தலையெழுத்து!

ஜனவரி 16-31

ரயில் சிநேகிதன், பஸ் சிநேகிதன், நாடக மேடைச் சிநேகிதன், சினிமாக் கொட்டகைச் சிநேகிதன் _ இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் திடீரென்று எத்தனை எத்தனையோ சிநேகிதர்கள் தோன்றி தோன்றி மறைகிறார்களல்லவா? அதே மாதிரிதான் செங்கண்ணனும் என்னுடைய கடற்கரைச் சிநேகிதனாகத் தோன்றினான். ஆனால், மற்றவர்களைப்போல்அவன் மறைந்து விடவில்லை; தினசரி கடற்கரைக்குப் போகும்பொதெல்லாம் என் கண்களுக்குக் காட்சியளித்துக் கொண்டேயிருந்தான்.

என்மீது அளவில்லாத நம்பிக்கை அவனுக்கு. இதற்குக் காரணம் என்னவென்றே எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரு நாளாவது என்னைப் பற்றியோ, என்னுடைய நோக்கத்தைப் பற்றியோ அறிந்துகொள்ள ஆவலோ, அக்கரையோ காட்டியவனேயல்ல. ஒரு வேளை நான் வழக்கமாக அணிந்து வரும் கதராடையைக் கண்டு, என்னையும் காந்தி மகானுக்குச் சமமாக நினைத்துவிட்டானோ, என்னவோ? அப்படித்தானே இன்றைய உலகம் எத்தனையோ விஷயங்களில் மோசம் போகிறது. அன்று சாயந்திரம் நான் கடற்கரைக்குப் போய்ச் சேருவதற்கும், செங்கண்ணனும் அவனுடைய தேழன் கறுப்புக் கண்ணனும் கடலிலிருந்து கட்டு மரத்தில் மிதந்து வந்து கரை சேருவதற்கும் பொழுது சரியாயிருந்தது.

“என்ன, செங்கண்ணா! இன்று நல்ல வேட்டையா?’’ என்றேன்.

“எங்கே, சாமி! இந்தப் பாழாப்போன காத்துத்தான் இப்படி அடித்துத் தொலைக்குதே! கொஞ்சம் ஏமாந்தா ஆளையே தூக்கிக்கிட்டு இல்லே போய்விடும் போலிருக்கு!’’ என்றான்.

“ஆமாம், ஆமாம், அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் கடலில் இறங்கினீர்கள்? முதலில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால்தானே அப்புறம் உடலைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!’’

“நல்லாச் சொன்னிங்க! முதலில் உடலைக் காப்பாற்றிக் கொண்டால்தானே அப்புறம்

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுங்க!’’

“அதுவும் உண்மைதான்!’’

“அதுக்குத்தான் சாமி, காலங்காத்தாலே எழுந்து இரண்டு பேருமாப் போனோம். கடைசியிலே ஒரு கூடை மீனுக்குக்கூட வழியில்லாமல் போச்சு!’’

“அந்த ஒரு கூடை மீன் என்ன விலைக்குப் போகுமோ?’’

“இப்போ விக்கிற விலைக்கு அஞ்சு ரூவாகூடப் போவும், சாமி! ஆனா அந்தப் பாவிப்பய மூணு ரூவாதானே கொடுக்கப் போறான்?’’

“அது யார், அந்தப் பாவிப் பயல்?’’

“அவன்தான் அந்தக் காதர் மியான் சாயபு!’’

“இரண்டு வாரத்துக்கு முன்பு அந்த இருளப்பன் தெருவிலே, ஏகாம்பர முதலியார் வீட்டை எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தானே, அவனா?’’

“ஆமாம், சாமி! நேத்துக் கூடக் குதிரை வண்டியிலே வந்து இங்கே நின்னுக்கிட்டு இல்லே. அவன்தான்?’’

“ஓஹோ! நீ ஏன் ஒரு கூடை மீன் அய்ந்து ரூபாய்க்கு வாங்குபவனை விட்டுவிட்டு, மூன்று ரூபாய்க்கு வாங்கும் அந்தப் பாவிப் பயலுக்கு விற்க வேண்டும்? யார் அதிகமாக விலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு விற்றுவிட்டுப் போகிறது!’’

“அது எப்படி முடியும், சாமி….?’’

“ஏன் முடியாது? காலையிலிருந்து மாலை வரை கஞ்சிகூட இல்லாமல் காற்றிலும் கடலிலும் அலைந்து திரிபவன் நீ! கட்டு மரத்தை முக்கிமுனகித் தள்ளிக்கொண்டு கடலோடு போய் வருபவன் நீ! அதை உன் இஷ்டப்படி விற்பதற்கு உனக்கு உரிமையில்லையா?’’

