இறுதிச்சுற்று

பிப்ரவரி 16-28

வன்முறை, விரசம், தனிமனித துதிபாடல் என்று வரிசையாய் தமிழில் திரைப்படங்கள் வரும் நிலையில், உடல்திறப் போட்டியை அடிப்படையாய் வைத்து ஒரு திரைப்படம் உன்னதமாக உருவாக்கப்பட்டுள்ளது உண்மையில் மனதிற்கு நிறைவும் மகிழ்வும் அளிக்கிறது.

இயக்குநர் சுதா கொங்கரா சில ஆண்டுகள் உழைத்து இதைச் சாதித்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. பூவையர், பைங்கொடி என்று போற்றிப் பொத்தி பெண்களைப் போகப் பொருளாக வைத்திருந்த ஒரு சமுதாயத்தில் பெண் உடல்திறப் போட்டியில் சாதிக்கக் கூடியவள் _ அதுவும் குத்துச் சண்டைப் போட்டியில் என்பதை உறுதி செய்வதன் மூலம் பெண்ணினம் சமையலுக்குரிய மெல்லினம் அல்ல அது வலுக்காட்டி சாதிக்கும் வல்லினம்தான் என்பதையும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது.

இவ்வகையில் பெரியார் விரும்பிய பெண்ணை இப்படம் உருவாக்கிக் காட்டி-யுள்ளது. இதுபோல பல செய்திகளைச் சொல்லாமல் சொல்கிறது இப்படம். தன் கை முறிந்தது யாரால் என்பது மதிக்குத் தெரியும் என்பதை உணர்த்தும் விதத்தையும், பயிற்சியளிக்காமைக்கு மதியின் அக்காவுக்கு மாதவன் பதில் சொல்லும் விதமும் இதுபோன்ற சிறப்புக்கான சான்றுகள்.

மாதவனும், ரித்திகா சிங்கும் தங்கள் பாத்திரத்தில் முத்திரைப் பதித்துள்ளார்கள். மிகையற்ற இயல்புத்தன்மை மேலோங்கி நிற்பது கூடுதல் சிறப்புச் சேர்க்கிறது. முரட்டுத்தனமான பெண்ணாக வீரம் காட்டும் ரித்திகா சிங், காதல் வயப்பட்ட நிலையில் முற்றிலும் நளினமாக மாறுவது போற்றவேண்டிய நடிப்பாற்றல்.

நடிப்பின் சிகரமான நாசர் கம்பீரம், கோமாளித்தனம் இரண்டிலும் ஒளிவிடுகிறார். வெங்கிட்டும் விளாசுகிறார்.

உலக அளவில் உடல் திறப் போட்டிகளில் சாதிக்கக்கூடிய ஆற்றலாளர்கள், குப்பங்களிலும், குடிசைப்புறங்களிலும் கலந்து கிடக்கிறார்கள் என்ற உண்மை நிலையை உணர்த்த வேண்டியவர்களுக்கு உறைக்கும்படி உரைத்திருக்கிறது இப்படம்.

அருண் மதீஸ்வரனின் வசனம் சமூக அக்கறையுடன் இருப்பது படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. சிவகுமார் விஜயனின் கேமரா, காட்சிகளை நேரில் காணும் உணர்வை உருவாக்குகின்றது. சந்தோஷ் நாராயணன் இசையும், பாடகி தீ_யின் குரல் பொருத்தமும் அருமை. ஒப்பனைக் கலைஞர்களின் திறன் தெளிவாய்த் தெரிகிறது.

படத்தில் பாராட்டப்பட வேண்டியவை என்று பட்டியல் இட்டால் அது நீளூம் என்பதே இப்படத்தின் தரத்திற்கும், தகுதிக்கும், சிறப்புக்கும் அடையாளம்.

குப்பத்து மக்களை குடிகாரப் பின்னணியில் காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. உழைக்கும் மக்கள் குடிக்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களையும் குடியிலிருந்து மீட்க வேண்டிய நிலையில், குடியை குடிசையின் இயல்பாக்கும் நிலையைத் தவிர்த்திருக்கலாம். மார்வாடிப் பெண் விரும்பி மணக்கும் ஒருவர் குடிகாரராக, பொறுப்-பற்றவராக இருக்க வாய்ப்பில்லை யென்ற யதார்த்தம் தர்க்கப் பார்வையில் இங்கு இடிக்கிறது.

பெண்ணியத்தை வல்லினமாக்கி உயர்த்தும் உன்னத நோக்கினைப் போலவே, குப்பத்துப் பகுதிகளையும் கலாச்சார மாண்புக்கு உரியவையாகக் காட்டுவதே சமுதாய மாற்றத்திற்கு ஊக்கமளிக்கும். விளிம்பு நிலை மக்களிடம்தான் கலாச்சார விழுமங்கள் மிகுந்து இருக்கின்றன என்பது உண்மை நிலையுமாகும்.

இனி வருங்காலங்களில் இவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற வேட்கையில் இவைச் சுட்டப்பட்டாலும் ஒட்டுமொத்தத்தில் படம் உன்னதம். படத்திற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *