– மஞ்சை வசந்தன்
மனிதர்களின் சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி நடைபெறும் வணிகச் சுரண்டல்களில் இது மிகப்பெரிய கேடான வணிகச் சுரண்டல்.
இன்றைய மனிதன் உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றால் வாலிப வயதிலேயே பாதிக்கப்படுவதற்குக் காரணம் உடல் உழைப்பைத் தடுக்கும் சோம்பேறித் தனமேயாகும்.
ஒரு கி.மீட்டர் தூரம் என்றாலும் சைக்கிள் அல்லது கார். அமர்ந்த இடத்திலே எல்லாவற்றையும் இயக்கும் ரிமோட். சமைக்க, துவைக்க, பெருக்க, குளிக்க, களிக்க எல்லாம் கருவிகள். உடற்பயிற்சிக்குக்கூட குனிந்து நிமிராமல் குறைக்க பெல்ட்டுகள் என்று பலப்பல.
இந்தச் சோம்பல் வளர்ச்சியின் உச்சம்தான் ஆன்லைன் வர்த்தகம்.
பொருட்களை வாங்குவது என்றால் அருகில் கிடைக்காத பொருட்களை அஞ்சல்வழி, பார்சல் வழி பெறுவது என்பது பழைய முறை. ஆனால், இன்றைக்கு எல்லாமும், எல்லோர்க்கும், எல்லா இடத்திலும் எளிதில், அருகில் கிடைக்கிறது. அப்படியிருக்க ஆன்லைன் எதற்கு?
காய்கறி வாங்க வேண்டுமானால் கடைக்குச் சென்று ஒவ்வொன்றையும் நல்லதா என்று சோதித்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து முற்றாமலிருக்கிறதா என்று அறிந்து வாங்க வேண்டும்; தேங்காயைத் தட்டிப் பார்த்து குலுக்கிப் பார்த்து முற்றியிருக்கிறதா என்று அறிந்து வாங்க வேண்டும். காய்கறி, கீரை, பழம் போன்றவை அழுகல் இல்லாமல், சொத்தை இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
பட்டுப்புடவை உட்பட பலவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும். ஆயிரக்கணக்கான விலையுள்ள வீட்டு உபயோகப் பொருட்களைச் சோதித்து வாங்க வேண்டும்.
நூல்களை நூல் விற்பனை நிலையங்களுக்குச் சென்று தேர்வு செய்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் இன்னும் தேவையான நூல்களைக் காண நேரும். அதன் வழி அவற்றையும் வாங்க முடியும்.
நகை, செருப்பு, பருப்பு, பூண்டு, மிளகு, அரிசி, வரகு என்று எல்லாவற்றையும் நேரில் சென்று பார்த்துத் தேர்ந்து வாங்குதல்தானே சரியாகும்.
இப்படி நேரில் செல்லும்போது நடந்து செல்வது நல்லது. அதன்மூலம் உடல்பயிற்சி, மன இறுக்கத்திற்கு தளர்ச்சி, உள்ளத்திற்கு ஓர் உற்சாகம் என்று எத்தனை நன்மைகள் இதன்மூலம் கிடைக்கிறது. இதுவெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தில் கிடைக்குமா? ஓர் அழைப்பு, வீடுதேடி பொருள் வரும். நல்லதா, சரியா சோதிக்க வழியில்லை. உடலுக்கு உழைப்பு இல்லை, மனதிற்கு உற்சாகமில்லை.
அது மட்டுமல்ல நுகர்வோரான நமக்கு பல கேடுகள் வருவதுபோல, வணிகம் செய்து வாழ்க்கை நடத்திய ஆயிரக்கணக்கான சிறு, குறு வணிகர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தியாளர்களைச் சுரண்டி, பெரும் முதலாளிகள், கொள்ளை இலாபம் ஈட்டவே இந்த ஆன்லைன் வர்த்தகம் உதவுகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரச் செலவு செய்கின்றன. இந்தத் தொகை முழுக்க யார் தலையில் கட்டப்படுகிறது. இதை நுகர்வோர்தானே ஏற்கின்றனர்?
விளம்பரச் செலவால் விலை ஏறுவதோடு மட்டுமல்ல, பொருட்களைப் பதுக்கிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியும் விலையைப் பல மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இன்றைக்குப் பருப்பு விலை பல மடங்கு உயர்ந்ததற்குக் காரணம் பதுக்கல்தான். பருப்பு உற்பத்தி அதிகம் இருந்த நிலையில், பருப்பு விலை உயர்ந்தது, பதுக்கல் மோசடியின் விளைவு என்பது பளிச்சென்று தெரியும் உண்மையல்லவா?
பெரும் முதலாளிகள் உற்பத்திப் பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கி இருப்பு வைப்பதால், சந்தையில் பொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி விலையை ஏற்றி விற்று கொள்ளையடிக்கின்றனர்.
உண்மையில் ஒரு பொருளுக்குப் பற்றாக்குறை என்றால், எவ்வளவு அதிக விலை கொடுத்தாலும் அது கிடைக்காது. ஆனால், விலை கூடுதலாய்க் கொடுத்தால் எத்தனை டன் வேண்டுமானாலும் கிடைக்கும் என்றால் அது பதுக்கல்தானே!
ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடர்ந்து அனுமதித்தால் எல்லா பொருட்களும் இனி பற்றாக்குறையும், விலை ஏற்றமுந்தான் ஏற்படும்!
அது மட்டுமல்ல, ஆன்லைன் வர்த்தகத்தில் இன்னொரு ஏமாற்று வேலையும் நடக்கிறது. அதிரடி விலைத் தள்ளுபடி என்று கவர்ச்சியாய் விளம்பரம் செய்வர். விலைகுறைவு என்பதால் போட்டிப் போட்டு மக்கள் வாங்குவர். கடையில் உண்மையை ஆய்வு செய்தால் அதிர்ச்சி முடிவு!
பாக்கட்டில் விலையை கூடுதலாகப் போட்டு தள்ளுபடி என்று ஏமாற்றுவது வெளியானது. மார்க்கட்டில் விற்கும் விலையைத் தள்ளுபடி விலையென்று ஏமாற்றியது தெரிந்தது.
வீட்டின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒருசேர விழுங்கும் திமிங்கிலமாக ஆன்லைன் வர்த்தகம் அமைந்துள்ளதால், அதன் ஆபத்தை அறிந்து அதற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆட்சியாளர்களின், வணிகர்களின் கடமையாகும்.
வாக்களிக்க மட்டும் வாக்குச் சாவடிக்கு வரவேண்டும் என்கிற அரசு வணிகத்தை ஆன்லைன் ஆக்கியது அநீதியல்லவா? ஆன்லைனிலே வாக்களிக்க அரசு அனுமதிக்குமா? அரசியல்வாதிகள் ஒத்துக் கொள்வார்களா? தங்களுக்கு ஆபத்து என்றால் எச்சரிக்கையாக இருக்கும் இவர்கள், மக்களுக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது வஞ்சகம் அல்லவா?
உற்பத்தி செய்கின்றவர்களையும் ஏமாற்றி, நுகர்வோரையும் ஏமாற்றி, இடையில் நிற்கும் ஆன்லைன் வணிகர்கள் கொள்ளையடிக்கும் இந்த மோசடி முறையை அறவே ஒழிப்பதுதான் நம் உடல் நலத்திற்கும் பொருளாதார நலத்திற்கும் உகந்தது ஆகும். அவசியம் ஏற்பட்டால் நுகர்வோரும் வணிகர்களும் முன்வந்து போராட வேண்டும்.