ஜோதிடம் ஒரு கண்மூடி நம்பிக்கை

செப்டம்பர் 01-15

துக்ளக் பத்திரிகையே சொல்கிறது
ஜோதிடம் ஒரு கண்மூடி நம்பிக்கை


சமூகத்தில் அநீதிகள் மட்டுமல்ல, காலத்துக்கு ஒவ்வாத நம்பிக்கைகள், மனிதாபிமானமற்றச் செயல்கள், தன்னலமிக்க, நடவடிக்கைகள், அசட்டுத்தனங்கள், அபத்தங்கள் என்று எழுதவும், பேசவும் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றிய துர்வாசரின் எண்ணங்கள் இப்பகுதியில் தொடர்கின்றன.

சரியா _ தவறா என்று கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்காமல் மனிதர்கள் காலங்காலமாக ஏதேதோ நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த நம்பிக்கைகளில் தலையாயது ஜோதிடம். ஜோதிடத்தைக் கண்களை மூடிக்கொண்டு நம்புகிற ஒரு பெருங்கூட்டம் நாட்டில் இருந்து வருகிறது. அது ஜோதிடம் கூறுவதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ஜோதிடத்தை நம்புவதில் படித்தவன், படிக்காதவன் என்ற பேதமெல்லாம் இல்லை. தன்னுடைய வாழ்க்கையே ஜாதகத்தில்தான் இருக்கிறது என்று மெத்தப் படித்தவன் கூட ஜோதிடனைத் தேடியலைகிறான்.

இந்த ஜோதிடப் பித்துக்கு இதுதான் ஆரம்பம். இதுதான் எல்லை என்று எந்த வரைமுறையும் இல்லை. சுயசிந்தனையை ஒழித்துவிட்டு ஜாதகத்தைச் சரணடைந்தவனுக்கு விமோசனம் ஏது? இப்போது சமீபகாலமாக இந்த ஜோதிடப் பித்து, குழந்தைப் பிறப்பை நிர்ணயிப்பது வரை வந்து விட்டது. இதற்கு தெருவுக்குத் தெரு நகரங்களில் மலிந்து கிடக்கும் மருத்துவமனைகளும் துணைபோகின்றன.

எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என்பதைக் கணித்துத் தர ஜோதிடர்களைத்  தேடிப் போகிறார்கள். ஜோதிடரும் இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என்று காசை வாங்கிக்கொண்டு கணித்துத் தருகிறார். டாக்டர்களால் இன்ன தேதியில் குழந்தை பிறக்கும் என்பதைச் சொல்லிவிட முடியும். ஆனால், அந்தத் தேதியில் காலையில் பிறக்குமா, மாலையில் பிறக்குமா, இல்லை இரவில் பிறக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியாது.

முன்பெல்லாம், இயற்கையான பிரசவம் நடைபெற முடியாமல், ஸிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் சொன்னால், குடும்பமே பதறும். எப்படித் தந்தி வந்தால் பதறுவார்களோ அந்த மாதிரி, ஸிசேரியன் என்றால் சமூகமே பதறிய காலம் ஒன்று இருந்தது.

ஆனால், இன்று யாரோ மரத்தடி ஜோதிடன் கணித்துக் கொடுத்த நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் குடும்பம், டாக்டரிடம் வந்து சரியா எட்டு பத்துக்கு ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்து விடுங்கள்… அதுதான் நல்ல நேரம். லக்கினமெல்லாம் நல்லா இருக்கு என்று மல்லுக்கட்டுகிறது. பேறு காலம் பார்க்கும் டாக்டர்களுக்கென்ன வந்தது? ஆபரேஷன் கத்தியைக் கையிலேடுத்தாலே அவர்களுக்குப் பணம்தானே? வயிற்றை அறுத்து அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைக் கையிலேடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆஹா நம் குழந்தை அரசாளப் போகிறது என்று குடும்பமே கூத்தாடுகிறது.

இந்த அக்கிரமத்துக்கு டாக்டர்களும் துணை போகலாமா என்று கேட்டுப் பிரயோஜனமில்லை. லட்ச லட்சமாகப் பணத்தைக் கொட்டி டாக்டருக்குப் படித்தது நியாய _ அநியாயத்தை அலசிப் பார்க்கவா? கிடைத்த வரை ஆதாயம், சுருட்டுகிற வரை சுருட்டு என்பதுதானே இன்றைய உலக தர்மம். இதில் மருத்துவ தர்மமும் அடக்கம்தானே?

ஏதோ காது குத்து, கல்யாணம் என்று லௌகீகச் சடங்குகளுக்கு நேரம் குறித்தது போக, இன்றைய ஜோதிடம் வயிற்றில் இருக்கிற குழந்தையை எப்போது வெளியே எடுக்க வேண்டும் என்பதைக் கணித்துச் சொல்கிற அளவுக்கு, குடும்பத்திற்குள் மூக்கை நுழைத்து விட்டது. தன் வாழ்க்கையில் சிறு தவறுதலோ, அணுவளவு கெடுதலோ நடந்துவிடக் கூடாது, நல்லது மட்டுமே சதா சர்வகாலமும் நடக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிற மனிதர்கள், குழந்தைப் பிறப்பை விட்டா வைப்பார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *