர் இவர் ஒருவரே. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் இவர் இருந்துள்ளார்.

மக்களிடம் மிகவும் எளிமையாகப் பழகக்கூடிய, தனித்துவம் வாய்ந்த தலைவராக விளங்கிய எஸ்.ஆர்.நாதன், சிங்கப்பூரின் ‘இரண்டாவது தந்தை’ என்று அழைக்கப்-பட்டவர். கடந்த  ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 92ஆவது வயதில் காலமாகிவிட்டார். அவரது மறைவு ஒரு பேரிழப்பு. ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *