Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் – 9

சுயமரியாதைச் சுடரொளி வல்லம்படுகை ஆசிரியர் சந்தானகிருஷ்ணன்

– கி.வீரமணி

பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் உள்ள வல்லம்படுகையில் தங்கி, அளப்பரிய கழக வளர்ச்சிப் பணியை இறுதி மூச்சடங்கும் வரை சலிப்பின்றி செய்து, மறைந்தும் மறையாத என்றென்றும் நம் போற்றுதலுக்குரியவர், ‘வல்லம்படுகை வாத்தியார் –_ சந்தானகிருஷ்ணன் அவர்கள் ஆவார்!

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகத் தேர்ச்சி பெற்று, சிதம்பரம் அருகில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தவர் சந்தானகிருஷ்ணன் அவர்கள்.

அவர் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களது தனிச் செயலாளர் போல, கழகப் பணிகளை ஒருங்கிணைத்து உழைத்தவர்.

வார விடுமுறை, இதர விடுமுறை – இவைகளுடன்  பள்ளி முடிந்த மாலை நேரம் காலை வரைகூட, கழகப் பணிகளை ஓய்வின்றிச் செய்து வரலாறு படைத்தவர்.

‘எலிக்குஞ்சி’ வாத்தியார் என்று கேலியாக சில நண்பர்கள் அவரை அழைப்பதும் உண்டு. சிறு’கச்சலான’ உருவம். அந்த உழைப்பின் உருவம்! அறிக்கை எழுத, கூட்டங்களின் ஏற்பாடுகளைப் பொறுப்பாளர்கள் செய்யவென்று அத்தனைக்கும் மிக அருமையாகத் திட்டமிடுவார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமானவர். புலவர் இமயவரம்பன், மற்றும் என்னிடம் பல ஆண்டுகாலம் நெருக்கமாகப் பழகியவர்.

உடலில் இதயக் கோளாறு போன்ற பல தொல்லைகள் இருப்பதை அறிந்தும்கூட அவரது இயக்கப் பணியில் அவர் ஒதுங்கியதே கிடையாது!

எதையும் துணிவுடன் _ தெளிவுடன் திட்டமிட்டு மாவட்டத் தோழர்களை செயல்பட வைத்து, கடமைகளைப் பூர்த்தி செய்ய அவர் தவறவேமாட்டார்!

என்னுடன் சுற்றுப் பயணத்தில் பல நாள்கள் உடன் வரவும், பேச்சுக் குறிப்புகள் எடுத்து, விடுதலைக்கும் ஒரு செய்தியாளர் ஆகவும் பணி செய்ததில் அவர் ஒரு தனிரகம், ஞாயிறு இரவு நிகழ்ச்சிகளை முடித்து பேருந்துகளைப் பிடித்து, காலை வகுப்புகளை எடுக்கப் பள்ளிக்குச் சென்று திரும்புவார். ஒருநாள் கூட கடமை, பணி _ இவைகளை அவர் செய்யத் தவறமாட்டார்.

வெளிப்படையாகவே இவர் ‘கறுப்புச் சட்டை போடாத கறுப்புச் சட்டை வாத்தியாராகவே இருப்பது _ செயல்படுவது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், தவறு ஏதும் செய்யாத, சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர் என்பதால் அவர்களால் _ ஒரு குறையும் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை!

சிதம்பரத்தில் அய்யா, அம்மா தங்கியிருந்தாலும் காலையில் வந்து பார்த்து, பள்ளிக்குச் சென்று மாலையில் திரும்பி வந்து அய்யா சுற்றுப் பயணத் திட்டத்தை _ பிரச்சாரத்தை நன்கு நடக்கும்படி கண்காணித்து உதவிடுவார்!

‘காமராசர் ஆட்சிச் சாதனைகள்’ முதற்பதிப்பில் _ அவசரமாகத் தொகுத்த காரணத்தால் -_ ஓரளவு தகவல்கள்தான் இடம் பெற்றிருந்தன.

அதற்கு ஏகப்பட்ட கிராக்கி (அதிகத் தேவை) பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு, வரவேற்பு அதிகமானதால், அதை விரிவாக்கி வெளியிட அய்யா அனுமதி தந்தார் மகிழ்ச்சியுடன்.

ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் அவர்களை வரச்சொல்லி, திருக்கோவிலூர் அருகில் உள்ள அரசூர் சிறிய பயண மாளிகையில் (ஜி.ஙி.) இரண்டு நாளில் (சனி, ஞாயிறு நாள்களில்) அந்த எழுத்துப் பணியைச் செய்தோம். மறைந்த தோழர்கள் அரசூர் செயராமன், கிராமம் என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (சட்ட எரிப்பு வீரர்), ஆகியோர், வாழும் ஆலங்குப்பம் தெய்வநாயகம் போன்றோர் அருகில் இருந்து உணவு மற்ற வசதிகளைக் கவனித்து அளித்தார்கள்.

அவர் திருமணமே செய்துகொள்ளாது, உடல்நிலைக் கெட்டிருந்த நிலையிலும், தொண்டறப் பணி ஈடுபாட்டினால், தொடர்பணி ஆற்றினார்.

அவரது தம்பி ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அண்ணன் வழியில் கழகத்திற்கு உழைத்தவர்.

வல்லம்படுகை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ரயில்வே ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், கீதா லட்சுமணன், கோவிந்தராசன் போன்ற தோழர்களுக்கும் ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் மீது மிகவும் பற்றுண்டு. அவரை உறவுக்காரர்போல் மாவட்டத் தோழர்கள் அனைவருமே மதிப்பார்கள். அவரது இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து வீரவணக்கம் செலுத்தினேன் – கண்ணீர் மல்க!