தோழர் சந்தானத்தின் சலூன்கடையினுள் தோழர் மகேந்திரன் நுழையும்போது, தோழர் முத்துவிடமிருந்து பெரிதான ஏப்பம் வருகிறது…
ம்ம்ம்… ரம்ஜான் பிரியாணி வேலை செய்யுது போல! சிக்கனா? மட்டனா?
சரியா கண்டுபிடிச்சிட்டீங்க தோழர்! பிரியாணியில இருக்குறது சிக்கனா மட்டனான்னெல்லாமா தோழர் பார்த்துக்கிட்டு இருப்பாங்க?! பாக்கெட்ட பிரிச்சோமா, பீஸையும் குஸ்காவையும் அள்ளிப் போட்டோமான்னு இருக்க வேணாமா! என்று சந்தானம் கலகலப்பூட்டினார்!
அதேதான் தோழர்… நான் அதெல்லாம் கவனிக்கவேயில்லை என்று அப்பாவியாகச் சொன்னார் முத்து.
ஏப்பம்னு சொன்னதும் எனக்கென்னவோ வியாபம் தான் நினைவுக்கு வருது தோழர்! எவ்ளோ பணத்தை ஏப்பம் போட்டிருக்கானுங்க! என்றான் சந்தானம்
ஆமாங்க தோழர், இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழலா இது இருக்கும்னு சொல்றாங்க… மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங்கே தோத்துடும் போலல்ல தெரியுது!
அதேதான்… படிக்க காலேஜ்ல சேர்றதுலருந்து, வேலைக்குச் சேர்ற வரைக்கும் அத்தனையிலும் கோல்மால் பண்ணியிருக்கானுங்க! வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.ல கமலுக்குப் பதிலா கிரேசி மோகனை எக்ஸாம் எழுத வைக்கிறதை நாம காமெடியா ரசிச்சுச் சிரிச்சிருக்கோம்… ஆனால் அத்தனையையும் நிஜமாவே நடத்திக் காட்டியிருக்காங்க!
நுழைவுத்தேர்விலேயே ஆள்மாறாட்டம், பேப்பர் சேஸிங்னு பண்ணினால் பின்ன நுழைவுத்தேர்வுக்கு என்ன மரியாதை?
இதுல அதை விட பெரிய விபரீதம் என்னன்னா, நாளை உனது நாள் படத்துல வர்ற மாதிரி ஒவ்வொரு நாளும் அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரா மர்மமா சாகுறாங்க… இப்படி மர்மமா கொல்லப்பட்டவங்களில் மாணவர்களிலிருந்து கல்லூரி டீன், கவர்னரோட மகன் என பெரிய ஆளுங்க வரை இருக்காங்க…
இம்புட்டு நடந்தும் இந்த கொலைகளை மூடி மறைக்கிறதிலும், அதில் தொடர்புடைய வியாபம் அமைப்பின் தலைவரைக் காப்பாற்றுவதிலும் தான் மத்திய பிரதேச அரசு குறியா இருந்திருக்கு…
ஆமா தோழர்… அம்புட்டு எதிர்கட்சியும் ஒட்டுமொத்தமா குரல் கொடுணீத்ததும் வேண்டாவெறுப்பா இப்போ சிபிஐ விசாரனை தொடங்கியிருக்கு… இந்த சிபிஐயையும் எங்கிட்டு நம்புறதாம்!
அந்த வியாபம் நிறுவன அதிபர் பணக்கட்டுகளிலேயே படுத்து உறங்கியிருக்கானாம்… அப்படிப்பட்டக் கோடீஸ்வர கில்லாடி, இவங்களும் கொஞ்சம் விரிச்சு படுக்க, சிலக் கட்டுகளை கொடுக்காமலா போவான்?!
அதுசரி, இவ்ளோ நடந்திருக்கு, ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்து வந்த நம்ம பிரதமர் இந்த சீன்லயே வரலையே?
இதுல அவர் வந்து யார் கூட செல்ஃபி எடுக்குறதாம்? அதுமட்டுமில்லாம, இவர் கூட செல்ஃபி எடுத்தவங்களையும் மர்மமா போட்டுத்தள்ளிட்டா இவர் மேலயும் பழி விழுந்துடுமேன்னு யோசிக்கிறார் போல!
நீங்க வேற தோழர், அவரு எப்பவும் வெளிநாட்டில் தான் சுத்துவார்.. இந்தியாவுக்குள்ள வந்தாலே எதாவது அரசியல் ஸ்டண்ட் அறிவிப்போட தான் வருவார்… இந்த மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா, யோகா மாதிரி… இப்பவும் அவரு வேற எதாவது பெருசா ப்ளான் பண்ணிக்கிட்டிருப்பார் போல.. எதும் ஐடியா சிக்கியிருக்காது… அதான் ஒண்ணும் சொல்லாம இருக்கார்!
என்னவோ அவரே தனியா ரூம் போட்டு யோசிக்கிற மாதிரியில்ல சொல்றீங்க… அவருக்கு பின்னால தான் பதினோரு பேர் கொண்ட குழு இருக்கு!… அவனுங்களும் கொஞ்ச சார்ஜ் டவுன் ஆயிட்டானுங்க போல!
ஆமா… ஆமா… அவங்களும் எவ்ளோ நாளைக்குத்தான் ஐடியாமணி மாதிரி கொடுத்துக்கிட்டே இருப்பாங்க! அதுவும் இப்ப என்னடான்னா பிஜேபி தலைவர்கள் மேல அடி மேல அடி விழுந்துகிட்டே இருக்கு!
எதை சொல்றீங்க ஜி? நம்ம லலித்மோடியோட சிக்ஸர் ஷாட்ட சொல்றீங்களா?!
அதே தான்! வினை விதைத்தவன் வினை அறுப்பான் மாதிரி… அந்த மோடியை விளம்பரப்படுத்தி ஆட்சியை புடிச்சாங்க.. இப்போ இந்த மோடி அத்தனையையும் கவுத்திட்டாரே!
பின்ன, காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சின்னும், தாங்கள் தான் இந்த இந்தியாவை… இல்ல இல்ல.. இந்த பாரத மாதாவை ரட்சிக்க வந்தவர்கள் மாதிரியும் சீன் போட்டாங்க… ஆனால் இப்போ இவங்களோட தேசபக்தி வேசமெல்லாம் பல்லிளிக்கத் தொடங்கிடுச்சே!
ஆமா ஆமா, அத்தனை வேசமும் என்னவோ ஐப்பசி அடைமழையில கரைஞ்ச வாசல் கோலம் மாதிரி கரையுது!
இன்னொரு செய்தி கேள்விப்பட்டீங்களா? மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது, கோமாதா எங்கள் குலமாதான்னு குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டுட்டு சைலண்டா சைனாவுக்கு மாட்டுக்கறி சப்ளை பிசினஸ் நடக்குதாமே!
அவங்க இப்போ ஆட்சி நடத்துறதே தொழிலதிபர்களுக்காகத்தானே… தேர்தல் செலவுக்காக வாங்கியதொகையை இன்னும் பைசல் பண்ணி முடிக்கலையாம் தோழர்.. அதுக்காகத்தான் இந்த நில அபகரிப்பு சட்டத்தையும் கொண்டு வந்திடலாம்னு தீவிரமா போராடுறாங்க…
அங்க மத்தியில என்னடான்னா பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயனத்திலேயே இருக்காரு… இங்க மாநிலத்தில் என்னடான்னா நம்ம முதல்வர் வீட்டினுள்ளேயே முடங்கி இருக்கார்… ஆக, ரெண்டு பேருமே ஓட்டுப் போட்ட மக்களை மதிக்கிறதா தெரியல…
தமிழக முதல்வர் இப்படி முடங்கி இருப்பதற்கு அவருக்கு வந்த உடல்நலக்குறைவும் ஒரு காரணம்னு சொல்றாங்க… நீதிமன்ற வழக்கில் குற்றவளியாக இருந்து பதவியிழந்த காலத்தில் நடந்த டம்மி அரசோட கொடுமையை நாம அனுபவிச்சுக்கிட்டு தான் இருந்தோம்… அடுத்து திரும்பவும் இவரே முதல்வரானதும் நிலைமை மாறும்னு பார்த்தால் இன்னும் கோமா நிலையிலேயே தான் இருக்குதே!
இதுக்குத்தான் இந்த மாதிரி முக்கிய கட்சியில் இரண்டாம் கட்ட தலைமை வேணும்கறது… முதல்வரைத்தவிர்த்த அத்தனை பேருமே சுயமாக இயங்க முடியாத சூழலில் நம் தமிழகத்தின் கேடு தான் தோழர் இம்மாதிரியான ஆட்சி! தமிழ்நாட்டின் இருண்ட காலம்னே சொல்லிடலாம்!
ஆமாம் தோழர்… இன்னும் பாருங்க, இந்த நான்கு ஆண்டுகளில் ரேசன் கார்டைக்கூட புதுசு பண்ணல… கசங்கிப் போன ரேசன் கார்டையே தூக்கிகிட்டு திரிய வேண்டியிருக்கு… அந்த ஆதார் அட்டையும் இன்னும் வந்தபாடில்ல…
இதுல ஒரு காமெடி தெரியுமா தோழர்? சும்மாவே ரேஷன் கார்டுல நம்ம புகைப்படம் சரியா வராது.. இதுல அந்த ரேஷன் கார்டை தூக்கிகிட்டு அடையாள அட்டைன்னு சொல்லி பாஸ்போர்ட் எடுக்க போனப்ப காட்டினேன்… ஆனால் இது உங்க மூஞ்சியே இல்லைன்னு சொல்லிட்டாங்க தோழர்… அப்புறமா வீட்டு முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் காட்டி உண்மைன்னு புரிய வச்சேன் தோழர்…
அதுசரி, அந்த வாக்காளர் அட்டையிலும் உங்க முகம் ஒரு கோணலாத்தான இருந்திருக்கும்! அதுக்கு இது பரவாயில்லைன்னு ஏத்துக்கிட்டாங்களோ! என்று சந்தானம் கேட்க, எங்கும் சிரிப்பலையால் நிறைந்தது!
– கல்வெட்டான்