வாய்ப்பு கிடைத்தால் யாரும் சாதிப்பர் என்று தகுதி திறமை பேசு வோருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார் ஜெயவேல். பெரியாரின் கனவை நினைவாக்கிய உமாவிற்கும், ஜெயவேலுவிற்கும் நமது பாராட்டுக்கள்
அய்னாவரம் தண்ணீர்தொட்டி அருகில், சாலையோரம் நடைபாதையில் வசிக்கும் குடும்பம் ஜெயவேலுயுடையது. சிறுவனாக இருக்கும்போது சாலையில் பிச்சையெடுத்து தாயிடம் கொடுப்பார். அந்த காசில் அந்தத் தாய் சாராயம் குடிக்கும். இவருக்கு மூன்று அக்கா, ஒரு தம்பி. இப்படிப்பட்டவர் அயல்நாடுகளில் உயர்கல்வி பயின்று சாதனைப் படைத்து வருகிறார். இதுபற்றி அவரே விவரிக்கிறார்.
“எங்க மக்களைப் பத்தி ஏதோ படம் எடுக்கிறோம்னு உமா மேடம் வந்தாங்க. எங்க ஆளுங்க எல்லாம் சேர்ந்து அவங்களை விரட்டினாங்க. எல்லாரையும் சமாதானப்-படுத்தி, எங்க கூடவே தங்கி, வீடியோ எடுத்தாங்க. எங்க வாடை பட்டாலே முகம் சுளிக்கிற மனுஷங்களைத்தான் நாங்க பார்த்திருக்கோம். ஆனா, உமா மேடம், எங்களை அவங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு கொடுத்தாங்க. எங்க மக்களுக்கு அவங்க மேல பெரிய மரியாதை வந்தது.
அவங்கதான் என்னை ஸ்கூல்ல சேர்த்து-விட்டாங்க. அதுவும் தனியார் பள்ளி. கிழிஞ்சுபோய் அழுக்குப் படிஞ்ச டவுசரோட, பரட்டைத் தலையோட அலைஞ்ச எனக்கு, முடி-வெட்டி, ஷூ , சாக்ஸ், டை எல்லாம் போட்டு, ஸ்கூல்ல கொண்டு போய் விட்டாங்க. என்னைப் பார்த்து என் தம்பியும் ஸ்கூலுக்கு வந்தான். அம்மாவுக்கு, நாங்க ஸ்கூலுக்குப் போறது பிடிக்கலை. சிக்னலுக்குப் போகச் சொல்லி விரட்டும். உமா மேடம் தேடி வர்றப்போ, ரெண்டு பேரையும் ஒளிச்சு வெச்சுடும். ஒருநாள் உமா மேடம் வந்து, என்னை அவங்க வீட்டுக்கே தூக்கிட்டுப் போயிட்டாங்க.’’
பத்தாம் வகுப்புல கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினேன். ப்ளஸ் டூ ஸ்டேட்போர்டு எழுதினேன். ஆங்கிலம், கணிதப் பாடங்களில் ரொம்பத் திறமையா இருந்தேன். ப்ளஸ் டூ முடிச்சதும், ஜப்பான் ஆசிய பசிபிக் பல்கலைக்-கழகத்துல 100 சதவிகித உதவித் தொகையோடு என்விரான்மென்டல் சயின்ஸ் படிக்கவும், சுவிட்சர்லாந்துல இருக்கும் ஒரு பல்கலைக்-கழகத்தில் எலெக்டிரிக்கல் படிக்கவும் வாய்ப்பு வந்தது. எனக்கு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிப்பதுதான் கனவு. அதுக்காக, வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டு, லண்டன் கிளம்பிட்டேன். முழுத் தொகை-யையும் ‘சிறகு’ அமைப்பே கல்விக்கடனாக வழங்கியது. ‘உன்னோட மக்களை மாத்தணும்னா, நீ வெளிநாட்டுக்குப் போய் படிச்சு, உயர்வான வேலைக்குப் போகணும்’னு உமா சொல்வாங்க.
“நான் வளர வளர, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே வளர்ந்தது. எல்லாமே எனக்குப் புதுசா இருந்தது. ‘நான் எல்லாம் வெளிநாடு போய் படிக்க முடியுமா?’னு மனசுக்குள்ள கேள்வி… ‘தைரியமா கிளம்பு!’னு சொல்லி உமா அனுப்பி வைச்சாங்க. லண்டன்ல, மாணவர்கள் வாரத்துக்கு 20 மணி நேரம் பகுதி நேர வேலை செய்யலாம். கிட்டத்-தட்ட மாதம் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதை வெச்சு சாப்பாடு, தங்கும் செலவைச் சமாளிச்சேன். புராஜெக்ட்ல வித்தியாசமான ஒரு காரைத் தயாரிச்சேன். பெட்ரோல், டீசல், சோலார்னு வெளியில் இருந்து வர்ற எந்த எனர்ஜியும் இல்லாம, டயரோட ரொட்டேடிங் எனர்ஜியில் 24 மணி நேரமும் ஓடக்கூடிய கார். அதை இன்னும் மேம்படுத்தணும். இப்போ இத்தாலியோட டாப் ரேங்கிங் யுனிவர்-சிட்டியான டோரினா யுனிவர்சிட்டியில் முழு உதவிக் தொகையோடு படிக்கப் போறேன்.
எங்க சமூகத்துல எனக்குப் பிறகு நிறையப் பசங்க, படிக்க ஆரம்பிச்சிருக்காங்க; பிச்சை எடுக்கிறதை விட்டுட்டாங்க. அதே சிக்னல்ல இப்போ புத்தகங்கள், துணிகள்னு விற்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப் பேர் ஆட்டோ ஓட்டுறாங்க. எனக்கு இன்னொரு கனவும் இருக்கு. அம்மா இன்னைக்கும் ஒரு துணி மூட்டையைத் தலைக்கு வெச்சுக்கிட்டு பிளாட்பாரத்துலதான் படுத்துக்கிடக்கு. காலம் கைகூடும்போது, ஒரு வீடு கட்டி அம்மாவை அங்கே கூட்டிக்கிட்டுபோய் வெச்சுக்கணும்’’ என்னும் ஜெயவேலுவின் கண்கள் உணர்வால் பொங்கின.