செய்யக்கூடாதவை

ஆகஸ்ட் 16-31

செருப்பு இல்லாமல் நடக்கக் கூடாது

ஒரு காலத்தில் செருப்பு என்பது வெய்யில் காலத்தில் கால் சுடாமல் இருக்க மட்டுமே அணியப்பட்டது. மேலும் முள், கல் குத்தாமல் இருக்கவும் அணியப்பட்டது.

ஆனால், தற்காலத்தில் கால் வைக்கும் இடமெல்லாம் தூய்மையற்று, தொற்றுக் கிருமிகள் மிகுந்து பூமி மாசுப்பட்டிருப்பதால், கண்ட இடங்களில் மலம், சிறுநீர், எச்சில் கழிக்கப்படுவதால், நோய் தொற்றாமல் இருக்க செருப்பு அணிய வேண்டியது கட்டாயம். கொக்கிப் புழு கால் வழியாகவே தொற்றி, இரத்தச் சோகை உருவாகக் காரணமாகிறது.

கழிவறைக்குத் தனிச் செருப்பும், வெளியில் செல்ல தனிச் செருப்பும் பயன்படுத்த வேண்டும். வெளியில் நடக்கும் செருப்பு வீட்டிற்குள் வராமல் கட்டுப்பாடாகக் கழற்றி வெளியில் விட வேண்டும்.

செருப்பைக் கழற்றுவதும் போடுவதும் மரியாதைக்கு உரியதாகக் கொள்ளாமல், தூய்மை நோக்கில் பின்பற்ற வேண்டும். மரியாதை, செருப்பில் இருப்பதாக எண்ணுவது மடத்தனமாகும்.

கண்ணுக்கு மையிடக் கூடாது

கண்ணுக்கு மைத் தீட்டுதல் என்பது காலம் காலமாய் இருந்து வருகிறது. இரசாயனக் கலவையின்றி செய்யப்பட்ட மை கண்ணையும், தோலையும் அதிகம் பாதிக்கவில்லை. ஆனால், தற்போது போட்டியிட்டுக் கொண்டு பல நிறுவனங்கள் இரசாயனம் கலந்த மைகளைத் தயாரித்து விற்கின்றன. இவை கண்ணையும், தோலையும் பாதிக்கும்.

கண் என்பது மென்மையான, முதன்மையான உறுப்பு. அதில் கண்டதைத் தடவி கேடு உண்டாக்குவது நன்றல்ல. எனவே, கண்ணிற்கு மையிடுவதைத் தவிர்க்க வேண்டும். கண்ணிற்கு உள்ள இயற்கையழகே போதும்!

மருத்துவரின்றி மருந்து பயன்படுத்தக் கூடாது


வழக்கமாக நோய்கள் வரும்போது, பலரும் மருத்துவரிடம் செல்லாமல் மருந்துகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இது மிகவும் கேடானது.

ஒருவருக்கு ஒத்து வரும் மருந்தும், வீரியமும் இன்னொருவருக்கு ஒத்து வராது. அவரவர் உடல், நோயின் தன்மை, நோயின் வகை இவற்றிற்கு ஏற்ப மருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே, தவிர்க்க முடியாத சூழல் அல்லாமல், தனக்குத்தானே மருத்துவம் செய்து கொள்வது நல்லதல்ல. குறிப்பாக, குழந்தைகளுக்கு அவ்வாறு செய்யவே கூடாது. மருத்துவர் ஆலோசனையின்படிதான் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். மருத்துவரும், மருந்தும் போலியாக இல்லாமல் கவனமுடன் சிகிச்சை பெற வேண்டும்.

நோய் குறைந்தவுடன் மருந்தை நிறுத்தக் கூடாது.

சிலர் மருந்துகளைச் சாப்பிடும்போது, நோயின் பாதிப்பு குறைந்து உடல் நல்ல நிலைக்கு வரும்போது மருந்தை நிறுத்தி விடுவர். அது சரியல்ல. ஒவ்வொரு நோய்க்கும் இத்தனை வேளை இத்தனை மாத்திரை சாப்பிட வேண்டும் என்று கணக்கு உள்ளது. அது அறியாது நோய் நீங்கியதும் மருந்தை நிறுத்தக்கூடாது. மருத்துவர் சொல்லும் காலம் வரை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நோய் முற்றிலும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *