அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வீரருக்கு பெயரிடப்பட்ட மாநிலம் வாசிங்டன் மாநிலம். தலைநகரை வாசிங்டன் டி. சி. (டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா) (Washingdon D.C.) என்று அழைப்பார்கள். வாசிங்டன் இங்கிலாந்திடம் தோற்றுப் போகும்படி படைகளை இழந்து பழக்கப் படாத சிறு அளவு வீரர்களைக் கொண்டு முதல் வெற்றியடைந்தார். பின்னர் முழு வெற்றி அடைந்ததும் அவரை மன்னராக்க வேண்டினர். அவர் பதவியே வேண்டாம் என்றார்.கடைசியில் தலைவராக ஒப்புக் கொண்டார்.அப்போது தலைநகரம் பிலடெல்பியா! பின்னர் தான் மூன்று மாநிலங்கள் கொடுத்த இடத்திலே தலை நகரம் உருவாக்கப்பட்டது. 48ஆவது மாநிலமாக வாசிங்டன் மாநிலம் பெயரிடப்பட்டு இன்று பல்வேறு பெருமைகளுடன் விளங்குகின்றது.
அங்குள்ள கடற்கரைச் சிற்றூர் ஒன்றில் 5 நாட்கள் தங்கி மகிழ்ந்தோம். மாலையில் சூரியன் கடலில் ” காலை வந்த செம்பரிதிக் கடலில் மூழ்கி கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ” என்ற காட்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.
பின்னர் அங்குள்ள பெருநகரான சியாட்டில் சென்றோம். அந்த சியாட்டில் பெயரே ஒரு அமெரிக்கப் பழங்குடி இனத் தலைவரின் பெயர் தான். அமெரிக்கவிலேயே பழங்குடி இனத்தவர்க்குப் பெயர் வைத்து மரியாதை வைத்துள்ளது இங்கு தான்.உலகக் கண்காட்சி 1962_இல் நடந்த நினைவாக அங்கு கட்டப் பட்டுள்ள வான் ஊசிக் (Space Needle) கட்டிடத்தை, அங்கு மேல் ஏறி சுற்றியுள்ள அழகைக் கண்டோம்! அங்கே மேலே 360 டிகிரி சுழலும் உணவுக் கூடம் உள்ளது. அதன் அருகே இசைக் கூடமும், கண்ணாடி அருங்காட்சியகமும் உள்ளன.
ஒரு தனி மனிதரால் உண்டாக்கப்பட்ட அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். கண்ணாடியை உருக்கிப் பல வண்ணங்களில் ஆளுயரத்திற்கும் மேற்பட்ட, மலர்க் கொத்துகளாகவும், பல வகை வடிவமைப்பில் அற்புதங்கள் படைத்துக் காட்சிக்கு வைத்துள்ளார். அந்த அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.நூற்றிற்கும் மேல் உள்ள ஒவ்வொன்றும் ஒரு விதமான படைப்பு.
அங்கு தஞ்சை வடுவூரிலிருந்து வந்து வாழும் பொறியியல் வல்லுநர் இல்லத்தில் தங்கி மகிழ்ந்தோம். அவரது வாழ்விணையர் மன்னையாரின் உறவினர். அடுத்தநாள் அவர் மற்றும் பல தமிழர்கள் வேலை செய்யும் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தைப் பார்த்தோம். பின்னர் உலகிலேயே கொடையை ஒரு அறிவியலாக்கி, கொடை மிகவும் பயனுள்ள வழியில் இருக்க வேண்டும் என்று இலக்கணம் படைத்து வரும் பில்,மெலிண்டா கேட்சு கொடை நிறுவனக் கண்காட்சியைக் கண்டோம். மைக்ரோசாப்ஃடிலிருந்து ஓய்வு பெற்றுக் கொடையையே தனது தொழிலாக்கிக் கொண்டவர் பில் கேட்சு எனும் நாத்திகர். அங்கே முன்னதாக வைக்கப்பட்டுள்ளது குறைந்த தண்ணீரில் தானே சுத்தம் செய்து கொள்ளும் கழிவறை. அங்கே அவர்களது குறிக்கோளும் செயல்பாடுகளும் அங்குள்-ளோரால் விளக்கிச் சொல்லப் படுகின்றது.” நல்வரவு! “ஒவ்வொருவரும் உடல் நலத்துடன் ஆக்கபூர்வமாக வாழவேண்டும் என்று கேட்சு நிறுவனம் நம்புகின்றது.
ஏழ்மை, கல்வி, உடல்நலம் பற்றி உழைக்கும் நிறுவனங்களை ஆதரிக்கின்றோம்’’ என்று நுழைவாயிலில் போட்டுள்ளனர். உலகின் பல நோய்களை ஒழிக்கவும், இயற்கையுடன் இணைந்த உணவு, குடிநீர் உற்பத்திக்காகவும் நடக்கும் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பற்றி விளக்கமளித்தனர். இந்த நிறுவனத்திடந்தான் இன்னொரு பெரும் செல்வந்தரான வாரன் பப்ஃவே என்பவர் 50 பில்லியன் டாலர்களை கொடையாக அளித்துள்ளார். அவரும் ஒரு நாத்திகரே!
சியாட்டில் நகரம் பல தொழில் நிறுவனங்களின் பிறப்பிடம். அங்குள்ள பழம் பெரும் மார்க்கெட்டில் பல பொருட்கள் இன்றும் விற்பனையாகின்றன. அங்கு பெரிய கும்பல் உள்ள இடம் மீன் மார்க்கெட். அங்கு பிடித்த மீனை உடனே விற்பனைக்குக் கொண்டு வருவார்கள். ஏலமெடுத்து வாங்க வேண்டும். உடனே அந்த மீனைத் தூக்கி அதை விற்பனையாகி விட்டது என்று போடுவதை ஒருவர் பிடித்து அறிவிப்பார்.
உலகெங்கும் விரைவு அஞ்சல், விரைவு பொருளனுப்பும் தொழிலின் யு பி எஸ் நிறுவனம் 19 வயது இளைஞரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது போன்ற பல நிறுவனங்கள் இன்று பெரும் வணிகமாகி-விட்டன. இன்னும் அமேசான், ஸ்டார் பக்சு எனும் காபிக்கடை நிறுவனம் போன்றவை இங்கு ஆரம்பிக்கப்பட்டவை தாம்.
மிகவும் பெரிய விமானக் கம்பெனி போயிங்க் விமானத் தயாரிப்பைப் பார்க்கும் நல்ல ஏற்பாட்டைப் பயணிகளுக்கு அளிக்கின்றனர். ஒரே கட்டிடத்திற்குள் எத்தனை விமானங்கள் ஒரே சமயத்தில் தயாரிக்கப் படுகின்றன என்பதைப் பார்த்தால் மூக்கில் விரலை வைக்க வேண்டும். இதில் பல பாகங்கள் பல நிறுவனங்களாலும், பல் வேறு நாடுகளிலும் தயாரிக்கப் படுகின்றன! அவற்றைச் சரியாகப் பொருத்தும் வேலை தான் அந்த உலகப் பெரியக் கட்டிடத்தின் உள்ளே நடக்கின்றது.
நான்காவது மாடியில் நடந்து சென்று பல் வேறு நிலைகளில் உள்ள விமானத் தயாரிப்பைப் பார்த்தோம். இன்னும் இரண்டு ஆண்டுகட்குத் தயாரிக்க வேண்டியது கையில் உள்ளது ! ஆகவே இப்போது சொன்னால் விமானம் கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் ! இரண்டாம் உலகப் போருக்கு போர் விமானங்கள் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்டது முதல் தொடர்ந்து பல்வேறு வகை விமானங்களைத் தயாரித்து வரும் பெரும் நிறுவனம் இது! அந்தக் கட்டிட அமைப்பே மலைக்க வைக்கும்!
அங்கிருந்து கனடாவின் அழகிய தீவு நகரான விக்டோரியாவிற்குப் பெரும் படகில் சென்றோம். பெரும் படகு என்றால் பல பேருந்துகள், மகிழ்வுந்துகள், மிதி வண்டிகள் என்று பலரும் படகின் உள்ளே சென்று பின்னர் அந்தப் படகின் மேல் பகுதியில் உள்ள அமரும் இடங்களில் அமர்ந்து இரண்டு மணி நேரப் பயணம்! கனடாவில் சந்திப்போம்! ஸீ