இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம்
நூல்: இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம்
ஆசிரியர்: ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில்: ஆர்.பரமேஸ்வரன்
பதிப்பு: 1978
விலை: ரூ.5.00
வெளியீடு: பாட்டாளிகள் வெளியீடு,
நாராயணப்பன் நாயக்கன் தெரு, சென்னை – 24
இந்த நூல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டால் மலையாளத்தில் எழுதப்பட்டு, 1975 இல் (ஏப்ரல்) சிந்து பதிப்பகத்தால் வெளியிடப்-பட்டது. பின் ஆசிரியர் அனுமதியுடன் 1978 இல் தமிழில் வெளியிடப்பட்டது.
பரசுராமன் கடலிலிருந்து மீட்டதுதான் கேரளம் என்பது போன்ற கட்டுக்கதைகள் சமீப காலம்வரை நமது கல்வி நிலையங்களில் சரித்திரமாகப் போதிக்கப்பட்டு வந்தன. கேரளத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒரு காலத்தில் சரித்திரம் என்ற பெயரில் இத்தகைய கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வந்தன.
விஞ்ஞான யுகத்தில் இத்தகைய கட்டுக் கதைகளை யாரும் நம்பமாட்டார்களல்லவா, அதனால் ஒரு விஞ்ஞான விளக்கத்தின் முகமூடியை அணிவிக்கவும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக பரசுராமனைப் பற்றிய கட்டுக்கதைகளுக்கு அளிக்கப்பட்ட விஞ்ஞான விளக்கம் இதுதான்.
ஒரு காலத்தில் கேரளம் கடலுக்கடியில் இருந்தது. இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக அது கடலிலிருந்து உயர்ந்து வந்தது. இப்படிக் கடலிலிருந்து உயர்ந்து வந்த கேரளத்தில் ஆரியர்கள் குடியேறினார்கள். இதுதான் பரசுராமனின் படைப்பைப் பற்றிய கட்டுக்கதையின் அடிப்படை என்று வாதிடுகின்றனர். இத்தகைய வியாக்கியானங்கள் இதர நாடுகளின் பூர்வீக வரலாறு பற்றிய பிரச்சினைகளிலும் கூறப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுக்கதைகளைச் சரித்திரமாகக் கருதி இவைகளை அடிப்படையாகக் கொண்டு சரித்திரம் எழுதினால் நாம் எத்தகைய முடிவுகளுக்குப் போய்ச் சேருவோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு தேசத்திற்கோ, ஒரு தேசத்தின் மக்களுக்கோ சொந்தமாக ஒரு கட்டுக்கதையிருந்தால் வேறொன்றிற்கு வேறு ஒரு கதையிருக்கிறது. அவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும் உள்ளது. ஆகவே, பல்வேறு தேசங்களுக்கும் ஒரு தேசத்தின் பல்வேறு மக்கள் பகுதியினருக்கும் பல்வேறு சரித்திரங்கள் இருக்கும். இவை ஒவ்வொன்றும் தனது நாட்டின் அல்லது மக்கள் பகுதியினரின் பெருமையைப் பற்றிய புகழ் பாடவும் இதர நாடுகளையும் மக்கட்பகுதியினரையும் சிறுமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகவும் உள்ளன.
உதாரணமாக, பரசுராமனின் கேரள படைப்பைப் பற்றிய கட்டுக்கதை ஜாதி – நிலப்பிரப்புத்துவ ஆதிக்கத்தை நியாயப்-படுத்துகிறது. இதற்கெதிராக நாயர், ஈழவர், புலயர், முகமதியர், கிருத்துவ மக்கட்பகுதி-யினருக்கும் அததனுடைய கட்டுக்கதைகள் அல்லது சரித்திரம் உருவாகியுள்ளது. இதுபோன்று கேரள மாநிலம் அமைவதற்கு முன்னால், திருவாங்கூர், கொச்சி, மலபார் ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் அததனுடைய சரித்திரம் ஆங்காங்கு இருந்து வந்த ஆட்சியாளர்களின் சார்பாக எழுதப்-பட்டுள்ளது. (இவைகளை தொகுப்பதற்குத்தான் கேரள வரலாற்றுக் கழகம் தயாரித்துள்ள கேரள சரித்திரம் முயற்சித்துள்ளது).
இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் ஆரியர்களின் வருகையுடன்தான் இந்திய வரலாறு துவங்குகிறது என்ற கருத்தைத்தான் ஒரு காலத்தில் நமது சரித்திர ஆசிரியர்கள் கூறி வந்தனர். ஆனால், ஆரியர்களுடையதை விட உயர்வான ஒரு கலாச்சாரம் திராவிட மக்களுக்கிருந்தது என்றும், அது ஆரியர்-களுடையதைவிட பழைமை வாய்ந்தது என்றும் தென் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அக்காலத்திலேயே வாதாடினார்கள். 1922 இல் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சொதாரோ ஹராப்பா என்னும் நகரங்களின் தடயங்களும் இவைகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் செய்துள்ள நிர்ணயிப்புக்களும், திராவிட கலாச்சாரம் பற்றிய வாதத்தைப் பெருமளவுக்குப் பலப்-படுத்தியுள்ளன. இவ்வாறு ஆரிய சார்பினர் திராவிட சார்பினர் என்ற இரு பிரிவுகள் வரலாற்று ஆசிரியர்களிடையே தோன்றின.
மத்திய கால வரலாறு முகமதிய ஆதிக்க வரலாறு என்ற பேரால் சித்தரிக்கப்பட்டது. அதற்கெதிராக ஹிந்து ஆதிக்க வரலாறு உருவாகியது.
மக்களை பரஸ்பரம் மோதவிடுகின்ற கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக்கு மாறாக, இதர விஞ்ஞானத் துறைகளைப்போலவே, விஞ்ஞான ஆய்வு நடத்தி மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும், அதனுடைய பகுதியாக பல்வேறு நாடுகளின் வரலாற்றையும் எழுத முடியுமென்று சமீப காலத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானப் பிரிவாக வரலாறு இன்று கருதப்படவில்லை. அரசியல் தத்துவம், பொருளாதார விஞ்ஞானம் ஆகியவைகளைப் போலவே வரலாறும் இன்று சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் இன்று விஞ்ஞானம் (Science), மனிதப் பண்பாட்டியல் (Humannities) ஆகிய இரண்டு பகுதிகளாகத் தானே அறிவியல் உள்ளது. சோசலிஸ்ட் நாடுகளில் இந்த இரண்டு பகுதிகளையும் வேறுபடுத்துவது இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் என்ற முறையில்தான். இயற்கை உலகில் நிகழ்கின்ற மாறுதல்களையும், அவைகளைப்பற்றிய விதிகளின் செயல்பாடுகளையும் கற்கப் பயன்படுத்துகிற அதே விஞ்ஞான முறைகளை, சில முக்கியமான மாறுதல்களோடு சமூகத்தில் ஏற்படுகிற மாறுதல்களைக் கற்கவும் பயன்படுத்தலாம்; அதன் பயனாக, சமுதாய மாற்றங்களுக்கு அடிப்படையான விதிகளையும் கண்டுபிடிக்க முடியும் – இதுதான் சமூக விஞ்ஞானங்கள் என்கிற சொற்றொடரால் அறியப்படுவது.
வரலாறு மற்றும் இதர சமூக விஞ்ஞானங்களின்பால் இந்த அணுகுமுறையை கடைபிடிக்க உதவிய மூன்று முக்கிய கண்டுபிடிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்றன. இவைகள் எல்லாம் சேர்ந்து மனிதனுடைய தனிப்பட்டதும், சமூக ரீதியுமான வளர்ச்சியைப்பற்றிய முற்றிலும் புதியதான ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கின.
இந்தக் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது மனிதனுடைய தோற்றத்தையும், வளர்ச்சியையும்-பற்றிய டார்வினது பரிணாம வளர்ச்சி கோட்பாடாகும். பிரபஞ்சத்தில் மனிதனுடைய பாத்திரம் குறித்து அதுவரை இருந்து வந்த கருத்துக்கள் முழுவதையும் டார்வின் தகர்த்தெறிந்தார். மதவாதிகள் பரப்பி-யிருந்ததுபோல, கடவுளின் அபூர்வ படைப்பு அல்ல மனிதன். இதர உயிரினங்களைப் போலவே பிரபஞ்சத்தில் வளர்ச்சியடைந்து வந்துள்ள ஒரு உயிரினம்தான் மனிதன் என்று டார்வின் நிலைநாட்டினார்.
உயிரினங்கள் முழுவதையும் பாதிக்கின்ற அவைகளின் உருவ அமைப்புகளில் நிரந்தரமான மாறுதல்களை ஏற்படுத்துகிற – சில விதிகள் உண்டு என்று டார்வின் கண்டுபிடித்தார். அவ்வாறு தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிற உயிரினங்களின் கூட்டத்தில் ஓர் உயிரினமான மனிதன் மாத்திரம் எப்படி ஒரு அசாதாரணமான உயிரினமாக ஆகியது என்பதை அவர் விளக்கினார். இன்றைய மனிதனுடன் மிகவும் நெருக்கமுள்ள ஒரு ரகம் குரங்கினத்தில் பல்வேறு உருவ மாறுதல்கள் ஏற்பட்டதின் தொடர்ச்சியாகத்தான் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சில விசேஷத் தன்மைகளுடன் கூடிய உயிரினமாக மனிதன் வளர்ந்து வந்தான் என்பதை அவர் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார்.
ஆதிமனிதன் தோற்றத்தைப்பற்றிய இந்தக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞான உலகில் நடைபெற்ற ஒரு முக்கியமான புரட்சியாகவே இருந்தது. இந்தக் கோட்பாட்டை ஏற்க ஆளும்வர்க்க அறிவாளிகள் மறுத்தனர். மனிதனை இழிவு-படுத்திக் காட்டுகிற இந்தக் கோட்பாட்டை கல்வி நிலையங்களில் கற்பிக்கக் கூடாது என்று அவர்கள் நிர்ப்பந்தித்தனர்.
மனிதனுடைய தோற்றத்தைக் குறித்து டார்வின் நடத்திய ஆராய்ச்சிகளையும் அதன் விளைவாக அவர் உருவாக்கிய பரிணாமக் கோட்பாட்டையும் போலவே முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கண்டுபிடிப்பும் பத்தொன்-பதாம் நூற்றாண்டிலேயே நடைபெற்றது. அதுதான் மனிதனுடைய சமுதாய வளர்ச்சியில் உருவாகிய பல்வேறு சமூக அமைப்புகளைப்-பற்றி ஹென்றி மார்கன் என்கிற சமூக விஞ்ஞானி நடத்திய ஆராய்ச்சியும், அதன் விளைவாக அவர் உருவாக்கிய நிர்ணயிப்புகளும், உயிரினங்களின் வளர்ச்சியில் மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதைப்பற்றிதான் டார்வின் ஆராய்ந்தார் என்றால், சமூக வாழ்க்கையில் ஏற்பட்டு வருகின்ற மாறுதல்களைப்பற்றித்தான் மார்கன் ஆராய்ந்தார்.
விலங்குகளிலிருந்து அதிக அளவில் மாறுபாடு இல்லாத ஒரு வாழ்க்கை முறையைத்தான் ஒரு காலத்தில் மனிதர்கள் பின்பற்றி வந்தனர். இந்தக் காலகட்டத்தைக் காட்டுமிராண்டி காலகட்டம்(Savagery) என்று மார்கன் அழைத்தார். இந்த காலகட்டத்திற்குப் பிறகு அநாகரீக காலம் (Barbarism) என்று மார்கன் அழைக்கிற ஒரு காலகட்டமும் அதைத் தொடர்ந்து நாகரீக காலகட்டமும் (Civilisation) வந்ததாக மார்கன் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரித்தான சமூக வாழ்க்கை, அமைப்புகள், குடும்பம் ஆகியவை எல்லாம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டைப் போலவே இதுவும் விஞ்ஞானத் துறையில் ஒரு புரட்சியையே உருவாக்கியது. அண்ட சராசரங்களில் மகோன்னதப் பிறவியாகக் கடவுள் மனிதனைப் படைத்தான் என்ற கருத்துக்கு டார்வின் பலத்த அடி கொடுத்தார் என்றால், மனிதன் தோன்றியது முதல் அவனுடைய சமூக வாழ்க்கையில் இயற்கை-யாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்து வந்த ஒரு ஏற்பாடுதான் குடும்பம் என்ற கருத்தை மார்கன் உடைத்தெறிந்தார்.
டார்வினுடையவும், மார்கனுடையவும் கண்டுபிடிப்புகளை மேலும் விரிவான துறைகளுக்குப் பயன்படுத்தவும், அதன்மூலமாக சமூக விஞ்ஞானங்கள் முழுவதற்கும் தத்துவ விளக்கம் அளிக்கவும் காரல் மார்க்ஸாலும், ஏங்கல்ஸாலும் முடிந்தது.