வருகின்ற (மே) 16ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்காக இம்முறை பல்வேறு அணிகள் ஆறுக்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. என்றாலும்
உண்மையான போட்டி ஆளும் அ.தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும்தான்!
மக்களாட்சியின் முதல் அமைச்சர் ஒருவர் 5 ஆண்டுகால ஆட்சியில், மக்களை நேரில் சந்தித்தது என்பது ஒரு முறை, இரு முறை தவிர வேறில்லை என்பது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது.
அது மட்டுமல்ல; அவரது சக அமைச்சர்களே கூட, விரும்பும்போது, ஆலோசனைக்காகக் கூட உடனடியாக சந்தித்துவிட முடியாது என்பதுடன் அவர்கள் வளைவதும், கூழைக்கும்பிடு போட்டு, ஏதோ பழைய பண்ணையார் முன் நின்ற கொத்தடிமைகளைப் போல் நிற்பதும், வணங்குவதும், காலில் விழுவதும் ஜனநாயகப் பண்பு அல்ல என்பதைவிட, சுயமரியாதை இயக்கம் பிறந்த தமிழ்நாட்டுக்கே கூட தலைகுனிவு ஆகும்!
5 ஆண்டுகால ஆட்சியில் 23 முறை அமைச்சரவை மாற்றம்; 11 முறை பதவியேற்பை ஆளுநர் நடத்திவைத்த கூத்து! இவைகள் ஆட்சிக்கு சிறப்பு சேர்ப்பனவா? வீட்டுக்கனுப்பப்பட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் மீண்டும் திரும்ப நியமனம் பெற்றது அதைவிட மிகப் பெரிய கேலிக்கூத்து!
நாணயமான அதிகாரிகளால் நிர்வாகப் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத _ நெருக்கடி, நிர்ப்பந்தம் காரணமாக அவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்ட அவலங்கள். படுகொலைகள் கூலிப்படைகளின் அட்டகாசத்தால் நாளும் குறையாத நிலை.
ஆணவக் கொலைகள் என ஜாதி மறுப்பாளர்களுக்கு எதிரான கொலைகள். சுமார் 84க்கும் மேல் நடந்த கொடுமை _ இதுவரை கேட்டிராத ஒன்று!
தேர்தலில் போட்டியிடும் அணிகளில் உள்ள பல கட்சியினரும் பல வகையினர்! சிலர் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்காக போட்டியிடுகின்றனர்.
வேறு சிலர் தங்களது கட்சிகள் ஏற்கனவே வாங்கிய மிகக் குறைந்த வாக்கு சதவிகிதங்களை இதன்மூலம் பெருக்கிக் கொண்டு, தங்களது தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்ற தகுதியை தேர்தல் கமிஷனிடம் பெறவும், தங்களுக்கென்று சின்னங்களை தக்க வைத்துக்கொள்ளவுமே போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எப்போதும் விரும்புவது நிலையான ஆட்சியைத்தானே தவிர, ‘ஒட்டுப்போட்ட பட்டுச்சட்டை’ போன்ற ஒன்றை அல்ல என்பது இதன் பரம்பரை வரலாறு ஆகும்!
ஜாதி, பணம், அதிகாரம் _ இவைகளால் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று பலரும் பதவி பரமபத விளையாட்டு விளையாடி, ஜனநாயகத்தை பணநாயகமாக, ஜாதிநாயகமாக ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி குறுக்குவழியில் வெற்றிக்கனி பறிக்க துடியாய்த் துடிக்கிறார்கள்.
போலி ஆம்புலன்ஸ், புரட்டு வேலை _ பணக்கடத்தல் நடைபெறுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் அல்லவா? இவை எல்லாவற்றையும்விட, திராவிடர்தம் இன மீட்சி, மொழிஉரிமை, அனைவருக்கும் அனைத்தும் என சமஉரிமை சமவாய்ப்பு, மீண்டும் ஒரு ஆட்சியின் அம்சமாக அமைய வேண்டுமென்பது நமது அவா! அதற்கு ஒரே வழி தி.மு.க. தலைமையில் உள்ள சமூகநீதிக் கூட்டணியை ஆதரிப்பதுதான்!
அடுத்த தலைமுறை விடிவு பெறவேண்டும். நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதை இன்றுள்ள அரசியல் சூழலில் தி.மு.க.வினால் மட்டும்தான் தரஇயலும்! எனவே மானமிகு சுயமரியாதைக்காரரான நமது கலைஞர் அவர்களது தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலரவேண்டும். எனவே தி.மு.க.வை வெற்றிவாகை சூடச் செய்யுங்கள்!
கி.வீரமணி,
ஆசிரியர், உண்மை