மானுட நேயர் அப்துல் கலாம்!

ஆகஸ்ட் 16-31

திருவனந்தபுரத்தில் அப்துல்கலாம் அவர்கள் பணிபுரிந்தபோது, ஜார்ஜ் என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளியுடன் அவருக்குப் பழக்கம் இருந்தது. குடியரசுத் தலைவராக உயர்பதவி ஏற்ற நிலையில் அவர் திருவனந்தபுரம் வந்தபோது, அந்தத் தொழிலாளியை மறவாமல் மதித்து அழைத்துப் பேசி மகிழ்ந்தார். இது அவரது ஆளுமை, அகத் தூய்மை, வாய்மை, எளிமை, நேர்மை, நேயம், சமநிலை, செருக்கின்மை என்று எல்லாச் சிறப்புகளையும் வெளிக்காட்டும் சிறந்ததோர் அடையாளம்.

 

அதேபோல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது, தன்னுடன் நான்காண்டுகள் அறை நண்பராக இருந்த சம்பத்குமார் என்பவரைத் தேடி, அவர் வசிக்கும் கோவை வீட்டிற்கே சென்று சந்தித்தார். என்றும் எந்நிலையிலும் நான் ஒரே உணர்வுள்ளவன் என்பதை அவர் உலகுக்குக் காட்டிய உன்னத நிகழ்வு இது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை

மாலை 4 மணிக்கு டாக்டர் வெங்கடசாமி (நாச்சியாரின் அண்ணன்) வந்து அப்துல் கலாம் என்று ஒரு பேஷன்ட் வந்தாரா என்று கேட்டார். எனக்கு எப்படி பெயர் ஞாபகம் இருக்கும்? கேஸ் சீட்டை எடுத்துப் பார்த்தபோது அந்த ரெகமன்டேஷன் லெட்டருடன் வந்தவர் அப்துல் கலாம் என்று தெரிந்தது.

பக்கத்தில் உள்ள எங்களின் இலவச சிகிச்சை பிரிவுக்கு அவர்களுடன் நானும் வேகமாகச் சென்று தேடினோம். அந்த காலத்தில் மருத்துவமனையில் கட்டில் வசதி கிடையாது. இலவசப் பிரிவில் பாய் மட்டும்தான் தருவோம். அதை கீழே விரிச்சு படுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் பார்க்கும்போது, கலாம் ஒரு கிழிஞ்ச பாயில் அலுமினியத் தட்டில் சாப்பிட்டு விட்டு ரிலாக்ஸா இருந்தார்.

காலையில் அங்கு சென்றவர், மருத்துவமனையைப் பற்றி ஊழியர்களிடம் விசாரிச்சிருக்கார். ஏழை நோயாளிகளுக்கும் முகம் சுளிக்காம சிகிச்சை கொடுத்ததையும் பார்த்திருக்கார். வயசானவங்களை எங்க நர்ஸ்களே டாய்லெட்டுக்குக் கூட்டிக்கிட்டு வர்றதை எல்லாம் பார்த்து ரசிச்சிருக்கார். அதே போல், வரிசையில் நி-ன்று இலவச சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டிருக்கார்.

மருத்துவமனையின் சேவையை ஊழியர்களிடம் பாராட்டியிருக்கிறார் என்ற நாச்சியார் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.

அப்துல் கலாம் அப்போது என்ன பதவியில் இருந்தார்? என்று கேட்டோம்.

தேசிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் பிரதமரின் ஆலோசகராக இருந்தார். முதல் நாள் சகல பாதுகாப்புடன் ராமேஸ்வரத்துக்குப் போயிருந்தவர்,  மதுரை அரவிந்துக்குப் போய் கண்ணை காட்டிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு, தொளதொளா பைஜாமாவும் ஜிப்பாவும் போட்டுகிட்டு ஜோல்னா பையுடன் யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டார்.

காலையில் வீட்டுக்குப் போன அதிகாரிகள் கலாமைக் காணாமல் பதறியிருக்கிறார்கள். அதற்குப் பின், டெல்லி வரை விஷயம் போய் அதிகாரிகள் எல்லோரும் விழுந்தடித்து ஓடி வந்தனர். இதெல்லாம் தெரிந்த பின்பு, அண்ணனே அவருக்கு டிரீட்மென்ட் கொடுத்து அனுப்பி வைத்தார். இப்படியும் ஒரு மனிதரா?

