– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அந்தணர்
இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும்.
வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே!
அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று.
இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை.
இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, அந்தண் காவிரி என வந்துள்ளவை காண்க.
அந்தணர் என்பவர் யார்? – கூறுவோம்.
அறந்தான் இயற்றும் அவனிலுங்
கோடி அதிகம் இல்லம்
துறந்தான்………
என்பது பட்டணத்தடிகள் பகர்ந்தது.
இல்லறத்தானைவிட மக்கள் நலம் கருதி இல்லம் துறந்தான் சிறந்தவன் என்று குறித்தார். மேலும் அதைத் தொடர்ந்தே அவர், அவனிற் சத கோடி உள்ளத் துறவுடையான் என்றும் கூறினார். அவ்வாறு இல்லந் துறந்தவனைவிடச் சிறந்தவன் உள்ளத் துறவுடையான்.
எனவே துறவு இல்லத்துறவு, உள்ளத்துறவு என இரு வகைப்படும். இவ்விரண்டில் இல்லத்துறவே மேலானது மக்கட்குப் பயன்படுவதால்.
இக்கூறிய இல்லத் துறவிகளையே நம் தமிழ் முன்னோர் அந்தணர் என்றார் என்று கடைபிடிக்க. அந்தணர் என்ற சொல் அயலவர் மாசு படாத செந்தமிழ்ச் செல்வம்.
மனம்
மனசு என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வந்தவரும், சில கந்தல்களும்.
மன்னுவது மனம் என்பதைத் தமிழ் மக்கள் அறிந்து ஏமாறாதிருக்க வேண்டும்.
உலகுக்கு முதன்முதலில் தத்துவ நூல் (கபிலர் எண்ணூல்) தந்தவர்கள் தமிழர்கள். அதில் மனம் என்பதின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தியதை மன்னுவது என்ற காரணத்தினால் மனம் என்று அதற்குப் பெயர் என்று அமைத்தமையே காட்டும். மனமானது புலன் வழிச் செல்லாமல் தன்னிலையில் மன்னுவதே உணர்வு நிலை என்றும் அந்த உணர்வு நிலையிலே விடுதலை வீடு என்றும் கூறும் கபிலர் எண்ணூல்.
தூய தமிழ்ச் சொல்லாகிய, மனம் என்பதை வந்தவர் எடுத்துக் கொண்டனர். வேறு வழியில்லாததால் என்று அறிந்து வைக்க.
பிணம்
பிண் என்ற வேர்ச் சொல் நீக்கம் என்ற பொருளுடையது. உயிர் நீக்கிய உடலைக் குறிப்பது எனக் கொள்க. அதில் அம் இறுதி நிலை. எனவே பிணம் தமிழ்ச் சொல்லே.
(குயில், 05-08-1958)