“முன்னெல்லாம் இருந்தது, சாமி! இப்போதுதான்…!’’

“இன்போது மட்டும் என்ன?’’

“போன மாசம் என் மவளுக்குக் கண்ணாலம் நடந்திச்சு. அதுக்காவ ஒரு நூறு ரூவா அந்தப் பாவிப்பயக்கிட்டே கடனா வாங்கிக்கிட்டேன். அதிலேயிருந்து நான் பிடிக்கிற மீனையெல்லாம் கூடை மூணு ரூவாய் வீதம் அவனுக்கே கொடுக்கிறதுன்னும், கடனுக்காவத் தினம் ஒரு ரூவா கழிக்கிறதுன்னும் பேச்சு! வெளியே ஒரு கூடை மீன் அஞ்சு ரூபாய்க்கு வித்தாலும் சரி, பத்து ரூவாய்க்கு வித்தாலும் சரி, நான் மட்டும் அவன்கிட்ட வாங்கிய கடனைத் தீர்க்கும் வரை கூடை மூணு ரூவாய்ன்னு அவனுக்கேதான் வித்துக்கிட்டு இருக்கணும்!’’

“அப்படியா, செங்கண்ணா’ அந்தப் பாழும் பணத்தால் ஆகாத காரியம் உலகத்தில் ஒன்றுமேயில்லை போலிருக்கிறது! ஆமாம், உன் மகள் பிறந்தபோதே அவளுக்குப் பின்னால் கல்யாணம் செய்ய வேண்டியிருக்கும் என்று உனக்கு முன்னாலேயே தெரியுமோ, இல்லையோ? ஏன் முதலிலிருந்தே அதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது? அப்படிச் செய்திருந்தால் இப்போது காதர்மியான் சாயபுவிடம் நூறு ரூபாய் கடனும் வாங்க வேண்டியதில்லை. தினசரி இரண்டு ரூபாய் நஷ்டத்துக்கு அவனிடமே மீனையும் விற்க வேண்டியதில்லையல்லவா?’’

“எங்கே முடியுது, சாமி! வருவது வயித்துக்கே எட்டலே! இன்னிக்குத்தான் பாருங்களேன்.

அவன் வந்து இந்த மீனை எடுமுத்துக்கிட்டுக் கடனுக்கு ஒரு ரூவா போவ, பாக்கி இரண்டு ரூவா தரப் போறான். அதுலே கறுப்பண்ணன் பங்கு ஒண்ணரை ரூவா போச்சு! போனா, அரை ரூவாதான் எனக்குக் கெடைக்கப் போவது! அதைத்தான் வூட்டுக்குக் கொண்டு போவ முடியுதுங்களா? இல்லை! காலையிலேயிருந்து கஷ்டப்பட்ட உடம்புக்குள்ளே அந்தக் கள்ளத் தண்ணி போனாத்தான் சரிப்பட்டு வரேங்கிறது…!’’

“அட, பாவி! உன் பெண்டாட்டி, பிள்ளைக்கெல்லாம் இராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன வழி!?’’

“அதுங்களே எங்கேயாச்சும் ஏதாச்சும் கூலிப் பாடுபட்டு வயித்தைக் கழுவிக்கிட்டுப் போவுதுங்க!’’

“அப்படியானால் வருஷத்துக்கு ஒரு தடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவையோ பிள்ளை பெற்று வைப்பதுடன் உன் குடும்ப சேவை தீர்ந்து விடுகிறதாக்கும்!’’

“இதுவரை அப்படித்தான் நடந்துக்கிட்டு வருது, சாமி! நெனைச்சுப் பார்த்தா எனக்கே வெட்கமாத்தான் இருக்குது. இருந்தாலும் நான் என்னத்தைச் செய்ய?’’

“என்னத்தைச் செய்யவாவது! முதலிலிருந்தே நீ கொஞ்சம் மூளையுடன் உன் காரியத்தைச் செய்து வந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி வந்திருக்காதே!’’

“என்னை என்ன செய்யச் சொல்றீங்க, சாமி?’’

“முதலில் நீ இந்தச் சாமி, சாமி என்கிறதை விட்டுத் தொலைக்கணும் என்னைப் போல நீயும் ஒரு ‘சாமி’ என்று நினைத்துக் கொள்ளணும்!’’

“சரி, நினைச்சுக்கிட்டேன்!’’

“அப்புறம் அந்தக் காதர் மியான் சாயபுவைப் பற்றியும் நீ நினைத்துப் பார்க்க வேண்டும்….!’’
அவனைப் பற்றி நான் என்ன நினைச்சுப் பார்க்கிறது, சாமி!’’
“என்னடா, திருப்பி திருப்பிச் ‘சாமி’ என்கிறாயே?’’

“இல்லை சாமி; சொல்லுங்க, சாமி!’’

“சரியாய்ப் போச்சு! சாமியும் ஆச்சு, பூதமும் ஆச்சு! நான் சொல்வதைக் கேள். அந்தக் காதர்மியான் சாயபு உன்னைப் போன்றவர்களிடம் மூன்று ரூபாய்க்கு வாங்கிய மீனை ஒன்பது ரூபாய்க்கோ, பன்னிரண்டு ரூபாய்க்கோ விற்று இப்போது ஆயிரம் ஆயிரமாகப் பணம் சேர்த்து விட்டான். இருக்க வசதியான வீடு, வேளா வேளைக்குச் சுகமான சாப்பாடு, வெளியே போவதென்றால் குதிரை வண்டி எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிட்டது.

இத்தனைக்கும் அவன் உன்னைப்போல் ஒரு நாளாவது கஷ்டப் பட்டிருக்க மாட்டான்.

உழைத்துக் கொடுத்தவன் நீ, உண்டு கொழுத்தவன் அவன். முதலில் உன் மீனைவிலைக்கு வாங்கிய அவன், பின்னால்உன் மகள் கல்யாணத்துக்கு நூறு ரூபாய் கடன் கொடுத்து உன்னையே விலைக்கு வாங்கிவிட்டான்! நீ முதலிலேயே அவனுக்கு மீனை விற்காமல், நீயே கடைக்குக் கொண்டு போய் விற்றிருந்தால், இன்று அவனைப்போல் சவுகரியமாக வாழ்ந்திருக்கலாம். உன்னால் முடியவில்லையென்றால், அவனைப்போல் ஆளை வைத்தாவது விற்கச் செய்திருக்கலாம்.

என்ன நான் சொல்வது?

“இதெல்லாம் நம்மாலே ஆகிற காரியமா, சாமி?’’ என்றான் செங்கண்ணன்.

“பின் யாராலே ஆகும் காரியம், சாமி?’’ என்றேன் நான் எரிச்சலுடன்.

“எல்லாத்துக்கும் அவன் ஒருத்தன் இல்லீங்களா?’’

“எவன் ஒருத்தன்?’’

“அவன்தான் சாமி, இன்னின்னாருக்கு இன்னபடின்னு அப்பவே எழுதி அனுப்பி விடுகிறானே, அவன்!’’

“நாசமாய்ப் போச்சு! அவன் என்னத்தை எழுதினான்னு நீ என்னத்தைக் கண்டாய்?’’

“அவன் எழுதினபடிதானே எல்லாம் நடக்குது, சாமி! அன்னிக்கு எழுதினதை அவன் அழிச்சு எழுதப் போறானா? நான் கஷ்டப்படணும்னு என் தலையெழுத்து. காதர்மியான் சுகப்படணும்னு அவன் தலையெழுத்து…!

எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. “இதோ பார் செங்கண்ணா! உனக்கு நீயே எஜமானன் என்ற தீர்மானத்துக்கு வரும் வரை நீ ஒரு நாளும் உருப்படப் போவதில்லை!’’ என்றேன்.

“கடவுள் கண்ணைத் திறந்தால் என் கஷ்டம் ஒரு நிமிஷத்திலே தீர்ந்து போகும், சாமி!’’

“நீ கடைசியாகக் கண்ணை மூடும் வரை கடவுள் கண்ணைத் திறக்கப் போவதேயில்லை!’’

இந்தச் சமயத்தில் காதர் மியான் சாயபுவின் குதிரை வண்டிச் சத்தம் கேட்டது.

“புத்தி, புத்தி!’’ என்ற கன்னத்தில் போட்டுக் கொண்டு, “பகவானை அப்படியெல்லாம் பழிக்காதீங்க, சாமி! அதோ, சாயபுவும் வந்துட்டாரு நான் போய் வாரேன்!’’ என்று சொல்லிக்கொண்டே செங்கண்ணன், தன் தோழன் கறுப்புக் கண்ணனை அழைத்துக் கொண்டு போய்விட்டான். நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவண்ணம் வானவெளியை அண்ணாந்து பார்த்தேன்.

(‘பொன்னி’ ஏப்ரல் 1947இல் வெளிவந்தது. இச்சிறுகதையை விந்தன், ‘நக்கீரன்’ என்ற புனைப்பெயரில் எழுதியது.)

நன்றி: ‘பொன்னி’

– விந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *