அரிய செய்தி : எம்.ஜி.ஆர். போட்டுக்கொண்ட நாமம்

ஆகஸ்ட் 16-31

 

முதலில் திருப்பதியில் இருந்த கடவுள் சிலை சிவனுடையதாக இருந்ததாம். ஒரு வைணவ மதத்தவரும், ஒரு சைவ மதத்தவரும் திருப்பதி கோயிலின் வாயிலில் தங்கினார்களாம். கோயில் சாத்திய பிறகு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்றாம்.

வைணவர் சொன்னாராம், உள்ளே இருப்பது வைணவக் கடவுள்தான் என்று. சைவ மதத்தினர் சொன்னாராம் உள்ளே இருப்பது சைவக் கடவுள்தான் என்று. இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியதாம்.

சச்சரவு மோசமான கட்டத்தை நெருங்கியபோது, அங்கே தங்கியிருந்த சிலர், காலையில் சிலையைப் பார்த்து யாருடைய சொல் உண்மையென்பதை முடிவு செய்வோம் என்று சொல்லிச் சமாதானப் படுத்தினார்களாம்.

அதாவது, எந்த மதத்தினருடைய சின்னம் அந்தச் சிலையின் நெற்றியில் இருக்கிறதோ, அந்த மதத்தைச் சேராத மற்றவர் அச்சின்னத்தை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாம். எல்லோரும் படுத்து உறங்கினராம், வைணவ மதத்தினருக்குத் தூக்கம் வரவில்லையாம்.

ஒருவேளை சைவச் சிலையாக இருந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டதாம். உடனே யாருக்கும் தெரியாமல் பெருச்சாளி உருவெடுத்துச் சாக்கடை வழியாக உள்ளே நுழைந்துப் பார்த்தாராம்.

சிவனுடைய சிலையாக இருந்ததாம் அது! சிவனுடைய சிலையைக் கண்ட வைணவர் அதிர்ச்சி அடைந்தாராம். ஆனால், அந்த அதிர்ச்சியில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள அவருக்கு உடனடியாக ஒரு யோசனை உதயமாயிற்றாம். அதன்படி, நாமக் கட்டியைக் குழைத்துச் சிவனுக்கு நாமத்தைப் போட்டு, நெற்றிக் கண்ணையும் மறைத்துவிட்டு வந்து, முன்போல் படுத்துக் கொண்டாராம், மனிதனாக மாறி. காலையில் சைவ மதத்தலைவர் பார்த்த போது, சிலையில் நாமம் இருப்பதைப் பார்த்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, பட்டை நாமத்தைப் போட்டுக் கொண்டு, வெட்கத்தோடு போய்விட்டாராம்.

ஒரு பையன் சொன்னான்: பெரிய ஆள்டா… அந்த விஷ்ணு பக்தர் சிவனுக்கே நாமத்தைப் போட்டுட்டாரே! என்று. எல்லோரும் சிரித்தோம்.

எனக்கு ஏற்பட்ட ஆவல்

சாமி கும்பிடும்போது சிலையின் நெற்றியில் கண் இருக்கிறதா என்பதை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. நான் எப்படியாவது கண்டுபிடித்து விடுவேன் என்று பையனிடம் சொன்னேன்.

உன்னால் கண்டுபிடித்துவிட முடியாது! என்ன பந்தயம்? என்றான், மாற்றுக் கதை சொன்னவன். எல்லோருமாகச் சேர்ந்து முடிவு செய்தோம், தோற்றவனுக்கு வெற்றி பெற்றவன் நாமம் போடுவது என்று. கோவிலுக்குப் போனோம். கூட்டம் மிக மிக அதிகம். அன்று தெப்பமும் இருந்தது. ஆகவே, கோவிலில் மட்டுமல்ல ஊரிலும் கூடக் கூட்டம் அதிகமே!  முதலாளியின் தயவில் குறுக்கு வழியில் சாமி கும்பிட நுழைந்தோம். முன்னால் பெரியவர்கள் நின்றிருந்ததால், எங்களுக்குச் சரிவரத் தெரியவே இல்லை. நகர்ந்து போய்க்கொண்டே இருந்தோம். வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் போனேன். பின்னால் இருந்து தள்ளப்பட்டேன்; எட்டி எட்டிப் பார்த்தேன் சிலையை.

பட்டை நாமம்தான் தெரிந்ததே தவிர, நெற்றிக் கண்ணைக் காண முடியவில்லை. மினுக் மினுக் கென்று எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில்தான் பார்க்க வேண்டியிருந்தது. யாராவது சூடம் கொடுத்தால், அதை காண்பிக்கும்போது ஏற்படும் வெளிச்சத்தில் கொஞ்சம் தெரியும். அதன் பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிடும்.

திடீரென்று ஒளி தோன்றி மறைந்தால் என்ன ஆகுமோ அதுபோலத்தான் சூடம் காண்பித்த பிறகு ஏற்படும் இருட்டும்!

இன்னும் யாராவது சூடம் கொளுத்தமாட்டார்களா? என்று தேடினேன். அதற்குள் யாரோ தலையில் குட்டியது போல வலித்தது; பார்த்தேன்.

கோவில் பூசாரி (பட்டர்), தங்கத்தால் முஸ்லிம் குல்லாய் போல் செய்த ஒன்றைத் தலையில் வைத்து எடுத்ததாக அறிந்தேன். அது என்ன? என்று கவனிப்பதற்குள் நான் தள்ளப்பட்டேன். இன்னொரு பையன் நான் இருந்த இடத்துக்கு வந்தான். அவனும் சிலையைக் கவனிக்கும் முன், அவனுடைய தலையிலும் தங்கக் குல்லாய் வைத்து எடுக்கப்பட்டது. வைத்து எடுக்கப்பட்டது என்று சொல்வதால், மரியாதையாக  அன்போடு  நிதானமாக வைக்கப்பட்டது என்று எண்ணிவிடாதீர்கள்!

முத்திரை இடுபவர்கள் எப்படித் தபால் நிலையத்தில் தபால்களுக்கெல்லாம் வரிசையாக முத்திரை இடுவார்களோ அப்படி டப் டப் என்று சத்தம் வரும் வகையில் அவசரமாக, அதுபோல் வரிசையாக வந்த ஒவ்வொருவர் தலையிலும் குல்லாய் போடப்பட்டது.

அந்த வேகத்தில்தான் என் தலையில் குட்டியது போன்ற வலி ஏற்பட்டது. நண்பர்களுக்கும் அதே கதிதான்! இருப்பிடத்துக்கு வந்தோம். பையன்கள் எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். நாமம் போட்ட இடத்தில் நெற்றியில் மேடாக இருக்கிறது. இல்லை … _  இப்படி ஒன்றுக்கொன்று முரணாக என்னவெல்லாமோ சொன்னேன்; பயனில்லை. திருப்பதி வெங்கடாசலபதிக்கு யார் எப்படிப் போடுகிறார்களோ தெரியாது. பையன்கள் எல்லோரும் என்னைக் கட்டிப்பிடித்துக் கொள்ள போட்டியிலே வெற்றி பெற்றவன் போட்டான் எனக்கு ஒரு திருப்பதி பட்டை நாமம்!
கோவிந்தா… கோவிந்தா…

நாடகத்தில் கடவுள் வேடமிட்ட ஒருவனைக் கடவுள் என்றே எண்ணிக் கும்பிட்டு, கோவிந்தா கோவிந்தா என்று அந்தக் காலத்து மக்களில் சிலர் வணங்குவார்கள் என்று முன்பு குறிப்பிட்டேன் அல்லவா?

அப்படிப்பட்ட நிகழ்ச்சியால் நாடகத்துக்கு வசூல் அதிகமாக வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால், அந்த நிகழ்ச்சிகள் வரவேற்கப்புடவும் செய்தன.

திருப்பதியில் நடந்தது போல் அதற்கு முன்பு விழுப்புரத்திலும் இந்தப் பக்திப் பரவச நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு. ஆனால், விழுப்புரம் நிகழ்ச்சியில் ஒரு மாறுபாடு இருந்தது.

ஒருநாள் ஒரு நாடக நிகழ்ச்சியில் வைகுண்டக் காட்சி வரும்போது, நாராயணன் வேடமிட்டவர் மேடையில் தோன்றியதும், பெண்கள் உட்கார்ந்திருந்த பகுதியில் இருந்து திடீரெனப் பெருத்த ஒலி கேட்டது; கோவிந்தா கோவிந்தா என்று.
எல்லோரும் திகைத்தார்கள்; பலர் ஓடினார்கள். அதற்குள், கூச்சல் போட்ட அம்மையார் மயங்கி விழுந்துவிட்டார்.

அவரை மேடைக்கு தூக்கி வந்து மயக்கம் தெளிவித்தார்கள். அன்று முதல் இதைப் போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நடைபெறலாயிற்று. வசூலும் அதிகமாயிற்று.
வாய்ச் சண்டை முற்றி

ஒருநாள் நாடகம் நடந்தபோது, அதே வைகுண்டக் காட்சியில் முன் போலவே கூச்சல் கிளம்பியது. ஆட்கள் போனார்கள், தூக்கி வருவதற்கு. ஆனால், அங்கு மயக்கமாகி விழுந்தவர்கள் இல்லை.

கோவிந்தா போட்டு மயங்கி விழ இருந்த பெண்கள் இருவர், அவர்களுக்குள் சண்டை போடுவது தெரிந்தது. கம்பெனி ஆட்கள் அவர்களை எப்படியோ உள்ளே கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்தப் பெண்கள் ஏன் சண்டை போடுகிறார்கள் என்று விசாரித்தபோது ரசமானதொரு உண்மை வெளியாயிற்று.

கோவிந்தா போடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் அனுமதிச் சீட்டும் (டிக்கெட்), எட்டணா காசும் கம்பெனி முதலாளி கொடுப்பது வழக்கமாம். தினசரி வெவ்வேறு பெண்களை இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.

அதாவது, நாலைந்து பெண்கள் மாறி மாறி ரசிகர்களின்  இடையில் இருந்துகொண்டு பக்தியில் தம்மை மறந்து கூச்சல் போடுவது போல் நடித்து, கோவிந்தா போட வேண்டும் என்பது ஏற்பாடு. அதற்குச் சம்பளம் ஓர் அனுமதிச் சீட்டும், எட்டணாவும்.

மேலே குறிப்பிட்ட அன்று, எதிர்பாராத விதமாக கணக்குப்பிள்ளை ஒரு பெண்ணையும், வெளி வாயில்படியில் நிற்பவர் ஒரு பெண்ணையும் ஏற்பாடு செய்துவிட்டார்களாம்.

இருவரும் ஒரே நேரத்தில் கூச்சலிடவும், தனக்குக் கிடைக்க வேண்டிய எட்டணா எங்கே மற்றவளுக்குப் போய்விடுமோ என இருவரும் சந்தேகித்து, ஒருவரை ஒருவர் குறை கூற முற்பட்டு வாய்ச்சண்டை முற்றிக் கைச்சண்டையிலும் இறங்க முயன்றார்களாம்.

பக்தி முற்றிப் போனவர்கள் வைகுண்டக் காட்சியைக் கண்டு, தம்மை மறந்து கோவிந்தா போட்டார்கள் என்றுதான் நாங்கள் அன்றுவரை நம்பி இருந்தோம். மக்களும் அவ்வாறு நம்பித்தான் குடும்பத்துடன் மேலும் மேலும் அதிகமாக வந்து நாடகத்தைக் கண்டு களித்தார்கள். பணத்தை வாரி வாரி வழங்கி, எங்கள் முதலாளியையும் மகிழ வைத்தார்கள். நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த என்னைப் போன்ற ஒன்றும் அறியாதவர்கள்தான், அதன் பிறகு, இதே போல் கம்பெனி வீட்டில் நடித்துக் கேலி செய்யும் அளவுக்கு மாறினோம். பின்னாளிலும் கூட சில நாடகங்களைப் பார்த்து, பெண்கள் மயக்கம் போட்டு விழுந்தார்கள் என்று கேள்விப்பட்டால், பத்திரிகைகளில் படித்தால் உடனே எனக்கு எங்கள் நாடகக் கம்பெனியில் நடந்ததுதான் நினைவுக்கு வரும்.

(ஆதாரம் : நான் ஏன் பிறந்தேன் நூல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *