எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை! நான் ஒரு பகுத்தறிவுவாதி! மக்கள் நலனுக்கான போராளி

மார்ச் 16-31

எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி

அய்யா வைகுண்டசாமி கால் நாட்டிய இல்லத்தில் வாழ்ந்து வருகின்றீர்கள்.. ஆனால் கடவுள் நம்பிக்கை ஏன் எழுத்தாளர் பொன்னீலனுக்கு இல்லை?

‘தாழக்கிடப்பாரைத் தாங்கிப் பிடிப்பதே தருமம்’ என்ற கொள்கை கொண்டவர் அய்யா வைகுண்டர். மனிதர்களை வாழ்விப்பதில் தெய்வம் வளர்த்தவர் அவர். தனிப்பட்ட தெய்வம் ஒன்று நமக்கு வெளியே இருந்து அனைத்தையும் இயக்குகின்றது என்ற கொள்கையில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இன்று நம் மக்கள் வழிபடுகின்ற எல்லோருமே நம் முன்னோர்கள், ஒரு காலத்தில் சமூக முன்னோடிகளாக வாழ்ந்தவர்கள்.

இப்பிரபஞ்சத்தில் தோன்றிய உயிருள்ள, உயிரற்ற அத்தனையுமே பிறப்பும் இல்லாதது, இறப்பும் இல்லாதது. தனக்குரிய உள்ளார்ந்த விதிகளுக்கு உட்பட்டு, அவை என்றென்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயிர்க்குலமும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்தச் செயலாற்றலின் இயக்கமே அனைத்திற்கும் அடிப்படையான ஆற்றல். இது உள்ளார்ந்த விதிகளுக்கு உட்பட்டது. மற்றபடி நம்பிக்கை சார்ந்தவையே அல்ல.

பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களின் ஆண்மையை நீக்க வேண்டும் என்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வந்தது? இதைப்பற்றி எழுத்தாளராக கூறுவது என்ன?

இது உணர்ச்சி வசப்படுபவர்கள் கூறும் பொருத்தமற்ற சொல். இது ஒரு சமூகப் பிரச்சினை. எந்த மிருகமும் செய்யத் துணியாத கொடிய செயல். பெண்களை வன்புணர்வு செய்பவர்கள் வளர்த்த கொடிய பண்பாட்டு கட்டமைப்பு பெண்ணை வெறும் மோகத்தின் _ ஆசையின் உணவாக வளர்த்து விட்டிருக்கிறது. இவர்கள் ஒரு வகையில் சமூக நோயாளிகள். இந்த நோயளிகளுக்கு கொடுக்க வேண்டிய பல்வேறு சிகிச்சைகள் உடனடியாகக் கொடுக்க வேண்டும். அறிவுரீதியாகக் கொடுக்க வேண்டும், சட்டரீதியாகக் கொடுக்க வேண்டும், பள்ளிக்கூடத்திலிருந்தே கொடுக்க வேண்டும், இல்லை இல்லை வீட்டிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும். பெண் வெறும் சதையல்ல என்பதை ஊடகத்துறையினரும் அழுத்தமாக விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். சட்டம், காவல்துறை, நீதித்துறை, இன்னும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பெண் ஒடுக்குமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று பெண்கள் கடும் போராட்டத்தின் நடுவே விடுதலையை நோக்கி முன்னேறுகிறார்கள். அவர்களின் விடுதலைச் செயல்பாடுகளை முழுமையாக ஆதரிக்க வேண்டியதும், பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை மட்டுமல்ல, அறிவார்ந்த சமூகத்தின் கடமையும் கூட. எது சுதந்திரம் என்பதற்கு காந்தியடிகள் அன்றே ஒருமுறை விளக்கம் சொன்னார்.
‘ஒரு பெண் முழுமையாக தன்னை அழகு செய்துகொண்டு நள்ளிரவில் தனிமையாக நடந்து செல்லுவதற்கு எப்போது இயல்பாக முடிகிறதோ, அப்போதுதான் இந்த நாடு சுதந்திரம் பெற்றதெனச் சொல்லுவேன்’ என்றார்.

இன்னும் நமக்குப் பெண் சுதந்திரம் முழுமையாக இல்லை. பெண்களை இரண்டாம் தரமனிதர்களாக, ஆண்களின் புணர்வுக்கான கருவிகளாகப் பார்க்கும் நிலையைக் கவனிக்கும்போது வேதனையும், ஆத்திரமும் வருகிறது. சட்டங்கள் இந்தத் திசையில் கூர்மையாகத் திருத்தப்பட வேண்டும்; ஒரு சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலை பெறுவதிலேயே இருக்கிறதென்பதை உணரவைக்க வேண்டும்.

இன்றையச் சூழலில் எழுத்தாளர் களுக்குப் பாதுகாப்பு இல்லையென்று நீங்கள் உணருகிறீர்களா?
நிச்சயம். நிச்சயம். உண்மையினுள்ளே ஊடுருவி, சமூகத்தின் உள்ளே கிடக்கும் முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துடிக்கும் எழுத்தாளர்கள் சாதி வன்முறையாளர்களாலும், சமய வன்முறையாளர்களாலும், தாக்கப்படுவது மட்டுமல்ல, கொல்லவும் படுகிறார்கள். ஒரு சாதியின் பிரச்சினை பற்றி வெளிப்படையாக எழுத முடியுமா? இதுவா எழுத்தாளர் சுதந்திரம்? அண்மைக் காலத்தில் தமிழகத்திலும், இந்தியாவிலும் எத்தனை நிகழ்வுகள் நடந்துவிட்டன.

எழுத்தாளர் என்பவர் ஆன்மாவின் இன்ஜினீயர் என்றார் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்த ஸ்டாலின்.

எழுத்தாளர்களை இன்றைய சூழல் எழுதவிடாமல் கையைத் தடுக்கிறது. மூளையைக் கசக்குகிறது. ஆன்மாவையே ஒடுக்குகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வன்முறைச் சூழலின் பேரபாயம் இது. அறிவார்ந்தவர்களும், படைப்பாளர்களும் ஒடுக்கப்படும்போது சமூகம் ஒடுங்கிப் போகுமென்பதை, வளர்ச்சி முடங்கிப் போகுமென்பதை இன்றைய ஆதிக்கவாதிகள் உணரவே இல்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

மூடநம்பிக்கைளுக்கு எதிராகப் பேசியதால் பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டார் என்பதைக் கேள்விப்பட்டபோது மனஉணர்வு எப்படி இருந்தது?

அதிகமான கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. பகுத்தறிவாளர்களின் அறிவு வெளிச்சத்தில் தங்களது கோரமுகங்கள்; சமூகத்திற்குத் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வன்முறையாளர்கள் கொலைவாளைக் கையில் எடுக்கிறார்கள். எழுத்தாளர் கல்புர்கி மட்டுமல்ல, இதே ஆண்டு பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரேயும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் நரேந்திர தபோல்கரும் இதேபோன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்னும் பலர் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வன்முறையாளர்களுக்கு துணிச்சல் எப்படி வந்தது? இவர்களின் பின்னிருந்து உந்தி விடுவது இன்றைய வகுப்புவாத சக்திகள் தானே? இந்த வகுப்புவாத வெறியர்கள் தமது பிரச்சாரத்தால் அப்பாவி மக்களைச் சூடேற்றி வருகிறார்கள். சகிப்புத்தன்மையைக் குறைக்கிறார்கள். இல்லையென்றால் உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே முதியவரை அடித்துக் கொன்றிருப்பார்களா? வெட்கக்கேடு.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இரண்டுவிதமான எதிரெதிர் சக்திகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று அறிவாற்றல், மற்றொன்று இதற்கு நேர் எதிரான சமய நம்பிக்கை ஆற்றல். அறிவாற்றல் இயற்கையைத் துருவி ஆராய்கிறது. அதன் பல்வேறு பண்புகளையும், உள்ளாற்றல்களையும் துலக்கி வெளிப்படுத்துகிறது. அவற்றைக் கொண்டு புதிய தொழில்நுட்பத்தையும், கருவியையும் கண்டுபிடித்து வாழ்வுக்குத் தேவையான புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்வதன் வழியாக உலகில் அழகும் ஆற்றலும் பெருகுகிறது.

