எனக்குச் சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டு இருந்திருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லை யென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை.
நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் அங்குள்ள ஜாதியார், பொழங்கக்கூடாத ஜாதிக்காரர்கள், அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக்குடியென்று சொல்லியனுப்புவார்கள்.
எங்கள் வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு, பணம் பெருகி அப்பொழுது தான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித்திருந்த காலம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி ( நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப் பற்றி) அதிகமான கவலை கிடையாது. சீச்சீ இனி அப்படிச் செய்யாதே என்று சொல்லிவிடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும். என் தாயார் ஏதோ முழுகிவிட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற்குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால், என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன்தான் அதிகம், அதனாலே நான் முரடனாகிவிட்டேன் என்பது அவர்கள் எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளைகளுடன் கூடித்திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப் பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.
விதண்டாவாதம்
கடைசியாக நான் அப்பள்ளிக்குப்போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அதுவும் 2 வருடத்திலேயே (10,12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு, எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது.
இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர்களுக்கும், (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும், அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து, மறுத்துச் சொல்ல ஆரம்பித்து, விதண்டாவாதக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேர வேலையாகவும், அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும், எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்து விட்டது.
நான் புராணங்களையோ, வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்ததில்லை என்றாலும் சைவம், வைணவம் ஆகிய இருசமய சம்பந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதாசர்வகாலம் எங்கள் வீட்டில் இரு சமய பக்தர்களாலும், பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப் பட்டு வந்தது. இதனால் எனக்கு சமய சம்பந்தமான புராண சம்பந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும், அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பலகேள்வி களுக்கு பதில் தாறுமாறாகவும், ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு என்னை ஒரு கெட்டிக்காரப் பேச்சுக் காரன் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும், நம்பிக்கை-யில்லாமல் போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.
அனுபவத்திற்கு முரண்
ஆனால், சுற்றுச்சார்புதான் (Association and Sorrounding) ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம் கொள்கை ஆகிய வைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு, சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன்.
தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவனாகவும் நான் ஆக்கப்பட்டு விட்டேன்.
எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும், அதிக கவலையாகவுமே செய்து வருவேன்.
தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்-களை முடிவுகளைத் தனது வாழ்க்கைக்காக வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத! சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்த நிலை எதுவோ அதுவே மேல் கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக்கொண்டிருப்பதால்) அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.
வேலை அவசியம்
ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மத கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமுகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ, அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமுகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சுமசரீரத்திற்கும் கூட மோட்சமும் முக்தியும் கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலையில்லாமலும், அநுபவமில்லாமலும் மோட்சம், முத்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால், ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டி இருந்து தீரவேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.
நிஷ்காமிய கர்மம் யாது? (பயன் எதிர்பாரா பணிகள்)
இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி, காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் , நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப்படுவது முன்னுக்குப்பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில், நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர்பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே ஒரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக வேண்டி செய்வது என்பது அர்த்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப் பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தை கொடுத்து சலிப்பாக வேலை செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.