அலாஸ்காவின் மிகவும் சிறப்பான இடம் பார்க்கச் சென்றோம். ஆங்கரேஜ் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரம். அது அமைந்துள்ள இடம் உலகின் எந்த பெரிய நகரத்திற்கும் அங்கிருந்து 9லு மணிநேரத்திலே பறந்து விடலாம் என்பதாகும். உலகின் கூரையில் அமைந்துள்ளது! அங்கு உலகின் பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. உலகின் பல விமானங்கள் அங்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு செல்லுமிடமாக அமைந்துள்ளது. அங்கே பல பெட்ரோல் நிறுவனங்கள் உள்ளன..அங்குள்ள அமெரிக்க ஆதி மக்கள் பற்றிய வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். அங்கிருந்து நீண்ட தொலைவு செல்ல வேண்டும். நடுவில் வசதிகள் கிடையாது. சரியாகப்பார்த்ததில் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த காரின் சக்கர அழுத்தம் குறைந்திருந்தது. அருகே கொண்டு பார்த்ததில் இரண்டு ஆணிகள் குத்தியிருந்தன! வாடகை நிறுவனம் உடனே வேறு காரை தந்தது. நீண்ட தொலைவு பயணம் என்றால் எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்!
அழகான இயற்கை இருபுறமும், நல்ல சாலை ஆறு மணி நேரம் பயணம் செய்தோம். டெனாலி பூங்கா என்று உலகத்திலேயே மிகவும் பெரிதான 60 லட்சம் ஏக்கர் பரப்புள்ள இயற்கை வளம் அப்படியே பாதுகாக்கப் பட்டுள்ள அந்த இடத்தை அடைந்தோம். அங்கே சேர்ந்ததுமே முதல் அதிர்ச்சி. அங்கெல்லாம் சிறு சிறு ஊர்கள் தாம். தங்கும் இடங்கள் குறைவு. கோடையில் பயணிகள் மிகுதி. நாங்கள் பதிவு செய்த தாளை வைத்திருந்தோம். ஏதோ கோளாறு நடந்து எங்கள் இடம் வேறு யாருக்கோ தரப்பட்டு விட்டது. வேறு அறையும் இல்லை.ஆனால் அங்குள்ளவர் தொலை பேசியில் பேசி எப்படியோ இடம் கண்டு பிடித்து விட்டார்! அங்கு சிலர் அவர்கள் வீடுகளின் அறைகளைத் தடுத்து விருந்தினர் தங்கும் அறைகளாக மாற்றி படுக்கையும், காலை உணவும் என்று வாடகைக்கு விடுவார்கள். இது அமெரிக்கா முழுவதும் உள்ளது.அங்கிருந்த அம்மாள் நல்லவர். பெரிய விடுதியின் ஆடம்பரம் இல்லா விட்டாலும் தங்கும் வசதி போதுமானதாகத் தான் இருந்தது. மூன்று நாள்கள் அங்கே தான்!
அடுத்த நாள் அந்த மிகப் பெரிய பூங்காவைப் பார்க்கச் சென்றோம். முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும். சரியாக அந்த நேரத்திலே அவர்களே நடத்தும் பயணங்களில் அவர்களது பேருந்தில் செல்ல வேண்டும். மற்றவர்கள் தங்கள் வாகனங்களில் செல்ல முடியாது. சாலை வழி 92 மைல்கள். நாங்கள் முப்பது மைல் அளவு தான் சென்று திரும்பினோம். அந்தப் பூங்காவைப் பற்றி நன்கு அறிந்த ஓட்டுனர். அவரது படிப்பு என்ன தெரியுமா? இயற்கை வாழ்வினம் பற்றி முனைவர் பட்டம் வாங்கியவர்! பெரும்பாலான ஓட்டுனர்கள் நன்கு படித்து அங்கு ஆராய்ச்சி செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள், இயற்கை விரும்பிகள்! கண்ணும் மிகவும் கூர்மையானவர்கள். எங்கேயோ உள்ள மிருகங்களைக் கண்டு பிடித்துக் காண்பிப்பார்கள். அதுவும் பேருந்தை ஓட்டியவண்ணமே கண்டு பின்னர் பேருந்தை நிறுத்திக் காண்பிப்பார்கள். அங்கு கரடிகள் பெருமளவில் வாழ்கின்றன. ஆனால் பெரிய இடம் என்பதால் சிலர் பார்ப்பார்கள், சிலர் பார்க்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள். அவர் எங்களுக்கு மூன்று முறை வெள்ளை, பழுப்பு, கருப்புக் கரடிகளைக் காண்பித்துக் கைதட்டல் பெற்றார். மலை மேலே மேயும் மலை ஆடுகள். எங்கும் சுற்றும் கரிபு என்ற பெரிய கொம்பு மான்கள் போன்று பல மிருகங்களைக் காண்பித்தார். அந்தப் பூங்கா அமெரிக்காவின் பெரிய மாநிலங்களிலொன்றான மாசச்சூசட்சு அளவு பெரியது! 12000 ஏரிகள் உள்ளன. பல பாறை வடிவங்கள் அதன் வரலாற்றைச் சொல்லுகின்றன. அங்கு வாழும் மிருகங்களின் வாழ்க்கை வரலாறு பற்றிச் சொன்னார். நடு ரோட்டில் பெரிய மான் எங்களுக்குக் காட்சி அளித்து மகிழ்வித்தது!
அடுத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள்! சிறு விமானத்தில் ஏறி அமெரிக்காவின் உச்சியை அடந்தோம். எங்கள் மகள் எங்களைக் கேலி செய்வார்! பிச்சாண்டார்கோவிலிலும், கல்கண்டார் கோட்டையிலும் பிறந்த நீங்கள் இங்கு பெரிய மருத்துவர்களாகத் திகழ்கின்றீர்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சிகாகோ குக் கவுண்டி மருத்துவ மனையில் தனிச் சிறப்பாக மூளை நரம்பு மருத்துவ _ திசு மருத்துவப் பயிற்சி ஆளுநராக ஒரு பெண் இருக்கின்றீர்கள் என்பார்! அது உச்சமோ இல்லையோ, எங்களை விடப் பலர், நம்மவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்பது தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர் இவர்களது உழைப்பின் பயன் என்று நாங்கள் சொல்வோம். அந்த விமானத்தில் எட்டு பேர். மலைகளையெல்லாம் காண்பித்துப் பூங்காவின் குறுக்கே சென்று மலை உச்சியை அடைவார். அங்கே பனி மலைகள் நிறைந்திருக்கும். 20300 அடி உயர மெக்கின்லி சிகரம் என்று சொல்லப் பட்டதை மாற்றி மீண்டும் டெனாலி சிகரம் ( உயரமானது என்று பழங்குடியினர் பெயர்) என்று அழைக்கும் உச்சியை மிகவும் அருகில் பார்த்தோம். மயங்கினோம்! அடுத்து வந்தது தான் மிகவும் சிறப்பானது!
அங்கே ஓரிடம் உள்ளது. அதிலே இந்த விமானம் அப்படியே பனியில் சறுக்கும் சறுக்கல் கால்களில் சறுக்கி இறங்கும். அங்கே நாங்கள் பனியில் சறுக்கி விழாமல் இருக்க காலணி மேல் ஆழமான பதிவுகள் நிறைந்த காலணி அணிந்துக் கீழே இறங்கினோம். கையில் பனியை அள்ளி வீசி விளையாண்டோம். பனிப் பந்து செய்து வீசினோம். அமெரிக்காவின் உச்சியை அடைந்த மகிழ்ச்சி பொங்கி வழிய புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினோம்! அந்த மலை உச்சியிலே ஒரு குடிசை இருந்தது. தண்ணீர் மற்றும் எந்த வசதியும் இல்லாத அந்தக் குடிசையில் தங்கலாமாம்! விமானத்தில் வந்து ஏறி அங்கு சென்று தங்கி திரும்ப வேண்டும். கோடை காலத்தில் மட்டுந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து விட வேண்டுமாம்!
அங்கே சென்று தங்கலாமா?
—————————————————————————————————————————————————————-
புகைப்பழக்கத்தை குறைக்க பிரன்ஸின் புது உத்தரவு
நிறுவனங்களின் முத்திரைகளோ, வேறுபட்ட நிறங்களோ இல்லாத பெட்டி-களில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெட்டிகளின் அழகால் புகைப் பிடிப்போர் கவரப்படுவதைத் தவிர்க்கவும், புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் இந்த விதியை பிரான்ஸ் அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்-போவதாக “ஜப்பான் டொடாக்கோ இன்டர்நேனஷல்’ நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, நிறுவனங்களின் காப்புரிமைக்கு எதிரானது என அந்த நிறுவனம் தெரிவித்தது. மக்களின் உடல்நலனைவிட நிறுவனங்களுக்கு லாபம்தானே முக்கியம்.