என்று வியந்த நான், மன்னிப்பு  கோரி அவருக்கு கடிதம் அனுப்பினேன்.

அதற்கு கலாம் எழுதிய பதிலில், நீங்கள் மட்டும் எனக்கு அந்த வாய்ப்பைத் தராமல் போயிருந்தால் இப்படி ஒரு உன்னதமான இடம் இந்த உலகத்தில் இருப்பதை அறிந்து கொள்ளாமல் போயிருப்பேனே… நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் 5 ஆண்டுகள் அவர் தங்கியிருந்தபோது, தன் உறவினர்கள் அங்கு வந்து தங்க அனுமதித்ததில்லை.

குடியரசுத் தலைவர் மாளிகை நூலகத்தை மின்னணு மயமாக்கினார். அதைத் தமது மேற்பார்வையிலேயே 2 1/2 ஆண்டுகள் செய்தார்.

மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில், மேடையில் தனக்குப் போடப்பட்ட அரியணை போன்ற நாற்காலியை அகற்றச் செய்து சாதாரண எளிய நாற்காலியைப் போடச் செய்து அதில் அமர்ந்தார்.

நீங்கள் என்னிடம் எதைப் பற்றியும் கேட்கலாம்; நான் உங்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவன் என்றார்.

தமிழ் வழியிலே படித்து உயரமுடியும், ஆங்கிலத்தில் எதிர்காலத்தில் சிறப்பாகச் சாதிக்க முடியும் என்பதை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டினார்.

ஏழ்மையில் உயரமுடியும் என்று சாதித்துக் காட்டினார். சிறுவயதில் நாளிதழ் வீடுகளுக்குப் போட்டுப் படித்தார். சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கப் பணமில்லாதபோது, சகோதரியின் வளையலை அடகுவைத்துப் படித்தார்.

இந்தியா வல்லரசாக திட்டம் வகுத்துக் கொடுத்தார். இளைய சமுதாயத்திடம் இணை பிரியாது வாழ்ந்தார். உயர் நிலைப்பள்ளி மாணவர்களுடன் தாம் இருப்பதையே பெரிதும் விரும்பினார். காரணம் அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று கணித்து வைத்தார்.

தாய்மொழியை நேசித்தார். அதன் பெருமை பரப்பினார். திருக்குறளை வாழ்க்கை நெறியாகக் கொண்டார். திருக்குறளை மேற்கோள் காட்ட அவர் எங்கும் தவறியதில்லை.

1931 அக்டோபர் 15இல் இராமேஸ்வரத்தில் ஜெயினுலாப்தீன்_ஆஷியம்மா இணையரின் மகனாகப் பிறந்தார்.

1954இல் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.

1960இல் சென்னை எம்.அய்.டி.யில் விமானப் பொறியியல் முதுநிலை பட்டம் பெற்றார். அதே ஆண்டில் டிஆர்டிஓ விஞ்ஞானியானார்.

1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.

1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ரோகிணி செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.

1981: பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

1980-_1990: ஒருங்கிணைந்த ஏவுகணை அபிவிருத்தித் திட்டம், கலாம் தலைமையில் வளர்ச்சி பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள் உருவாக்கப்பட்டன.

1990: பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

1992-_1999: டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக கலாம் பணியாற்றினார்.

1997 நவம்பர் 26: பாரத ரத்னா விருது கலாமுக்கு வழங்கப்பட்டது.

1998 மே 13: ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை கலாம் தலைமையில் நடைபெற்றது.

1999_-2001: பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 2002, ஜூலை 25: 11-ஆவது குடியரசுத் தலைவரானார்.

2007 ஜூலை 25: குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நிறைவு.

2007_-2015: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே கல்வி, விழிப்புணர்வுப் பணி.

2015 ஜூலை 27: மேகாலயத்தின் ஷில்லாங்கில் காலமானார்.

மாணவர்களின் மனதில் என்றும் நின்று நிலைப்பார்! வாழ்க அவர்தம் பெருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *