திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம், திராவிட இயக்கத்தால் நாடு சீரழிந்து விட்டது என்று பொத்தாம் பொதுவில் கூறுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மிக அழகாகவே பதிலடி கொடுத்தார். திராவிட இயக்கம் என்றால் திராவிடர் கழகமும், திமுகவும் தான். திராவிட என்ற பெயரை வைத்துக் கொள்பவை எல்லாம் திராவிட இயக்கமாகாது என்று பளிச்சென்று விளக்கம் அளித்தார் தமிழர் தலைவர். எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; மொழியால் தமிழர். இனத்தால் திராவிடர்கள் – இதுதான் மொழியால், வழியால், விழியால் திராவிடர்கள் என்பதற்குப் பொருள். இந்தக் கொள்கையை உடைய திராவிட இயக்கம்தான் இந்த நாட்டைப் பக்குவப்படுத்தி வைத்துள்ளது.
அனைவருக்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை – தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடு. இன்னார்க்கு இது என்றிருந்த பழைய நிலையை மாற்றிய சமத்துவ சமதர்ம இயக்கம்தான் திராவிட இயக்கம், சுயமரியாதைதான் அதன் கொள்கை. அண்ணா என்ற பெயரைக் கட்சியிலும் அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டு இருப்பதாலேயே திராவிட இயக்கம் என்று ஆகிவிட முடியாது. அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு யாகம் செய்யலாமா? மண்சோறு சாப்பிடலாமா என்பதெல்லாம் முக்கியமான அடிப்படைக் கேள்விகள் அல்லவா?
அதிமுக ஆட்சியை விரட்டவேண்டும்
மது விலக்கைப் பற்றி கலைஞர் பேசினால் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்ன சொல்லுகிறார்? அதைச் சொல்ல கருணாநிதிக்கு அருகதை உண்டா என்று கேட்கிறார். ஜனநாயக நாட்டில் யாருக்கும் கருத்துகள் கூற உரிமை உண்டு. அதுவும் 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்குக் கேள்வி கேட்க உரிமை இல்லையா? இப்படிப் பேசுவது என்பது ஒரு வகையான மேல் தட்டு மனப்பான்மை – பண்ணையார் பேச்சு – ஜனநாயகத்தில் இது போன்ற கேள்விக்கே இடமில்லை என்று மக்கள் நாயகப் பண்பை வெளிப் வெளிப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். ஒரு நூலகத்தைத் திறப்பது என்றால் பல சிறைச்சாலை களை மூடுவதாக அர்த்தம். இந்த ஆட்சியோ அண்ணாவின் பெயரால் அமைந்த ஆசியாவிலேயே சிறந்த நூலகத்தைச் சிதைக்கக் கூடிய ஆட்சியாகும். பேரிடர் சூழும்போதுகூட மக்கள் நலன்பற்றிக் கவலைப்படாத ஆட்சி. இங்கு ஆட்சி நடைபெறவில்லை, காட்சிதான் நடைபெறுகிறது – எனவே இந்த ஆட்சி விரட்டப்பட வேண்டும். இந்த ஆட்சியால் பாதிக்கப்படாத எந்தத் தரப்பு மக்களும் கிடையாது.
இப்பொழுதே அமைச்சர்களும், ஆளும் ஆட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்குக் கேட்கப் போகும் இடங்களில் எல்லாம் பொது மக்களால் விரட்டப்படு கின்றனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட மக்கள் துடிப்போடு இருக்கிறார்கள் என்பதை மக்களின் நாடியைப் பிடித்துச் சொன்னார் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.