இதற்கு நேர் எதிரான சமய ஆற்றல் என்ன செய்கிறது? அது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளாகச் சடங்கு சம்பிரதாயத்தைச் செய்பவர்களை தெய்வப் பிரதிநிதிகளாக, இறையின் அம்சமாக நம்பும்படிச் செய்கிறது. சமூகம் இந்தச் சடங்கு சம்பிரதாயத்திலே மாட்டிக்கொண்டு சுருள்கிறது. இதனால் வளர்ச்சி முடமாகிறது.

மேற்கத்திய நாடுகளிலும், பகுத்தறிவும் சமய நம்பிக்கைகளும் மோதிய காலம் உண்டு. பகுத்தறிவாளர்களை சமய நம்பிக்கையாளர்கள் கடுமையாக எதிர்த்து கொடுமைப்படுத்திக் கொலை செய்தார்கள். பகுத்தறிவாளர்கள் வாணலியில் வறுக்கப்பட்டார்கள். சிலுவையில் அறையப்பட்டார்கள். ப்ருனோ, கோப்பர் நிக்கஸ், கலிலியோ இன்னும் பல பெயர்களை வரலாற்றில் நாம் காண முடியும். மேற்கத்திய சமய ஆதிக்கத்தை அறிவியல் கடுமையாகப் போராடி வென்று தன்னை வலுப்படுத்திக் கொண்டது. அதனால் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் அந்த நாடுகள் குத்தகையாளர்களாக ஆகிவிட்டன. இத்தகைய அறிவியலாளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் நோபல் பரிசு முதல் அத்தனைப் பரிசுகளும் கிடைக்கின்றன. நாம் சாமிகளுக்கு சம்பிரதாய சடங்கு செய்வதிலேயே காலத்தைப் போக்குகிறோம்.

இத்தகைய நிகழ்வுகளை எதிர்த்து தமக்குக் கிடைத்த விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்களே?

வகுப்புவாத வன்முறைக்கு எதிராக வெறுப்பும், கோபமும் கொண்ட அறிஞர் பெருமக்கள் எழுத்தாளர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் கிடைத்த பட்டத்தையும், விருதையும் திருப்பிக் கொடுத்து தங்களது கோபத்தைக் காட்டுகிறார்கள். நான் அவர்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன்.

பல மேடைகளில் சமூகத் தீமைகளுக்கு எதிராக நீங்கள் பேசுவதை நானும் கவனித்திருக்கிறேன். அச்சமின்றி பேசுகிறீர்கள். இதில் ஏதாவது எதிர்விளைவுகள் வந்ததுண்டா?
பல நிகழ்வுகளில் மேடையில் என் பேச்சுகளைக் கேட்ட, போலீஸார் என்னைத் தேடிக் கொண்டு

வீட்டிற்கு வருவார்கள். மற்றபடி மோதல்கள் நிகழவில்லை. தனி நபர் தாக்குதல் என்பது என் பேச்சில் இருக்காது.

ஒவ்வொரு படைப்புக்கும் நான் பல வேதனைகள் அடைந்தேன் என்கிறீர்கள்? படைப்பு – வாழ்வின் இன்னல்கள் ஏதாவது கூற முடியுமா?

சொன்னால் விரியும். கரிசல் நாவலை எழுதி வெளியிட்டபோது என் ஊர் சார்ந்த அறிவாளிகளில் சிலர் பொன்னீலன் ஒரு நக்சலைட். அவனை உடனே கைது செய்ய வேண்டுமென்று ஏராளமான புகார் மனுக்களை எழுதி மக்களிடம் பொய்க் கையெழுத்து வாங்கி ஜனாதிபதி முதல் உள்ளூர் எஸ்.பி. வரை தொடர் மனுக்கள் அனுப்பிய காலங்கள் உண்டு. அதற்காக சி.பி.சி.அய்.டி.க்களும் காவல் அதிகாரிகளும் என்னை எத்தனையோ நாட்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து மணிக்கணக்காக கேள்வி கேட்டதுண்டு.

‘புதிய தரிசனங்கள்’ நாவலுக்கு உங்களை உரசிய துன்பங்கள்?

இதுவரை பேட்டிக்காக வெளியிடாத சில பதிவுகளை உன் கேள்விகள் வெளியிட வைக்கின்றன. 1970_75 காலகட்டத்தில் நான் இந்திராகாந்தி ஆதரவாளனாக ஊரில் செயல்பட்டேன். அன்றும் ஓர் இளைஞர் பட்டாளம் என்னோடு இருந்தது. இந்திராகாந்தியின் இருபது அம்சத் திட்டத்தை அமல்படுத்த நாங்கள் முயன்றோம். வெற்றிகளும் பெற்றோம். ஆனால், சஞ்சய் காந்தி அதிகாரத்திற்கு வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. எங்கள் எதிரிகள் பூராவும் அவர்களின் பின்னே போய் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். காவல் துறையை ஏவி விட்டு எங்களைத் துரத்தித் துரத்தி அடித்தார்கள்.

போலீஸாரால் துரத்தப்பட்ட எங்கள் இளைஞர்களைத் தலைமறைவாக வைத்துப் பல நாட்கள் பாதுகாக்கவும், நீதிமன்றத்தில் சரண் செய்து சேதாரமில்லாமல் வெளியே கொண்டு வரவுமான முயற்சிகளில் இந்த பொன்னீலன் அடைந்த வலிகளின் ஆழம் எத்தனை பேருக்குத் தெரியும்? ஊர் வன்முறையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எங்கள் இளைஞர்களில் பலர் அந்தமான், டெல்லி, மும்பை, சென்னை எனச் சிதறி ஓடினார்கள். இறுதியில் பூர்விக வீட்டைப் போட்டுவிட்டு ஆறு ஆண்டுகள் நானும் தலைமறைவாக குழித்துறையில் வாழ்ந்தேன். அன்று என்னைக் கண்காணிப்பதற்காக காவல்துறையால் போடப்பட்ட புகழேந்தி என்ற காவல் ஆய்வாளர் செய்த உதவிகளுக்கு எப்படி நன்றி சொல்வது? ஒரே காரணம்… அவர் என் எழுத்தின் மீது கொண்ட ஈடுபாடு.
நான் கூட ‘மறுபக்கத்தின்’ பாதியில் தான் நிற்கிறேன். இன்னும் அதை முழுமையாக வாசித்து உங்களுடன் உரையாடவில்லை என்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு. பொன்னீலன் என்ற மனிதனின் மன அதிர்வுகளின் சத்தம் மட்டுமே கேட்டு அவரின் வாழ்வியலுக்குள் ஏதாவது பிடிக்க முடியுமா என்று தேடும் நான் இந்நேரத்தில், உங்கள் படைப்புகளின் விமர்சகராக வரவில்லை. உங்கள் படைப்புகள் மீது வாசகர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள், தந்த மனம் தொட்ட விமர்சனங்கள் உண்டா?

மக்கா, நீ இளம் படைப்பாளி. என்னுடைய புதிய தரிசனங்கள் நாவலை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும். 1970களிலிருந்து 76 வரை உள்ள காலச்சூழலில் அரசியல்வாதிகள் செய்த இமாலயத் தவறுகள் என்ன, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு படிப்படியாக வளர்ந்தது. இறுதியில் அது வலுவான சக்தியாக எப்படி உருப்பெற்றது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறேன். ஆனால் நான் சுட்டிக்காட்டிய  இந்த பேராபத்தைச் சமூகம் சார்ந்த கூர்மையுள்ள எந்த விமர்சகரும், வாசகரும் கண்டுகொள்ளவில்லையே. இந்தப் பரிதாபத்தை நான் எங்கே போய்ச் சொல்லுவது?

2010இல் வெளியான ‘மறுபக்கம்’ நாவலும் வகுப்புவாதத்திற்கு எதிரான கூர்மையான பெரும் படைப்பு. வகுப்புவாதம் படிப்படியாகக் கிராமங்களுக்குள்ளே நுழைந்து எப்படி கிராமக் கோயில்களில் வகுப்புவாத விஷத்தைப் பரப்புகிறது என்பது நாவலின் மையச்சரடு. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தவிர எந்த விமர்சகரும், ஆய்வாளரும், அரசியல்வாதியும் நாவலைக் கண்டுகொள்ளவில்லையே, குடலைப் பிடுங்கிப் போட்டாலும் வாழை நாரென்பவர்களிடம் நான் வேறு என்ன சொல்வது? என்ன செய்வது? சுவரில்தான் முட்டிக்கொள்ள வேண்டும்.

(ஒரு படைப்பாளியின் படைப்பு நோக்கம் இந்த உலகம் கண்டுகொள்ளாத வேதனை அவர் முகத்தில் தெரிந்தது)

இந்தத் துன்பங்களில் உங்கள் குடும்பம் உதவியாக இருந்ததா?

என் மனைவி இந்தக் காலகட்டங்களில் எனக்கு அரணாக இருந்தார். எங்கள் தலைமறைவுக் காலங்களில் நம்பிக் கையூட்டினார். நேசித்துப் பாதுகாத்தார். நகைகளையெல்லாம் கழட்டி செலவுக்குக் கொடுத்தார். அவர் தந்த _ தரும் வலிமை நிகரற்றது.

பாலியல் வன்புணர்வு நிகழ்த்தும் வன்முறையாளர்களைக் கண்டிக்காமல், மேல்மட்டம் என்ற நிலையில் உள்ள படித்தவர்கள்கூடப் பெண்களைக் குறை கூறுகிறார்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பெண்கள் இந்த உலகத்தின் படைப்பாற்றலின் சரிபாதியானவர்கள். அவர்கள் முழுமையாக விடுதலை பெற வேண்டும். பெண்களின் சுதந்திரத்தைக் குறைகூறுபவர்கள் மனுவாதிகள், வக்கிரம் பிடித்தவர்கள். உணவும், உடையும் அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆதியில் எல்லா சமூகங்களிலும் பெண் தலைமையாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆதி தெய்வங்களும் பெண்கள் என்பதும் தெரியும். எப்போது பெண்கள் ஒடுக்கப்பட்டார்களோ அப்போதே நாட்டில் ஆண் தெய்வங்களின் ஆதிக்கம் தொடங்கி விட்டது. பகவத் கீதையும், மனுதர்மமும் பெண்களைக் கீழாக்கின. மனுதர்மமோ நால்வருணத்தின் கீழ்வர்ணமாகப் பெண்களை ஒடுக்கித் தள்ளியது. எல்லா வருணத்தின் ஆண்களும் தங்கள் பெயரின் பின்னே சாதிப் பெயரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் இன்று தான் ஒட்டிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஏற்கெனவே அப்படி ஒட்டிக்கொள்ளும் தகுதி பெற்ற பெண்களைக் கொண்ட சமூகங்கள் இருக்கின்றன. அவர்கள் நால்வருணத்திற்கு வெளியே உள்ளவர்கள்.

இத்தகைய ஒடுக்கு முறைகளை எதிர்த்து பெண்கள் விடுதலை சார்ந்த தங்கள் போக்கை வெளிப்படுத்தும்போது சகித்துக் கொள்ள முடியாத ஆணாதிக்க வெறியர்கள் இப்படியெல்லாம் கூச்சல் போடுகிறார்கள். எது ஆபாசம் என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. கோயில் பூசகர் முதல் இராணுவ வீரர் வரை ஆண்கள் செய்யும் அத்தனை தொழில்களிலும், பெண்களுக்கும் சம உரிமையும் பங்கும் அளிக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டம் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராட வேண்டும். ஆதிக்க வெறியர்களின் கொட்டத்தை சமூகம் கறாராக எதிர்க்க வேண்டும்.

படைப்பாளி தன் மதம், தன் சாதி, தன் இனம் என்ற முனைப்பில் எழுதுவதும், இயங்குவதும் நல்லதா?

அப்படிப்பட்டவர்கள் போலிகள் என்பது என் நம்பிக்கை. எல்லோரும் ஏதோ ஒரு சாதியில், மதத்தில் பிறக்கிறோம். இந்தப் புள்ளியில்இருந்து கொண்டு வெளிமுகமாக விசாலமடைந்து, எல்லோரையும் சரிசமமாக அரவணைக்கும் மனப்போக்கு கொள்ள வேண்டும். அதுவே அறிவு. எங்கு துன்பம் என்றாலும், துயர் என்றாலும் அது எனக்குரிய துன்பம் என்று படைப்பாளருக்கு பார்க்கத் தெரிய வேண்டும், மனம் அதிர வேண்டும். இதற்கு மனம் விரிய வேண்டும். உள்முகமாக சிந்திப்பவர்கள் போலிகள், வெறியர்கள்.

பொன்னீலன் எல்லோரையும் புகழக் கூடியவர், புதிய எழுத்தாளர்களைப் பாராட்டித் தள்ளி ஆகா எனப் புகழ்ந்துவிடுவார் என என் காதுபட உங்களைப் பற்றிய இந்த விமர்சனங்கள் விழுந்தது உண்டு. இதற்கு நீங்கள் தரும் விளக்கம்?

நான் ஒரு படைப்பாளி. என் சக படைப்பாளிகளையும் என் உறவாகத்தான் பார்க்கிறேன். தி.க.சி. சொல்லுவார், ‘நாமெல்லாம் மழை போல எல்லா இடங்களிலும் பெய்வோம். வளருபவை வளரட்டும்.’

ஜெயகாந்தனின் முதல் படைப்பை ஜீவா விமர்சித்திருந்தால் இவ்வளவு பிரமாண்டமான படைப்பாளியாக அவர் உருவாகியிருக்க முடியுமா?

சிம்மசொப்பனத்துக்காக தனுஷ் இராமசாமியை தி.சு. நடராசன் தட்டிக்-கொடுத்து உற்சாகப்படுத்தியதால்தானே அவரது ஆளுமை இத்தனை அற்புதமாக வெளிப்-பட்டது. திறமைசாலிகளை வளரும் வேகத்தில் கிள்ளி எறிந்தால் அதன்பின் துளிர்ப்பது மிகவும் கடினம்.
சமூக அன்பு, சமூக அறம், சமூக மேன்மை இதுதான் என் அளவுகோல். இளைஞர்களை கொண்டாடினால்தான் வருங்கால படைப்புலகம் தழைக்கும். எந்தக் குழந்தையும் கால் ஊன்றியவுடனே போட்டி ஓட்டத்திற்குத் தயாராகுவதில்லை. தடுமாறி கீழே விழும். ‘ஆகா என்ன அழகா நடந்துட்ட, இன்னும் ஒரு தடவை கூட எழும்பி நட’ இதுதான் பொன்னீலனின் தாய்மை உணர்வு.

நீங்கள் உங்கள் படைப்பில் திருப்தி அடைந்ததுண்டா?

ஒருபோதும் இல்லை. எழுதி முடிக்கும்போது இதுதான் சிறந்த எழுத்துப் போல் தோன்றும். எழுதி முடித்து விட்டு ஓய்வாக யோசிக்கும்-போது இம்புட்டுதானா? என்று மனம் சலிக்கும். திருப்திக்கும், திருப்தியின்மைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பதுதான் என் இலக்கிய வாழ்க்கை.

இவ்வளவு தீரத்துடன் வாழ்வை வடிவமைத்து வருவதற்கு நீங்கள் கையாண்ட நெறியில் எங்களுக்கு சிலவற்றைத் தாருங்கள்?

நாவடக்கம், நெஞ்சின் வெறியடக்கம் இவையிரண்டில், சாவடக்கம் ஆகிவிடும்.

இது நான் எழுதிய குறள். ஒருவன் நாவையும், அலைபாயும் எண்ணங்களின் அர்த்தமற்ற ஆசைகளையும் அடக்கி வாழத் தெரிந்து-விட்டால் அவனுக்கு சாவு அடங்கிவிடும். சாவு அவனைக் கண்டு அச்சமுடன் விலகி ஓடும். இவையிரண்டையும் அடக்காதவனுக்கு அச்சத்தின் சாவுகள் தினம் தினம் நடந்து கொண்டேயிருக்கும். தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு மரணம் இல்லை. அவனே அவனை ஆளுகிறான்.

 


 

அன்னையார் பற்றி அய்யா சொல்கிறார்
இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாகவே எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள் அந்த அம்மாமீது குறை கூறுகிறார்கள்.
_ தந்தை பெரியார்
விடுதலை 13.2.1963

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *