– மஞ்சை வசந்தன்
ரோஹிந்த் வேமுலா தனிமனிதன் அல்ல தத்துவ அடையாளம்! அவரது இறப்பு தற்கொலை அல்ல, அது படுகொலை! ஆம். நிறுவனப் படுகொலை! நெருக்கடி தந்து நிகழ்த்திய கொலை! ஆதிக்க மதவாத, ஜாதிவெறி சக்திகளின் தாகந் தணிக்கக் கொடுக்கப்பட்ட பலி!
மத்திய அமைச்சர்கள் முதல் துணைவேந்தர் வரை கூட்டுச் சதிசெய்து கொடுத்த நெருக்கடியின் விளைவே அம்மாணவரின் மரணம்.
அந்த மாணவர் இறப்பதற்கு முன் எழுதியுள்ள கடிதம் இலக்கியத் தரமுடையது. அவர் ஒரு ஆற்றல்மிகு எழுத்தாளர் என்பதைக் காட்டும் ஆவணம் அது. எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் அக்கடிதத்தின் உள்ளடக்கம் அவரது உணர்வுகளை ஒருசேர உயிர்த் துடிப்புடன் காட்டி நிற்கிறது. ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் மனக் குமுறலை, தாழ்த்தப்பட்ட மாணவர்களின், தவிப்பை, இறுக்கத்தை, இழிவை, வேதனையை அவர்கள் மீது கொடுக்கப்படும் நெருக்கடியை, கொடுமையை, கடுமையை, அவர்களின் பின்னணியை, பிரச்சினையை அக்கடிதம் அப்பட்டமாய் வெளிக்காட்டுகிறது.
இதோ அவர் இறுதியாய் எழுதிய அக்கடிதம்!
“காலை வணக்கம்,
இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள், என்னை பரிபூரணமாக நேசித்தீர்கள், என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்தி விட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்தத் தற்கொலைக் கடிதத்தை மட்டுமே…
அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப்பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கடத்தப் பட்டவை, நமது அன்பு கட்டமைக்கப் பட்டவை, நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நாம் என்ற சுயமான ரூபமே ஒரு செயற்கை வடிவமாகிவிட்டது. எள்ளளவும் காயமடையாமல் அன்பை பெறுவது என்பது மிகவும் கடினமாகி விட்டது.
ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில நேரங்களில் வாக்கு, சில நேரங்களில் எண் பலம், சில நேரங்களில் சில பொருட்கள்கூட அவனது அடையாளத்தை தீர்மானிக்கின்றன. ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை.
சில நட்சத்திரத் துகள்களால் ஒரு பிரம்மாண்டம் சமைக்கப்பட்டதுபோல், மனிதனின் மாண்பு சில அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வி, அரசியல், சாலைகள், வாழ்வு, சாவு என எல்லாவற்றிலும் இத்தகைய நிர்ணயங்கள் வியாபித்துக் கிடக்கின்றன.
இதுமாதிரியான கடிதத்தை நான் எழுதுவது இதுவே முதன்முறை. ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லலாம். இது ஒருவேளை அர்த்த மற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
இந்த உலகம் மீதான எனது புரிதல் தவறாக இருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல்கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை; ஆனால் நான் எப்போதுமே அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். வாழ்க்கையை துவக்குவதற்கு வழி தெரியா தேடலுக்கான அவசரம்.
சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. (நானே எனது வார்த்தைகளை அடித்துவிடுகிறேன்).
இத்தருணத்தில் நான் வேதனைப் படவில்லை, துன்பப்படவில்லை. என்னுள் ஒரு வெற்றிடத்தை நான் உணர்கிறேன். அது பரிதாபத்துக்குரியது. பரிதாபத்தின் உந்துதலால் நான் இதைச் செய்கிறேன்.
இதற்காக நான் கோழை என்று முத்திரை குத்தப்படலாம். சுயநலவாதி என்று சாடப்படலாம். ஏன், முட்டாள் என்று நிந்திக்கப்படலாம். என்னை எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை. மறுபிறவி கதைகள், பேய்கள், பரிசுத்த ஆவிகள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் நம்பிக்கையெல்லாம் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரங்களை அடைய முடியும், வேறு உலகங்களை அறிய முடியும் என்பது மட்டுமே.
இந்தக் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்காக இதை செய்ய முடியும். எனது கல்வி உதவித்தொகை 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த உதவித்தொகை என் குடும்பத்தினருக்கு எப்படியாவது கிடைக்க ஏதாவது செய்யுங்கள். ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தை திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும், ராம்ஜியிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்.
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காகக் கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
உங்கள் அறையை நான் என் சாவுக்காக பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் உமா அண்ணா.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர், என்னை பொறுத்தருள வேண்டும். நீங்கள் என்னை மிதமிஞ்சிய அளவு நேசித்தீர்கள். தங்கள் எதிர்காலம் செழிக்க என் வாழ்த்துகள்.
இறுதியாக இதை உதிர்க்கிறேன்… ஜெய் பீம்.’’
(ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்)
ஏன் இந்தக் கொலை?
ரோஹித் வெமுலா (Rohith Vemula) அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்த ஆற்றல்மிகு, அறிவு நிறை மாணவர். இவர், பொதுநலனிலும் அதிக அக்கறை உடையவர். அம்பேத்கர் கட்டமைப்பின் (ASA) அய்தராபாத் பல்கலைக்கழகப் பிரிவின் தலைவர்களுள் ஒருவர்.
தந்தை காவலாளி, தாய் தையல் தொழிலாளி. வறிய குடும்பத்தில் பிறந்து உயர்ந்து வந்தவர்.
2016 ஜனவரி மாதத் தொடக்கத்தில், ABVP என்ற இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்களின் பொய்ப் புகாரின்பேரில், பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி இராணி கொடுத்த நெருக்குதலால், இவர் உட்பட 5 தலித் மாணவர்கள் (முனைவர் பட்ட ஆய்வாளர்கள்) பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்பட்டார்கள்.
ஆனால், நீக்கப்பட்ட இவர்கள், உடனே பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறாமல், மாணவர்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒரு சிறு கூடாரம் அமைத்து, மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராய் போராட்டம் நடத்தினர்.
சமூகநீதிக்கான கூட்டு நடவடிக்கைக்குழு(Joint Action Committee for Social Justice) என்ற பதாகையின் கீழ் மாணவர் இயக்கங்களை ஒருங்கிணைத்து, தர்ணா, பேரணி போன்றவற்றை நடத்தியதோடு, பல்கலைக் கழக நிர்வாகக் கட்டிடத்தைக் கைப்பற்றுதல் வரை பல்வேறு போராட்டங்களை இரு வாரங்களுக்கு மேலாக நடத்தினர்.
ஆனால், இவ்வளவு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையிலும், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில்தான் ரோஹித் வெமுலா மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். சராசரி மாணவன் என்றால் தான் நீக்கப்பட்டது குறித்து மட்டுமே கவலை கொண்டிருப்பார். ஆனால் இவர், தெளிவுள்ள, சமூக அக்கறையுள்ள, உரிமை வேட்கையுள்ளவர் என்பதால், தான் பிறந்த, வளர்ந்த சமுதாயத்தின் நிலை பற்றியும், அச்சமுதாயத்தின் மீது ஆதிக்கச் சக்திகள் நிகழ்த்தும் தாக்குதல், நெருக்குதல் குறித்தும் வெகுவாக வேதனைப்பட்டார்.
அந்த வேதனையில், குமுறலில், உள்ள உளைச்சலின் உந்துதலால் 17.10.2016 அன்று தனது நண்பரின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த மாணவன் உடலை எடுக்க விடாமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 18.01.2016 அன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து அய்தராபாத் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.
மாணவர்கள் போராட்டம் தீவிர மடைந்ததால் ரோஹித் உடலை போலீசார் கைப்பற்றி கமுக்கமாகக் கொண்டு சென்று எரித்தனர்.
மத்திய மந்திரிகள், துணைவேந்தர் கூட்டுச் சதி:
மத்தியில் ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி. கட்சி. பி.ஜே.பி.யின் இயக்குப்பொறி ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது. தாழ்த்தப்பட்டவர்களை ஒழித்துக் கட்டுவதில் உறுதியுடன் நிற்பது.
தாழ்த்தப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கக் கூடாது. அவர்களுக்கு மெல்லக் கொல்லும் நஞ்சு கொடுத்து அழிக்க வேண்டும் என்றெல்லாம் இரகசிய சுற்றறிக்கை அனுப்பிய அமைப்பு.
இந்த ஆர்.எஸ்.எஸ்.இல் பயிற்சிபெற்ற ஜாதிவெறி, மதவெறி கொண்டவர்கள்தான் இந்த இரண்டு மத்திய மந்திரிகளும் பல்கலைக்கழகத் துணைவேந்தரும்.
தலித் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, குறுகிய காலத்தில் கடிதம் மேல் கடிதம் அனுப்பி நெருக்கடி தந்தவர்கள் இந்த அமைச்சர்கள். கொஞ்சங்கூட ஈவு இரக்கமின்றி கொடுமையாக அநீதியாக நடவடிக்கை எடுத்தவர் அந்தத் துணைவேந்தர் அப்பாராவ்.
சென்னை அய்.அய்.டி.யில் ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இயக்குநர், மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராய் அரங்கேற்றிய கொடுமைகளையும், அம்பேத்கர் பெரியார் பெயரிலான அமைப்பைத் தடை செய்து முடக்கியதையும், தற்போது அய்தராபாத்தில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடுங்கொலை நிகழ்வையும், அப்பட்டமாக அநியாயமாய் மாணவர்கள் மீது எந்தக் காரணமும் இன்றி ஜாதிவெறியில், காழ்ப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால், நாடு முழுக்க இந்த மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராயும் அவர்களின் அமைப்புகளுக்கு எதிராயும் திட்டமிட்டு, சூழ்ச்சி வலை பின்னி அடக்கி ஒடுக்கி அழிக்க முயலும் சதி வெளிப்படுகிறது.
சாதி வெறுப்பும், சமூகப் புறக்கணிப்பும் நிறைந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொலைக் களங்களாகவே இருக்கின்றன என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் எப்படியெல்லாம் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள் என்பதுபற்றி ஆய்வு நடத்திய யு.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட் தலைமையிலான குழு, அங்கே எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் படுமோசமான அளவுக்கு நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்ற கொடுமையால் இதற்குமுன் செந்தில்குமார் என்ற மாணவர் மரணமடைந்தார். ஆனால், வயிற்றுவலியால் அவர் இறந்தார் என்று மாற்றி மறைத்தனர். ரோஹித்தின் கல்வி உதவித்தொகையை கடந்த 7 மாதங்களாக, காரணமின்றி நிறுத்தி வைத்தனர்.
இதேபோன்று இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் உமேஷ் குமார் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை விளக்கி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். உயர்ஜாதியினர் தன்னைக் கேவலப்படுத்தி பல்கலைக் கழகத்திலிருந்து விலக்கியதாயும், தன்னிடம் பணம் பறிப்பதாகவும் கூறினார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆக, உயர்கல்வி நிறுவனங்களில் உயர்ஜாதியின் கொடுமை பி.ஜே.பி. ஆட்சியில் பெருகி வருவதைத் தெரிவிக்கிறது!
தமிழகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நிலை!
மத்திய பி.ஜே.பி. ஆட்சிதான் இப்படி என்றில்லாமல் தமிழகத்தில் ஆளுகின்ற அ.தி.மு.க. அரசும் பி.ஜே.பி.யின் இணை அமைப்பாகச் செயல்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்து வருகிறது.
தலித் இளைஞர்கள் காதல் காரணங்களுக்காகப் படுகொலை செய்யப்படும் போது, அரசு எந்திரமும், காவல் துறையும் பாராமுகமாக நடந்து கொள்வதும்; நேர்மையாக நடக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கே உயிர் உத்தரவாதம் இல்லாத நிலையும் அண்மைக் காலங்களில் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று வழுவூர் திருநாள் கொண்டசேரியில் நிகழ்ந்த அறக்கொலை!
இறந்துபோன தாழ்த்தப்பட்டவரின் பிணத்தைக்கூட பொது வீதியில் எடுத்துச் செல்ல இயலாத நிலை. பெரியார் போராடி பண்படுத்திய மண்ணில் பெரியார் பெயரைச் சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் நடக்கிறது என்றால்; நீதிமன்றம் ஆணையிட்டும் அதற்கு எதிராய் காவல்துறை உதவியுடன் அநீதி நடக்கிறது என்றால், இந்த ஆட்சியின் மீதும் காவல் துறையின் மீதும் பல்வேறு அய்யப்பாடுகளை அது ஏற்படுத்துகிறது.
திருநாள் கொண்டசேரியில் 86 வயதுடைய குஞ்சம்மாள் என்ற பெண் 26.11.2015 அன்று இறந்துவிட்டார். வயல்வழியே பிணத்தை எடுத்துச் செல்ல இயலாத சூழலில் பொதுப் பாதை வழியாக பிணத்தை எடுத்துச் சென்றபோது உயர் ஜாதியினர் தடுக்க, மூன்று நாள் பிணம் வீட்டிலே கிடத்தப்பட்டது. பின் ஆர்.டி.ஓ. உதவியுடன் வேறு குறுக்குப் பாதை வழியே கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
அடுத்து 03.01.2016 அன்று இந்தக் குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து இறந்துபட, அவரது உடலும் பொதுப் பாதை வழியே எடுத்துச் செல்ல ஆதிக்கச் ஜாதியினர் தடுத்தனர். அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, பொதுச் சுடுகாட்டுப் பாதை வழியே எடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், உயர்நீதிமன்ற ஆணையை ஒதுக்கித் தள்ளிய தமிழக அரசும் காவல் துறையினரும் பிணத்தை உரியவர்களிமிருந்து பிடுங்கி உரிய பாதையில் எடுத்துச் செல்லாது, குறுக்குவழியில்கொண்டு சென்று அவசர அவசரமாகப் புதைத்துள்ளனர். நியாயத்திற்காகப் போராடிய தாழ்த்தப்பட்டோர் மீது தடியடி நடத்தியுள்ளனர். ஆதிக்க ஜாதியினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை!
ஆக, தாழ்த்தப்பட்டோரைப் பொருத்தவரை மத்திய அரசும் எதிராய்ச் செயல்படுகிறது; உயர்நீதிமன்ற ஆணையையும் மீறி மாநிலஅரசும், காவல் துறையும் எதிராய்ச் செயல்படுகிறது என்றால், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான செயல்பாடுகள் சட்டம், நீதி இவற்றை மீறி செயல்படுத்தப்படுகின்றன என்பது வெளிப்படை. அதுவும் திட்டமிட்டு உயர் ஜாதியினருக்கு ஆதரவாய் செயல்படுத்தப்படுகின்றன என்பது உறுதியாகிறது.
எனவே, தாழ்த்தப்பட்டோரும், ஜாதி மறுப்பாளர்களும், முற்போக்காளர்களும் ஓரணியில் ஒற்றுமையாய் நின்று, இந்தச் சதியை முறியடித்து, சமூகநீதி காக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். தவறினால் மதவாத அரசு தனது கொடூர கையை இன்னும் நீளமாய் நீட்டும்! எச்சரிக்கை!