– தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
ஆரியர்களுக்கு எதிரானவர்களாக வேதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்ற ‘தஸ்யூக்கள்’ என்பவர்களைப் பற்றி, வேறு சான்றுகள் எவற்றையும் நாம் காண முடியவில்லை; மனுதருமத்தில் மட்டும் ஒன்றிரண்டு இடங்களில் அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ‘தஸ்யூ’ என்னும் சொல்லில் இருந்து உருவாகிவந்த ‘தாஸ்’ (தாசன்) எனும் சொல் முடிவில் ஒரு ‘கொத்தடிமை’யைக் குறிப்பதற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்தப் பொருளில் இதற்கு இணையாக நம்முடைய ஆங்கிலச் சொல் ‘SLAVE’ (அடிமை) என்பது உள்ளது. ‘SLAVE’ எனும் இந்தச் சொல் ‘ஸ்லேவி’ (SLAVI) இனத்து மக்களிடமிருந்து தோன்றியது. இவர்களில் பெரும்பான்மையோர், தற்காலத்தில் இவர்கள் வாழ்கின்ற பகுதிகளிலேயே அடிமைகளாக மாறிவிட்டனர்.
வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற சில தஸ்யூக்களின் பெயர்களும் ஆரிய இனத்தவரின் ஏனைய எதிரிகளின் பெயர்களும் ஆரிய மூலத்திலிருந்து தோன்றியவை எனத் தெரிகின்றது. ஆனால், இந்திய மொழிகளில் உள்ள சமஸ்கிருதமல்லாத நூல்களில், இவர்கள், சித்தியன் அல்லது துரேனியன் இனமரபைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் வாழ்விடங்களை விட்டு இங்கு வந்து குடியேறியவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குஜராத்திலும் அதற்கு அண்மையில் உள்ள மற்ற மாநிலங்களிலும் காணப்படுகின்ற ‘துரானியர்கள்’, இன்றும் ‘கலி பிரஜா’ அல்லது கருப்பினத்தவர் என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றனர். வெண்ணிறத்தவரிடமிருந்து (உயர்ந்தோர்) இவர்களை வேறுபடுத்திக் காட்டவே இவ்வாறு இவர்கள் கூறப்படுகின்றனர். என்றாலும் ஆரியர்களின் ரத்தம் இவர்களிடத்தில் அதிகமாகவோ குறைவாகவோ காணப்படுகின்றது.
வேதகாலத்து ஆரியர்கள் முதன்மையாக நாட்டுப்புற வாழ்வினர்; அத்துடன் அவர்கள் வேளாண் தொழிலையும் செய்து வந்தனர். (இதற்கு ஏராளமான சான்றுகள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. இங்கு நான் குறிப்பிடும் ஒவ்வொரு கருத்துக்கும் வேதங்களில் சான்று இருக்கிறது.) ஆரியர்களின் ஆட்டு மந்தைகள், செம்மறி ஆடுகள், கால்நடைகள், வெள்ளாடுகள், பசுமாடுகள், எருமைகள், குதிரைகள், ஒட்டகங்கள், காளை மாடுகள் ஆகியவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. இவற்றைத் தங்களுக்குக் கொடுத்தமைக்காகக் கடவுளர்க்கும், மனிதர்களுக்கும் முறையே வழிபடு பொருளாகவும், நன்றி செலுத்துவதற்கு உரிய பொருளாகவும் இவை விளங்கின. அவர்களில் ஒரு உரிய பொருளாகவும் இவை விளங்கின. அவர்களில் ஒரு பெண்மகள் ‘துகித்ரி’ அல்லது ‘பால்காரப் பெண்’ என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாள்.
மேலும் ‘கோபா’ என்பதும் ‘கோபால்’ என்பதும் அல்லது ‘கால்நடைகளை வைத்திருப்பவர்’ என்பதும் பொதுவாக அவர்களுக்குள்ளே ‘ஒரு பாதுகாவலர்’ என்று பொருள்பட்டது. கால்நடைகளை _ பசு மாடுகளை வைத்திருந்தோர் அந்தச் சமுதாயத்தில் மிகப் பெரிய இடத்தில் இருந்தனர். நாட்டுப்புற வாழ்க்கையில் உருவான அவர்களுடைய உரை வெளிப்பாடுகள் பலவற்றில் அவர்தம் இனம் சார்ந்த பொதுவியலான பொருளை அவர்கள் மொழியில் காண முடிகிறது. தங்கள் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் மக்களாகவும் அவர்கள் இருக்கவில்லை. ஆனால், அவர்களின் எதிரிகள் நாகரிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகத் திரளாக ஒன்று கூடி வாழ்ந்த குடும்ப வாழ்க்கையினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கென்று சிற்றூர்களும் நகரங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான இருப்பிடங்களும் அங்கு இருந்தன. வீட்டுப் பயன்பாட்டுக்கான ஆடம்பரப் பொருட்களுடன் அவர்கள் வசதியான வாழ்க்கை நடத்திவந்தனர். அவர்கள் நெசவுத் தொழிலை நன்கு அறிந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான ஆடைகளை அவர்களே நெய்து கொண்டனர். இரும்பும் அவர்களுக்குப் பயன்படு பொருளாக இருந்து வந்தது. கொல்உலைத் தொழில், செப்புத் தொழில், தச்சுத் தொழில் முதலானவற்றோடு பிற கைத்தொழில்களிலும் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். தங்கள் காடுகளில் இருந்த மரங்களை வெட்டுவதற்குக் கைக்கோடாரிகளை அவர்கள் பயன்-படுத்தினார்கள். அவர்களுக்கு விருப்பமான ‘அஷ்வதா’ (உயரிய மரவகை), பலாஷா (உயரிய மரவகை) ஆகிய மரங்களோடு ‘அகாசியா’ மரக் குடும்ப வகையைச் சேர்ந்த பிற மரங்களையும் அவர்கள் வெட்டினர். தங்கள் தேர்களை இழைத்துத் தேய்த்து மெருகூட்டி அழகுபடுத்தவும் அவர்கள் அறிந்திருந்தனர். வண்டிச் சக்கரங்களைச் சுற்றி மாட்டப்படும் இரும்பு வட்டகைகளையும் அவர்கள் செய்து கொண்டனர். கவசம், தடிகள், வில், அம்புகள், வாள், கேடயம் முதலான போர்க் கருவிகளை அவர்களே வடிவமைத்துக் கொண்டனர். சங்கொலி கேட்டவுடன் அவர்கள் போருக்கு ஆயத்தமாகுமாறு அழைக்கப்பட்டனர்.
வீட்டுப் பயன்பாட்டிற்காகவும், வழிபாட்டிற்காகவும், அவர்கள் சிறு சிறு கிண்ணங்கள், பாத்திரங்கள், நெடியதும், சிறியதுமான அகப்பைகள் முதலானவற்றை அவர்களே செய்து கொண்டார்கள். தங்கள் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்குத் தொழில்முறையிலான நாவிதர்களை அவர்கள் அமர்த்தியிருந்தனர். விலை உயர்ந்த உலோகங்களையும், கற்களையும் வணிகப் பயன்பாட்டில் எப்படி மாற்றுவது என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர். பொன்னாலான காதணிகள், வைரக் கழுத்தணிகள், பொன்வட்டில்கள் முதலானவற்றை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். தங்களுக்குப் பயன்படும் விலங்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தொல்பழங்காலத்து எகிப்தியர்களைப் போல அவர்கள் போர் செய்வதற்காகத் தேர்கள் வைத்திருந்தனர். போக்குவரத்துக்காகக் குதிரை வண்டிகளையும் மாட்டு வண்டிகளையும் பயன்படுத்தினார்கள். குதிரைகளையும், மாடுகளையும் கவனித்துக் கொள்வதற்காகப் பணியாளர் இருந்தனர். எகிப்தியரிடம் இதனைக் காண்பதற்கில்லை. நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட தங்கள் குதிரைகளைப் பற்றியும், சிறந்த குதிரை, தேர்ப்படை வீரர்களைப் பற்றியும் பேசுவதில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்; மகிழ்ச்சியடைந்தனர். தங்களது வண்டி வாகனங்களைப் புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர். அவர்களுடைய