நம் நாட்டில் உண்ணும் உணவையும்கூட மதம் நிர்ணயிக்கிறது! மதம் பிடிப்பது எவ்வளவு ஆபத்து என்பது இதிலிருந்தே தெரியவில்லையா?
ஹிந்து மதம் என்று இப்போது அழைக்கப்படும் சனாதன ஆரிய வேத மதத்தினை இப்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க. (இதுபோன்ற கொள்கைப் பிரச்சினைகளை முன்வைத்துத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை; மாறாக, மாற்றம், வளர்ச்சி என்ற சாக்குப் போக்குக் காட்டினர். வாக்காளர்களும் ஏமாந்தனர்) இப்போது இந்துத்துவாவைப் பரப்பி – வெகுவிரைவில் இந்தியாவை ஹிந்து நாடாக்க மும்முரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்!
சமஸ்கிருத கலாச்சாரத்தை, ஹிந்தியைப் பரப்பிடவும், கல்வியைக் காவி மயமாக்கிடவும், புராண இதிகாசக் குப்பைகளை ஏதோ அறிவியல் புதையல்களைப்போல, சித்தரிக்கவும், வரலாற்று பக்கங்களில் காவிச் சாயமடித்து, பல புரட்டுகளுக்கு உண்மைபோல முலாம் பூசிடவும் — ஆங்காங்கு சில கலவரங்களைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளனர்.
பகுத்தறிவு — முற்போக்குச் சிந்தனையாளர்கள் உயிருக்கு உலை வைத்தல், கருத்துச் சுதந்திரத்தினைப் பறித்து, அதிலும் ஆர்.எஸ்.எஸ்.வாதிகளை நியமித்து, திட்டமிட்ட ஏற்பாடுகளைப் பரப்புதல், பெண்களை பழைய பத்தாம் பசலிகளாகவே நீடிக்க வைக்கும் அறிவுரை — ஏற்பாடுகள்.
இதன் ஒரு பகுதியாக பசு மாட்டிறைச்சியை தடை செய்து சில மாநிலங்களில் சட்டம் செய்யப்பட்டு (மகாராஷ்டிரம்) அங்குள்ள மக்களின் உண்ணும் உரிமைக்கு உலை வைக்கப்பட்டுள்ளது!
கோமாதா எங்கள் குலமாதா என்று கூறும் இக்கூட்டம் பசுவதை தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி விற்போரை தடைச் சட்டம் இல்லாத மாநிலங்களிலும்கூட இதனை – இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டம் போல நடத்திவரத் துவங்கியுள்ளனர்!
காஷ்மீரில் முன்பு எப்போதோ இருந்த ஒரு ஆணையைக் காட்டி, உயர்நீதிமன்றம்மூலம் மாட்டிறைச்சி தடை செய்து தீர்ப்பு — ஆணை வழங்கியது — பெரும்பான்மை மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் கையை வைத்தது! பெரும் கொந்தளிப்பை உருவாக்கி விட்டது.
அதைச் சரிப்படுத்தி தணிக்கவே, உச்சநீதிமன்றம் அதற்குத் (காஷ்மீர் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு) தடை விதித்துள்ளது!
மகாராட்டிர மாநிலத்தில் பொருளாதாரமே மந்த கதிக்கு இதனால் வந்துவிட்டது என்று எழுதாத ஏடுகள் இல்லை!
உ.பி.யில் ஒரு கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினை குறி வைத்து, அங்குள்ள பா.ஜ.க.வினர் — திட்டமிட்டு ஒரு வதந்தியைப் பரப்பினர்.
குறிப்பிட்ட நாளில் (புனித நாளில்) அந்தக் குடும்பத்தவர்கள் பசுவை அடித்து கறி சாப்பிட்டனர் என்று! இந்த வெறித்தனம் பரவி, மதவெறிக் கும்பல் கிளம்பி, அக்லாக் என்ற முஸ்லிம் முதியவரை அடித்துக் கொன்றே விட்டனர்; குடும்பத்தவர்கள் பலருக்குப் படுகாயம். நாட்டில் எங்கும் மதக்கலவரம் வெடிக்க அச்சம்பவம் ஒரு காரணியாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது!
அங்கே உள்ள ஆட்சி பா.ஜ.க. அல்லாது அகிலேஷ் (யாதவ்) தலைமையில் உள்ள சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது, அதன்மூலம் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சியை மேலும் பெருக்கவே, இஸ்லாமியச் சிறுபான்மை-யினருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுதல் —
இதைவிட சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து விளைவிக்கும் போக்கு வேறு உண்டா?
பசுவதை தடுப்பு என்பதே பசு மாட்டின்மீதுள்ள பரிவினால் அல்ல; அந்த மாட்டிறைச்சி இஸ்லாமியர்களின் உணவு – அதனை (மாட்டிறைச்சியை) எதிர்ப்பது மறைமுகமாக இஸ்லாமியச் சிறுபான்மை-யினருக்கு எதிரான உணர்வைத் தூண்ட வேண்டும் என்பதே இதன் அடி நீரோட்டமாகும்.
உண்மையில் மாட்டிறைச்சி இஸ்லாமியர்-களின் உணவுப் பழக்கம்தானா? அதற்கு முன்னால் வேத காலத்திலிருந்தே பசு மாட்டை அடித்து, யாகம் செய்து யக்ஞம் மூல அவிர் பாகங்களை உண்ணுதல் உண்டு என்பதற்கு ரிக் வேதம், சதபத பிராமாணம் முதலியவை-களிலேயே ஆதாரம் உண்டே.
வேதக் கலாச்சாரம்தான் நம்முடைய பூர்வ, புராதனப் பெருமைமிக்க நாகரிகம் என்று வாய்ப்பறை கொட்டும் வக்கணையாளர்கள் இதில் மட்டும் அதை வசதியாக மறந்தும் மறைத்தும் பேசுதல் எந்த அளவுக்கு நியாயம் ஆகும்?
பசு புனிதம் என்பது ஒரு புரட்டு! (The Myth of the Holy Cow) பேராசிரியர் டி.என்.ஜா (இவரே ஒரு பார்ப்பனர் அல்லது காயஸ்தர்) எழுதியுள்ள நூலில் ஏராளமான ஆதாரத்தை அள்ளி வீசியுள்ளார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா) ஆங்கில நாளேட்டில் (6.10.2015) அவரது பேட்டி வெளியாகியுள்ளது — அதனை வேறு பக்கத்தில் காண்க).
1. விலங்குகளைக் கொல்வது என்ற ரிக் வேத நடைமுறை தொடர்ந்து, பிற்கால வேத நூல்களில் உயிர்ப் பலி சடங்குகள் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோபத பிராமணம் என்ற நூலில் மட்டும் 21 யக்ஞர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரனுக்குக் காளையும் (ரிஷிபம்) பிருதுகளுக்கு புள்ளி கொண்ட பசுவும், அஸ்வினிகளுக்குச் செந்நிறப் பசுவும் பலி தரப்பட்டன. இது புனிதப் பசு — புரட்டு நூலில் உள்ளது.
மகாபாரதம், இராமாயணத்தில் பசு மாட்டிறைச்சி உண்ணுதல் ஏராளமான இடங்களில் உள்ளன!
காயல், சம்பாரா, எருமை உள்பட பல்வேறு விலங்குகளின் இறைச்சிகளை யுதிஷ்டர் தருவார் ஜெயத்ரதனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் என்று திரவ்பதி வாக்குறுதி தருகிறார்.
வனவாசம் சென்றபோது இறைச்சி உணவால் தான் பாண்டவர்கள் பிழைத்தனர்.
நந்தி தேவரின் புகழ்பாடும் குறிப்புகளையும் மகாபாரதத்தில் பார்க்க முடிகிறது. அவரின் சமையல் அறையில் நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டு வந்தன. தானியங்களோடு இறைச்சியும் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டு வந்தன.
வால்மீகி இராமாயணத்தில் —
உண்ணத்தகுந்தவை என்று தர்மசாஸ்திரங்களால் அறிவிக்கப்பட்ட விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் பலி தந்த ஒரு பெரிய வேள்வியை தசரதன் நடத்திய பின்னால்தான் இராமன் பிறந்தான். இராமன் தன் சபதத்தை நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் (1000) பசுக்களையும் (100) நூறு ஜாடி மதுவையும் தானம் தருவதாக யமுனை ஆற்றைக் கடக்கும்போது சீதை உறுதி தருகிறாள்.
இராமனைக் கவுரவிப்பதற்காக பரத்வாஜர் ஒரு கொழுத்த கன்றைப் பலி தருகிறார்! இவர்கள் இறைச்சி உணவைக் கைவிட்டது — புத்தரின் செல்வாக்கு வளர்ச்சியைத் தடுத்து, தம் மதத்தினை நிலைநாட்டவே பிறகு மேற்கொண்டது-தான். இதை ஞிஹ்ஸீணீனீவீநீ ஙிக்ஷீணீலீனீவீஸீ என்ற நூலில் நாயர் என்பவர் எழுதியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கரும் — தீண்டத்தகாதவர் யார்? ஏன் எப்படி அவர்கள் தீண்டத்தகாதவர்-களாக ஆக்கப்பட்டார்கள்? என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்!
முஸ்லிம்களின் உணவு என்று முத்திரை குத்தி, அவர்களை வெறுக்கவே இதை ஒரு மதவாத அரசியலுக்குப் பயன்படுத்துவது சங் பரிவாரங்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!
இறைச்சிக்காகப் பசுக்களை வதைச் செய்யும் முஸ்லிம்களின் பழக்கத்தை எதிர்த்த இப்போக்கு 1880-களிலும், 1890 களிலும் தொடர்ச்சியான வகுப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டது.
முதன்முதலாக அந்நியர்களான முஸ்லிம்கள்தான் மாட்டிறைச்சி உணவை அறிமுகப்படுத்தினார்கள் என்பது தவறான கருத்து என்பது மேலே காட்டப்பட்ட ஆதாரங்கள் மூலம் விளங்குகிறது அல்லவா?
