எதிரானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
“பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கு விசாரணைத் தகவல்கள் கசிவது தொடர்பாக சி.பி.அய்.க்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.’’
“கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்திர குரு. கடந்த 2015, ஜனவரி 3-ஆம் தேதி மைசூரு பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சிப் பட்டறையில் பேசும்போது, “ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
கடவுளாக வணங்கப்படும் அவரே சீதையின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார். சீதையை குற்றவாளிபோல நடத்தினார். ஆனால், ஊடகங்கள் ராமரை கடவுளாக மாற்றிவிட்டன’’ என்று கூறியதாக, சர்வோதய சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் மகேஷ் சந்திர குருவுக்கு எதிராக ஜெயலக்ஷ்மிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சந்திர குரு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மைசூரு முன்சீப் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் மகேஷ் சந்திர குருவை வரும் ஜூலை 5-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மைசூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா தலையிட்டு, இந்த பொய் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.’’
இப்படி இரு செய்திகள் 24.6.2016 ‘தமிழ் இந்து’ நாளேட்டில் வெளிவந்துள்ளன!
இது நமது அரசியல் சட்டத்தின்கீழ் குடிமக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள பறிக்கப்பட முடியாத அடிப்படை உரிமையைக் கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை ஆகும்!
இராமர் என்ற பாத்திரம்பற்றி ‘வால்மீகி’ இராமாயணத்திலும், ஏனைய இராமாயணங்களிலும் வெவ்வேறு மாறுபட்ட _ ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கதைகளும், பாத்திர அமைப்புகளும் உண்டு; ஏன் பம்ப இராமாணம்’ என்ற கன்னட இராமாயணத்தில் சீதை இராமனுக்குத் தங்கை முறையுடையவள்.
மைசூர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறைப் பேராசிரியராக உள்ள ஒருவர் இத்தகைய கருத்தை, விமர்சனத்தைக் கூறக் கூடாதா?
வால்மீகியின் இராமாயணப்படி, சீதையின் கற்பின்மீது இராமனே சந்தேகப்பட்டுள்ளான்! அதனால் விசாரணையின்றி தண்டிக்கப்பட்ட குற்றவாளிபோல் இராமன் சீதையை நடத்தினான். சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதும், நிறைமாத கர்ப்பிணியைக் காட்டிற்கு அனுப்பியதும், யாராலும் நியாயப்படுத்த முடியாத கொடுஞ்செயல், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகும்!
யாரோ சில மதவெறியர்கள், ஹிந்துத்துவா காரர்கள் புகார் கொடுத்தால், உடனே அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அனுப்பிய செயல்,
1. கருத்துச் சுதந்திர உரிமை பறிப்பு.
2. அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை தத்துவத்திற்கு நேர்முரணானது.
3. அதே அரசியல் சட்டம் அடிப்படைக் கடமை என்ற தலைப்பில் 51ஏ பிரிவின்கீழ் கூறப் பட்டுள்ளது. அறிவியல் மனப் பான்மையும், ஆராய்ச்சி மனோபாவத்தையும், சீர்திருத்தத்தையும், மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவதற்கு நேர் எதிரானது அல்லவா?
நாடு தழுவிய அளவில், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும், பகுத்தறிவுவாளர்களும் இதற்கு தமது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்!
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அப்பேராசிரியரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.
-_ கி.வீரமணி,
ஆசிரியர், உண்மை