இளவரசர்கள், குருமார்கள், கடவுளர்கள் ஆகியோர் சில நேரங்களில், குதிரை இனத்தோடு தொடர்புடைய பெயர்களையும் பட்டங்களையும் பெற்றிருந்தனர். யானைகளைப் பழக்கி அடக்கி வைத்திருந்தார்கள்! ஆனால், தென்னகத்தின் தொல்குடி மக்களைப்போல இவர்கள், போர் செய்தல் போன்ற வேலைகளுக்கு யானைகளைப் பயன்படுத்தினார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மருத்துவக் குணமுடைய சில மூலிகைச் செடிகளை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். ‘சோமலதா’ அல்லது நிலவுச் செடி என்னும் தாவரத்திலிருந்து, குடித்து மகிழ ஒருவகை மதுவை அவர்கள் உருவாக்கினார்கள். மருத்துவக் குணமுடைய அந்தச் சாறு (சர்வோஸ்டமா விமினாவிஸ்) கடவுளர்க்கும் மனிதர்கக்கும் போதையூட்டுவதற்கும் மகிழ்ச்சியில்திளைப்பதற்கும் (இருவர்க்கும்) ஏற்புடையது என்று அவர்கள் கருதினார்கள். ‘கிரிட்டா’ அல்லது நெய், அவர்களின் பின்னோர்க்குப் பயன்பட்டதைப் போலவே அவர்களுக்கும் பயன்பட்டது. பார்லி கஞ்சியின் புளிப்புத் தன்மை அவர்களுக்குப் புதியதல்ல; அந்தச் சமூகத்தில் கஞ்சியும் உணவாக இருந்தது.
தீயொழுக்கமுடைய பெண்கள் நகரங்களில் காணப்பட்டனர்; தங்கள் செயலைப் பற்றி அவர்கள் பெரிதும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. சாராய விற்பனையாளர்களிடம் இவர்கள் இணக்கமாகவே இருந்தனர். (தற்கால இந்துக்களின் அமைப்பு முறையின்படி சாராயம் குடிப்பது மாபாதகச் செயல் அல்லது மாபெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. தாயோடு உறவு கொள்ளல் அல்லது ஒரு பார்ப்பனனைக் கொலை செய்வதற்கு இது ஒப்பானது என்று கூறப்படுகிறது.)
அவர்களுக்கென்று நீதிமன்றங்களை அவர்கள் வைத்திருந்தார்கள். அவர்களின் வழிபாட்டுமுறை, மனையை விட்டகலாத குடும்பம் சார்ந்த வழிபாட்டுமுறையாக இருந்த போதிலும் ‘பலியிடும் அரங்குகளும்’ பலிப்பொருளை உண்ணும் அரங்குகளும் வெளியில் இருந்தன. இவற்றோடு உருவ வழிபாடு ஒருபோதும் தொடர்புபடுத்திக் கூறப்படவில்லை. பரிசில், படகு, தெப்பம், கப்பல் முதலானவற்றை அவர்கள் கட்டினார்கள். அவர்கள் வழக்கமாக வாழ்ந்த இடங்களிலிருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு வணிகத்தின் பொருட்டுப் போக்குவரத்தில் ஈடுபட்டனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் கிடைக்காத பொருள்களில் அவர்களின் கண்களுக்குப் பட்டது ‘காந்தார் ஆடுகளின் மெல்லிய மயிர்தான்! அவர்களுடைய இசைப் பாடல்களில் கடலைப் பற்றிய பாடல் எப்போதாவது இடம் பெற்றிருக்கும்; இண்டஸ் ஆற்றில் பயணம் செய்து கடலை அடைந்ததன் விளைவாக இத்தகைய பாடல்கள் எழுந்தன எனலாம். அவர்களில் சிலர் பிறர் பொருளைக் கவரும் எண்ணத்துடன், மரக்கலங்களில், கூட்டங் கூட்டமாகக் கடலிற் பயணிப்போரை மனத்திற் கொண்டு சென்றனர். அயல்நாடு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கப்பல் பயணம், கப்பல் பாறை மீது மோதியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தோடு முடிவடைந்ததாகக் குறிப்பாகச் சுட்டப்படுகிறது. அண்டை நாட்டு இளவரசர்களுக்கு அவர்கள் தூதுவர்களை அனுப்பினார்கள். ஆனால், பக்கத்து நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவதை அவர்கள் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது. அவர்களது நாட்டின் புகழ்வாய்ந்த ஆறு, மோசசின் காலத்திலேயே எகிப்தியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. பி_சோன் சிந்து, (இதில் பி-_சோன் என்பது எகிப்தியச் சொல்) (காபூலில் இருந்து வந்த இதன் கிளையாறு வடக்கு நோக்கிச் செல்வது) என்று குறிப்பிடப்படுகிறது.
இப்போது நாம் குறிப்பிட்டுப் பேசும் இந்தக் காலகட்டத்தில் எழுத்து வடிவிலான கலைப் படைப்புக்கள் எதையும் ஆரியர்கள் பெற்றிருக்கவில்லை. ஓதுவதற்காகவே வேதங்கள் செய்யுள் வடிவில் அமைக்கப்பட்டன. ஆதலால் அவை ‘சுருதிகள்’ என்று பெயர் பெற்றன. அதாவது அவை ‘கேட்கப்படுபவை’ என்று பெயரிடப்பட்டன.
வேதங்களுக்கு முற்பட்டவை என்று நாம் முன்னரே குறிப்பிட்ட இந்துக்களின் தொன்மை சான்ற தத்துவ நூல்கள் எல்லாம் சூத்திரங்களாகவும், சிறுசிறு கண்ணிகளாகவும் நினைவில் நிற்கக்கூடிய நூற்பாக்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனுதருமத்தின் அமைப்பு ‘ஸ்மிருதி’ வடிவில், அதாவது ‘நினைவிற் கொள்ள வேண்டியது’ என்னும் பொருளில் அமைந்துள்ளது.
இந்துக்களின் மிகப் பெரிய காப்பியங்கள் என்று கருதப்படுகின்ற இராமாயணமும், மகாபாரதமும் வடிவ அமைப்பில் மிகவும் தொன்மை சான்றவை, ஆதலால் அவை புத்தர் காலத்திற்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றன. பேராசிரியர் லாசென் இவை இரண்டும் வாய்மொழியாகப் பின்னையோர்க்கு வழங்கப்பட்டு வந்தவை என்று மிகச் சரியாகவே குறிப்பிடுகின்றார். இக்கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். (பேரா. லாசன் இவ்விரண்டு காப்பியங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தெரிவித்துள்ளார். சடங்குகள், திருவிழாக்கள் நடைபெறும் காலத்தில் இவற்றைப் படிப்பார்கள்; இவை முதன்முதலாகப் பெற்ற, வடிவத்திற்கும் அடுத்த வடிவத்திற்கும் நீண்ட ‘கால இடைவெளி’ இருந்துள்ளது. வால்மீகி, இராமனின் சமகாலத்தவர் என்று கூறப்படுவதனால் இராமாயணத்தின் ஆசிரியர் வால்மீகி என்று கூற முடியாது. மகாபாரதம், இராமாயணத்திற்கு முற்பட்ட வியாசர் என்பவர் அதனைத் தொகுத்தவர். ஓர் அரசனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற ஒரு வீரகாவியமாக அது விளங்கவில்லை. பார்ப்பன பலியீட்டின்போது அது திரும்பக் கூறப்படும் ஒரு வீரகாவியமாகவே தோன்றுகிறது.)
தற்போது இந்தியாவில் காணப்படும் குரல் ஒலிப்புமுறை _ எழுத்து முறை, குகைக் கல்வெட்டுக்களில் சதுரமாகவும் வட்டமான வடிவிலும் காணப்படுகின்ற ‘நாகரி’ எழுத்துக்களின் மூலம், அதன் திருந்திய வடிவம், ஃபெனீசியன், கிரேக்க எழுத்துக்களிலிருந்து தோன்றியதாகும். அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு முன்னரே இந்தியாவில் கிரேக்க எழுத்துக்களின் தாக்கம் நிகழ்ந்திருக்கிறது. வடஇந்தியாவில் காணப்படும் எழுத்துக்களின் மற்றொரு பண்புக்கூறு, ‘செமிட்டிக்’ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். அசோகனின் காலத்திலும் அதற்குப் பின் ‘பேக்டீரியன்’ அரசர்கள் காலத்திலும் செமிட்டிக் மொழியின் தாக்கம் வடஇந்தியாவில் இருந்துள்ளது. பேக்டீரிய மன்னர் வெளியிட்ட நாணயங்களிலும் இந்த எழுத்து முறை காணப்படுகிறது. கிரேக்கர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே இ¢ந்தியாவின் வடக்கு எல்லைப்புற நாடுகளில் இந்த மொழிக் கூறுகள் _ பண்புகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுக்குப் பிறகு, மேற்கத்திய நாட்டிலிருந்து தனித்தன்மை வாய்ந்த எழுத்துமுறை கொண்டுவரப்பட்ட பிறகு (வடஇந்திய) இந்த எழுத்துமுறையை மேலும் செப்பமான முறையில் ‘செய்துருவாக்கல்’ பணி அதிகம் தேவைப்படவில்லை. அது அசிரிய, பாபிலோனிய, பெர்சிய ஆப்பு வடிவ எழுத்து முறைக்கு முந்தியதாக இருக்கலாம். ‘எழுதுவது’ என்பதை அதுகுறித்த போதிலும் உண்மையில் ‘செதுக்குவது’ அல்லது ‘வரிசையாக வெட்டி வைப்பது’ என்றே பொருள்பட்டது; அல்லது சீனர்களின் ஒலியைக் குறித்துக்காட்டாத, சொல்லின் கருத்துக் குறியீட்டு எழுத்துவகை மாதிரி, இதனை முந்தியதாக இருக்கலாம்.
சமஸ்கிருதத்தில் ‘பேனா’வைக் குறிப்பதற்குப் பயன்படும் சொற்களில் ஒன்று ‘அக்சராட்டுலிகா’ அல்லது ‘எழுத்துத் தூரிகை’ என்பது; இது பின் கூறப்பட்ட கருத்து யூகத்திற்குப் பொருந்துகிறது. ‘எழுதுவது’ என்பதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களில் ‘லிபி’ என்பதும் ஒன்றாகும். ‘லிபி’ என்னும் இச்சொல் ‘வண்ணம் பூசு’, ‘எண்ணெய் பூசு’ அல்லது ‘வண்ணக் கலவை மேற்பூசு’ என்பனவற்றைக் குறிக்கக் கூடிய ஒரு வேர்ச்சொல் மூலத்திலிருந்து தோன்றியதாகும். முதலில் ‘படம் வரை’ எழுத்துக்களுக்கு ஒருவேளை இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம்; ‘மாஷி’ அல்லது மை என்பது புகைக்கரியிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இந்த எழுத்து முறைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீர்மப் பொருள் இதுவேயாகும்.
‘வர்ணா’ எனும் சொல் அகர வரிசையில் ஓர் எழுத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது; முதலில் அது வண்ணம் (நிறம்) என்று பொருள்பட்டது. தொன்மைக் காலத்தில் கருத்துக் குறியீட்டின் அடையாளமாகப் ‘படம்’ என்ற பொருளில் வாங்கப்பட்டு வந்தது, என்பதை ஒருவாறு நான் உறுதிசெய்து கொண்டேன். இந்தியக் குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் இந்துக்களின் மிகப் பழமை வாய்ந்த ‘எண்ணுமுறை அமைப்பு _ கிறித்துவ ஊழிக்கு முற்பட்டதும், அதனைத் தொடர்ந்து வருவதுமான இந்த எண்முறை அமைப்பு _ சீனர்களிடமிருந்து பெறப்பட்டதாகும். என் சொற்பொழிவின் இறுதியில் இதுபற்றி நான் விளக்குவேன். இவற்றோடு மேலும் ஒரு கருத்தை நான் இணைக்க விரும்புகிறேன். தமக்கே உரித்தான _ சொந்தமான ஓர் அகரவரிசையை (எழுத்துக்களை) இந்தியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் தங்கள் கருத்து வெளிப்பாட்டிற்கான மாறுபடாத ‘சிறிய ஆற்றல் உடைய எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய ஓர் அகர வரிசையை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்னும் ஒரு தனிப் பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள்!
(தொடரும்)