இந்துத்துவாவைப் பரப்ப உணவையும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக்கிக் கொண்டு வதந்தி, புரளிகள்மூலம் அப்பாவி மக்களை மதவெறியர்களாக்கி நாட்டின் ஒற்றுமை – நல்லிணக்கத்திற்கு இப்படி உலை வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
முன்புபோல மக்கள் புன்மைத் தேரைகளாகவே, புழுக்களாகவோ இருக்கமாட்டார்கள்!
இதன் எதிர் விளைவு எரிமலையானால், எந்த அரசும் தாங்கிட முடியாது!
கி.வீரமணி,
ஆசிரியர்
————–
வரலாற்று ஆசிரியரும் முன்னாள் இந்திய வரலாற்று ஆய்வுமையக் குழுவின் உறுப்பினரும், வரலாற்றுஆய்வு வல்லுனருமான டி.என்,ஜா-விடம் எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் மாட்டிறைச்சி விகாரம், இந்துத்துவத்தில் மாட்டை புனிதம் என்று கருவதுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகளும் பதிலும் 1.உங்களுடைய ஆய்வில் இந்தியாவில் மாட்டிறைச்சி குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பற்றிச் சொல்லுங்கள்? புனிதமான பசுவும், இந்தியக் கலாச்சாரத்தில் மாட்டிறைச்சியும் என்ற எனது நூலை எழுதும் போது பழமைவாதிகளால் பல்வேறு வகையில் தொல்லைக்கு ஆளானேன்.
இந்த நூல் 2001-ஆண்டு வெளியானது. இந்துத்துவ அமைப்புகள் எனது வீட்டை தாக்கினார்கள். என்னுடைய நூல்களின் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல்வேறு வகையில் நானும் எனது வீட்டில் உள்ளவர்களும் மிரட்டப்பட்டோம். என்னைக் கொலை-செய்வோம் என்று மிரட்டல்கடிதங்களும் வந்தனர். இந்தக் கொலைமிரட்டலை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எனக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இந்துத்துவ அமைப்புகள் என்னுடைய நூலை விற்பனைக்கு வருவதை தடைசெய்யவும், நூலை தடைசெய்யவும் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றமும் வழக்கை விசாரித்து நூலைத் தடைசெய்யும் உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால் தடைக்கு எதிராக வழகைத் தொடர்ந்து அதில்வெற்றியும் பெற்றேன். மேலும் அந்த நூல் லண்டன் நகரிலும் வெளியிடப்பட்டது. 2.ஏன் மாட்டிறைச்சி விவகாரம் இன்று பெரிய அளவில் ஊதப்படுகிறது?
எனது நூலில் நான் தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளேன். வேதகாலத்தில் பசுக்கள் பலி என்ற பெயரில் அதிகம் தீக்கிரையாக்கப்பட்டன. விருந்திற்காக வெட்டப்பட்டது. இவையெல்லாம் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட வேதங்களில் உள்ளவைகளாகும், மேலும் பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதில் எந்த அளவு ஆர்வம் காட்டினர் என்பதையும் இதில் குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலையில் 11-ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்-களின் வருகையின் மூலம் உணவிற்காக மாடுகளை வெட்டுவது இஸ்லாமியர்கள் என்ற ஒரு கருத்தை வேண்டுமென்றே பிரச்சாரம் செய்யப்பட்ட்து. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்புதான் பசுமாடு இந்துக்களின் புனித அடையாளமாக பரவலாக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பசுமாடு இந்துக்களின் புனிதம் என்று அதிக அளவு பிரச்சாரம் செய்யப்-பட்டது. இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்பவர்கள் என்று இந்துத்துவ அமைப்புகள் தவறாக கருத்துக்களை அதிகமாக மக்களிடையே பரப்பிவிட்டது.
பாஜக முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடன் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சனை தேவையில்லாமல் முன்னெடுக்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்-பட்டுவருகிறது. பாஜகவிற்கு அரசியல் செய்ய மாடு ஒரு காரணியாகிவிட்டது.
மாட்டிறைச்சி தடை என்பது இந்துத்துவ கொள்கைகளில் ஊறிவந்த பாஜகவின் தேசியக் கொள்கையாகும். இதன் ஆரம்பமாகவே கல்வி-நிலையங்களில் உள்ள உணவகங்களில் முழுக்க முழுக்க மரக்கறி உணவுவகைகள் முன்னிறுத்தப் படுகிறது. 3.மாட்டிறைச்சி விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டவேண்டும்? இவர்கள் யார்? மாட்டிறைச்சி விவகாரத்தில் இவ்வளவு தீவிரம் காட்டும் தலைவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். மாட்டிறைச்சி பிரச்சனையில் அக்கறைகாட்டும் தலைவர்கள் யாருமே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தவர்கள் அல்ல, தலைவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான குரலில் பொய்யான இந்திய வரலாற்றை மாத்திரமே முன்வைக்கின்றனர்.